வீக்கம் என்றால் என்ன?
உடற்பகுதிகளில் ஏற்படும் அசாதாரண விரிவாக்கம் வீக்கம் எனப்படுகிறது. குறிப்பிட்டப் பகுதியில் திரவம் சேர்வது, காயம் மற்றும்; இன்ஃபிலமேஷன் ஏற்படுவதன் விளைவாக அப்பகுதி விரிவடையும் போது வீக்கம் ஏற்படுகிறது. இன்ஃபிலமேஷன் அல்லது திரவம் கட்டிக்கொள்வது வீக்கத்திற்கு பொதுவான காரணங்களாகும்.
பெரும்பாலான நேரங்களில், மூட்டுக்கு வெளியே வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைக்கப்படுகிறது. எஃப்யூஷன் என்பது கணுக்கால் அல்லது முழங்கால் போன்ற மூட்டுக்குள் ஏற்படும் வீக்கத்திற்கான மருத்துவப் பெயராகும்.
உறுப்புகள், தோல் அல்லது மற்ற உடல் பாகங்கள் பெரிதாகும்போது வீக்கம் ஏற்படுகிறது. உள்ளுறுப்புகள், தோல் மற்றும் வெளிப்புற தசைகளும் கூட வீக்கத்தால் பாதிக்கப்படலாம். வீக்கத்தினை பொதுவாக, உள் வீக்கம் மற்றும் வெளி வீக்கம் என இருவகைப்படுத்தலாம்.
மருந்தின் பக்க விளைவு, அல்லது தீவிரமான காயத்தின் விளைவாக உள் வீக்கம் ஏற்படுகிறது. பூச்சி கடித்தல், தொற்றுகள் அல்லது காயங்கள் ஏற்பட்ட பிறகு வெளி வீக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும்.
வீக்கத்தின் அறிகுறிகள்
சில நேரங்களில், சிறிய அளவில் ஏற்படும் வீக்கம் வேறு எந்த அறிகுறிகளையும் காட்டாது. வீக்கம் என்பது எல்லா நேரங்களிலும் ஒரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
வீக்கம் வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ ஏற்படுவதைக் காணலாம். வீக்கத்தைக் கண்டறிய ஸ்கேன் செய்வது உதவியாக இருக்கும், வெளிப்புற வீக்கத்தை விட உள் வீக்கத்தை அடையாளம் காண்பது கடினமாகும்.
காயம், கடி அல்லது உடல்நல பாதிப்பால் வீக்கம் ஏற்பட்டால், நீங்கள் பலவிதமான அறிகுறிகளை உணரலாம். அவை பின்வருமாறு:
- அரிப்பு
- வாந்தி
- வீங்கிய பகுதியில் வலித்தல்
- குமட்டல்
- தலைச்சுற்றுதல்
- காய்ச்சல்
- தூக்கமின்மை
- சோர்வு
- வலி
வீக்கத்தின் வகைகள்
காயம் காரணமாக ஏற்படும் வீக்கம்
காயமடைந்த பகுதிக்குள் திரவம் மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் அதிகமாக சேரும் போது அங்கு வீக்கம் ஏற்படுகிறது. இரசாயனங்கள் வெளியிடப்பட்டு, காயமடைந்த இடத்தில் நரம்புகள் அழுத்தப்படுகின்றன, இதுவே காயமடைந்த நபருக்கு வலி ஏற்படக் காரணமாகும்.
