பூஞ்சை தொற்று பற்றிய ஒரு கண்ணோட்டம்
சருமத்தில் பூஞ்சை தொற்று (fungal infections) ஏற்படுவது என்பது பொதுவான ஒன்றாகும்; பலர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நமது சுற்றுப்புறத்தில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சைகளுடன் நம்மில் பலர் தொடர்பு கொள்கிறோம். காற்றில் பூஞ்சைகளின் வித்துகள் இருக்கலாம், அதை நாம் சுவாசிக்கவும் நேரிடலாம்.
பூஞ்சை வித்துகளை சுவாசிக்கையில், அது நம்மில் பெரும்பாலோருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பூஞ்சை வித்துகளால் பாதிக்கப்படலாம், அது பூஞ்சை தொற்றுக்கும் வழிவகுக்கிறது.
பூஞ்சையானது ஈரப்பதம் மற்றும் சூடான வெப்பநிலையில் வளரும். இத்தொற்றானது எந்தவொரு நபரையும் பாதிக்கலாம். இருப்பினும் இவை உயிருக்கு ஆபத்தானவை கிடையாது.
பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுகளை சந்தர்ப்பவாத தொற்றுகள் என நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) கூறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்போது பூஞ்சை தொற்றுகள் ஒருவரை பாதிக்கின்றன. ஜாக் இட்ச், அத்லீட் ஃபூட் மற்றும் ஜெனிடியல் கேண்டிடியாஸிஸ் ஆகியன பொதுவாக ஏற்படும் சில பூஞ்சை தொற்றுகளாகும்.
பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்
தொற்றை ஏற்படுத்திய நுண்ணுயிரியின் வகையைப் பொறுத்து பூஞ்சை தொற்றின் அறிகுறிகளும் மாறுபடும். பூஞ்சை தொற்றுக்கான சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வலி
- சொறி
- அரிப்பு
- நகங்களில் நிறம் மாறுதல்
- வாய்க்கு அருகில் வெள்ளைத் திட்டுகள் ஏற்படுதல்
- தோலின் கீழ் ஒரு கட்டி (பெரும்பாலானவை வலியற்றவையாக இருக்கும்) ஏற்படுதல்
பூஞ்சை வித்துகளை ஒருவர் சுவாசித்தால், அவை பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்தும்
- காய்ச்சல்
- சோர்வு
- தசை வலி
- மூச்சுத் திணறல்
- தலைவலி
- தூக்கத்தில் வியர்த்தல்
- மூட்டு வலி
ரிங்வார்ம் அல்லது படர்தாமரை என்பது பொதுவாக ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்றாகும். இந்த ரிங்வார்ம் - அத்லீட் ஃபூட் மற்றும் ஜாக் இட்ச் தொற்றை ஏற்படுத்துகிறது. இத்தொற்று ஒரு வளைய வடிவிலான வட்டமான சரும பாதிப்பினை உண்டாக்குகிறது. இதன் வடிவத்தின் காரணமாக இது ரிங்வார்ம் எனப்படுகிறது.
ரிங்வார்ம் எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றாகும்; சருமத்திலிருந்து சருமத்திற்கு ஏற்படும் தொடர்பு மூலம் பரவுகிறது. ஏதேனும் மேற்பரப்பில் பூஞ்சை இருந்து அதனோடு உண்டாகும் சருமத் தொடர்பு மூலமாகவும் இது பரவலாம்.
பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டால், பிறப்புறுப்பிலிருந்து துர்நாற்றம் வீசும். சருமத்தில் உருவாகும் பூஞ்சை தொற்றின் காரணமாக அரிப்பு, சரும வறட்சி மற்றும் வீக்கம் ஏற்படலாம். நுரையீரலில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால், அது நெஞ்சு வலி, தசைவலி, காய்ச்சல், இருமல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
பூஞ்சை தொற்று ஏற்படக் காரணங்கள்
நமது சுற்றுப்புறத்தில் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் பல வகையான பூஞ்சைகள் உள்ளன. இவ்வகையான தொற்றுகளை நாம் நமது வாழ்வில் பலமுறை எதிர்கொள்கிறோம். பூஞ்சை என்பது ஒரு சந்தர்ப்பவாத நோய்க்கிருமி என்பதால், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை அவை பாதிக்கலாம்.
