தின்பண்டங்கள், ஆரோக்கியம் ஆகிய இரு துருவங்கள்: ஒரு அறிமுகம்:
இந்திய ஸ்நாக்ஸ் என்றவுடனே சமோசா, பக்கோடா, மசாலா பூரி, வடை, பஜ்ஜி, போண்டா, ஜிலேபி, மசாலா டீ என பல சிற்றுண்டிகள் நம் கண்முன்னே வந்து நாவூறச் செய்யும். ஆங்காங்கே இருக்கும் சிற்றுண்டி கடைகள் மற்றும் தெருவோர வண்டிக் கடைகள் சுவையான விருந்துகளுடன் நம்மை வரவேற்கும் தேசத்தில், இந்த காரசாரமான, இனிப்பான, மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை நம்மால் எப்படித் தவிர்க்க முடியும்? இருப்பினும் அதிகப்படியான சிற்றுண்டிகளை உண்பது நமது எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமாக மாறுகிறது என்பதே ஒரு நிதர்சனமான உண்மை. ஏனெனில் நமது வழக்கமான ஸ்நாக்ஸ்களில் பெரும்பாலும் அதிக கலோரிகளும், குறைந்த ஊட்டச்சத்துக்களும் இருப்பதுவே இதற்கு காரணம். எனவே, இந்த கட்டுரையில் ஸ்நாக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, நம் நாடுமுழுவதும் பரவலாக கிடைக்கும் ஆரோக்கியமான சிற்றுண்டிகள் குறித்தும், அவை எப்படி எடையைக் குறைக்க உதவுகின்றன என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.
ஆரோக்கியத்தின் அடிப்படையை புரிந்துகொள்வோம்:
கலோரிகள், ஆற்றல் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பினை புரிந்துகொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கும், உடலின் எடையை சீராக நிர்வகிப்பதற்கும் அடிப்படையாக உள்ளது. கலோரி என்பது நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலிருந்து பெறப்படும் ஆற்றலின் அளவீடாகும். உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் அளவை விட அதிக கலோரிகளை பயன்படுத்தினால், எடை குறைகிறது. இதனால் கலோரி பற்றாக்குறை எனப்படுகிறது. அதிக எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் - சமச்சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, உடல் செயல்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும். கலோரி பற்றாக்குறை தொடர்ந்து இருக்கும்போது உடலில் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு, தேவையான ஆற்றலுக்காக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், தீவிர கலோரி கட்டுப்பாடு என்பது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம்.
உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டியதன் அவசியம்:
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுடன் உடல் எடைக்கு முக்கியத் தொடர்புள்ளதால், நாம் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலம் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய்கள் போன்ற பல்வேறு நாட்பட்ட உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்கும் வாய்ப்புள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சினைகள் என பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு அதிகப்படியான உடல் எடை, குறிப்பாக உடல் பருமன் ஒரு முக்கிய ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.
பாரம்பரியமாக நமது நாட்டில் எண்ணற்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளும் கிடைக்கின்றன. அவை குறைவான கலோரிகள், நிறைவான ஊட்டச்சத்துக்கள், அதிக நார்ச்சத்து என பல்வேறு வகையான நற்பலன்களை வழங்கி நமது உடல் எடை குறைப்பதற்கும் உறுதுணையாக உள்ளன. ஒவ்வொரு வகையான இந்த பாரம்பரிய சிற்றுண்டிகளுக்கும் தனித்துவமான நற்பலன்களை கொண்டுள்ளன.
ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்பிற்கு உதவும் சில ஆரோக்கியமான இந்திய சிற்றுண்டி வகைகள் பின்வருமாறு:
சுண்டல்
பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டியான சுண்டல், ஆந்திரா மாநில சமையலில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சுவையான இந்த சைவ உணவு சீக்கிரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைப்பதன் மூலம் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.