உங்களுக்கு காயம் ஏற்படும் போதெல்லாம், ஒரு மணி நேரத்திற்குள் உண்டாகும் வீக்கம் 1-3 நாட்களுக்குள் உச்சத்தை அடையும். குறைந்தது சில வாரங்களுக்கு அந்த வீக்கம் நீடிக்கும். அப்போது உங்கள் காயங்களைச் சுற்றி வீக்கத்தையும் , சூடாக இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். இது முற்றிலும் இயல்பான ஒன்றாகும். இது, உங்கள் உடலின் திசுக்கள் குணமடையும் இயல்பான செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
உள் வீக்கம்
உடலின் உட்புறத்தில் உண்டாகும் வீக்கம் ‘உள் வீக்கம்’ எனப்படுகிறது. இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகளின் காரணமாக இன்ஃபிலமேஷன் மற்றும் உள் வீக்கம் ஏற்படலாம்
உள் வீக்கத்தின் அறிகுறிகள் பின்வருமாறு:
- இரவு நேரத்தில் படிப்படியாக மோசமாகும் இருமல்
- எளிதில் சோர்வடைதல்
- எடை அதிகரித்தல்
- மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல்
தொண்டை மற்றும் கழுத்தில் வீக்கம்
சில நேரங்களில், கழுத்து அல்லது தொண்டையில் கட்டிகள் மற்றும் வீக்கம் ஏற்படலாம். பெரும்பாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலோ அல்லது மூச்சுப் பாதையில் வேறு ஏதாவது அடைப்பு ஏற்பட்டாலோ இவ்வாறு நேரலாம். இப்படி நேரும் பட்சத்தில், நீங்கள் சிறிது உடல்நிலை சரியில்லாதது போல உணரலாம், மற்றும் சுவாசிப்பது கடினமாகவும் இருக்கலாம்.
வீக்கத்தின் பொதுவான வகைகள் பின்வருமாறு
- வீங்கிய லிம்ஃப் (நிணநீர்) நோடுகள்
- நீர்க்கட்டிகள்
- மருக்கள் (ஸ்கின் டேக்ஸ்)
- குரல்வளை வீக்கம் (காய்ட்டர்)
உடலின் வெவ்வேறு இடங்களில் ஏற்படும் வீக்கங்கள்
உடலின் வெவ்வேறு இடங்களில் ஏற்படும் வீக்கங்கள் எடிமா என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உடலின் திசுக்களில் ஆரோக்கியமற்ற திரவம் தேங்குவதால் இவ்வீக்கம் ஏற்படுகிறது.
உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தை மருத்துவ ரீதியாக எடிமா என்கிறார்கள். இந்த வீக்கம் பெரும்பாலும் தோல், கைகள், முன்கைகள், கணுக்கால், கால்கள் மற்றும் பாதங்களை பாதிக்கிறது.
கடும் பாதிப்புகளின் போது, இது தசைகள், குடல், நுரையீரல், கண்கள் மற்றும் மூளையையும் பாதிக்கலாம். பிரதானமாக வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எடிமா பாதிப்பு ஏற்படுகிறது.
கால்கள் மற்றும் கீழ் பகுதிகளில் ஏற்படும் வீக்கம்
கால்களில் ஏற்படும் வீக்கம் பொதுவாக இதயம் அல்லது சுற்றோட்ட மண்டலத்தில் (சர்குலேட்டரி) இருக்கும் நோயைக் குறிக்காது. உடல் பருமன், நீண்ட நேரம் உடல் செயல்பாடின்றி இருப்பது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது நிற்பது, அல்லது இறுக்கமான பேன்ட் அணிவதாலும் இவ்வகை வீக்கம் ஏற்படலாம்.
உங்கள் கால்களின் திசுக்கள் அல்லது இரத்த நாளங்களில் தேவைக்கு அதிகமான திரவம் சேரும்போது இப்படி நிகழ்கிறது. நீங்கள் உங்கள் கால்களை அதிகமாக பயன்படுத்தினால், அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் இப்படி வீங்கலாம்.
புற்றுநோயால் ஏற்படும் வீக்கம் மற்றும் அதற்கான சிகிச்சை
புற்றுநோய் அல்லது வேறு சில மருத்துவ ரீதியான பாதிப்புகளின் காரணமாக உங்களுக்கு வீக்கம் ஏற்பட்டால் - வீக்கத்தையும் அதன் அறிகுறிகளையும் குறைக்க மருத்துவக் குழுவினருடன் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும். வீக்கத்திலிருந்து நிவாரணம் தர உதவும் டையூரிடிக்ஸ் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கலாம்.
