கோடைக்காலமும் நமது உடல்நிலையும் – ஒரு அறிமுகம்
கோடைக்காலத்தில், வெப்பத்தை சமாளிக்க நம் உடலானது வியப்பூட்டும் பல சிறந்த வழிகளைக் கையாளுகிறது. வியர்வை நம்மை குளிர்விக்கிறது. நமது சருமத்திற்கு அருகே உள்ள இரத்த நாளங்களை அகலப்படுத்துவது (டைலடேஷன்) போன்ற செயல்பாடுகள் நமது உடலில் நடக்கிறது. நமது சுவாசம் தேவைக்கேற்ப மாறி நம் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், நீண்ட நேரம் அதிக வெப்பத்தில் இருந்தால், நமக்கு நீரிழப்பு உட்பட சில உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.
மழைக்காலத்தில் மட்டுமே கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் என்பதில்லை, கோடையிலும் அவை பரவுகின்றன. கோடைக்காலத்தில் வயிறு மற்றும் சுவாசக் கோளாறுகள் அதிகம் ஏற்படுகின்றன. சருமப் பிரச்சினைகள் மற்றும் வெயில் புண்கள் போன்றவற்றின் ஆபத்துகளும் உள்ளன.
கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க, நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது மட்டுமில்லாமல், நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு உதவும் பிற நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.கோடை காலத்தில் நாம் போதிய ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான எளிய வழிகளை இந்த கட்டுரையில் காண்போம். இதில், கோடை வெப்பத்தில் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உதவிக்குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
இந்தியாவில் கோடைக்காலம்
இந்தியாவில் பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை கோடைகாலமாக கருதப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பம் அதன் உச்ச நிலையில் இருக்கும்; அப்போது தான் வெப்ப அலைகளும் அதிகமாக வீசக்கூடும். இது மக்களிடையே வெப்பம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சவால்களை முன்வைக்கிறது.
கோடைக்காலத்தில் நம்மை பாதிக்கும் 8 முக்கிய நோய்கள் அல்லது உடல்நல பாதிப்புகள்
1. ஹீட்ஸ்ட்ரோக்
நமது உடல் அதிகமாக வெப்பமடையும் ஒரு தீவிர நிலையே ஹீட்ஸ்ட்ரோக் எனப்படுகிறது. அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் இருக்க நேர்ந்தால் குழப்பம், இதயப்படபடப்பு மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளை நமது உடல் ஏற்படுத்தும்.
2. தோல் நோய்கள் மற்றும் வெயில் புண்கள்
கோடைக்காலத்தில் காற்றின் புழுக்கம் அதிகரிப்பதால் வெப்ப புண்கள் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற சரும நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன. சேதமடைந்த சருமமும், அதிகப்படியான வியர்வையும் பல்வேறு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. சூரிய ஒளியின் புற ஊதா (புற ஊதா) கதிர்களுக்கு நமது சருமம் அதிகமாக வெளிப்பட்டால், வெயில் புண்கள் எனப்படும் சன்பர்ன் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் சருமம் சிவந்து போதல், வலி ஏற்படுதல் மற்றும் அதன் தீவிர பாதிப்பாக தோலில் கொப்புளங்களை ஏற்படுத்துகிறது.
3. நீரிழப்பு
நீரிழப்பு என்பது உடலில் போதுமான திரவங்கள் இல்லாத ஒரு நிலையாகும். பெரும்பாலும், போதிய திரவங்களை உட்கொள்ளாதது அல்லது அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற காரணிகளால் நீரிழப்பு ஏற்பட்டு, பல்வேறு உடல்நல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.
4. சுவாச நோய்த்தொற்றுகள்
கோடைக்காலத்தில், காற்று மாசுபாடு மற்றும் தூசி அதிகரிப்பதால் இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் சுவாச பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு இதன் தீவிரம் அதிகமாக இருக்கும். மகரந்தம் அல்லது பிற காற்றில் பரவும் துகள்களால் ஏற்படும் வைக்கோல் காய்ச்சல் (ஹே ஃபீவர்), அல்லது அலர்ஜிக் ரைனைடிஸ் என்கிற ஒரு ஒவ்வாமை எதிர்வினை கூட தூண்டப்படலாம். தும்மல், அரிப்பு மற்றும் நாசி நெரிசல் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த பாதிப்பு கோடைக்காலத்தில் அதிகம் பரவுகிறது.