பெரும்பாலான பூஞ்சை இனங்கள் மனிதர்களை பாதிப்பதில்லை. இருப்பினும், மனிதர்களிடம் தொற்றினை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில பூஞ்சை இனங்களும் உள்ளன.
பாதிப்புகளை ஏற்படுத்தும் பூஞ்சை தொற்றுகளில் மூன்று வகைகள் உள்ளன, அவை:
- டெர்மடோபைட்ஸ் (Dermatophytes)
- கேண்டிடா (Candida)
- சுற்றுச்சூழல் பூஞ்சை
நமது முடி, நகங்கள் மற்றும் சருமத்தின் வெளிப்புற அடுக்கு போன்றவற்றின் இறந்த திசுக்களில் இந்த டெர்மடோபைட்டுகள் வாழ்கின்றன. இவை பொதுவாக உயிருள்ள திசுக்களைப் பாதிக்காது.
கேண்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்பது ஒரு ஈஸ்ட் உயிரினமாகும்; இது மனிதர்களுடன் ஒரு கூட்டுவாழ்வு (சிம்பயாட்டிக்) உறவில் இயந்து வாழ்கிறது. இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அரிப்பு ஏற்பட்டு சருமம் சிவந்து போகிறது. மிக அரிதான சந்தர்ப்பங்களில் தான் இவை தீங்கு விளைவிக்கின்றன.
சுற்றுச்சூழலில் காணப்படும் பூஞ்சைகள், நம்முடன் நாம் வாழும் அதே சூழலில் வாழ்பவையாகும். இவை பொதுவாக மண்ணிலும் நீரிலும் காணப்படுகின்றன. அஸ்பெர்கிலஸ் (Aspergillus ) மற்றும் பிளாஸ்டோமைசஸ் (Blastomyces) ஆகியவை பொதுவான சில சுற்றுச்சூழல் பூஞ்சைகலாகும்.
குளியலறை மற்றும் லாக்கர் அறைகள் போன்ற பொது இடங்களில் பூஞ்சை தொற்று பரவுகிறது. தோலில் வெட்டு அல்லது காயம் ஏற்பட்டிருந்தால், பூஞ்சை தொற்று எளிதில் பரவும். பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது மனிதருடன் தொடர்பில் வரும்போது பூஞ்சை தொற்று எளிதாகப் பரவுகிறது.
சில நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்ட்டிபயாடிக்ஸ்) பூஞ்சையின் வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம். பூஞ்சை வித்துகளை நாம் சுவாசிக்கும்போது அவை பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கலாம். அப்படி ஏற்படும் பூஞ்சை தொற்றுகள் நமது நுரையீரலை பாதிக்கின்றன.
பூஞ்சை தொற்றுக்கு நிவாரணம் தரும் வீட்டு வைத்தியங்கள்
பொதுவாக காணப்படும் பூஞ்சை தொற்றுகளில், சில மட்டுமே மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அவற்றிற்கு நாம் வீட்டிலேயே சிகிச்சை பெறலாம். ஆனால், அறிகுறிகள் குணமாகவில்லை எனில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தயிர் மற்றும் ப்ரோபயாடிக்ஸ்
தயிரில் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராடும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. NCBI-யின் அறிக்கைப்படி, ப்ரோபயாடிக்ஸ் மற்றும் தயிரை உட்கொள்வது பூஞ்சை தொற்றை குணப்படுத்த உதவுகிறது.
பிறப்புறுப்பில் ஏற்பட்ட பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, தயிர் உட்கொண்ட பிறகு, பூஞ்சை பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சிகிச்சையானது பூஞ்சை தொற்றின் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் தந்தும் உதவியது. இருப்பினும், இந்த சோதனை ஒரு மாதிரியாகவே நடத்தப்பட்டது, மற்றும் இதனை நிரூபிக்க கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.
