அறிமுகம்
ஆங்கிலத்தில் செஸ்ட் ஃப்லெம் எனப்படும் மார்பு கபம் "நெஞ்சு சளி" என்று குறிப்பிடப்படுகிறது. இது சுவாசக் குழாயின் கீழ் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக சுவாச நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை, நுரையீரல் மற்றும் சுவாசப்பாதைகளை பாதிக்கும் பிற உடல்நல பாதிப்புகளால் ஏற்படுகிறது. மூக்கில் வரும் சளியும் இதுவும் ஒன்றா அல்லது வித்தியாசமானதா? நெஞ்சு சளி ஒரு தீவிர பிரச்சனையா? இதனை எப்படி குணப்படுத்துவது? என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த வலைப்பதிவில் விடை காண்போம்.
நெஞ்சு சளி என்பது மாறுபட்ட ஒன்றாகும்!
மூக்கில் வெளியாகும் சளி மற்றும் நெஞ்சு சளி ஆகிய இரண்டும் சுவாச மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் திரவங்கள் தான் என்றாலும், அவை சுவாசக் குழாயின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து உருவாகும் மாறுபட்ட திரவங்களாகும். அவற்றின் செயல்பாடுகளும், நோக்கமும் மாறுபட்டவையாகும். அவை குறித்து கீழே காண்போம்.
உருவாகும் இடம்:
மூக்கு சளி என்பது நாசி திரவம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மூக்கின் துவாரங்கள் மற்றும் சைனஸ் பகுதியில் உள்ள சளி சவ்வுகளால் உருவாக்கப்படுகின்றது.
மார்பு கபம், எனப்படும் "நெஞ்சு சளி" – டிராக்கியா (மூச்சுக் குழாய்), , ப்ரான்க்கி (கிளை மூச்சுக் குழாய்) மற்றும் நுரையீரல் உள்ளிட்ட கீழ் நிலை சுவாச மண்டலத்தில் உள்ள சளி சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது.
பிரதான நோக்கம்:
மூக்கில் உருவாகும் சளித் திரவத்தைப் பொருத்தவரை, மூக்கின் துவாரங்களுக்கு ஈரப்பதமளித்து பாதுகாப்பது மற்றும் வெளிப்புற துகள்களை (தூசி, ஒவ்வாமை தூண்டிகள் மற்றும் பாக்டீரியா போன்றவை) சிக்க வைத்து வெளியேற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும். அதேவேளையில் நாம் சுவாசிக்கும் காற்றை ஈரப்பதமாக்க இந்த சளி உதவுகிறது.
நெஞ்சு சளியைப் பொருத்தவரை - தூசி, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற வெளிப்புற துகள்களை சளியில் சிக்கவைத்து சுவாச மண்டலத்திலிருந்து, குறிப்பாக நுரையீரல் மற்றும் சுவாசப்பாதைகளில் இருந்து அவற்றை அகற்றுவதே இதன் முதன்மையான நோக்கமாகும்.
பண்புகளில் உள்ள வேறுபாடுகள்:
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும்போது மூக்கின் சளித் திரவம் பொதுவாக தெளிந்த நிலையில் அல்லது சற்று வெள்ளை நிறத்தில் இருக்கும். ஜலதோஷம் அல்லது சைனசிட்டிஸ் (sinusitis) போன்ற தொற்றுநோயை நமது உடல் எதிர்த்துப் போராடும்போது சளி கெட்டியாகி மஞ்சள் அல்லது பச்சை நிறமாக மாறிவிடும். மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தும்மல் மற்றும் போஸ்ட்நாசல் டிரிப் (தொண்டையின் உட்புறத்தில் சளி வடியும் உணர்வு) ஆகியவை அதிகப்படியான மூக்கு சளி பிரச்சினையின் பொதுவான அறிகுறிகளாகும்.
மூக்கு சளியுடன் ஒப்பிடும்போது நெஞ்சு சளி தடிமனாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். மேலும் இதன் நிறம் மற்றும் நிலைத்தன்மையும் மாறுபடும். இது தெளிவான அல்லது வெள்ளை நிறம் முதல் மஞ்சள், பச்சை அல்லது சில நேரங்களில் பிரவுன் நிறத்தில் கூட காணப்படலாம். இருமல், நெஞ்சில் மூச்சடைத்தல், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை மார்பு சளியுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகளாகும்.
