மனித உடல்
உலகில் வாழும் மிகவும் சிக்கலான உடலமைப்பைக் கொண்ட உயிரினங்களில் மனித இனமும் ஒன்றாகும். நமது உடல் நலமுடன் இருப்பதற்காக, முறைப்படுத்திய வழியில் ஒருமித்துச் செயல்படும் எண்ணற்ற நுண்ணிய உயிரணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
மனித உடல் பல்வேறு உயிரணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் ஆனது.
நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் செரிமான மண்டலம் போன்ற மண்டலங்கள் உடலின் பல்வேறு சிக்கலான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.
வைட்டமின்கள்
கரிம மூலக்கூறுகளான வைட்டமின்கள் (உயிர்ச்சத்துக்கள்), பெரும்பாலான உயிரினங்களின் வளர்சிதை மாற்ற (மெட்டபாலிசம்) செயல்பாடுகள் சீராக இருப்பதற்குத் தேவைப்படும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும்.
குறைந்த அளவில் தேவைப்படும் கலவைகளே இந்த வைட்டமின்கள். நமது உடலால் தானாகவே வைட்டமின்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே நாம் உண்ணும் உணவிலிருந்து அவற்றைப் பெற வேண்டியிருக்கிறது.
நமது உடலுக்கு வைட்டமின்கள் இன்றியமையாதவையாகும், ஏனெனில் அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கின்றன. உடலின் வைட்டமின் போதிய அளவுக்கு கீழ் குறைந்தால் – வைட்டமின் குறைபாடு நோய்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய நோய் ஏற்படலாம்.
வெவ்வேறு உயிரினங்களுக்கு ஏற்றவாறு வைட்டமினின் தேவைகளும் மாறுபடும். உதாரணமாக, நாய்கள் தங்களுக்கு தேவையான வைட்டமின் C-ஐ தாமே உற்பத்தி செய்யலாம், ஆனால் மனிதர்கள் தங்கள் உணவிலிருந்தே அதை பெற வேண்டியுள்ளது.
வைட்டமின்கள் நமது உடலுக்கு என்ன செய்கின்றன?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு செயல்பாடுகளை நமது உடல் மேற்கொள்ள வைட்டமின்கள் மிகவும் அவசியமாகும்.
வைட்டமின்களின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:
- ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க நமது உடலுக்கு உதவுகிறது
- திசுக்களை ஒழுங்குபடுத்த மற்றும் உயிரணுக்களைச் சீராக்க உதவுகிறது
- வயது முதிர்விற்கு எதிராகப் போராட உதவுகிறது
- புதிய செல்களை உருவாக்குவதில் உதவுகிறது
- எலும்புகள், பற்கள் மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
- தசைகள் மற்றும் தசைநார்கள் சீராகச் செயல்பட உதவுகிறது
வைட்டமின்களின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள, முதலில் நாம், அவற்றின் வகைகளையும், அவை ஒவ்வொன்றும் நமது உடலுக்கு வழங்கும் குறிப்பிட்ட பங்களிப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.
வைட்டமின்களின் வகைகள் யாவை? அவற்றின் செயல்பாடுகள் யாவை?
வைட்டமின்கள் அவற்றின் குணநலன்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை கொழுப்பு அல்லது நீரில் கரையும் தன்மை கொண்டதாக உள்ளன.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்
வைட்டமின் A, K, E மற்றும் D போன்றவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகும். நமது உடலானது கொழுப்பில் கரையும் வைட்டமின்களை கல்லீரல் மற்றும் பிற கொழுப்பு திசுக்களில் சேமிக்கின்றன. கொழுப்பில் கரையும் வைட்டமின்களை நமது குடல்கள் உறிஞ்சுகின்றன.
நீரில் கரையும் வைட்டமின்கள்
இவ்வகை வைட்டமின்கள் நீரில் கரையும் தன்மையுடையவை. கொழுப்பில் கரையும் வைட்டமின்களைப் போல இவை நமது உடலில் அதிக நேரம் இருப்பதில்லை. வைட்டமின் C மற்றும் B ஆகியவை நீரில் கரையும் தன்மை கொண்டவையாகும்.
அங்கீகரிக்கப்பட்ட வைட்டமின்கள் மொத்தம் 13 உள்ளன.
1. வைட்டமின் A
ரெட்டினோல், ரெட்டினால் மற்றும் கரோட்டினாய்ட்ஸ் உள்ளிட்ட வேதியியல் பெயர்கள் இதற்கு உள்ளன.
வைட்டமின் A, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் வகையைச் சார்ந்தது. கண் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் A சிறந்த ஊட்டச்சத்து என்று நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குக் கற்பிக்கப்படுகிறது. வைட்டமின் A குறைபாடு இருந்தால், உடலில் சில கண் நோய்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படலாம்
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள், முட்டை மற்றும் பால் ஆகியவை வைட்டமின் A-வின் சிறந்த உணவு ஆதாரங்களாகும்.
