துளசியும் – உடல் எடையும் – ஒரு அறிமுகம்:
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுடன், இயற்கையான வழியில் உடல் எடையைக் குறைக்க நம்மில் பலர் தொடர்ந்து முயன்று வருகிறோம். எடை குறைப்பதற்கு உதவ பல இயற்கைத் தீர்வுகள் உள்ளன; அதில் முக்கியமான ஒன்றுதான் துளசி. பல்வேறு நன்மைகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த மூலப்பொருளாக காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் துளசிக்கு இப்படி ஒரு பயன்பாடு இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது.
ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசியை உட்கொள்ளும் பழக்கம் இருப்பதை நாம் அறிவோம் தானே? அதற்கு பின்னால் பல்வேறு மருத்துவ காரணங்கள் உள்ளன. துளசிக்குப் பின்னால் உள்ள அறிவியலையும், உடல் எடை குறிப்பில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.
துளசி இலைகளில் அப்படி என்ன இருக்கிறது?
துளசி இலைகளில் ஃபினால்கள், ட்ரைடர்பினாய்டுகள் (Triterpenoids), ஃபிளேவனாய்டுகள் (Flavonoids) மற்றும் டெர்பீன்ஸ் (Terpenes) போன்ற சில பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. இவை தவிர, மருத்துவ குணம் நிறைந்த துளசி இலைகளில் முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் செரிமான இழைகளும் உள்ளன.
ஃபினால்கள் (Phenols)
1) யூஜினால் (Eugenol): மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற துளசியில் 2%-க்கும் குறைவாக உள்ள யூஜினால் என்கிற இந்த சேர்மமே அதன் நறுமணம் மற்றும் சுவையை அளிக்கிறது. இதற்கு நுண்ணுயிரிகளை எதிர்க்கும் ஆற்றலும், ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் குணங்களும் உள்ளன. இது துளசியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாகும்.
2) ரோஸ்மரினிக் (Rosmarinic) அமிலம்: துளசியில் 0.4%-க்கும் குறைவாக உள்ள இந்த ரோஸ்மரினிக் அமிலம் அதன் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகளுக்கு காரணமான ஒரு பாலிஃபினாலிக் சேர்மமாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களைத் அப்புறப்படுத்தவும், இன்ஃப்ளமேஷனைக் குறைக்கவும், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
ட்ரைடர்பினாய்டுகள் (Triterpenoids)
1) உர்சோலிக் (Ursolic) அமிலம்: துளசியில் தோராயமாக 1% உள்ள இந்த - உர்சோலிக் அமிலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பென்டாசைக்ளிக் ட்ரைடர்பினாய்டு (pentacyclic triterpenoid) சேர்மமாகும். இது ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன், ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதால், கொழுப்பு சேர்வதைக் குறைத்து எடை குறைப்புக்கு உதவுகிறது.
ஃபிளேவனாய்டுகள் (Flavonoids)
1) அப்பிஜெனின் (Apigenin): துளசியில் சுமார் 0.3% மட்டுமே இருந்தாலும் அப்பிஜெனின் என்கிற இந்த ஃபிளேவனாய்டு ஒரு சக்திவாய்ந்த ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகளைக் கொண்டுள்ளது. பசியை மட்டுப்படுத்துவதன் மூலமும், உணவு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலமும், வயிறு நிறைந்த உணர்வை ஊக்குவிப்பதன் மூலமும் எடை குறைப்புக்கு இந்த அப்பிஜெனின் உதவுகிறது.
டெர்பீன்ஸ் (Terpenes)
1) லினலூல் (Linalool): லினலூல் என்பது மலர் போன்ற நறுமணம் கொண்ட ஒரு டெர்பீன் ஆல்கஹால் ஆகும். துளசியில் சுமார் ௦.3% உள்ள இது பதற்றத்திற்கு எதிராகவும், மயக்க மருந்து போலவும், செயல்படுகிறது. மன அழுத்த அளவைக் குறைப்பதன் மூலம், விரும்பிய உணவுகளை அதிகமாக உண்பதை தடுத்து, மனதை சாந்தப்படுத்தி எடை குறைப்புக்கு லினலூல் உதவுகிறது. துளசியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களில் இதுவும் ஒன்று.