நெஞ்சு சளி ஆபத்தானதா?
நெஞ்சு சளியானது அதன் தீவிரத்தின் அடிப்படையில் ஆபத்தில்லாத ஒன்றாகவோ, அல்லது மிகவும் ஆபத்தான உடல் நல பாதிப்பாகவும் இருக்கலாம். நெஞ்சு சளி எப்போது ஆபத்தானது அல்லது ஆபத்தில்லாதது என்பதை கீழே காண்போம்.
ஆபத்தில்லா நெஞ்சு சளி:
1. ஜலதோஷம் அல்லது காய்ச்சலின் போது ஏற்படும் நெஞ்சு சளி
நெஞ்சு சளி என்பது பெரும்பாலும் ஜலதோஷம் அல்லது காய்ச்சல் (ஃப்ளூ) போன்ற சுவாச நோய்த்தொற்றுகளின் அறிகுறியாக இருக்கும். இதன் காரணமாக ஏற்படும் நெஞ்சு சளி பொதுவாக ஆபத்தில்லாததாக இருக்கும்; மேலும், நோய்த்தொற்றுக்கு எதிரான உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியின் ஒரு வெளிப்பாடாக இந்த சளி உருவாகிறது. சுவாசக் குழாய்களில் உள்ள வைரஸ்கள் மற்றும் பிற எரிச்சலூட்டிகளை சிக்க வைத்து, வெளியேற்ற இந்த சளி உதவுகிறது.
2. ஒவ்வாமை எதிர்வினைகள்
ஒவ்வாமையின் விளைவாகவும் மார்பு சளி ஏற்படலாம். குறிப்பாக அலர்ஜிக் ரைநைட்டிஸ் (வைக்கோல் காய்ச்சல்) அல்லது ஒவ்வாமை ஆஸ்துமா ஆகியவை நெஞ்சு சளியை உண்டாக்கலாம். மகரந்தம், தூசிப் பூச்சிகள் அல்லது செல்லப்பிராணி டான்டர் போன்ற ஒவ்வாமைகளுக்கு வெளிப்படும் போது, உடல் ஒரு பாதுகாப்பு பொறிமுறையாக அதிகப்படியான சளியை உருவாக்கக்கூடும்.
3. சுற்றுச்சூழல் எரிச்சலூட்டிகள்
புகை, மாசுபடுத்திகள் அல்லது வலுவான நாற்றங்கள் போன்ற சுற்றுச்சூழல் எரிச்சலூட்டிகளுக்கு நாம் வெளிப்படும் போது, நமது சுவாசக் குழாய் எரிச்சல் அடையலாம். இது சளி உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த சந்தர்ப்பங்களில் உண்டாகும் நெஞ்சு சளி பொதுவாக தற்காலிகமானதாகவே இருக்கும். ஆபத்தில்லா இந்த வகை நெஞ்சு சளி எரிச்சலுக்கான காரணிகள் நீக்கப்பட்டவுடன் தாமகாக சரியாகிவிடும்.
ஆபத்தான நெஞ்சு சளி:
1. பாக்டீரியா தொற்றுகள்
அடர்த்தியான, நிறமாறிய (மஞ்சள், பச்சை அல்லது பிரவுன்) சளியுடன் கூடிய காய்ச்சல், நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நீடித்த இருமல் போன்ற பிற அறிகுறிகளுடன் நெஞ்சு சளி வெளிப்பட்டால் - அது ஒரு பாக்டீரியா தொற்றுநோயைக் குறிக்கலாம். மூச்சுக்குழாய் அழற்சி (ப்ராங்கைட்டிஸ்) அல்லது நிமோனியா போன்ற பாதிப்புகளாக இருக்கலாம். இந்த நோய்த்தொற்றுகளுக்கு பெரும்பாலும் நுண்ணுயிர் எதிர்ப்பு (ஆன்ட்டி பயாடிக்ஸ்) மருந்துகள் மூலம் சிகிச்சை தேவைப்படுகிறது.
2. வைரஸ் தொற்றுகள்
பெரும்பாலான வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகள் (ஜலதோஷம் போன்றவை) ஆபத்தில்லாதவை, மற்றும் அவை தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், சில வைரஸ் தொற்றுகள் சுவாசிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக காய்ச்சல், கடுமையான இருமல், மூச்சுத் திணறல் அல்லது நெஞ்சு வலி ஆகியவற்றுடன் வெளிப்படும் நெஞ்சு சளி - மிகவும் கடுமையான வைரஸ் தொற்றுநோயைக் குறிக்கலாம். அவை இன்ஃப்ளூயன்ஸா, ரெஸ்பிரேட்டரி சிங்க்டியல் வைரஸ் (RSV) அல்லது COVID-19 போன்ற பாதிப்பாக இருக்கலாம்.
