வாய்ப்புற்றுநோய் பற்றியும் அதனைத் தடுப்பதற்கான ஐந்து பயனுள்ள வழிகள் பற்றியும், அதைச் சுற்றியுள்ள பொய்யான நம்பிக்கைகள் பற்றியும் இந்த வலைப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
பல்வேறு வகைகளில் ஏற்படும் புற்றுநோய், உலகளவில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குக் கடினமான சவால்களில் ஒன்றாக உள்ளது. எண்ணற்ற வகையான புற்றுநோய்களில், ஓரல் கேன்சர் என்று அழைக்கப்படும் வாய்ப்புற்றுநோய், அதன் பரவும் விதம் மற்றும் அதன் தாக்கம் காரணமாக மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது.
இந்த விரிவான கட்டுரையில், வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதனால் உண்டாகும் விளைவுகள் மற்றும் அதை தடுக்கும் வழிகள், அது பற்றிய தவறான கருத்துக்கள் உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்.
வாய்ப்புற்றுநோய் என்றால் என்ன?
வாய்ப்புற்றுநோய் என்பது வாய் பகுதியில் மாறுபட்ட வீரியம் மிக்க உயிரணுக்கள் வளர்வதைக் குறிக்கிறது; வாய்ப் பகுதியில் - உதடுகள், நாக்கு, ஈறுகள், கன்னங்கள், அண்ணம் மற்றும் தொண்டை போன்ற பகுதிகள் அடங்கும்.
வாய்ப்புற்றுநோய் பொதுவாக குணமடையாத உருமாற்றங்கள், அல்லது புண்ணாக வெளிப்படுகிறது, மேலும் உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி கடுமையான சிக்கல்களுக்கும் வழிவகுப்பதோடு, உயிருக்கே ஆபத்தாகவும் முடிகிறது
வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
வாய்ப்புற்றுநோயுடன் தொடர்புடைய ஆபத்துக் காரணிகளைப் புரிந்துகொள்வது - அதனைத் தடுக்கவும், ஆரம்ப நிலையிலேயே பாதிப்பினை கண்டறியவும் உதவுகிறது. ஒருவருக்கு வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன, அவற்றுள் சில பின்வருமாறு:
புகையிலை பயன்பாடு
சிகரெட்டுகள், சுருட்டுகள் போன்ற புகைபிடிக்கும் பழக்கம் அல்லது புகையிலை, பான் போன்றவற்றை மெல்லும் பழக்கம், அல்லது மூக்குப்பொடி போடுவது போன்ற விதங்களில் புகையிலையைப் பயன்படுத்துவதால் வாய்ப்புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது.
புகையிலையில் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்கள் உள்ளன. அவை வாய் மற்றும் தொண்டையில் உள்ள செல்களை சேதப்படுத்தி, புற்றுநோய் உருவாவதற்கு வழி வகுக்கின்றன. சில நேரங்களில் புகை பிடிப்பவர்களுடன் இருப்பவர்களுக்குக் கூட புற்றுநோய் ஏற்படுவதுண்டு!
மது அருந்துதல்
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, அல்லது நீண்டகாலமாக மது அருந்துவதன் காரணமாக வாய்ப்புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆல்கஹால் வாய்ப் பகுதியில் உள்ள செல்களை எரிச்சலூட்டி, சிதைவை ஏற்படுத்துவதால், அவை புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
HPV தொற்று
ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (HPV) - இன் சில வகைகள், குறிப்பாக HPV-16 வைரஸ் வாய்ப்புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாலுறவு அல்லது பிற வகையான நெருக்கமான தொடர்பு மூலம் HPV வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.
வாய்ப் பகுதியை சரிவர பராமரிக்காமல் இருத்தல்
வழக்கமாகப் பல் துலக்குதல், பல் இடுக்குகளை சுத்தம் செய்தல், மற்றும் பல் பரிசோதனைகள் போன்ற சுகாதார நடைமுறைகளை மேற்கொள்ளாமல் புறக்கணிக்கும் நபர்களுக்கு - வாயில் பாக்டீரியா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் சேரலாம். ஒருகட்டத்தில் இந்த சுகாதாரமற்ற பழக்கம் வாய்ப்புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் கூட ஏற்படுத்தலாம்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்த்துவிட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்டுவந்தால், வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன.