5. கொசுக்களால் பரவும் நோய்கள்
டெங்கு மற்றும் மலேரியா ஆகியவை இந்தியாவில் கோடைக்காலத்தில் கொசுக்களால் பரவும் பொதுவான நோய்களாகும். கோடை மழையின் நீர் தேங்கி நிற்க நேர்ந்தால் அது கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாக அமைகிறது. ஏடிஸ் கொசுக்கள் டெங்குவையும், அனாஃபிலிஸ் கொசுக்கள் மலேரியாவையும் பரப்புகின்றன. கோடை காலத்தில் வெப்பமான மற்றும் புழுக்கமான சூழ்நிலை நிலவுவதால், இந்த நோயை சுமக்கும் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழல் கிடைக்கிறது.
6. நீர் அல்லது உணவு மூலம் பரவும் நோய்கள்
கோடைக்காலத்தில், பாக்டீரியாக்களின் வளர்ச்சி காரணமாக அசுத்தமான நீர் மற்றும் சுகாதாரமற்ற உணவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கின்றன. காலரா, டைபாய்டு மற்றும் இரைப்பை குடல் அழற்சி போன்ற நோய்கள் கோடையில் பொதுவானவை. கல்லீரல் செயலிழப்பால் ஏற்படும் மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் போன்ற நீரினால் பரவும் நோய்கள் இக்காலத்தில் அதிகம் பரவுகிறது; கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால், மக்கள் ஆபத்தினை அறியாமல், தண்ணீரை மிச்சப்படுத்தும் நோக்கில் மாசுபட்ட நீரைக் கூட பயன்படுத்துகிறார்கள், இதனோடு அதிக வெப்பநிலையும் சேர்ந்துகொள்ள பாக்டீரியா பெருக்கத்திற்கு அது சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.
7. வைரஸ் நோய்கள்
கோடைக்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா (கோடை காய்ச்சல்), அம்மை, தட்டம்மை மற்றும் சிக்கன் பாக்ஸ் போன்ற சில பொதுவான வைரஸ் நோய்கள் பரவுகின்றன. மேலும் கை, கால் மற்றும் வாய் மூலம் பரவும் என்டரோவைரஸ்களும் நோய்களை ஏற்படுத்துகின்றன. அதிக வெப்பநிலை மற்றும் அதிகரிக்கும் ஈரப்பதமானது, காற்றின் மூலம் இந்த வைரஸ்களை எளிதாக பரப்புகிறது.
8. சில அரிதான கோடைகால நோய்கள்
உடல் நலனை பாதிக்கும் சில அரிதான கோடைகால நோய்களும் உள்ளன. அவற்றின் சில உதாரணங்களைப் பாப்போம். சமநிலையற்ற தாதுக்களை கொண்ட தண்ணீரைக் குடிப்பதால், உடலில் சோடியத்தின் அளவு குறைந்து ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) ஏற்படலாம். கோடையில் ஏற்படும் பருவகால மனநல பாதிப்பினால் (SAD) சிலருக்கு மனச்சோர்வு ஏற்படலாம். அதிகப்படியான வியர்வை காரணமாக உடலில் தேவையான உப்பு குறைவதால், பலவீனம் மற்றும் குழப்பம் ஏற்படலாம். கோடைக்காலத்தில் நீண்ட நேரம் வெயிலில் நிற்கும்போது திடீர் மயக்கத்தை ஏற்படுத்தும் ‘ஹீட் சின்கோப்’ (Heat syncope) என்கிற பாதிப்பு கூட ஒரு சிலரை தாக்கலாம்.
கோடைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 10 வழிகள்:
தொற்றுகள்,நோய்கள் மற்றும் உடல் நல பிரச்சினைகளை சிறப்பாக கையாளுவதற்கான உடலின் இயற்கையான தற்காப்பு வழிமுறைகளை மேம்படுத்தும், அதற்கு ஆதரவான சூழலை உருவாக்குவதுமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எனப்படுகிறது. அப்படிப்பட்ட 10 வழிகளை இங்கே காண்போம்:
1. நோயெதிர்பு ஆற்றலை ஊக்குவிக்கும் முதன்மையான விஷயம்: உணவு
கோடையின் சுட்டெரிக்கும் வெப்பத்தில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உணவில் சேர்ப்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மிகமிக அவசியமாகும். வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்கள் - நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற வைட்டமின் C-ஐ வழங்குகின்றன. ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரி வகைகள், தொற்றுநோய்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பினை வழங்குகிறது. கீரை மற்றும் கேல் போன்ற அடர் பச்சை கீரைகளில் வைட்டமின்கள் A மற்றும் C ஆகியவை நிறைந்துள்ளதால், அவை நோயெதிர்ப்பு மண்டல ஆரோக்கியத்தினை ஊக்குவிகின்றன. தர்பூசணி மற்றும் வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், அவை உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை அளித்து உடல் செயல்பாடுகளை சீராக பேண உதவுகின்றன.
பூண்டில் உள்ள அல்லிசின் என்ற நுண்ணுயிரி எதிர்ப்பு காரணியைப் பெற கோடையில் நாம் சமைக்கும் உணவுகளில் அதனை அடிக்கடி சேர்க்கலாம். தயிர் மற்றும் பிற புரோபயாடிக் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை பராமரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ளலாம். கோடைக்காலத்தில் பல நன்மைகளை வழங்கும் பழைய சோற்றை நாம் மறந்துவிடக்கூடாது. செரிமானத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல், ஃபெர்மெண்ட்டட் ரைஸ் எனப்படும் பழைய சோறு - குடல் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் ஊடச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதையும் அதிகரிக்கிறது. கம்மங்கூழ் (பேர்ல் மில்லட் போரிட்ஜ்) போன்ற பாரம்பரிய உணவுகளையும் கோடைக்காலத்தில் உட்கொள்ளவேண்டும்.
2. போதிய நீர்ச்சத்தினை பெறவும்:
நீர்ச்சத்து (ஹைட்ரேஷன்) என்பது நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு அடிப்படையான விஷயமாகும். போதுமான அளவு திரவங்களை உட்கொள்வதால், நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் நிணநீர் (லிஃம்பாட்டிக்) மண்டலம் சரியாக செயல்படுகின்றன. நச்சுகளை திறம்பட அகற்ற உதவும் நீர்ச்சத்து – கோடைக்காலத்தில் தொற்றுநோய்களுக்கு எதிரான உடலின் மீட்புத் திறனையும் மேம்படுத்துகிறது.
கோடைக்காலத்தில் உடலின் நீர்ச்சத்தினை தக்கவைக்க இளநீர், மோர், கிரீன் டீ, தர்பூசணி, நுங்கு மற்றும் எலுமிச்சை ஜூஸ் போன்ற புத்துணர்ச்சியூட்டும் இயற்கையான பானங்களை அருந்த வேண்டும். போதுமான நீர்ச்சத்தானது சுவாச மற்றும் இரைப்பைக் குழாய்களில் உள்ள வழவழப்பான திரவ மேற்பரப்புகளை பராமரிக்கிறது; இந்த வழவழப்பான மேற்பரப்புகளே நோய்க்கிருமிகளுக்கு எதிரான முக்கியமான தடுப்பானாக உள்ளது. நோயெதிர்ப்பு புரதங்கள் மற்றும் என்ஸைம்களை கொண்ட உமிழ்நீர் உற்பத்திக்கும் தண்ணீர் உதவுகிறது. போதிய நீர்ச்சத்துடன் இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக்குகள் தொடர்பான தீங்குகளிலிருந்து ஒருவர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
3. தனிநபர் சுகாதாரத்தைப் பேணவும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், குறிப்பாக கோடைக்காலத்தில், ஒருவரது சுய சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது, அவ்வப்போது கை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கலாம்; அது பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. தினசரி குளிப்பது மற்றும் சுய சுத்தத்தை பராமரித்தல் போன்ற சரியான சுகாதார நடைமுறைகளைக் கடைபிடித்து சரும நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.