வைட்டமின்கள்
துளசியில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K மற்றும் ரிபோஃப்ளேவின் (B2) மற்றும் நியாசின் (B3) போன்ற பல்வேறு B வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மினரல்கள்
துளசியில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. எலும்பு ஆரோக்கியம், தசை செயல்பாடு மற்றும் நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு இந்த தாதுக்கள் இன்றியமையாதவையாகும்.
நார்ச்சத்து
துளசி இலைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், முழுமையான உணவு உண்ட திருப்தியையும் அளித்து ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தினையும் பேண உதவுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள உள்ளடக்க அளவீடுகள் ஒவ்வொரு வகை துளசி செடியைப் பொருத்தும், தாவரம் வளரும் நிலைமைகள் மற்றும் பயன்படுத்தும் முறை உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தும் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
எடை மற்றும் BMI-ஐ புரிந்துகொள்ள வேண்டும்
உடல் எடையைக் குறைப்பதில் துளசியின் நன்மைகளை ஆராய்வதற்கு முன், உடல் நிறை குறியீட்டெண் (BMI) பற்றியும்; ஒருவரது ஏதுவான எடை, அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றினை தெளிவாக புரிந்துகொள்வதும் முக்கியமாகும்.
உடல் நிறை குறியீட்டெண் (BMI) : உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் உடல் கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஒரு குறியீட்டு எண் தான் இந்த BMI. ஒருவரது எடையை (கிலோகிராம்) உயரத்தின் வர்க்கத்தால் வகுப்பதன் மூலம் (kg/m²) இது கணக்கிடப்படுகிறது. இந்த BMI-யின் வரம்பின் அடிப்படையில் எடைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
- குறைவான எடை (குறைவான BMI): சிலர் அவரது உயரத்திற்கு ஏற்ற எடையை விட குறைவாக இருந்தால் அவர் குறை எடை அல்லது அண்டர்வெயிட் எனப்படுவார்கள்.
- ஏதுவான எடை (சரியான BMI): ஒருவரது ஏதுவான எடை என்பது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது.
- அதிக எடை (சற்று அதிகமான BMI): ஒரு குறிப்பிட்ட தரநிலையுடன் ஒப்பிடும்போது அதிக உடல் எடையைக் கொண்டிருப்பது அதிக எடை எனப்படும். அதாவது உயரத்திற்கு ஏற்ற எடையை விட சற்று அதிகமான நிலை.
- உடல் பருமன் (மிக அதிகமான BMI): அதிகப்படியான உடல் கொழுப்பு இருந்தால் அது பருமன் என்று கூறப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
ஏன் உடல் பருமன் பிரச்சினையாகிறது?
உடல் பருமன் என்பது தோற்றத்தின் ரீதியாக பிரச்சினையாக கருதப்படுவது மட்டுமல்லாமல், கடுமையான உடல்நல அபாயங்களையும் வரவழைக்கிறது. டைப் 2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட சில நாட்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், பருமனாக உள்ளவர்களில் பலர் குறைவான தன்னம்பிக்கை மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். உடல் பருமன் ஒருவரது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகவுள்ளது.
உடல் எடையைக் குறைக்க துளசி இலைகள் எவ்வாறு உதவுகின்றன?
- வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் யூஜினால்: துளசியின் முக்கிய அங்கமான யூஜினால், ஒருவரது வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, கலோரியை செலவிடுவதை அதிகரிக்கிறது; இதனால் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.
- தசை-உருவாக்கத்தைத் தூண்டும் உர்சோலிக் அமிலம்: துளசியை உட்கொள்வது கொழுப்பற்ற தசைகளை அதிகரிக்கலாம். துளசி இலைகளில் காணப்படும் உர்சோலிக் அமிலம் தசை வளர்ச்சியை அதிகரித்து, கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தி ஒரு கச்சிதமான உடலமைப்பை பெற உதவுகிறது.
- ரோஸ்மரினிக் அமிலத்தின் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் சக்தி: துளசியின் ரோஸ்மரினிக் அமிலம், ஒரு சக்திவாய்ந்த ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த சேர்மம் அதிக எடையுடன் தொடர்புடைய ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தையும் மற்றும் இன்ஃப்ளமேஷனையும் எதிர்த்துப் போராடி, ஆரோக்கியமான உடலைப் பெற உதவுகிறது.