3. நாள்பட்ட சுவாச பாதிப்புகள்
நாள்பட்ட சுவாசத் தடையை ஏற்படுத்தும் நுரையீரல் நோய், (COPD) ஆஸ்துமா அல்லது சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற நீண்டகால சுவாச பிரச்சினைகளை கொண்ட நபர்களுக்கு - நெஞ்சு சளி என்பது ஒரு தொடர்ச்சியான மற்றும் ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம். அளவுக்கதிகமான சளி உற்பத்தி மற்றும் சுவாசப்பாதைகளில் இருந்து சளியை அகற்றுவதில் சிரமம் ஏற்படுவதன் காரணமாக மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள் தாக்கலாம். இதனால் அறிகுறிகளும் அதிகமாக வெளிப்பட்டு, சுவாச சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
மேற்கூறிய ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும். ஆபத்தில்லா நெஞ்சு சளிக்கு மட்டுமே பின்வரும் சிகிச்சைகளை முயற்சிக்கவும்.
நெஞ்சு சளியைக் குறைக்க உதவும் 5 வேகமான வழிகள்
ஆபத்தில்லாத காரணத்தால் நெஞ்சு சளி ஏற்பட்டால், நெஞ்சு சளியின் தன்மை இயற்கையாகவே கொஞ்சம் கொஞ்சமாக மாறும். ஆரம்பத்தில் தடிமனான மற்றும் ஒட்டும் சளியாக இருந்தது பின்னர் நீர்த்துப் போய்விடும். இதனால் இருமல் மூலம் அதனை நெஞ்சிலிருந்து சுலபமாக வெளியேற்றிவிடலாம். உடலின் இயற்கையான அனிச்சை செயலான இருமல் அதிகப்படியான சளியினை சுவாசப்பாதைகளிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.
இருப்பினும் சில நேரங்களில் ஆபத்தில்லாத நெஞ்சு சளி கூட அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்; எனவே நெஞ்சு சளியை கொஞ்சம் வேகமாக வெளியேற்றுவதற்கு நம்மால் உடலுக்கு உதவ முடியும். அப்படி விரைவாக நெஞ்சு சளியைக் குறைக்க உதவும் 5 எளிய குறிப்புகளை இங்கே காண்போம்:
1. நிறைய தண்ணீர் குடிக்கவும்
நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் மார்பில் உள்ள சளியை நீர்த்துப் போகச்செய்வது என்பது ஒரு அடிப்படையான அணுகுமுறையாகும். உடலுக்கு தேவையான நீரேற்றம் கிடைக்கும் போது, சளியின் பிசுபிசுப்புத் தன்மை குறையும். இதனால் இருமல் மூலம் அதனை வெளியேற்றுவது எளிதாகும். ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீரை அருந்துவது அவசியமாகும். இது உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தினை தக்கவைப்பதை உறுதி செய்து, நெஞ்சு சளியை அகற்றுவதிலும் உதவுகிறது.
2. மூலிகை தேநீர் / சூப்களை பருகவும்
எலுமிச்சை, அன்னாசி, இஞ்சி, மஞ்சள், துளசி போன்ற பல்வேறு இயற்கையான நிவாரணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் - சுவாச ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. தேவையான நீர்சத்தை வழங்குவதோடு, நெஞ்சு சளியை விரைவாக வெளியேற்றவும் உதவுகிறது. இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் - அவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கின்றன மற்றும் நெஞ்சு சளியை விரைவாக குணப்படுத்த உதவுகின்றன. அவற்றின் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் சுவாசக் குழாயில் உள்ள இன்ஃப்ளமேஷனைக் குறைத்து நெஞ்சு சளியை குறைக்கின்றது. நீர்ச்சத்தினை வழங்கும் இவற்றின் பண்புகள் சளியை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகின்றன. இவற்றின் சாறுகளில் இயற்கையான எக்ஸ்பெக்டோரண்ட்கள் (சளியை வெளியேற்றும் மருந்துகள்)உள்ளதால், அவை மார்பு சளியை பிரித்து, அகற்ற துணைபுரிகின்றன. மேலும் மூலிகை தேநீர் அல்லது சூப் போன்றவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.