வீக்கத்திற்கான பரிசோதனைகள்
அல்ட்ராசவுண்ட் போன்ற இமேஜிங் சோதனையின் மூலமாக வீக்கத்திற்கான காரணத்தைப் பற்றி கூடுதல் தகவல்களைப் பெற முடியும். CT ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் MRI ஸ்கேன் போன்ற அதிநவீன நோயறிதல் முறைகளும் வீக்கத்தின் மூலாதாரத்தை கண்டறிய உதவுகின்றன.
பின்வரும் நோயறிதல் முறைகள் வீக்கத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன:
எக்ஸ்ரே
வீக்கமானது பல நாட்களைக் கடந்தும் தொடர்ந்தால், ஒரு எக்ஸ்ரே மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா, அல்லது மூட்டைச் சுற்றி திரவம் சேர்ந்துள்ளதா என்பதைக் கண்டறியலாம்.
CT ஸ்கேன்
CT ஸ்கேன் என்பது, எக்ஸ்ரேக்கள் மற்றும் கணினி தொழில்நுட்பங்களை இணைத்து, உள் உறுப்புகளின் படங்களை உருவாக்கும் ஒரு டயக்னாஸ்டிக் இமேஜிங் செயல்முறையாகும்.
டாப்ளர் அல்ட்ராசவுண்ட்
இந்த டாப்ளர் அல்ட்ராசவுண்ட் என்கிற பரிசோதனை பல சூழ்நிலைகளில் பயனுள்ள ஒன்றாக இருக்கும். ஆயினும், கெண்டைக்கால் பகுதி அல்லது இடுப்புப் பகுதியில் சிறிய இரத்த தமனிகளில் (ஆர்ட்டரி) உள்ள கட்டிகளைக் கண்டறிவதில் இது பலனளிக்காது.
டாப்ளர் அல்ட்ராசவுண்ட் முறையை பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்:
- ரத்தக்கட்டுகளை கண்டறிதல்
- நரம்புகள், தமனிகள் மற்றும் இதயம் வழியாக செல்லும் இரத்த ஓட்டத்தை ஆராய்தல்
- ஏதேனும் சிகிச்சைக்குப் பிறகு இரத்தத்தின் ஓட்டத்தைப் பார்ப்பதற்கு
இரத்த பரிசோதனைகள்
நோய்த்தொற்றுகள் மற்றும் ஆட்டோ-இம்யூன் (தானியக்க நோய் எதிர்ப்பு) உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உடலில் இன்ஃபிலமேஷன் ஏற்படுகிறது. இன்ஃபிலமேட்டரி மார்க்கர்ஸ் எனப்படும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் இதனைக் கண்டறியலாம். ஆனால் இன்ஃபிலமேஷனுக்கு என்ன காரணம் என்று பரிசோதனைகளால் சொல்ல முடியாது; காரணம் வைரஸ் தொற்று போன்ற சாதரணமான ஒன்றாக இருக்கலாம் அல்லது புற்றுநோய் போன்று தீவிரமானதாகவும் இருக்கலாம்.
சிறுநீர் பரிசோதனைகள்
யூரினலாலிசிஸ் என்பது சிறுநீரில் நடத்தப்படும் தொடர் பரிசோதனைகளாகும். சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற முக்கிய பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க யூரினலாலிசிஸ் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. பொதுவான நோய்கள் மற்றும் பிரச்சினைகளின் அறிகுறிகளைக் கண்டறிய மருத்துவர்கள் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர்.
எலக்ட்ரோ கார்டியோகிராம்
எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) என்பது இதயத்தின் மின் செயல்பாட்டை ஆராயும் ஒரு எளிய சோதனை ஆகும். இது உங்கள் தோலின் மீது வைக்கப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் இதயம் ஒவ்வொரு முறை துடிக்கும் போதும் உருவாக்கப்படும் மின் சிக்னல்களை உள்வாங்கி செயல்படுத்தும்.
