வீக்கம் - ஒரு அறிமுகம்
வீக்கம் என்பது நமது உடலின் பொதுவான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி விரிவடைவைதை நாம் வீக்கம் என்கிறோம். பெரும்பாலும் திசுக்களில் திரவத்தை உருவாக்குவதன் விளைவாக ஏற்படும் வீக்கம் அவற்றை அளவில் பெரிதாக்குகிறது. சிறிய காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் மருத்துவ ரீதியான பாதிப்பு ஏற்பட்டாலோ வீக்கம் உண்டாகலாம்.
வீக்கம் என்பது சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதியை குணப்படுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம்; அதுவே சில நேரங்களில் இயல்பாக இல்லாமல் சிக்கலாகவும் முடியலாம். இந்த கட்டுரையில் வீக்கம் குறித்தும், அது எப்போது ஆபத்தாகிறது, அதனை தணிக்க உதவும் பல்வேறு வழிகள் பற்றியும் காண்போம்.
வீக்கம் நல்லதா கெட்டதா?
வீக்கம் என்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என நாம் அறிவோம்- அதாவது நமது உடலில் எங்கேனும் காயம் நேர்ந்தால் அதனை குணப்படுத்த அல்லது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட அந்த பகுதி வீங்குகிறது. இருப்பினும், தொடர்ச்சியான அல்லது கடுமையான வீக்கம் இருந்தால், அடிப்படையில் ஏதேனும் மருத்துவ சிக்கல்கள் இருக்கலாம்; அப்படிப்பட்ட வீக்கத்தை ஆரம்பத்திலேயே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயல்பான, தற்காலிக வீக்கம் மற்றும் அசாதாரண வீக்கம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்வதும் அவசியமாகும். முதலில் வீக்கத்திற்கான அடிப்படை காரணங்களைப் பார்ப்போம்.
வீக்கத்திற்கான காரணங்கள்
சிறிய காயங்கள் அல்லது இன்ஃப்ளமேஷன் காரணமாக ஏற்படும் வீக்கம் பொதுவாக பாதிப்பில்லாதது; அவற்றை வீட்டிலேயே கை வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம். ஆனால் பிற அறிகுறிகளுடன் ஏற்படும் வீக்கம் அல்லது ஏதேனும் உடல்நல பாதிப்புகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு உரிய மருத்துவ சிகிச்சையை பெறவேண்டும். ஏனெனில், மேற்படி சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க மருத்துவரால் மட்டுமே முடியும்.
வீக்கத்தினை ஏற்படுத்தும் இயல்பான, ஆபத்தில்லா காரணங்கள்
1. சுளுக்கு அல்லது காயங்கள்: சிறிய காயங்கள் காரணமாக ஏற்படும் வீக்கம் பொதுவாக பாதிப்பில்லாதது; உடலின் இயற்கையான குணப்படுத்தும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அந்த பகுதி வீங்குகிறது. அசைவுகளைக் குறைக்கவும், நமது கவனத்தை ஈர்க்கவும் இந்த வீக்கம் உதவுகிறது. இந்த வகை வீக்கம் பொதுவாக ஓய்வு மற்றும் சரியான கையாளுதல் மூலம் தானாகவே சரியாகிவிடும்.
2. இன்ஃப்ளமேஷன் (உள்வீக்கம்): வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாமல், சில நேரங்களில் கீல்வாதம் (ஆர்த்ரிடிஸ்) அல்லது டெண்டனைட்டிஸ் (tendinitis) போன்ற இன்ஃப்ளமேஷன் பிரச்சினைகளால் ஏற்படும் வீக்கம் வலியையும் சங்கடத்தையும் உண்டாக்கலாம். ஆனால் சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் பெரும்பாலும் இவற்றை சரி செய்யலாம்.
3. ஒவ்வாமை எதிர்வினைகள்: படை அல்லது முகத்தில் லேசான தடிப்புகளாக ஏற்படும் வீக்கம் போன்றவை - ஒவ்வாமை எதிர்விளைவுகளின் விளைவாக ஏற்படும் ஒரு வகை வீக்கமாகும். இவை பொதுவாக பாதிப்பில்லாதவை. ஆன்ட்டிஹிஸ்டமைன் (antihistamines) மருந்துகள் அல்லது பிற ஒவ்வாமை மருந்துகள் மூலம் இவற்றை சரிசெய்யலாம்.