3. ஹியூமிடிஃபையர்களைப் பயன்படுத்தவும்:
ஹியூமிடிஃபையர் சாதனங்கள் நமது சுற்றுச்சூழலில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவுகின்றன. ஈரப்பதத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம், இவை சுவாச மண்டலத்தின் உலர்ந்த உட்புறங்களுக்கு ஈரப்பதமூட்டி சுவாசப் பாதைகள் மிகவும் வறண்டு போவதைத் தடுக்க உதவுகிறது. வறண்ட காற்றினால் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நெஞ்செரிச்சல் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் ஈரமான காற்று வீங்கிய சுவாசப்பாதைகளை இயல்பு நிலைக்குத் திருப்பி, நெஞ்சு சளியை நீர்த்துப் போகவும் உதவுகிறது. இதற்கு குளிர் காற்றை வெளியிடும் ஹியூமிடிஃபையர்களே ஏதுவானவை. படுக்கையறை போன்ற இடங்களில் இதனைப் பயன்படுத்தலாம்.
4. தாமாக இருமலை உருவாக்கும் பயிற்சி:
இருமலை சீராக கட்டுப்பாட்டில் வைத்து தாமாக உருவாக்கும் நுட்பங்களை கற்பதன் மூலம் நெஞ்சு சளியை வெளியேற்றலாம். அது எப்படி இருமலை உருவாக்குவது? நிமிர்ந்து உட்கார்ந்து, மூச்சை ஆழமாக உள்ளிழுப்பதன் மூலம், நுரையீரலை விரிவுபடுத்தி, இருமலுக்குத் தயாராக வேண்டும். இப்போது உள்ளிழுத்த காற்றை உங்கள் வாய் வழியாக வெளியிட முயற்சி செய்யவும், அப்போது அத்துடன் தேவையான அளவு இருமலையும் செயற்கையாக உண்டு பண்ணவும். மார்பில் இருந்து சளி வெளியேறுவதைக் உணரலாம். சுவாசப்பாதைகளிலிருந்து சளியை முழுமையாக வெளியேற்ற இந்த செயல்முறையை பல முறை செய்யவும். இதனை அளவுக்கு அதிகமாக செய்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. இந்த முயற்சி பலன் தந்தால் மட்டும் பயன்படுத்தவும்.
5. வேதுப் பிடித்தல்:
வெதுவெதுப்பான நீராவியை உள்ளிழுப்பதே வேதுப் பிடித்தல் எனப்படுகிறது. இது நெஞ்சு சளியை இலகுவாக்குவதற்கான ஒரு நேரடி செயல்முறையாகும். வெதுவெதுப்பான, ஈரமான காற்றினை உள்ளிழுப்பதன் மூலம் எரிச்சலூட்டப்பட்ட சுவாசப்பாதைகளுக்கு ஈரப்பதமூட்டி, நிவாரணம் தரலாம். அதே நேரத்தில் சளியை நீர்த்துப் போகச் செய்து வலியுடன் ஏற்படும் இருமலைத் தடுக்கிறது. ஒரு பாத்திரத்தில் பாதியளவு சூடான நீரில், துளசி அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் சிறிதளவு விட்டு, தலையை ஒரு தடிமனான போர்வை கொண்டு மூடி, நீராவி வெளியேறாதவாறு உள்ளே சுவாசிக்கவும். நீராவியை உங்கள் நுரையீரலில் ஆழமாக உள்ளிழுக்க விடவும். தீக்காயங்களைத் தவிர்க்க சூடான நீருக்கு மிக அருகில் செல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் உள்ளிழுக்கும் செயல்முறையின் போது அவ்வப்போது வெளியே வந்து இயற்கையான காற்றை பெறவும். தொடர்ந்து உள்ளேயே இருத்தல் கட்டாயம் கூடாது. கண்களை மூடிய நிலையில் இருப்பது கண் எரிச்சலைத் தவிர்க்க உதவும். இந்த செயல்முறையின் போது உதவிக்கு ஒருவர் உடன் இருப்பதை உறுதி செய்யவும்.
நெஞ்சு சளி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்!