வாய்ப்புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகள்:
வாய்ப்புற்றுநோயின் விளைவுகள் கடுமையானதாக இருக்கும். அவை நீண்டகால தாகத்தை ஏற்படுத்தக் கூடியவை. வாய்ப்புற்றுநோய் ஒருவரது உடல்நலம் மற்றும் நல்வாழ்வினை பல்வேறு விதங்களில் பாதிக்கிறது. அதன் சில விளைவுகள் பின்வருமாறு:
வாயை உருக்குலைதல்
புற்றுநோய் செல்களின் வளரும் இடம், மற்றும் அது எந்தளவிற்கு பெரிதாக அல்லது சிறியதாக உள்ளது என்பதைப் பொறுத்து, கேன்சர் கட்டிகளை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம். இதனால் முகம் அல்லது வாய் பகுதியில் நிரந்தர சிதைவு / உருமாற்றம் ஏற்படலாம். இது ஒருவரின் தோற்றத்தையும், தன்னம்பிக்கையையும் பாதிக்கலாம்.
சாப்பிடுவதிலும் பேசுவதிலும் சிரமம்
வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டால் அதன் பின்பு, உணவுகளை மெல்லுதல், விழுங்குதல் மற்றும் பேசுதல் போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படாலம் அல்லது அவை முற்றிலும் தடைபடலாம்; சரியாகச் சாப்பிட முடியாமல் போகும் பட்சத்தில் உடலுக்குத் தேவையான சரியான ஊட்டச்சத்துகள் கிடைப்பதிலும், தகவல்தொடர்புகளை மேற்கொள்வதிலும் சிரமங்கள் ஏற்படும்.
மற்ற உறுப்புகளுக்கும் பரவுதல்
உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வாய்ப்புற்றுநோயானது நிணநீர், நுரையீரல் அல்லது கல்லீரல் போன்ற உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடும். அதனால் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுப்பதோடு, வாய்ப்புற்றுநோய் சிகிச்சையை முழுமையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள இயலாத நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும். பொதுவாக இப்படி பரவுவது உயிருக்கு ஆபத்தான நிலையினையே குறிக்கும்.
உணர்வுகள் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பு
புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்வது உள்ளிட்ட செயல்பாடுகள் - நோயாளரின் மன மற்றும் உணர்வு ரீதியான நல்வாழ்வில் பெரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கவலை, மனச்சோர்வு மற்றும் பிற உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு அவர் உள்ளாக நேரலாம்.
வாய்ப்புற்றுநோயைத் தடுக்க உதவும் 5 வழிகள்
வாய்ப்புற்றுநோயை ஏற்படுத்தும் சில ஆபத்துக் காரணிகளில், வயது முதிர்வு மற்றும் மரபியல் போன்ற நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில காரணங்கள் இருந்தாலும், வாய்ப்புற்றுநோய் பெரும்பாலும் ஒருவரது நடவடிக்கைகள் மூலமாகவே அதிகம் ஏற்படுகின்றது. எனவே வாய்ப்புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்க தனிநபர்கள் பின்வரும் பயனுள்ள தடுப்பு உத்திகளைப் பின்பற்றலாம்:
1. சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல்:
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதனை விட்டுவிடுவதும், அனைத்து விதத்திலும் புகையிலைப் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலமாகவும் வாய்ப்புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை திறம்பட குறைக்கலாம்; புகையிலையில் உள்ள தீங்கு விளைவிக்கும் கார்சினோஜென்களை தவிர்ப்பதன் மூலம் நோயின் தாக்கத்திலிருந்தும் தற்காத்துக்கொள்ள முடிகிறது.