4. மருந்துகளின் விளைவாக ஏற்படும் வீக்கங்கள்: கார்டிகோஸ்டீராய்டுகள் (corticosteroids) அல்லது ஹார்மோன் சிகிச்சைகள் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளாக உண்டாகும் வீக்கம் பொதுவாக பாதிப்பில்லாதவை. அந்த குறிப்பிட்ட மருந்துகள் நிறுத்தப்பட்டவுடன் அல்லது நிலைமை சரிசெய்யப்பட்டவுடன் வீக்கம் குறைந்துவிடும்.
கவலைக்குரிய தீவிர காரணங்களால் ஏற்படும் வீக்கங்கள்
1. நோய்த்தொற்றுகள்
சிவந்து போதல், சூடாக இருத்தல் மற்றும் தொட்டாலே வலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகளுடன் ஏற்படும் வீக்கம், வேகமாக பரவும்; இவை காய்ச்சலுடன் தொடர்புடையதாக இருந்தால், உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் கடுமையான தொற்றுநோயைக் குறிக்கலாம்.
2. திரவம் கோர்த்துக்கொள்தல்
சிறுநீரகம் அல்லது இதய நோய்கள் போன்ற அடிப்படை மருத்துவ பிரச்சினைகளால் ஏற்படும் வீக்கம் – குறிப்பிட்ட பகுதியில் திரவத்தை கோர்த்துக்கொள்ளலாம். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மேற்படி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவ்வகை வீக்கத்தை திறம்பட கையாள அதற்கு காரணமான அடிப்படை பிரச்சினையை சரி செய்வது அவசியமாகிறது.
3. மோசமான இரத்த ஓட்டம்
மோசமான இரத்த சுழற்சியால் ஏற்படும் வீக்கம், குறிப்பாக கால்கள் மற்றும் பாதங்களில் உண்டாகின்றன; ரத்த நாளங்களின் செயல்பாட்டு பிரச்சினை, அல்லது தீவிர நரம்பு த்ரோம்போசிஸ் (தடை) போன்ற அடிப்படை வாஸ்குலர் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலைமைகளை குணப்படுத்தவும் இரத்த உறைவு போன்ற சிக்கல்களைத் தடுக்கவும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
வீக்கத்தைக் குறைக்க உதவும் 10 வழிகள்
1. RICE சிகிச்சை முறை
வீக்கத்தை குறைப்பது என்றாலே முதலில் இடம்பெறும் சிகிச்சை இதுவாகத் தான் இருக்கும். நான்கு நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த முறையைப் பற்றி பார்ப்போம்.
i. ஓய்வு (Rest) பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வளிப்பது, வீக்கத்தை அதிகரிக்கக்கூடிய அல்லது மேலும் காயத்தை ஏற்படுத்தக்கூடிய கடுமையான செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உடல் குணமடைவதை ஊக்குவிக்கிறது.
ii. ஐஸ் கட்டி ஒத்தடம் (Ice) ஐஸ் ஒத்தடம் தருவது இரத்த நாளங்களை சுருக்கி, வீங்கிய பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைகிறது. வலியைக் குறைக்கும் விதமாக அந்த பகுதியை உணர்ச்சியற்றதாக்குகிறது. இது இன்ஃப்ளமேஷனை குறைக்கவும் உதவுகிறது. ஐஸை நேரடியாக சருமத்தில் வைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
iii. அழுத்தம் தரும் பேண்டேஜ்கள் (Compression) அழுத்தமான பேண்டேஜ்கள் அல்லது பிரத்தியேக பேண்டுகளை அணிவதால் அவை, திசுக்களை அழுத்தி, மேற்கொண்டு திரவம் அங்கு சேர்வதைக் குறைத்து, மேலும் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.
iv. உயரத்தி வைத்தல் (Elevation) வீங்கிய மூட்டு அல்லது உடல் பகுதியை இதய மட்டத்திற்கு மேலே உயர்த்துவதால் வீக்கம் குறையும் வாய்ப்புள்ளது.