சிக்கன் துக்பா
அருணாச்சல பிரதேசத்தின் சிற்றுண்டியான இது ஒரு நூடுல்ஸ் சூப் ஆகும். இது காய்கறிகள் மற்றும் கொழுப்பற்ற சிக்கன் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அசைவ வகை சிற்றுண்டியாகும். இந்த ஆரோக்கியமான சிற்றுண்டி இம்மாநிலத்தின் கலாச்சாரத்தில் கலந்தது; இதன் சூப், சிக்கன் மற்றும் காய்கறிகளிலிருந்து நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் புரதங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைவாக கிடைப்பதால், பசியைத் தனித்து எடை குறைப்பில் உதவுகிறது.
கார் (Khar)
பப்பாளிக்காய் மற்றும் பருப்பு வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் ‘கார்’ அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பாரம்பரிய உணவாகும். தனித்துவமான சுவை மட்டுமில்லாமல், இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. வயிறு நிறைவான உணர்வை ஊக்குவிப்பதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தி எடை குறைவதற்கு இந்த சிற்றுண்டி உதவுகிறது.
லிட்டி சோக்கா
முழு கோதுமை மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் லிட்டி சோக்கா, பீகார் மாநில சமையலின் அடையாளமாகக் கருதப்படுகிறது. நார்ச்சத்து மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த இந்த சிற்றுண்டி, நீடித்த ஆற்றலையும், வயிறு நிறைவான உணர்வையும் தருகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களின் பிடித்தமான சிற்றுண்டியாக இது இருப்பதில் சந்தேகமேயில்லை.
பாரா
சத்தீஸ்கர் மாநிலத்தின் பாரம்பரியத்திலிருந்து வரும் ‘பாரா’ சிற்றுண்டி, பருப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இது, பசி தணிந்து முழுமையான உணர்வைத் தூண்டுவதன் மூலம் எடை இழப்பிற்கு உதவுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவாக சத்தீஸ்கர் குடும்பங்களில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
கோகும் ஷர்பத்
கோவா மாநில பானமான இந்த புத்துணர்ச்சியூட்டும் ‘கோகும் ஷர்பத்’ வெறும் நீர்ச்சத்து வழங்கும் பானம் மட்டுமல்ல. சர்க்கரை நிறைந்த பானங்களுக்கு மாற்றாக அமைவதால், அதிகப்படியான கலோரி அளவைக் குறைத்து உடல் எடை குறைப்பில் கோகும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. குறைவான கலோரி உள்ள இந்த பானம் கோவாவின் கடலோர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது.
தோக்லா
வேகவைத்த கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் சிற்றுண்டியான டோக்லா, குஜராத் மாநிலத்தின் உணவுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றுகின்றது. சத்தான மற்றும் குறைந்த கலோரி கொண்ட சுவையான உணவு வகையான இதில் புரதம் நிறைந்துள்ளது. பொறித்த உணவுகளுக்கு மாற்றான இந்த டோக்லா, திருப்திகரமான மற்றும் ஆரோக்கியமான காலை, மாலை சிற்றுண்டியாக எடை குறைப்பதற்கு உதவுகிறது.
பாஜ்ரா காக்ரா
சிறுதானியமான கம்பு நிறைந்த இந்த பாஜ்ரா காக்ரா ஹரியானா மாநிலத்தினை பூர்விகமாகக் கொண்ட ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். காம்ப்லெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த காக்ரா நமது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்கி, எடையைக் கட்டுப்படுத்த முயல்பவர்களின் பிரதான விருப்பமாக உள்ளது.
சிது
கோதுமை மற்றும் கீரைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘சிது’ இமாச்சல பிரதேசத்தின் சிற்றுண்டியாக மட்டுமில்லாமல், அம்மாநிலத்தின் பாரம்பரியமிக்க சத்தான உணவுப் பதார்த்தங்களுக்கு ஒரு சான்றாகவும் உள்ளது. நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ‘சிது’ ஒரு சமச்சீரான உணவாகும்.
