எலிகள், உலகெங்கிலும் தொல்லை தரும் ஒரு பொதுவான உயிரனமாகும். நிஜத்தில் எலிகள் - ராட்டோடூயீ படத்தில் வரும் ரெமி எலியைப் போல ஐந்து வகை உணவை நன்றாக சமைப்பதோ, அல்லது ஸ்டூவார்ட் லிட்டில் படத்தில் வரும் ஸ்டூவார்ட்டைப் போல ஓடி விளையாடி குடும்பத்துடன் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பதோ கிடையாது.
மாறாக, அவை நமது பொருட்கள் மற்றும் பயிர்களை மென்று தின்று, வளைகளைத் தோண்டி நமக்கு சேதத்தையே ஏற்படுத்துகின்றன. மேலும், அவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களையும் பரப்புகின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும். எலிக்கடி காய்ச்சல் என்பது அத்தகைய ஒரு நோயாகும்.
இந்த கட்டுரை எலிக்கடியினால் ஏற்படக்கூடிய நோய்கள், அக்காயத்திற்கு சிகிச்சையளிப்பது மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விளக்குகிறது.
எலிக்கடி காய்ச்சல் (RBF) என்றால் என்ன?
ஸ்ட்ரெப்டோபஸிலஸ் மோனிலிஃபார்மிஸ் அல்லது ஸ்பைரில்லம் மைனஸ் பாக்டீரியா ஆகியன எலிக்கடி காய்ச்சல் என்கிற கடுமையான தொற்றினை ஏற்படுத்துகின்றன. எலி கடித்தால், எலியின் சிறுநீர் மற்றும் மலத்துடன் நாம் புழங்க நேர்ந்தால், நமது உணவு மற்றும் பானங்களில் அவை எதிர்பாராமல் கலந்தால் மனிதர்களுக்கு இந்த நோய் பரவும்.
"அமெரிக்காவில், ஆண்டுதோறும் 2 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகளால் கடிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அதில், 1 சதவீத கடிகளுக்கு எலிகள் காரணமாகின்றன" என்று பப்மெட் சென்ட்ரல் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
வறுமையில் வாழும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எலிக்கடி காய்ச்சல் (RBF) ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடைகள், மற்றும் விலங்கு ஆய்வகங்களில் எலிகளுடன் நெருக்கமாக பணிபுரிபவர்களுக்கும் இந்த காய்ச்சல் ஏற்படும் ஆபத்து உள்ளது. எலி கடித்தால் தொற்று ஏற்படுவதற்கு சுமார் 10 % வாய்ப்பு உள்ளது.
எலிக்கடி தொற்றுநோய்கள்
எலி கடித்த பிறகு, தொற்று ஏற்படுவது பொதுவானதாகும். எலி கடித்த சில மணிநேரங்கள் மற்றும் நாட்களில் அந்த காயத்தில் தொற்று ஏற்பட்டிருந்தால் பின்வரும் அறிகுறிகள் வெளிப்படும்:
- சிவந்து போதல்
- வீக்கம்
- சுடும் உணர்வு
- காயம் ஏற்பட்ட இடத்தில் சீழ் வடிதல்.
எப்போது நீங்கள் மருத்துவரை நாட வேண்டும்?
எலி உங்களைக் கடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்; டெட்டனஸ் தடுப்பூசிகள் அல்லது தையல் போடும் அவசியம் ஏற்படலாம்.
கடித்த இடத்தில் வடுக்கள் மற்றும் செயல் இழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், முகம் அல்லது கைகளில் ஏற்படும் காயங்களை தவறாமல் மருத்துவர் மூலம் பரிசோதிக்க வேண்டும்.
எலிக்கடி காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், தீவிரமான, உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் கூட ஏற்படலாம். எலி கடித்த பிறகு நீங்கள் ஏதேனும் விசித்திரமான அறிகுறிகளை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இரத்தம் அல்லது திசுக்களின் மாதிரியைப் பரிசோதிப்பதன் மூலம் S.மோனிலிஃபார்மிஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் பொதுவாக மூன்று நாட்களுக்குள் கிடைத்துவிடும், இருப்பினும் முடிவுகள் கிடைக்கும் நேரம் அவ்வப்போது மாறுபடலாம்.