2. மருந்தகங்களில் நேரடியாக கிடைக்கும் OTC மருந்துகள்
இப்யூபுரூஃபன் அல்லது அசிடமினோஃபென் போன்ற NSAIDs (ஸ்டெராய்டு அல்லாத ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள்) மருந்துகள் புரோஸ்டாகிலாண்டின்ஸ் (prostaglandins) எனப்படும் இன்ஃப்ளமேட்டரி மீடியேட்டர்களை உற்பத்தி செய்ய உதவும் என்சைம்களைத் தடுகின்றன. இதன் மூலம் அவை வீக்கத்தை குறைத்து, அதனுடன் தொடர்புடைய வலியைப் போக்கவும் உதவுகின்றன.
3. நீர்ச்சத்து
தாரளாமாக தண்ணீர் குடிப்பது உடலில் ஆரோக்கியமான திரவ சமநிலையை பராமரிக்க உதவுவதோடு, நீரிழப்பையும் தடுக்கிறது; நீரிழப்பு வீக்கத்தை அதிகரிக்கும். நன்கு தண்ணீர் குடிப்பதால் அதிகப்படியான திரவங்கள் மற்றும் நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற முடிகிறது; திரவம் தேங்குதல் மற்றும் வீக்கம் ஏற்படுவதை தண்ணீர் குறைக்கிறது.
4. ஆரோக்கியமான உணவுகள்
பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவை உட்கொள்வது உடலின் இயற்கையாக குணப்படுத்தும் செயல்முறைகளை ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது. உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதும் உடலில் நீர் தக்கவைக்கப்படுவதை தடுக்க உதவுகிறது. உப்பினால் கூட வீக்கம் குறையாமல் இருக்கலாம்.
5. இலகுவான உடற்பயிற்சி
நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற இலகுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இரத்த சுழற்சி மற்றும் நிணநீர் (லிம்ஃபாட்டிக்) வெளியேற்ற முறையை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள வீக்கங்களுக்கு உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது. மேலும், உடற்பயிற்சி எண்டார்ஃபின்களை (endorphins) வெளியிடுவதால், அவை வலியைக் குறைக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகின்றன.
6. கம்ப்ரெஷன் அங்கிகள்
கம்ப்ரெஷன் சாக்ஸ் அல்லது காலுறைகள் (ஸ்டாக்கிங்ஸ்) போன்றவற்றை அணிவதால் அவை திசுக்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன; வீங்கிய பகுதியிலிருந்து திரவங்கள் விலகி இதயத்தை நோக்கி செல்வதை ஊக்குவிக்கின்றன. இது வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு, கைகால்களில் திரவம் அதிகமாக சேர்வதையும் தடுக்கிறது.
7. மசாஜ்
வீங்கிய பகுதியை மென்மையாக மசாஜ் செய்வதால் இரத்த சுழற்சி மற்றும் நிணநீர் வடிதல் தூண்டப்பட்டு - திசுக்களில் இருந்து திரவம் வெளியேற உதவுகிறது. இதனால் வீக்கமும் குறைகிறது. இறுக்கமான தசைகளை தளர்த்தவும், வீக்கத்துடன் தொடர்புடைய வலியைக் குறைக்கவும் மசாஜ் செய்தல் உதவுகிறது.
8. ஸ்பிரே அல்லது ஆயின்மென்ட்கள்
வெளி காயமில்லாத வீக்கத்திற்கு மருந்தகங்களில் பரிந்துரையின்றி கிடைக்கும் ஸ்பிரே அல்லது ஆயின்மென்ட்கள் உதவியாக இருக்கும். இவ்வகை மருந்துகளில் மென்த்தால், ஆர்னிகா, டைக்லோஃபினாக் போன்ற உட்பொருட்கள் இருக்கலாம். அவை விக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
9. அத்தியாவசிய எண்ணெய்கள்
லாவெண்டர், பெப்பர்மின்ட் அல்லது கெமோமில் போன்ற சில அத்தியாவசிய எண்ணெய்களில் ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகளைக் கொண்ட சேர்மங்கள் உள்ளன. மேற்பூச்சாக பயன்படுத்தும்போது, இந்த எண்ணெய்கள் வீக்கத்தைக் குறைக்கவும் அதனுடன் தொடர்புடைய வலியைப் போக்கவும் உதவுகின்றன.