- பசியைக் குறைக்கும் அப்பிஜெனின்: வயிறு நிரம்பியதாக உணரச்செய்யும் இந்த சேர்மம், இயற்கையாக பசியை அடக்கும் மருந்தாக செயல்படுகிறது. பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உணவு உட்கொள்ளலைக் குறைத்து, சீராக எடையைக் குறைப்பதற்கு துளசி உதவுகிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்கும் லினலூல்: மன அழுத்தத்தால் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணும் பழக்கத்திற்கு விடைகொடுங்கள். துளசி இலைகளில் உள்ள இதமளிக்கும் சேர்மமான லினலூல் - மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் போக்குகிறது. மனதையும் உடலையும் அமைதிப்படுத்துவதன் மூலம், அதீதமாக உண்பதைக் குறைத்து, பசியை மட்டுப்படுத்துகிறது. அதனால் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.
துளசியை ஏன் காலையில் உட்கொள்ள வேண்டும்?
காலையில், வயிறு காலியாக இருக்கும் போது செரிமான நொதிகள் குறைவாக இருக்கும்; அப்போது சாப்பிடும் பொது துளசியின் ஊட்டச்சத்துக்கள் நமது உடலால் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது. பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிட்டாலும் அதன் உட்பொருட்கள் நம் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும். துளசியில் உள்ள பயோஆக்டிவ் சேர்மங்களை உடலால் முழுமையாக ஏற்க முடிகிறது.
சரி, காலையில் துளசியை எப்படி உட்கொள்ளலாம்? அதற்கான வழிகள் இதோ:
- துளசி தேநீர்: புதிதாகப் பறித்த துளசி இலைகளை சூடான நீரில் கொதிக்க வைத்து, புத்துணர்ச்சியூட்டும் துளசி தேநீராக அருந்தலாம். கூடுதல் சுவைக்கு இதில் புதினா, எலுமிச்சை, தேன் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.
- துளசி ஸ்மூத்தி: சத்தான பழங்களுடன் துளசி இலைகளை போட்டு ஸ்மூதியாகவும் அருந்தலாம்.
- துளசி தீர்த்தம்: ஒரு குவளை தண்ணீரில் துளசி இலைகளை இரவிலேயே போட்டுவைத்து, அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அருந்தலாம்.
- துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடுதல்: இருப்பதிலேயே எளிமையான வழியும், அதிகபட்ச நன்மைகளைப் பெற உதவும் வழியும் இதுதான். சில துளசி இலைகளைப் பறித்து காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் போதும்.
எவ்வளவு துளசி இலைகளை வேண்டுமானாலும் சாப்பிடலாமா?
துளசியை ஏற்கும் தன்மை, உடல்நிலை மற்றும் அது உட்கொள்ளும் விதம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து எவ்வளவு உட்கொள்ளலாம் என்கிற அளவு மாறுபடும். இருந்தாலும், சில பொதுவான வழிகாட்டுதல்களை பின்பற்றலாம்:
- உடனுக்குடன் துளசி இலைகளை பறித்து உட்கொண்டால், பொதுவாக 4-5 இலைகள் போதுமானது. துளசியை நேரடியாக மென்று சாப்பிடலாம் அல்லது சூடான நீரில் தேநீர் செய்து அருந்தலாம்.
- உலர்ந்த துளசிப் பொடியைப் பயன்படுத்தினால், ஒரு முறைக்கு ஒரு டீஸ்பூன் (சுமார் 2-3 கிராம்) போதுமானதாகும். உலர்ந்த துளசி இலைகளை தேநீர் அல்லது இதர வெதுவெதுப்பான பானங்களை தயாரிக்க பயன்படுத்தலாம்.
அளவுக்கு அதிகமாக துளசியை உட்கொண்டால் - சில நபர்களுக்கு பின்வரும் சாத்தியமான பக்க விளைவுகள் அல்லது பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம்:
- வயிற்று உபாதை: துளசியை அதிகமாக உட்கொள்வதால் சில நபர்களுக்கு வயிற்று வலி, குமட்டல் அல்லது இரைப்பை-குடல் அசௌகரியம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
- இரத்தச் சர்க்கரை அளவு குறைதல்: இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் குணம் துளசிக்கு உள்ளது. குறிப்பாக வெறும் வயிற்றில், அதிக அளவு துளசியை உட்கொள்வதால் இரத்தச் சர்க்கரைக் குறைபாடு (ஹைப்போகிளைசெமியா) ஏற்படலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளர், அல்லது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இது போன்ற விளைவுகள் பாதகமாக முடியலாம்.