புளித்த உணவுகள் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன, அவை நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த உதவுகின்றன. எனவே, தயிர் மற்றும் ப்ரோபயாடிக் உணவுகள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகளுக்கு நிவாரணம் தருவதில் உதவுகின்றன.
சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவும்
பெரும்பாலும் மோசமான சுகாதாரப் பழக்கம் உள்ளவர்களையே பூஞ்சை தொற்று பாதிக்கிறது. சரியான சுயச் சுத்தத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். பூஞ்சை தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதி அல்லது சருமத்தை இதமான சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும்.
பூஞ்சை தொற்றை அழிக்க சோப்பு உதவாது என்றபோதும், இது தொற்றின் பரவலையும், தீவிரத்தையும் குறைக்கும்.
சோப்பைப் பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இது பூஞ்சை தொற்றை மேலும் தூண்டி விடலாம். எனவே, ஒரு இதமான சோப்பை பயன்படுத்தவும், சோப்பினை கடினமாக தேய்க்க வேண்டாம். ஒரு துண்டைக் கொண்டு அப்பகுதியை உலர்த்தவும், பின்னர் ஆயின்மென்ட்டைத் தடவவும்.
ஆப்பிள் சிடர் வினிகரை உபயோகிக்கவும்
ஆப்பிள் சிடர் வினிகரில் பூஞ்சைகளுக்கு எதிரான பண்புகள் உள்ளன.
- இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து மிதமான அளவிற்கு சூடாக்கவும்.
- மிதமான வெப்பத்தில் இருக்கும் ஆப்பிள் சிடர் வினிகரில், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பிரதான எண்ணெயைச் சேர்க்கவும்.
- சிறிதளவு பஞ்சினை அந்த எண்ணெயில் தோய்த்து, சருமத்தில் மெதுவாகத் தடவவும்.
கூடுதலாக, இது கால் விரல் நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றினை போக்குவதிலும் பயனுள்ளதாக இருக்கும். வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சிடர் வினிகரின் சில துளிகளை சேர்க்கவும். அந்த வெதுவெதுப்பான நீரில் உங்கள் கால்களை 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். இது பூஞ்சை தொற்றின் வளர்ச்சியையும், அது மேற்கொண்டு பரவுவதை தடுக்கும்.
டீ ட்ரீ எண்ணெய்
ஆஸ்திரேலிய டீ மரத்தின் இலைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயே டீ ட்ரீ எண்ணெய் என்ப்படுகிறது. இந்த எண்ணெய், வடித்தல் (டிஸ்டிலேஷன்) முறைப்படி பெறப்படுகிறது. டீ ட்ரீ எண்ணெய் இயற்கையாகவே கிருமிகளைக் கொல்லும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, பூஞ்சை தொற்றுக்கு எதிராக பயன்படுத்தும்போது அது நன்கு பலன் தருகின்றது.
டீ ட்ரீ எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து நீர்த்துப்போக செய்யவேண்டும். பருத்தி பஞ்சினை அந்த எண்ணெயில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி தடவவும். இது கால் விரல் நகங்களில் ஏற்பட்டுள்ள பூஞ்சை தொற்றைக் குறைக்கவும், மேற்கொண்டு பரவாமல் தடுக்கவும் உதவுகிறது. இந்த சிகிச்சையை வாரத்திற்கு இரண்டு முறை என்ற விகிதத்தில் செய்யலாம்.
இந்த முறையானது அத்லீட் ஃபூட் என்கிற பாதிப்பிலிருந்து நிவாரணம் தருகிறது என்று சில ஆராய்ச்சிகள் ஆதரவாக கூறுகின்றன. இருப்பினும், இந்த கருத்தை ஆதரிக்க மேலும் ஆராய்ச்சிகள் அவசியமாகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் சிறப்பான பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும், இன்ஃபிலமேஷனுக்கு எதிரான பண்புகளும் உள்ளன. ரிங்வார்ம் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் தேங்காய் எண்ணெய் பயனளிப்பதாக இருக்கும்.