ECG பரிசோதனையானது இதயத்தின் மின் சிக்னல்களை பதிவு செய்கிறது. இது, இதயப் பிரச்சனைகளைக் கண்டறிவதற்கான அல்லது கண்காணிப்பதற்கான ஒரு வலியற்ற, எளிதான சோதனையாகும்.
வீக்கத்திற்கான சிகிச்சைகள்
வீக்கம் ஏற்படுகையில் மருத்துவர்கள் பின்வரும் சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம்.
ஐஸ் பேக்கைப் பயன்படுத்துதல்
வலி மற்றும் வீக்கத்தைப் போக்க ஐஸ் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு தீர்வாகவுள்ளது. உங்களுக்கு விபத்து ஏற்பட்டிருந்தால், அதைத் தொடர்ந்து முதல் 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரம் வரை, ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் 20-30 நிமிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஐஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும்.
ஐசிங் என்பது வலி மற்றும் வீக்கத்தைப் போக்குவதில் சிறந்தது, ஏனெனில் ஐஸ் இரத்த நாளங்களைச் சுருக்கி, அந்தப் பகுதியில் இரத்த சுழற்சியைக் குறைக்கிறது.
வீக்கத்தைக் குறைக்க உதவும் கம்ப்ரஷன் பேண்டேஜ்
கம்ப்ரஷன் பேண்டேஜ் என்பது ஒரு நீண்ட நெகிழ்வுத் தன்மை வாய்ந்த துணியாகும், இதனை சுளுக்கு அல்லது தசை வலி உள்ள பகுதியை சுற்றி அணிந்து கொள்ளலாம். இது எலாஸ்டிக் பேண்டேஜ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பேண்டேஜின் லேசான அழுத்தம் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, பாதிப்படைந்த பகுதியை முன்பைவிட சௌகரியமாக உணரச்செய்கிறது.
ஓய்வில் இருக்கும்போது உங்கள் கணுக்கால், மணிக்கட்டு, பாதங்கள் அல்லது உங்கள் உடலின் எந்தப் பகுதிக்கும் அழுத்தம் தந்தால், நிணநீர் மண்டலம் (லிம்ஃபாட்டிக் சிஸ்டம்) சரிவடைகிறது.
வீக்கத்தின் ஆபத்து காரணிகள்
பின்வரும் காரணிகளால் ஏற்படும் வீக்கத்தில் உள்ள சில ஆபத்துகள்:
உயர் இரத்த அழுத்த மருந்துகள்
அம்லோடிபைன் (Amlodipine) என்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு மருந்தாகும். இதனை அதிக அளவில் எடுத்துக்கொண்டால், கால் மற்றும் பாதத்தில் வீக்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. வீக்கம், அம்லோடிபைனின் மிகவும் பொதுவான பக்க விளைவாகும்; இது பாதங்கள் மற்றும் கணுக்கால் வீக்கமாக வெளிப்படுகிறது.
ஸ்டீராய்டு அல்லாத ஆன்ட்டி-இன்ஃபிலமேட்டரி மருந்துகள்
ஸ்டீராய்டு அல்லாத ஆன்ட்டி-இன்ஃபிலமேட்டரி மருந்துகள், அல்லது NSAID-கள் ஆகியன வலி நிவாரணி மருந்துகளின் ஒரு வகையாகும். மூட்டுவலி (ஆர்த்ரிடிஸ்) உட்பட வலி அல்லது இன்ஃபிலமேஷனால் ஏற்படும் பல்வேறு நிலைகளுக்கு சிகிச்சையளிக்க NSAID மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஸ்டீராய்டு மருந்துகள்
ஸ்டீராய்டுகள் உடலின் எலக்ட்ரோலைட் மற்றும் நீர் சமநிலையை தகர்ப்பதன் மூலம் எடையை அதிகரிக்க செய்கின்றன; மேலும், வளர்சிதை மாற்றத்தையும் (மெட்டபாலிசம்) பாதிக்கின்றன. இந்த காரணிகள் பசியை அதிகரிப்பதால், எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.