- ஒவ்வாமை எதிர்வினைகள்: சிலருக்கு துளசி ஒத்துக்கொள்ளாமல் போகலாம். அவர்கள் அதிகளவு துளசியை உட்கொள்வதால் சரும தடிப்புகள், அரிப்பு அல்லது சுவாச பிரச்சினையின் அறிகுறிகள் போன்ற ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படலாம்.
துளசி இலைகள் மட்டும் உதவாது!
எடையை குறைக்கவேண்டும் என்கிற இலக்கினை கொண்டவர்களுக்கு, துளசியை சாப்பிடுவது மட்டும் முழுவதுமாக உதவிவிடாது. துளசி ஒரு மாயாஜால எடைக்குறைப்பு மருந்து கிடையாது! உடல் எடையைக் குறைப்பதில் மற்ற உணவுமுறை, மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் சேர்ந்து துளசியும் ஒருவருக்கு உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் - பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளைக் கட்டுப்படுத்துவது; முழுதானிய உணவுகள், சமச்சீரான உணவு முறை, கார்டியோ உடற்பயிற்சிகள், உடலுக்கு வலுவூட்டும் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உடல் செயல்பாடுகளில் வழக்கமாக ஈடுபடுவதும், போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் மிக முக்கியம். இதுபோன்ற வாழ்க்கை முறை மாற்றங்களுடன் துளசி இலைகளை உட்கொள்ளும் போது எடை குறைப்பு முயற்சிகள் அதிக பலன்களைத் தரும்.
உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவருக்கும் துளசி ஏற்றது கிடையாது!
1. கர்ப்பிணிப் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதில்லை என்ற போதிலும் துளசி இலைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக்கூடாது. ஏனெனில், துளசியில் உள்ள யூஜினால் போன்ற சேர்மங்கள் கருப்பையில் சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் சுருக்கங்களைத் தூண்டக்கூடும்.
2. இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்கள்
துளசி இலைகளில் இரத்தத்தை நீர்த்துப் போகவைக்கும் ஆன்டிகோகுலண்ட் சேர்மங்கள் உள்ளன. மூலம் போன்ற இரத்தப்போக்கு பிரச்சினை உள்ளவர்கள் அல்லது ஆன்டிகோகுலண்ட் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும் அல்லது மருந்துகளுடன் இடைவினை புரிந்து செயல்திறனை பாதிக்கலாம்.
3. அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகிறவர்கள்
மேற்கூறிய அதே இரத்தத்தை மெலிக்கும் விளைவுகள் காரணமாக, அறுவை சிகிச்சைக்கு உட்பட போகும் நபர்கள் துளசியை தவிர்க்க வேண்டும். காரணம் - அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
4. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:
துளசி இரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம் என்பதால், ஹைபோடென்ஷன் உள்ள நபர்கள் துளசியை உட்கொண்டால் தங்கள் இரத்த அழுத்தத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்தான அளவுக்கு குறைந்துவிடலாம்.
5. ஒவ்வாமை உள்ளவர்கள்
சில நபர்களுக்கு துளசி ஏற்காது என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம். அதன் அடிப்படையில் லாமியேசி (Lamiaceae) தாவரக் குடும்பத்தை சேர்ந்த (புதினா அல்லது துளசி போன்றவை) தாவரங்களுக்கு ஒவ்வாமை உள்ள நபர்களும் துளசியை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்திவிடவும்.
முடிவுரை:
துளசி என்பது ஒரு கப்பலின் நங்கூரம் போன்றது. எடையைக் குறைப்பதை கப்பலை நிறுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நங்கூரத்தினால் மட்டுமே கப்பலை நிறுத்தி விட முடியாது. நங்கூரம் கப்பலை நிறுத்த ஒரு ஸ்திரத்தன்மையையும் ஆதரவையும் மட்டுமே வழங்க முடியும். ஆனால் கப்பலை உண்மையிலேயே நிறுத்த அதன் வேகத்தை குறைப்பது, அலைகள், காற்று போன்ற காரணிகளுக்கு ஏற்ப செயல்படுவதும் அவசியமாகும்.
அதேபோல், எடை குறைப்பு விஷயத்தில், துளசியும் ஒரு கூடுதல் ஆதரவாகவே இருக்கும், எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி, மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் நல்ல தூக்கம், போதிய தண்ணீர் அருந்துதல் ஆகியவையும் அவசியமாகும். எனவே முழுமையான நடவடிக்கை மூலம் எடையைக் குறைக்க வாழ்த்துக்கள்!