மருந்துகளுக்கு கட்டுப்படாத கேண்டிடா இனங்களுக்கு எதிராக தேங்காய் எண்ணெய் நல்ல பலன்களைத் தரும் என்று NCBI தெரிவிக்கிறது. மேற்பூச்சாக தேங்காய் எண்ணையைப் பயன்படுத்துவது காயத்தை குணப்படுத்த உதவுவதோடு, நல்ல மாயிஸ்ச்சுரைஸராக ஈரப்பதத்தையும் அளிக்கிறது.
சருமத்தில் தேங்காய் எண்ணெயைப் உபயோகிப்பதற்கு முன், பாதிக்கப்பட்ட பகுதியை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவும். தொற்று ஏற்பட்ட பகுதியில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். அழுத்தி தேய்க்கக் கூடாது. அப்பகுதியை மென்மையாகக் கையாள வேண்டும். தொற்று உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்திய பின் மறக்காமல் கைகளைக் கழுவவும். ஏனெனில் தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
தேங்காய் எண்ணெயை வழக்கமாக பயன்படுத்துவது அரிப்பின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய்க்கு சிறப்பான ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளதால், அதனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
மஞ்சள்
இந்திய சமையலறைகளில் மஞ்சள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இதற்கு சக்திவாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்ட்டி-இன்ஃபிலமேட்டரி பண்புகள் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள், பூஞ்சை தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.
செரிமான கோளாறுகள், சுவாசத் தொற்றுநோய்கள், ஒவ்வாமை, கல்லீரல் நோய்கள் மற்றும் மூட்டுவலி போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு மஞ்சள் ஒரு உணவு சப்ளிமென்ட்டாக பரிந்துரைக்கப்படுவதாக NCBI கூறுகிறது.
மஞ்சள் தூளில் தண்ணீர் கலந்து தொற்று ஏற்பட்ட இடத்தில் பூசவும்.
அது காய்ந்து போகும் வரை காத்திருந்து, பின்பு தண்ணீர் மற்றும் சோப்பு பயன்படுத்தி அலசவும்.
பின்பு அப்பகுதியை உலர்த்தவும், தொற்று உள்ள பகுதியை மென்மையாக கையாளவும்.
பூஞ்சையின் வளர்ச்சி நிற்கும் வரை இந்த சிகிச்சையைத் தொடரவும்.
மஞ்சளில் இயற்கையாக காணப்படும் ஆல்கஹாலிக் சாறு - 800 μl செறிவுநிலையைக் கொண்ட கேண்டிடா மற்றும் 1600 μl செறிவுநிலையைக் கொண்ட C. ஆல்பிகேன்ஸ் பூஞ்சைக்கு எதிராக நன்கு செயல்படுவதாக NCBI கூறுகிறது.
பூண்டு
பூண்டில் அல்லிசின் என்கிற பயோஆக்டிவ் கூறு உள்ளது. இந்த பயோஆக்டிவ் கலவைக்கு பூஞ்சை தொற்றுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மையுண்டு. ஸ்போரோத்ரிக்ஸ் ஷென்கி என்கிற பூஞ்சை இனத்திற்கு எதிராக ஆற்றல்மிக்க பூஞ்சை எதிர்ப்பு ஆற்றலை பூண்டு சாறு கொண்டுள்ளதாக NCBI-யின் அறிக்கை கூறுகிறது.
அதுமட்டுமில்லாமல், பூண்டு சாற்றினை உட்கொண்டால், சைட்டோகைன்ஸ் வெளியாவதில் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் மற்றும் வழக்கமாக உட்கொள்வதால் ஆன்ட்டி-இன்ஃபிலமேஷன் பலன்கள் கிடைப்பதையும் வெளிப்படுத்தியது. பூஞ்சை தொற்றுகளை பூண்டு திறம்பட எதிர்த்துப் போராடுவதாக விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
சில பூண்டு பற்களை ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து நசுக்கி, தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து, தண்ணீர் மற்றும் சோப்பு போட்டு அலசவும்.
கற்றாழை
கற்றாழையில் இயற்கையாகவே ஆன்ட்டிசெப்டிக் தன்மை உள்ளது. அது பூஞ்சை தொற்றுகளை திறம்பட அழிக்கிறது, மற்றும் ஈஸ்ட் வளர்ச்சியையும் தடுக்கிறது.