2. வைட்டமின் B1
வைட்டமின் B1-இன் வேதியியல் பெயர் தியாமைன் ஆகும். வைட்டமின் B1 நீரில் கரையக்கூடிய வகையைச் சார்ந்த வைட்டமினாகும். சர்க்கரையை உடல் ஏற்கும்படி பிரிக்கும் பல்வேறு என்ஸைம்களை உருவாக்குவது வைட்டமின் B1-இன் முக்கிய செயல்பாடாகும்.
பிரவுன் அரிசி, பன்றி இறைச்சி, காலிஃபிளவர், ஆரஞ்சு மற்றும் முட்டைகளில் வைட்டமின் B1 ஏராளமாகக் கிடைக்கிறது.
3. வைட்டமின் B2
வைட்டமின் B2-இன் வேதியியல் பெயர் ரிபோஃப்ளேவின். இது நீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமினாகும். உடலில் உயிரணுக்களின் முறையான வளர்ச்சிக்கு வைட்டமின் B2 அவசியமாகும். உணவினை வளர்சிதை மாற்றம் செய்வதற்கு இது மிகவும் முக்கியம்.
நமது உடலில் வைட்டமின் B2 குறைபாடு ஏற்பட்டால், அதற்கான அறிகுறிகள் வாய் மற்றும் உதடுகளில் தென்படும்.
முட்டை, வாழைப்பழம், பால், சீஸ், மீன் மற்றும் பீன்ஸ் ஆகியவை வைட்டமின் B2 நிறைந்துள்ள உணவுகள் ஆகும்.
4. வைட்டமின் B3
நியாசின் என்பது வைட்டமின் B3-யின் வேதியியல் பெயராகும். வைட்டமின் B3 நீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும். உயிரணுக்களின் வளர்ச்சிக்கு உதவுவதே வைட்டமின் B3-யின் முக்கிய செயல்பாடாகும். உயிரணுக்கள் முறையாக செயல்பட நியாசின் தேவைப்படுகிறது. உடலில் வைட்டமின் B3 குறைபாடு ஏற்பட்டால், நமக்குக் குடலில் பிரச்சினைகள், சருமத்தில் மாற்றங்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
கோழி, சூரை (டூனா) மீன், டோஃபு, ப்ரோக்கோலி, விதைகள், தக்காளி, பால், கேரட் மற்றும் முட்டை ஆகியன வைட்டமின் B3-யின் நல்ல உணவு ஆதாரங்களாகும்.
5. வைட்டமின் B5
வைட்டமின் B5-இன் வேதியியல் பெயர் பான்டோதேனிக் அமிலம் என்பதாகும். பான்டோதேனிக் அமிலம் நீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமினாகும். ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு இந்த வைட்டமின் மிக அவசியமானது.
நாம் வைட்டமின் B5-ஐ உட்கொள்வது அவசியமாகும். இறைச்சி, தானியங்கள், அவகாடோ, தயிர் ஆகியவற்றில் இந்த வைட்டமின் உள்ளது.
6. வைட்டமின் B6
வைட்டமின் B6-இன் வேதியியல் பெயர் பைரிடாக்சின். உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கு இந்த மூலக்கூறு அவசியமாகும். வைட்டமின் B6 குறைபாடு ஏற்பட்டால், பெரிஃபெரல் நியூரோபதி அல்லது இரத்த சோகை போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
கொண்டைக்கடலை, வாழைப்பழம் மற்றும் விதைகளில் வைட்டமின் B6 உள்ளது.
7. வைட்டமின் B7
வைட்டமின் B7 பயோட்டின் என்று பலராலும் அழைக்கப்படுகிறது. நமது உடல் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை வளர்சிதை மாற்றமடைய செய்ய பயோட்டின் உதவுகிறது. இது முடியின் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.
உடலில் B7 வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால், குடல் வீக்கம் ஏற்படலாம், மற்றும் தோல் அழற்சியையும் ஏற்படலாம்.
முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், சீஸ் மற்றும் கீரை ஆகிய உணவுகளில் வைட்டமின் B7 உள்ளது.
8. வைட்டமின் B9
ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின் B9-இன் வேதியியல் பெயராகும். வைட்டமின் B9 நீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமினாகும். DNA மற்றும் RNA உருவாக்கத்தில் இந்த வைட்டமின் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பி9 வைட்டமின்கள் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இதன் குறைபாடு கருவின் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம்.
இலைக் காய்கறிகள், பட்டாணி, சூரியகாந்தி விதைகள் மற்றும் பழங்களில் வைட்டமின் B9 உள்ளது.