புகையிலையை எந்த விதத்தில் நுகர்ந்தாலும் அது வாய் மற்றும் தொண்டையில் உள்ள செல்களைச் சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோய் வளர்ச்சியை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனையும் பலவீனப்படுத்திவிடும்; எனவே நிலைமை கட்டுக்குள் இருக்கும்போதே புகையிலை என்கிற ஆபத்தான இந்தப் புற்றுநோய் காரணியை அகற்ற வேண்டும். புகையிலை, வாய்ப் புற்றுநோய் மட்டுமில்லால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட இதர நோய்களை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
மது அல்லது ஆல்கஹால் அருந்துவதை மிதமான அளவில் வைக்க அல்லது முற்றிலும் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது; பரிந்துரைக்கப்பட்ட தினசரி வரம்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் வாய்ப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் வாய்பகுதியில் உள்ள திசுக்களில் இன்ஃப்ளமேஷன் மற்றும் சிதைவு ஏற்படுகிறது. இது புற்றுநோயாக மாறுவதற்கு உகந்த சூழலை உருவாக்குகிறது;
எனவே, மது உட்கொள்வதில் கட்டுப்பாட்டையும், முறையான செயல்பாடுகளையும் கடைப்பிடிப்பதால், வாயின் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கலாம். மதுவினால் ஈரல் மற்றும் இரைப்பை பாதிப்பு ஏற்படுவதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வாயின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தைக் கடைபிடிக்க வழக்கமான பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது தினமும் இரண்டு முறை பல் துலக்குதல், வழக்கமான பல் பரிசோதனைகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இவை வாய்ப்புற்றுநோய்க்கு எதிரான அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளாக செயல்படுகின்றன. வழக்கமான பல் பரிசோதனைகளின் போது ஏதேனும் அசாதாரணங்கள் அல்லது புற்றுநோய் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை மருத்துவர் முன்கூட்டியே கண்டறிய முடியும்; அதனால் ஆரம்ப நிலையிலேயே உடனடி மருத்துவத் தலையீட்டின் மூலம் சிகிச்சையைப் பெற்று குணமடையலாம்.
2. ஊட்டச்சத்து உத்திகள்:
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் சவ்வற்ற (கொழுப்பற்ற) புரதங்கள் நிறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைகின்றன.
அதனால் உடலும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலமும் பலப்படுகிறது; புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பும் அதிகரிக்கிறது. மாறாக, சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது நல்லது. ஏனெனில் அவை புற்றுநோய் அபாயங்களை உயர்த்துவதாக அறியப்படுகிறது.
3. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு:
பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் மற்றும் தடுப்பூசி மூலம் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (HPV) தாக்கத்திற்கு எதிராக பாதுகாப்பினைப் பெறலாம். குறிப்பாக இளம் பருவத்தினருக்கு இது குறித்த விழிப்புணர்வைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது.
HPV நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், வாய் மற்றும் தொண்டையைப் பாதிக்கும் புற்றுநோய்கள் உட்பட HPV தொடர்பான புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் இந்த தடுப்பூசிகள் உதவுகின்றன.
பொதுவான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொருத்தவரை, சன்ஸ்கிரீன் அல்லது SPF லிப் பாம் ஆகியவற்றை வழக்கமாகப் பயன்படுத்துவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிலிருந்து உதடுகளைப் பாதுகாக்கலாம். மேலும், வாய்ப்புற்றுநோயின் ஒரு வகையான உதட்டு புற்றுநோயைத் தடுப்பதற்கும் இவை உதவுகின்றன.
நீண்ட நேரம் வெயிலில் நிற்பதைக் குறைப்பது மிக முக்கியம். தொப்பிகளை அணிவது அல்லது நண்பகல் நேரங்களில் நிழலில் இருப்பது போன்ற சாதாரண வழிமுறைகளின் மூலம் புற ஊதாக் கதிர்வீச்சின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பைப் பெறலாம். புற்றுநோய் என்பது பல பாகங்களுக்கும் பரவக்கூடிய தன்மை உள்ளதை நினைவில் கொள்ளவும்.
4. ஆரோக்கியமான பழக்கங்கள்
மித-தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் ஒருவர் தனது எடையை திறம்பட நிர்வகிக்க முடியும்; ஆனால் உடற்பயிற்சிகளின் நற்பலன்கள் அத்துடன் நிற்பதில்லை - அது வாய்ப்புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பைக் குறைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
எப்படியென்றால் உடற்பயிற்சிகள் நமது உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளைச் சீராக்க உதவுவதால் - நோயெதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துவதோடு, இன்ஃப்ளமேஷனையும் குறைக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் அனைத்தும் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவுகின்றன.
வாயின் ஈரப்பதத்தைப் பராமரிப்பதன் மூலம் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுகளை வாயில் சேராமல் அகற்ற முடிகிறது. ஒட்டுமொத்த வாய்ப்பகுதியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் போதுமான அளவு நீர்ச்சத்து உடலில் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியம். உடலில் சரியான நீர்ச்சத்து இருக்கும் பட்சத்தில் உமிழ்நீர் உற்பத்தி சீராக நிகழ்கிறது.