ரிங்வார்ம் தொற்றுக்கு நிவாரணம் பெற கற்றாழையை நேரடியாகப் பயன்படுத்தலாம். இது அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்கி இதமளிக்க உதவுகிறது.
தேன்
தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு, பூஞ்சை தொற்றுக்கு எதிரான சிறந்த வீட்டு சிகிச்சையாக உள்ளது.
தேனில் கேண்டிடா இனத்திற்கு எதிரான குறிப்பிடத்தக்க பூஞ்சை எதிர்ப்பு குணநலன்கள் உள்ளதாக NCBI கூறுகிறது. தொற்று ஏற்பட்ட சருமத்தில் தேனை தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீர் கொண்டு அலசவும். சிறந்த பலன்களைப் பெற இரண்டு முறை இப்படி செய்யலாம்.
ஆரிகனோ எண்ணெய்
ஆரிகனோ எண்ணெயில் தைமால் என்கிற பூஞ்சை எதிர்ப்புக் காரணி உள்ளது. தைமால் இருப்பதால், இது ஒரு சக்திவாய்ந்த பூஞ்சை எதிர்ப்புத் தன்மை கொண்ட காரணியாக இருக்கலாம் என்பதை பல ஆராய்ச்சி ஆய்வுகள் ஆதரிக்கின்றன; அதுமட்டுமில்லாமல் கிராம்-பாசிட்டிவ் மற்றும் கிராம்-நெகட்டிவ் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளையும் திறம்பட குணப்படுத்துவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
பருத்தி பஞ்சில் சிறிது ஆரிகனோ எண்ணெயைத் தடவி, தொற்று உள்ள பகுதியில் மெதுவாகத் தடவவும். பூஞ்சையால் பாதிக்கப்பட்ட கால் மற்றும் கை விரல் நகங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த சிகிச்சையானது தொற்றுகளுக்கு எதிராக பயன் தருவதாகவும், நல்ல நிவாரணத்தை வழங்குவதாகவும் இருக்கும்.
வேப்பிலைகள்
பூஞ்சை எதிர்ப்பு குணநலன்களுக்கு வேப்பிலைகள் பெயர் பெற்றதாகும். அவை சருமத்திற்கு நன்மை பயக்கும் மூலிகையாகவும் இருக்கும். வேப்பிலை நீர் பூஞ்சை தொற்றுக்கு எதிராக நல்ல பலன்களைத் தரும்.
ஒரு கொத்து வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின்பு, பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த நீரைத் தடவி சிறிது நேரம் அப்படியே விடவும். தொற்று நீங்கும் வரை சிறிது நேரம் இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் தொடரவும்.
வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
வைட்டமின் C ஊட்டச்சத்தானது நோயெதிர்ப்பு மண்டலத்தை சீரமைக்க உதவுகிறது; இது பல்வேறு தொற்றுநோய்களுக்கு எதிராக நம் உடலுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. வைட்டமின் C-யில் உள்ள அஸ்கார்பிக் அமிலத்திற்கு, பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. தொற்றுநோய்களுக்கு திறம்பட சிகிச்சையளிக்க இது உதவுகிறது.
வைட்டமின் C திறம்பட சிகிச்சை அளிப்பதாகவும், பூஞ்சை தொற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை அதற்கு உள்ளது என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
வைட்டமின் C நிறைந்த சில பொதுவான உணவுகள் பின்வருமாறு
- எலுமிச்சை (சிட்ரஸ் பழங்கள்)
- பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய்
- ப்ராக்கோலி
- இந்திய நெல்லிக்காய்.
பேக்கிங் சோடா
சருமம் சிவந்து போவது மற்றும் அரிப்பு போன்ற பூஞ்சை தொற்றின் அறிகுறிகளுக்கு, குறிப்பாக கேண்டிடா இனத்தால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில், பேக்கிங் சோடா நல்ல பலன்களைத் தரும். சிறிது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.
இருப்பினும், பூஞ்சை தொற்றுக்கு எதிரான பேக்கிங் சோடாவின் பலனளிக்கும் திறனை ஆதரிக்க தீர்க்கமான ஆராய்ச்சி முடிவுகள் தேவைப்படுகின்றன.