9. வைட்டமின் B12
மித்தைல்கோபாலமின் என்பது வைட்டமின் B12-இன் வேதியியல் பெயராகும். மற்ற B வகை வைட்டமின்களைப் போலவே இதுவும் நீரில் கரையக்கூடியது. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க வைட்டமின் B12 உதவுகிறது. வைட்டமின் B12 அளவில் குறைபாடு ஏற்படுவது பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மீன், முட்டை, பால், இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் B12 நிறைந்துள்ளது.
10. வைட்டமின் C
ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின் C முக்கியப் பங்கு வகிக்கிறது. அஸ்கார்பிக் அமிலம் என்பது இதன் வேதியியல் பெயராகும். இது கொலாஜன் உற்பத்திக்கும், உடல் காயங்களை ஆற்றவும் உதவுகிறது. வைட்டமின் C இரத்த நாளங்கள் நன்கு செயல்படுவதை ஆதரிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை வழங்குகிறது.
வைட்டமின் C குறைபாடு இருந்தால் - காயங்களை ஆற்றுவதற்கு நமது உடலுக்கு அதிக நேரமாகும், மற்றும் திசுக்களின் வளர்ச்சியும் மோசமாகும்.
பழங்களில், குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் C அதிகமாக உள்ளது.
11. வைட்டமின் D
எர்கோகால்சிஃபெரால் என்று வைட்டமின் D பலராலும் அழைக்கப்படுகிறது. இது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமினாகும். எலும்புகளுக்கு கனிமங்கள் கிடைப்பதற்கு உதவுவதில் வைட்டமின் D முக்கியப் பங்கு வகிக்கிறது. வைட்டமின் D குறைபாட்டின் காரணமாக ரிக்கெட்ஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு, எலும்புகள் இலகுவாகிறது.
வைட்டமின் D-ஐ இயற்கையான முறையில் சூரியனின் UVB கதிர்களிலிருந்து பெறலாம். வைட்டமின் D-ஐப் பெற கொழுப்பு மீன்கள், முட்டைகள், காளான்கள் ஆகியவை உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.
12. வைட்டமின் E
டோக்கோஃபெரால் என்பது வைட்டமின் E-இன் வேதியியல் பெயராகும். இது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமினாகும். வைட்டமின் E ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமலும், இன்ஃபிலமேஷன் ஏற்படாமலும் தடுப்பதில் உதவுகிறது.
வைட்டமின் E குறைபாடு என்பது பொதுவாக காணப்படும் ஒன்றல்ல. ஒரு நபருக்கு வைட்டமின் E குறைபாடு இருந்தால், அவரது இரத்த அணுக்கள் அழிகிறது என்று அர்த்தமாகும்.
வைட்டமின் E நிறைந்துள்ள உணவிற்கு கிவி பழங்கள் பெயர் பெற்றவை. பாதாம், முட்டை மற்றும் இலைக் காய்கறிகள் உள்ளிட்டவையும் உடலில் வைட்டமின் E-ஐ அதிகரிக்கக்கூடும்.
13. வைட்டமின் K
கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின் K-இன் வேதியியல் பெயர் ஃபைல்லோக்விநோன் என்பதாகும்.
இரத்தம் உறைவதற்கு இந்த வைட்டமின் அவசியமாகும். வைட்டமின் K-இன் அளவு குறைந்தால் அதிகளவில் இரத்தம் கசியலாம்.
ப்ளீடிங் டையாதிசிஸ் என்கிற பாதிப்பும் ஏற்படலாம்.
வைட்டமின் K ஊட்டச்சத்தானது, பச்சை இலைக் காய்கறிகள், பரங்கிக்காய் மற்றும் அத்திப்பழத்தில் நிறைந்துள்ளது.
வைட்டமின் சப்ளிமெண்ட்களிலிருந்தும் வைட்டமின்களைப் பெறலாம். தேவை ஏற்படின், மருத்துவ நிபுணர் மல்டி-வைட்டமின் சப்ளிமெண்ட்களை பரிந்துரைப்பார்.
தொகுப்புரை
நலமாக வாழ்வதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும் நமக்கு வைட்டமின்கள் மிகவும் அவசியமாகும். அதற்காக அதிக அளவில் வைட்டமின்களை உட்கொள்வது ஆரோக்கியத்தை நன்கு மேம்படுத்தும் என்று கருதக்கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, அதிகளவில் வைட்டமின்களை உட்கொண்டால் அது நமது ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும்.
மருத்துவ நிபுணரை அணுகி, நம் உடலைப் பரிசோதித்து, அவர்களின் பரிந்துரைகளின்படி சப்ளிமெண்ட்ஸை உட்கொள்வதற்கே எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவர் முழுமையான நலத்துடன் வாழ, அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றுவது அவசியமாகும்.