ஈஸ்ட்ரோஜன்
ஈஸ்ட்ரோஜன் என்பது இயற்கையாக உருவாகும் ஒரு ஹார்மோனாகும்; இது பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை செக்ஸ் ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை கருப்பைகள் உற்பத்தி செய்கின்றன. மிதமான அளவுகளில் அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் கொழுப்பு செல்கள் மூலமாகவும் இது உற்பத்தி செய்யப்படுகிறது.
தியாசோலிடைன்டியோன்ஸ் (Thiazolidinediones) மருந்துகள்
வீக்கம், எடை அதிகரிப்பு, மாக்யுலர் எடிமா மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை தியாசோலிடைன்டியோன்ஸ் (TZDs) மருந்துகளால் பொதுவாக ஏற்படும் மோசமான பக்க விளைவுகளாகும். மேலும், மற்ற நீரிழிவுக்கு எதிரான மருந்துகளுடன் சேரும்போது, அவை இரத்தச் சர்க்கரைக் குறைவை (ஹைப்போக்ளைசிமியா) ஏற்படுத்தலாம், மற்றும் ஹீமாடோக்ரிட் மற்றும் ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கலாம். எலும்பு முறிவுகள் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரிப்பது TZD-யின் மற்றுமொரு எதிர்மறை விளைவாகும்.
வீக்கத்தை தடுக்கும் வழிகள்
பின்வரும் வழிகளில் வீக்கத்தை நாம் தடுக்கலாம்:
அடிக்கடி உடற்பயிற்சி செய்வது
உடற்பயிற்சி செய்வதால் உங்கள் இதயம், தசைகள் மற்றும் நுரையீரலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இப்படி செய்வது இரத்த ஓட்டத்தை குறைப்பதால் அது உங்கள் கைகளை குளிர்விக்கிறது. இதன் விளைவாக, உங்கள் கைகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து, கைகள் வீங்கலாம்.
உடற்பயிற்சியின் போது, உங்கள் உடல் கார்டிசாலை (cortisol) வெளியிடுகிறது, இது உங்கள் உடலின் திரவ சமநிலையை பாதித்து, உடல் தண்ணீரைத் தக்கவைக்க வழிவகுக்கிறது.
நீங்கள் உட்கொள்ளும் சோடியம் அளவை குறைத்தல் அல்லது கட்டுப்படுத்துதல்
ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பை உட்கொள்ளும் பெரியவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் மற்றும் கரோனரி மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது. அதிக சோடியம் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.
உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திற்கும் போது கால்களை உயர்த்துவது
உங்கள் கால்களின் நரம்புகள் சரியாக செயல்படாதபோது, அவற்றை நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம். கால் இரத்தநாள பிரச்சனைகள் உள்ள பலர் உட்காருவதற்கு வசதியான இடத்தை தேடுவார்கள். இதுபோன்ற கால் அசௌகரியத்தை போக்க கால்களை உயரமான இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.
உட்காரும்போது கால்களை ஒன்றன் மீது ஒன்று போட்டுக்கொள்வதைத் தவிர்த்தல்
நம்மில் பலர் நாள் முழுவதும் மேஜையில் உட்கார்ந்திருக்கும்போது நம்மை அறியாமலேயே கால்களைக் குறுக்காக ஒன்றன் மீது ஒன்றாக போட்டுக்கொள்கிறோம். நீங்கள் படிப்படியாக இந்தப் பழகக்த்தைக் கைவிட வேண்டும். நீங்கள் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது. 30 நிமிடங்களுக்கு மேல் அப்படி அமர்ந்திருந்தால், எழுந்து சற்று சுற்றிவரவும் அல்லது எழுந்து நின்று கைகால்களை நீட்டி இயங்கவும்.