கிரேப்ஃப்ரூட் விதையின் சாறு
கிரேப்ஃப்ரூட் விதையின் சாற்றில் ஆன்ட்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சைக்கு எதிரான பண்புகள் உள்ளன. இது ஈஸ்ட் தொற்றுகளின் வளர்ச்சியையும் தடுக்கிறது. தொற்று பரவும் விகிதத்தையும் இது குறைக்கிறது.
பூஞ்சை தொற்று உங்களை பாதித்திருந்தால், நீங்கள் கிரேப்ஃப்ரூட் விதையின் சாற்றினை அதன் மீது பூசுவது பலன் தரும்.
லெமன்கிராஸ் எண்ணெய்
பூஞ்சை தொற்றுக்கு எதிராக லெமன்கிராஸ் எண்ணெய் நன்கு செயல்படும். லெமன்கிராஸ் எண்ணெயை நேரடியாக சருமத்தில் படுமாறு பயன்படுத்தக்கூடாது. மற்றொரு எண்ணெயுடன் கலந்து நீர்த்துப் போகச்செய்த பின்னரே சருமத்தில் தடவ வேண்டும்.
லெமன்கிராஸ் எண்ணெயை பாதாம் எண்ணெயுடன் கலந்து தொற்று உள்ள சருமத்தில் தடவவும். இது சருமத்தை ஈரப்பதமாக்கி, தொற்றுகளை குணப்படுத்துவதில் திறம்பட உதவுகிறது.
யாருக்கெல்லாம் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது?
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் பூஞ்சை தொற்றினால் மிக எளிதாக பாதிக்கப்படுகின்றனர். ஆபத்தான அறிகுறிகளை வெளிகாட்டும் பூஞ்சை தொற்றுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். எச்.ஐ.வி மற்றும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது.
அழுக்கான உடைகள், குறிப்பாக சாக்ஸ் – பூஞ்சை வளர்வதற்கான சரியான ஆரம்ப இடமாக இருக்கும். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான கூடுதல் காரணிகளாக இருக்கலாம்.
தடுப்பு முறை
வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இந்த உணவுகள் நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீரமைக்க உதவுகின்றன. பூஞ்சை வளர்ச்சியைத் தவிர்க்க துணிகளை நன்கு துவைத்து, வெயிலில் உலர்த்தவும்.
மேலும், உங்கள் காலுக்கு ஏற்ற காலணிகளை அணியவும். உங்கள் கால்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைக்க, வழக்கமாக தேங்காய் எண்ணெயைத் தடவலாம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
மருத்துவரை அணுக வேண்டிய சூழல்கள் பின்வருமாறு:
- தொற்று அறிகுறிகள் குணமடையாத போது.
- அறிகுறிகள் மோசமாகி, தோல் எரிச்சல் அதிகமாகும் போது.
- நீரிழிவு உள்ளவர்கள் உடனடியாக அணுகவேண்டும்
- காய்ச்சலுடன் பூஞ்சை தொற்று ஏற்படும் போது.
முடிவுரை
பூஞ்சை தொற்றை மருந்தகத்தில் கிடைக்கும் கிரீம்கள் கொண்டு குணப்படுத்தலாம். அவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிவாரணம் தரலாம்; இருப்பினும், சில நேரங்களில் மருத்துவரின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் தேவை ஏற்படலாம்.
பெரும்பாலான பூஞ்சை தொற்றுகள் குளிர்காலத்தில் ஏற்படுகின்றன. எனவே சருமத்தினை முறையாக மாயிஸ்ச்சுரைஸ் செய்யுங்கள். குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகிறது. தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல ஈரப்பதம் தரும் மாயிஸ்ச்சுரைஸிங் ஏஜென்டாகவும் மற்றும் பூஞ்சைக்கு எதிராக செயல்படும் தன்மை உள்ளதாகவும் இருக்கிறது.
அறிகுறிகள் குணமாகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், தொற்று மோசமடைந்து, பெரிய தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கலாம்.