உமிழ்நீர் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் காரணிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான நம் உடலின் இயற்கையான பாதுகாப்புப் பொறிமுறையாக செயல்படுகிறது. எனவே வாய்ப்புற்றுநோய் உள்ளிட்ட வாய்வழி சுகாதார பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைப்பதில் உமிழ்நீர் முக்கியப் பங்காற்றுகிறது.
5. வழக்கமான பரிசோதனைகள் அவசியம்:
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வழக்கமான பல் பரிசோதனைகளைப் பெறுவதன் மூலம், வாய்ப்புற்றுநோய் உள்ளிட்ட வாய் பகுதியில் உள்ள மருத்துவ ரீதியான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடிகிறது.
எதிர்பாராத விதமாக வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டு, அது நம் கவனத்திற்கு வராமல் போகும் பட்சத்தில், ஆரம்ப நிலையில் நோயைக் கண்டறிய இதுவே ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது. குறிப்பாக வாய்ப்புற்றுநோய் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாத சூழலில் ஒரு பல் மருத்துவர் இதன் அறிகுறிகளை கவனிக்க நேர்ந்து உதவலாம்.
வாய்ப்புற்றுநோயைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
வாய்ப்புற்றுநோயைப் பற்றி பல்வேறு புனையப்பட்ட கதைகள் பரவலாக கூறப்படுகின்றன. அது போன்ற தவறான கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சரியான தகவல்களை ஊக்குவிப்பதற்கும் நாம் அதுகுறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
- புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே வாய் புற்றுநோய் வரும்! - புகையிலை பயன்பாடு வாய்ப்புற்றுநோய்க்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து காரணி என்றாலும் - மது அருந்துதல், HPV தொற்று மற்றும் மோசமான வாய்வழி சுகாதாரம் போன்ற பிற காரணிகளால் புகைபிடிக்காதவர்களுக்கும் இந்த நோய் ஏற்படலாம்.
- வாய்ப்புற்றுநோய் எப்போதும் உயிருக்கு ஆபத்தானது! - முன்கூட்டியே நோயைக் கண்டறிதல் மற்றும் உடனடி சிகிச்சை மூலம், வாய் புற்றுநோய்க்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியும். இருப்பினும், சிகிச்சையளிக்கப்படாத அல்லது தீவிர நிலைகள் உயிருக்கு ஆபத்தானவை.
- வாய்ப்புற்றுநோய் பெரியவர்களை மட்டுமே பாதிக்கும் - வாய்ப்புற்றுநோய் ஏற்படும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும் என்பது உண்மை தான். ஆனால், இளம் வயதினரும் கூட இதனால் பாதிக்கப்படலாம், குறிப்பாக புகையிலைப் பழக்கம் அல்லது மது அருந்துபவர்கள்.
வாய்ப்புற்றுநோய் பற்றிய சில புள்ளிவிவரம்:
இந்தியாவில், வாய்ப்புற்றுநோய் குறிப்பிடத்தக்க ஒரு பொது சுகாதார ஐயமாக இருந்துவருகிறது. வாய்ப்புற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்.
வாய்ப்புற்றுநோய் இந்தியாவில் மூன்றாவது மிகவும் பொதுவான வகை புற்றுநோயாக உள்ளது; இது நாட்டில் உள்ள அனைத்து புற்றுநோயாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 30% பேரை பாதித்துள்ளது. வடகிழக்கு இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் புகையிலை பயன்பாடு மற்றும் புகைபிடித்தல் ஆகிய இரண்டின் காரணமாகவும் பலர் வாய்ப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே வாய்ப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது ஒரு கூடுதல் தகவல்.
முடிவுரை
பழங்கள், காய்கறிகள் மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவுகளை உண்பதன் மூலம் வாய்ப்புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். பச்சையிலைக் காய்கறிகள், கிரீன் டீ, பூண்டு, மஞ்சள், பெர்ரி, தக்காளி, கொட்டைகள், விதைகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தண்ணீர் போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த வாய் பகுதியின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
இருப்பினும், புகையிலை மற்றும் அதிகப்படியான மது உட்கொள்வதைத் தவிர்ப்பது, நல்ல வாய்வழி சுகாதாரத்தை கடைப்பிடிப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதும் அவசியம்.