ஸ்பெஷல் கம்ப்ரஷன் காலுறைகளை அணிந்துகொள்வது
துல்லியமான விதத்தில் உங்கள் கால்களின் கீழ்பகுதியில் அழுத்தம் கொடுக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மற்றும் வீக்கம் மற்றும் அசௌகரியத்தை குறைக்கவும் இந்த கம்ப்ரஷன் காலுறைகள் (ஸ்டாக்கிங்ஸ்) பயன்படுகின்றன. இரத்தநாளங்களை வீங்கச்செய்யும் வெரிகோஸ் வெயின்ஸ் போன்ற பாதிப்புகள் உங்கள் கால்களில் இரத்த ஓட்டத்தை மோசமாக்கலாம், இந்த பாதிப்பு இருந்தால் மருத்துவர், உங்களுக்கு கம்ப்ரஷன் காலுறைகளை பரிந்துரைப்பார்.
இறுக்கமான உடைகள் அல்லது காலணிகளை அணியாமல் தவிர்ப்பது
இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பதன் மூலம் வீக்கத்தால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம். இறுக்கமான ஆடைகளை அணிவதால் தசைகளும் இறுக்கப்படுகிறது. இதனால், குறிப்பாக கால் பகுதியில், வீக்கம் மற்றும் இன்ஃபிலமேஷன் ஏற்படலாம்.
மருத்துவர் வழிகாட்டுதலின்படி மருந்துகளை எடுத்துக்கொள்வது
புரூஃபன் அல்லது நாப்ராக்ஸன் ஆகியன ஸ்டீராய்டு அல்லாத ஆன்ட்டி-இன்ஃபிலமேட்டரி மருந்துகளாகும் (NSAIDs); இவை வீக்கம் மற்றும் வலிக்கு நிவாரணம் தர உதவுகின்றன. அசெட்டமினோஃபென் வலியை குறைக்க உதவலாம். சில மருத்துவர்கள் அசௌகரியமான வீக்கத்தைப் போக்க உங்கள் உணவில் மெக்னீசியத்தை சேர்த்துக்கொள்ள பரிந்துரைப்பார்கள்.
டையூரிடிக்ஸ் பயன்படுத்துவதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசியுங்கள்
நீர் மாத்திரைகள் (வாட்டர் பில்ஸ்) என்று பொதுவாக அழைக்கப்படும் டையூரிடிக்ஸ் மருந்துகள், உடலில் உப்பு மற்றும் நீரை நீக்க உதவுகின்றன. இந்த மருந்துகளில் பெரும்பாலானவை சிறுநீர் வழியாக அதிக உப்பை வெளியேற்ற உங்கள் சிறுநீரகங்களை ஊக்குவிக்கின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?
உங்களுக்கு நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், இரத்தத்துடன் கூடிய இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றுடன் ஒரு காலில் திடீரென, விவரிக்க முடியாத வீக்கம் ஏற்பட்டால், நீங்கள் அவசர மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும்.
உங்களுக்கு ஏற்பட்ட வீக்கம் கடுமையாக இருந்தால் அல்லது ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தால், கட்டாயம் மருத்துவரை சந்திக்க வேண்டும். வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க, உங்கள் மருத்துவர் மருந்து, உடற்பயிற்சி அல்லது சிகிச்சையை பரிந்துரைப்பார். ஏதேனும் ஒரு காயத்திற்கு உடல் அளிக்கும் எதிர்வினையே வீக்கம் என்பதை நினைவில் கொள்ளவும்.
கட்டுரை சுருக்கம்
உங்கள் உடலில் வீக்கம் ஏற்படுவதை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டால் அது பெரிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
நோயின் தன்மையைப் பொறுத்து, வீக்கம் ஒரு குறுகிய அல்லது நீண்ட கால பாதிப்பு நிலையாக இருக்கலாம். பெரும்பாலான நேரங்களில், உங்கள் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் திரவம் ஓரிடத்தில் கோர்த்துக்கொள்வதை எளிய சிகிச்சைகளின் மூலம் குறைக்கலாம்.