தேக்வா
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிற்றுண்டியான தேக்வா முழு கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இனிப்பு மற்றும் நார்ச்சத்து இரண்டும் சமமான அளவில் உள்ளதால், இது இனிப்பான சிற்றுண்டியை விரும்பும் நபர்களுக்கு, மற்ற அதிக சர்க்கரை உள்ள உணவுகளைக் காட்டிலும் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஹெசருபெலே கோசம்பரி
ஊறவைத்த பச்சைப் பயறு கொண்டு செய்யப்படும் இது கர்நாடக மாநில சிற்றுண்டியாகும். அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க விரும்புவோருக்கு இச்சிற்றுண்டி ஏற்றதாக இருக்கும். ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி பசியாறிய உணர்வை தருவதால், ஒட்டுமொத்த கலோரி அளவையும் இது குறைக்கிறது. காய்கறிகள் மற்றும் குறைந்த எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் ஹெசருபெலே கோசம்பரி ஒரு சமச்சீரான சிற்றுண்டியாக இருக்கும்.
கொழுக்கட்டை
கேரளாவின் சிற்றுண்டியான கொழுக்கட்டை அரிசி மாவு, தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது; இது ஒப்பீட்டளவில் குறைந்த கலோரி கொண்ட ஒரு இனிப்பு சிற்றுண்டியாகும். மற்ற உணவுகளை குறைவாக உண்ண உதவும் கொழுக்கட்டை, ஒருவரது பசியை திருப்திப்படுத்தக்கூடியது. வேகவைத்து தயாரிக்கப்படும் சுவையான, ஆரோக்கியமான இந்த சிற்றுண்டி பிரசாதங்களின் பட்டியலிலும் இடம் பிடித்ததில் எந்தவித ஆச்சரியமுமில்லை.
புட்டே கா கீஸ்
மத்திய பிரதேச மாநில ஸ்பெஷல் சிற்றுண்டியான புட்டே கா கீஸ், துருவிய சோளத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சிற்றுண்டி – ஒரு தனித்துவமான சுவைகொண்டதாகும். எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஆரோக்கியமான சிற்றுண்டியை தேர்வு செய்யலாம்.
போஹா
கலாச்சார முக்கியத்துவம் கொண்ட போஹா மகாராஷ்டிராவின் பெருமைமிகு சிற்றுண்டியாகும். அவல், கொண்டைகடலை, மற்றும் சிறுது காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எளிய உணவு – எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு குறைந்த கலோரிகளை வழங்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். போஹா சமைக்கவும் மிகவும் எளிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
எரோம்பா
மணிப்பூர் மாநில ஸ்பெஷலான எரோம்பா, வேகவைத்த காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்த சிற்றுண்டி, அதன் குறைவான கலோரி உள்ளடக்கம் காரணமாக - எடை மேலாண்மைக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஜாடோஹ்
இறைச்சி மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘ஜாடோஹ்’ மேகாலயாவின் பாரம்பரிய அசைவ சிற்றுண்டியாகும். புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இது ஒரு சமச்சீர் உணவாகும். மிதமாக உட்கொள்ளும்போது எடைக் கட்டுப்பாட்டிற்கும் உதவுகிறது. அசைவ பிரியர்கள் ஒரு மாறுபட்ட சிற்றுண்டியாக இதனை முயற்சிசெய்து பார்க்கலாம்.
மூங்கில் தண்டு சாலட்
நார்ச்சத்து நிறைந்த மற்றும் கலோரிகள் குறைவான மூங்கில் தண்டு சாலட் – மிசோரம் மாநிலம் நமக்கு வழங்கும் ஒரு ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவாகும். அம்மாநில மக்களின் சமையல் மரபுகளைப் பறைசாற்றும் இந்த சாலட், எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.
மூங்கில் தண்டு மற்றும் காளான் கறி
மற்ற பகுதிகளில் அரிதாக இருந்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் மூங்கில் தண்டுடன் காளான் சேர்த்து செய்யப்படும் இந்த சிற்றுண்டி – நாகாலாந்து மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது. சைவ உணவான இதில், நார்ச்சத்து மற்றும் தாவரங்களிலிருந்து பெறப்படும் புரதம் நிறைந்துள்ளது. எடை நிர்வாகத்திலும் இது பெரிதளவில் உதவுகிறது.
சக்குலி பித்தா
அரிசி மாவில் தயாரிக்கப்படும் ஒடிசாவின் சக்குலி பித்தா, ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகளைக் கொண்ட ஒரு சுவையான சிற்றுண்டியாகும். இனிப்பான பூரணத்தை கொண்ட இந்த சிற்றுண்டி அளவாக சாப்பிட உகந்தது. இனிப்பான சிற்றுண்டியை விரும்புபவர்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும் இது, ஒடிசா மாநிலத்தின் சமையல் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.