சிலவகை உணவுகள்:
1. பால் பொருட்கள்
பால் பொருட்கள் சளி உற்பத்தியை அதிகரிக்கின்றன, சுவாசப் பாதையில் அடைப்புகளை மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே பால் பொருட்களைத் தவிர்ப்பது சளி உற்பத்தியைக் குறைத்து, நெஞ்சு சளியை குணப்படுத்த உதவுகிறது.
2. அதிகப்படியான கஃபைன் மற்றும் மது:
கஃபைன் மற்றும் மது ஆகிய இரண்டும் உடலில் நீரிழப்பை ஏற்படுத்துகின்றன. இது சளியை கெட்டியாக்கி மற்றும் சுவாசக் குழாயிலிருந்து அவை வெளியேறுவதை கடினமாக்கும். கஃபைன் உள்ள பானங்கள் மற்றும் மதுபானம் குடிப்பதை குறைப்பதன் மூலம் உடலின் நீர்ச்சத்து அளவை பராமரிக்க முடிகிறது. இதனால் சளி வெளியேறும் செயல்முறை துரிதமாக நடைபெறும்.
3. காரமான மற்றும் அமிலத்தன்மை உள்ள உணவுகள்:
காரமான மற்றும் அமிலத்தன்மை உள்ள உணவுகள் தொண்டையை எரிச்சலடையச் செய்து சுவாச அடைப்பினை அதிகரிக்கும். இதனால் சளியின் வெளியேற்றம் பாதிக்கப்படுவதோடு, இருமலின் போது வலி, மற்றும் புரையேறிவிடும் ஆபத்தும் அதிகரிக்கிறது. எனவே இவ்வகை உணவுகளைத் தவிர்க்கவும்.
சுற்றுச்சூழல் காரணிகள்:
1. புகைபிடித்தல் மற்றும் மறைமுக புகைக்கு வெளிப்படுதல்
ஒருவர் நேரடியாக புகைபிடித்தாலோ அல்லது புகை பிடிப்பவரின் அருகில் இருந்தாலோ – அவர் சுவாசிக்கும் காற்றில் உள்ள புகையிலையின் புகை சுவாசக் குழாயை எரிச்சலடைய செய்யும். இது சளி உற்பத்தி மற்றும் நெஞ்சடைப்புக்கு வழிவகுக்கிறது. எனவே புகைபிடிப்பதையும், அத்தகைய சூழலையும் தவிர்க்கவும்.
2. காற்று மாசுபாடு
காற்று மாசுபடுத்திகள் சுவாசக் குழாயில் இன்ஃப்ளமேஷனை ஏற்படுத்தி, சுவாசிப்பதை சிரமமாக்கும். ஆபத்தான மாசுக்களால் பிரச்சினை மேற்கொண்டு தீவிரமடையலாம். எனவே முடிந்தவரை சுத்தமாக காற்றோட்டமான பகுதிகளில் இருக்கவும், அல்லது வெளியில் சென்றால் முகக்கவசம் அணியவும்.
3. ஒவ்வாமை தூண்டிகள்:
மகரந்தம், தூசிப் பூச்சிகள், செல்லப்பிராணிகளின் உடல் செதில்கள் மற்றும் பூஞ்சை துகள்கள் போன்றவை ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தூண்டலாம். இதனால் இன்ஃப்ளமேஷன் ஏற்பட்டு, சுவாசக் குழாயில் சளி தேக்கமடையலாம். எனவே ஒருவர் தனக்கு இருக்கும் ஒவ்வாமையை அறிந்து வைத்து, அவற்றை கவனமாக தவிர்ப்பது மிக மிக அவசியமாகும்.
முடிவுரை:
ஆபத்தில்லாத நெஞ்சு சளியை அடையாளம் கண்டு அதை குணப்படுத்த சரியான யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். மேற்கூறிய பல்வேறு யுக்திகளை முறையாக பின்பற்றினால் விரைவான குணம் பெறலாம். புகைபிடிக்காமல் இருத்தல், மதுவை தவிர்த்தல், ஒவ்வாமை தூண்டிகளை தவிர்த்தல், நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுதல், மற்றும் சில வகை உணவுகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் விரைவான நிவாரணத்தை பெறலாம். இருப்பினும், அறிகுறிகள் தொடர்ந்தால், மோசமடைந்துவிட்டால் அல்லது காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது நெஞ்சு வலி போன்றவை ஏற்பட்டால், வேறு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்டறியவும், உரிய சிகிச்சையை பெறவும் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது மிகவும் அவசியம்.