10. மூலிகை வைத்தியம்
இஞ்சி, மஞ்சள் அல்லது ப்ரோமிலெயின் (bromelain) போன்ற மூலிகைகள் இயற்கையான ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன; அவற்றை உட்கொள்வது அல்லது மேலாக தடவுவது வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
நன்கு அறியப்பட்ட மஞ்சள் போன்ற மூலிகைகளை மட்டுமே பயன்படுத்தவும். மாறுபட்ட அல்லது புதிய, தெரியாத சிகிச்சைகளை அனுபவமின்றி பின்பற்றக் கூடாது. அதனால் பிரச்சினை பெரிதாகலாம்.
அப்படி செய்யக்கூடாதவை சிலவற்றை கீழே காண்போம்.
வீக்கம் இருந்தால் செய்யக்கூடாதவை
1. வீக்கத்தை அலட்சியம் செய்யக் கூடாது
சிலர் வீக்கத்தை ஒரு சிறிய பிரச்சினையாக கருதி தாமாக சரியாகிவிடும் என்று நிராகரிக்கலாம்; குறிப்பிடத்தக்க வலியுடன் இல்லாவிட்டால் அவர்கள் அலட்சியம் செய்வதுண்டு. இருப்பினும், வீக்கத்தைப் புறக்கணிப்பது, குறிப்பாக தொடர் வீக்கம் அல்லது தீவிரமடையும் வீக்கம் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். எனவே சரியான சிகிச்சையை தாமதப்படுத்தக் கூடாது.
2. நேரடியாக சூட்டு ஒத்தடம் தரக்கூடாது
கதகதப்பான ஒத்தடம் சில நேரங்களில் வலி உள்ள தசைகளுக்கு நிவாரணம் தரலாம். ஆனால், வீங்கிய பகுதிகளில் நேரடியாக சூட்டு ஒத்தடம் தருவது வீக்கத்தை மேலும் அதிகரிக்கும். வீங்கிய பகுதிகளில், குறிப்பாக காயத்தின் ஆரம்ப கட்டங்களில், சூடான ஒத்தடங்கள் அல்லது சூடான நீரை ஊற்றுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
3. அதிகப்படியான உப்பை உட்கொள்ளக் கூடாது
முன்பு பார்த்ததைப் போல அதிக சோடியம் உள்ள உணவுகள் திரவத்தை உடலில் தக்கவைத்து வீக்கத்தை மோசமாக்கும். குறிப்பாக வீக்கம் இருக்கும் பட்சத்தில் அதிக உப்பை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அது சிக்கலை அதிகரிக்கச் செய்யும். உப்பைத் தவிர்த்து - பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீரான உணவில் கவனம் செலுத்துவது முக்கியம்.
4. இறுக்கமான ஆடை அல்லது ஆபரணங்களை அணியக் கூடாது
இறுக்கமான ஆடை அல்லது அணிகலன்கள் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி வீக்கத்தை அதிகரிக்கும். குறிப்பாக கணுக்கால் அல்லது மணிகட்டை போன்ற பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். தளர்வான, வசதியான ஆடைகளை அணிவது மற்றும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய இறுக்கமான நகைகள் அல்லது ஆபரணங்களைத் தவிர்ப்பதும் முக்கியம்.
5. மருத்துவ உதவியை தாமதப்படுத்தக் கூடாது
சிலர் வீக்கத்திற்கு மருத்துவ உதவியை நாடுவதை தாமதப்படுத்தலாம்; குறிப்பாக காயம் சிறிதாக இருந்தாலோ அல்லது தற்காலிக பிரச்சினையாக அதனைக் கருதியோ அப்படி செய்வார்கள்.