சன்னா சாட்
வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் காய்கறிகள் நிறைந்த பஞ்சாப் மாநிலத்தின் சன்னா சாட் சிற்றுண்டியில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மிதமாக உட்கொண்டாலே பசியாற்றும் இந்த உணவு எடையைக் குறைப்பதற்கும் உதவுகிறது. சாட் சுவையை விரும்பும் நபர்களுக்கு நல்லதொரு மாற்று தின்பண்டமாக சன்னா சாட் இருக்கும்.
காக்ரா
முழு கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் ராஜஸ்தானிய காக்ரா – மொறுமொறுப்பான மற்றும் குறைந்த கலோரி கொண்ட அப்பள வகையாகும். இது எடை கட்டுப்பாட்டை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு திருப்திகரமான நொறுக்குத்தீனியாக இருக்கும்.
பக்ஷப்பா
சிக்கிம் மக்களுக்குப் பிரியமான பக்ஷாபா, முள்ளங்கி மற்றும் டர்னிப்களின் சுவையான கலவையுடன் வரும் சைவ சிற்றுண்டியாகும். இந்த உணவு சிக்கிமின் சமையல் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சுவையிலும் தனித்துவமானதாக இருக்கும். வித்தியாசமான, அதே நேரத்தில் எடையையும் குறைக்க விரும்புவோர் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.
வாழைப்பூ வடை
தமிழ்நாட்டின் பாரம்பரிய வாழைப்பூ வடை, சிற்றுண்டிகளின் அனைத்து இலக்கணங்களையும் நிவர்த்தி செய்யும் ஒரு அற்புதமான தேர்வாக இருக்கும். ஊட்டச்சத்து நிறைந்த வாழைப்பூ, பயறு மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த வடை ஒரு தனித்துவமான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்காக இருக்கும். நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இது சுவை மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரண்டையும் கொண்ட ஒரு சைவ சிற்றுண்டியாகும். நல்லெண்ணெய் கொண்டு சரியான விதத்தில் தயாரிக்கும் போது, மொறுமொறுப்பான இந்த சிற்றுண்டி அதிக எண்ணெயை ஈர்க்காமல் இருக்கும்.
ஜோன்னா ரோட்டி
தெலுங்கானாவின் சிறப்புமிக்க இந்த ஜோன்னா ரோட்டி, வெள்ளை சோள மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. க்ளூட்டன் இல்லாத இந்த ரோட்டி வகை சிற்றுண்டி ஒரு சத்தான மாற்று உணவாக இருக்கும். இதனை ஆரோக்கியமான வகையில் சாலட் அல்லது பச்சடி உள்ளிட்டவற்றுடன் சேர்த்து உண்ணலாம். பசியை நிரப்பும் இது எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
முய் போரோக்
புளிக்க வைக்கப்பட்ட சோயாபீன்ஸ், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த திரிபுரா மாநில சிற்றுண்டியில், தாவர அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ளது. மிகவும் தனித்துவமான சுவையைக் கொண்ட இதனை அனைவரும் கட்டாயம் முயற்சி செய்து பார்க்க வேண்டும். சமச்சீர் உணவில் ஒரு பகுதியாக இதனை எடுத்துக் கொண்டால், உடல் எடையைப் பராமரிக்க இது துணைபுரியும்.
சத்து பராத்தா
வறுத்த கடலை மாவு, மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த சத்து பராத்தா உத்தரபிரதேசத்தின் விருப்பமான சிற்றுண்டியாகும். புரதம் நிறைந்த சிற்றுண்டியை விரும்புபவர்கள் இதனை தாராளமாக சாப்பிடலாம். பசியைத் தணிக்கும் இந்த உணவு, சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக எடை குறைப்பிற்கு உதவுகிறது.