4. மேற்பூச்சு மருந்துகளின் பயன்பாடு
வேர்க்குரு பவுடர்கள், டஸ்ட்டிங் பவுடர்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தி கோடைக்காலத்தில் வியர்வையால் ஏற்படும் சருமப் பிரச்சினைகளைத் தடுக்கலாம். இந்த மேற்பூச்சு மருந்துகள் வெளியில் இருந்து நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதோடு, மேற்படி தீவிர சரும நோய்கள் பரவாமல் தடுக்கின்றன. இந்த தயாரிப்புகளில் பெரும்பாலும் குளிரூட்டும் பண்புகளைக் கொண்ட உட்பொருட்களும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மருந்துகளும் உள்ளன. அவை வியர்வையைக் கட்டுப்படுத்தவும், எரிச்சலைக் குறைக்கவும், சருமத்தை வறண்டு போகாமல் வைத்திருக்கவும் உதவுகின்றன. வெப்பமான மற்றும் ஈரப்பதமான சருமப்பகுதியில் தான் நோய்க்கிருமிகள் வசதியாக பல்கிப் பெருகுகின்றன. மேற்பூச்சாக பயன்படுத்தப்படும் எந்தவொரு தயாரிப்பினையும் முயற்சிக்கும் முன் பேட்ச் டெஸ்ட் (சோதனை முயற்சி) செய்யுங்கள்; அவை உங்களுக்கு தேவை என்று நினைத்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே பயன்படுத்தவும்.
5. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்
போதிய நீர்ச்சத்துடன் இருப்பது முக்கியம் என்றாலும், கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் உடலெங்கும் சென்றடைவது ஊக்குவிக்கப்படுகிறது. நோயெதிர்ப்பு செல்களின் கண்காணிப்பு மற்றும் எதிர்த்துப் போராடும் திறன் அதிகரிக்கிறது. உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் போதுமான அளவு தண்ணீர் அல்லது சரியான பானங்களை குடிக்கவும்.
6. ஹீட்ஸ்ட்ரோக் மற்றும் வெப்ப புண்களிலிருந்து பாதுகாத்தல்
தீக்காயங்கள் மற்றும் ஹீட்ஸ்ட்ரோக்குகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் - அதற்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முன்பு, வெப்பத்தை புத்திசாலித்தனமாக கையாள்வது முக்கியமாகும். கோடைக்காலத்தில் வெப்பத்தால் சரும பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, அதிக SPF கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் செல்வதற்கு 15-30 நிமிடங்களுக்கு முன்பு அதனை நன்கு தடவிக்கொள்ளவும். தொப்பிகள், கையுறைகள் மற்றும் சன்கிளாஸ் போன்ற பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும். மேலும் வெயில் உச்சத்தில் இருக்கும் போது முடிந்தவரை நிழலிலேயே இருக்கவும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.
7. மாசுக்களை தவிர்க்கவும்
உணவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல், தண்ணீரைப் பொருத்தவரை சுத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுதல், அசுத்தமான இடங்களில் சாப்பிடாமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகளால் நீர் மற்றும் உணவுப் பழக்கத்தினால் பரவும் நோய்களின் அபாயத்தைத் தடுக்கலாம். வரும்முன் காக்கும் இந்த அணுகுமுறை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பணிச்சுமையைக் குறைக்கிறது. இதுபோன்ற அத்தியாவசிய பாதுகாப்பு வழிமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், கோடைக்காலத்தில் நமது ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம்.
8. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகள்
கோடைக்கால நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க சில தடுப்பூசிகள் நமக்கு உதவுகின்றன. வராமல் தடுக்கக்கூடிய நோய்களிடமிருந்து பாதுகாக்க நமக்கு தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு, அவர்களின் தடுப்பூசி அட்டவணையின்படி அனைத்து தடுப்பு மருந்துகளும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கோடையில் அதிகம் வரக்கூடிய காய்ச்சல், அம்மை, பெரியம்மை, சின்னம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு எதிரான நமது நோயெதிர்ப்பு ஆற்றலை தடுப்பு மருந்துகள் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். மேலும், சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவு வழியாகப் பரவும், வெப்பமான பருவநிலையில் அதிகமாக ஏற்படும் டைபாய்டு மற்றும் ஹெபடைடிஸ் A போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள் முக்கியமாகிறது. தனிநபரின் உடல் நிலையின் அடிப்படையில் தேவைப்படும் தடுப்பூசிகள் என்னென்ன என்பதைத் தீர்மானிக்க மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
9. சில பழக்கவழக்கங்களைக் கட்டுப்பாட்டில் வைக்கவும்
கோடைக்காலத்தில் உடல் அசௌகரியம் மற்றும் உடல்நல ஆபத்துகளைத் தூண்டும் சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக காரமான உணவுகள் போன்றவை ஜீரணிக்க கடினமாக இருப்பதோடு, உடலின் வெப்பத்தையும் உயர்த்திவிடும். கஃபைன் மற்றும் சர்க்கரை உள்ள பானங்களை அதிகம் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதால், நீரிழப்பைத் தடுக்கலாம். நீரிழப்பு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவது குறித்து நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். பதப்படுத்தப்பட்ட மற்றும் தெருவோர உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் அசுத்தம் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
மது அருந்தும் பழக்கம் இருந்தால், கோடைக்காலத்தில் அதன் அளவைக் கட்டுப்படுத்துவது நல்லது, ஏனெனில் இது நீரிழப்பிற்கு பெரும் பங்களிப்பது மட்டுமில்லாமல் - வெப்பநிலையை சீராகப் பராமரிக்கும் உடலின் திறனையும் குறைக்கிறது. கோடைக்காலத்தில் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்கவும், ஏனெனில் அது உடல் வெப்பநிலையை அதிகரித்து வியர்வையை தூண்டும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் நபராக இருந்தால், உங்கள் உடலுக்கு ஏற்ற, இலகுவான பயிற்சிகளை மேற்கொள்ளவும்; கடுமையான வெயிலில் வெளிப்புற பயிற்சிகளைத் தவிர்க்கவும்.
10. சில அரிதான கோடைகால நோய்களுக்கு எதிராக பிரத்தியேக பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும்
உங்களுக்கு ஏதேனும் அரிதான கோடைகால நோய்கள் ஏற்பட்டால், அல்லது ஹைபோநெட்ரீமியா, (Hyponatremia) கோடைகாலத்தில் ஏற்படும் பருவகால மனநிலை பாதிப்பு(SAD), உப்பு குறைதல், மற்றும் ஹீட் சின்கோப்(Heat syncope) போன்ற நோய்கள் இதற்கு முன்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு ஏற்ப விழிப்புடன் இருப்பதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவரிடம் கேட்டறிந்து பின்பற்றுவதும் மிக முக்கியம்.
முடிவுரை
போதிய நீர்ச்சத்துடன் இருப்பது, வெயிலிலிருந்து பாதுகாப்பாக இருத்தல், மற்றும் சுகாதாரமான நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் கோடைக்காலத்தில் நமது நோயெதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தலாம். கோடைக்காலத்தை சிறப்பாக கையாள ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக அணுகுமுறைகள் தேவை; அதற்கு அவரவர் பகுதிகளில் பின்பற்றப்படும் கலாச்சார நடைமுறைகளையும், உணவுகளையும் கண்டறிந்து பயன்படுத்தவும். கோடைக்காலத்தில் ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடைமுறைக்கு ஏற்ற வகையில் உணவு மற்றும் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு, அவற்றை தவறாமல் கடைபிடிக்கவும் வேண்டும்.