இருப்பினும், வீக்கம் சில நேரங்களில் தொற்று அல்லது இரத்த ஓட்டம் சார்ந்த மிகவும் தீவிரமான பிரச்சினைகளால் ஏற்பட்டிருந்தால், அது சிக்கலை பெரிதாக்கி விடும். வீக்கம் கடுமையானதாகவோ, தொடர்ச்சியாகவோ அல்லது பிற அறிகுறிகளுடன் இருந்தால் மருத்துவ உதவியைப் பெறுவது மிக முக்கியம். தவறான சுய அனுமானத்தை தவிர்க்கவும்.
6. காயமடைந்த பகுதிகளை சிரமத்திற்கு உள்ளாக்கக் கூடாது
காயமடைந்த அல்லது வீங்கிய பகுதிகளை தொடர்ந்து பயன்படுத்துவது அல்லது சிரமத்திற்கு உள்ளாக்குவது வீக்கத்தை மோசமாக்கும் மற்றும் குணமடைவதை தாமதப்படுத்தும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வளிப்பது மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும் செயல்களைத் தவிர்ப்பது மிக அவசியம்.
7. கம்ப்ரெஷன் முறைகளைத் தவிர்க்கக் கூடாது
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து திரவத்தினை வெளியேற்ற கம்ப்ரெஷன் முறைகள் உதவுகின்றன. அதற்காக அணிய வேண்டிய ஸ்டாக்கிங்ஸ் மற்றும் பேண்டேஜ்களை சிலர் அணிய மறுக்கலாம். அது வீக்கத்தை நீடிக்கும் மற்றும் குணமடைவதை தாமதப்படுத்தும். எத்தகைய வீக்கத்திற்கு கம்ப்ரெஷன் ஆடைகளை அணியவேண்டும் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் அவசியமாகும்.
8. வீக்கத்திற்கு காரணமான அடிப்படை பிரச்சினைகளை அலட்சியம் செய்யக்கூடாது
இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய் போன்ற அடிப்படை மருத்துவ பிரச்சினைகள் காரணமாக சிலருக்கு மீண்டும் மீண்டும் வீக்கம் ஏற்படலாம், அல்லது அவர்களுக்கு நாள்பட்ட வீக்கம் இருக்கலாம்.
இந்த நிலைமைகளை அலட்சியம் செய்தால் அல்லது அவற்றை சரியாக நிர்வகிக்காமல் போனால் தீவிர வீக்கம், மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படலாம். வீக்கத்தை நிரந்தரமாக குணப்படுத்த அதற்கு காரணமான அடிப்படை பிரச்சினைகளை சரி செய்வது மிக முக்கியமாகும்.
முடிவுரை
வீக்கம் கடுமையானதாக இருந்தாலோ, அல்லது வீட்டு வைத்தியம் மூலம் மேம்படவில்லை என்றாலோ, நாம் மருத்துவ உதவியை நாட வேண்டும். காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி அல்லது மயக்கம் போன்ற சுவாதீன மாற்றங்கள் உள்ளிட்ட பிற அறிகுறிகளுடன் வீக்கம் ஏற்பட்டால் - உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினை காரணமாக இருக்கலாம்.
குறிப்பாக உங்கள் குடும்பத்தில் எவருக்கேனும் முன்பு இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய் ஏற்பட்டிருந்தால், அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்தால் – உங்களுக்கு ஏற்படும் வீக்கத்தை அலட்சியம் செய்தல் கூடாது! உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறவேண்டும். முக்கியமாக - முகம், தொண்டை அல்லது பாதங்களில் திடீர் வீக்கம் ஏற்பாட்டலோ, அல்லது ஒவ்வாமை எதிர்வினை தூண்டப்பட்டு அதனால் வீக்கம் ஏற்பட்டாலோ உடனடி சிகிச்சை அவசியம். சில பொதுவான தவறுகளைத் தவிர்ப்பதன் மூலமும், வீக்கத்தை நிர்வகிப்பதற்கான சரியான உத்திகளைப் பின்பற்றுவதன் மூலமும், அசௌகரியத்தைக் குறைத்து, நிவாரணம் பெறலாம். மேற்படி சிக்கல்களையும் தடுக்கலாம்.