ஆலு கே குட்கே
உத்தரகாண்ட் மாநில சிற்றுண்டியான ஆலு கே குட்கே, மசாலா பிரியர்களுக்கு ஏற்ற ஒரு உணவாகும். சிறிய உருளைக்கிழங்குகளை வறுத்து செய்யப்படும் இந்த கலோரி குறைவான சிற்றுண்டி, வழக்கமான சாலையோர சிற்றுண்டிகளை தோற்கடித்துவிடும். அதேநேரத்தில் ஒப்பீட்டளவில் எடை குறைக்க விரும்பும் நபர்களுக்கு, சுவையில் சமரசம் செய்யாமல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
முரி கண்டா
மேற்கு வங்க மாநிலத்தின் பிரத்தியேக சிற்றுண்டியான முரி கண்டா ஒரு மொறுமொறுப்பான பதார்த்தமாகும். வறுத்த பொரி அரிசி மற்றும் காய்கறிகள் சேர்த்த கலவையான இது, ஒரு மிதமான தின்பண்டமாகும். சுவையாகவும், அதேநேரத்தில் குறைவான கலோரிகளையும் கொண்ட இதனை அளவாக உட்கொண்டால், எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
இந்திய சிற்றுண்டிகளும் அதன் பூர்வீக மாநிலங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பூர்வீக மாநிலம் | சிற்றுண்டியின் பெயர் |
அருணாச்சல பிரதேசம் | சிக்கன் துக்பா |
அஸ்ஸாம் | கார் (Khar) |
ஆந்திரா | சுண்டல் |
இமாச்சல பிரதேசம் | சிது |
உத்தரகாண்ட் | ஆலு கே குட்கே |
உத்தரபிரதேசம் | சத்து பராத்தா |
ஒடிசா | சக்குலி பித்தா |
கர்நாடகா | ஹெசருபெலே கோசம்பரி |
குஜராத் | தோக்லா |
கேரளா | கொழுக்கட்டை |
கோவா | கோகும் ஷர்பத் |
சத்தீஸ்கர் | பாரா |
சிக்கிம் | பக்ஷப்பா |
தமிழ்நாடு | வாழைப்பூ வடை |
திரிபுரா | முய் போரோக் |
தெலுங்கானா | ஜோன்னா ரோட்டி |
நாகாலாந்து | மூங்கில் தண்டு மற்றும் காளான் கறி |
பஞ்சாப் | சன்னா சாட் |
பீகார் | லிட்டி சோக்கா |
மகாராஷ்டிரா | போஹா |
மணிப்பூர் | எரோம்பா |
மத்திய பிரதேசம் | புட்டே கா கீஸ் |
மிசோரம் | மூங்கில் தண்டு சாலட் |
மேகாலயா | ஜாடோஹ் |
மேற்கு வங்கம் | முரி கண்டா |
ராஜஸ்தான் | காக்ரா |
ஜார்க்கண்ட் | தேக்வா |
ஹரியானா | பாஜ்ரா காக்ரா |
முடிவுரை:
என்னதான் ஆரோக்கியமான சிற்றுண்டிகள் என்று வரையறுக்கப்பட்டாலும், எந்தவொரு உணவும் அளவாக உட்கொள்ளும் போதுதான் அதன் பலன்களும் நமக்கு அதிகமாக கிடைக்கும். இல்லையெனில் அதுவே நமக்கு பிரச்சினையாகிவிடும். புரதங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த - அதேநேரம் ஆரோக்கியமான தின்பண்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். அவை இனிப்பு, காரம், புளிப்பு உள்ளிட்ட இதர அறுசுவைகளிலும் கிடைப்பதால், தாராளமாக ஒருவரது சுவை விருப்பங்களுக்கு ஏற்ப அவற்றை தேர்வு செய்யலாம். சிற்றுண்டி பழக்கம் ஒரு தொடர் பழக்கமாக அடிமைப்படுத்தும் என்பதால், கவனத்துடன் இருப்பது அவசியமாகும். சிற்றுண்டிகளில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவற்றால் கிடைக்கும் உபாதைகளை விட அதன் நற்பலன்கள் அதிகமாக உள்ளதா என்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலிப்பது அவசியமாகும். அதன் மூலம் நமது சுவை விருப்பங்கள், எடை மேலாண்மை மற்றும் ஆரோக்கியம் என அனைத்திலும் ஒரு சமநிலையைப் பராமரிக்கலாம்.