திசு மாதிரியை பரிசோதனைக்காக சேகரித்து ஆய்வு செய்வதன் மூலம் மருத்துவர்கள் S. மைனஸ் பாக்டீரியாவை அடையாளம் காண்கிறார்கள். நுண்ணோக்கியின் கண்ணாடி ஸ்லைடில் வைப்பதற்கு முன் திசுக்களின் மீது ஒரு சாயம் ஏற்றப்படுகிறது. இந்த ஸ்லைடு ஒரு ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநரால் பரிசோதிக்கப்படும். அவர் பாக்டீரியாவை அவற்றின் அளவு, வடிவம் மற்றும் நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்பார்.
எலிக்கடி காய்ச்சலின் வகைகள் யாவை?
எலி கடித்தால் - எலிக்கடி காய்ச்சல் (ரேட் பைட் ஃபீவர் - RBF) என்கிற பாக்டீரியா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. பாக்டீரியா தொற்று உள்ள எலி, ஒருவரைக் கடித்தாலோ அல்லது கீறினாலோ, அவருக்கு இந்த நோய் வரலாம்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுரைப்படி, பாக்டீரியா தொற்று உள்ள விலங்கை செல்லமாக வளர்ப்பதன் மூலமாகவோ, அல்லது அதனை கையாளுவதன் மூலமாகவோ இந்நோய் ஒருவருக்கு ஏற்படலாம்.
பின்வரும் இரண்டு பாக்டீரியாக்கள் எலிக்கடி காய்ச்சலை ஏற்படுத்துகின்றன:
- ஸ்ட்ரெப்டோபஸிலஸ் மோனிலிஃபார்மிஸ் (S. மோனிலிஃபார்மிஸ்) (அமெரிக்காவில், இவ்வகை மிகவும் பொதுவானது.)
- ஸ்பைரில்லம் மைனஸ் (S மைனஸ்) (இவ்வகை ஆசியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது)
ஒவ்வொரு வகையான பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகளும் சற்று மாறுபட்டு இருக்கும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எலிக்கடி காய்ச்சலை திறம்பட குணப்படுத்த ஒரு ஆன்ட்டிபயாடிக் உள்ளது. மேலும், எலிக்கடி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது பேராபத்தாகிவிடும்.
ஸ்ட்ரெப்டோபஸிலஸ் எலிக்கடி காய்ச்சல்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தகவல்படி, S. மோனிலிஃபார்மிஸ் தொற்றுநோயானது, ஒருவருக்கு அடிவயிற்றில் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் தொற்று உள்ள திரவத்தினை திரளச் செய்து சீழ் பிடிக்க வழிவகுக்கும். இந்த நோய்த்தொற்று கல்லீரல் ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல் (மெனிங்கிடிஸ்), நிமோனியா, சிறுநீரக அழற்சி (நெஃப்ரிடிஸ்) மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
S. மோனிலிஃபார்மிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் தோராயமாக 10% பேர் தொற்று காரணமாக இறக்கின்றனர்.
ஸ்பைரில்லம் எலிக்கடி காய்ச்சல்
இதயம், மூளை, நுரையீரல் அல்லது பிற உள் உறுப்புகளுக்கு இத்தொற்று பரவினால், ஒரு ஊதா அல்லது சிவப்பு நிற சொறியை ஏற்படுத்தும், இது உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.
ஹேவர்ஹில் காய்ச்சல்
ஹேவர்ஹில் காய்ச்சல் என்பது மற்றொரு வகையான எலிக்கடி காய்ச்சலாகும். எலிகளால் அசுத்தம் செய்யப்பட்ட உணவை மக்கள் சாப்பிட்டால் அல்லது அசுத்தமான திரவங்களை குடித்தால் இத்தொற்று ஏற்படலாம். கடுமையான வாந்தி மற்றும் தொண்டை புண் ஆகிய அறிகுறிகள் இந்த பாதிப்பின் சாத்தியக்கூறினை குறிக்கும்.
எலிக்கடி அல்லது கீறலுக்கு முதலுதவி
எலி கடித்துவிட்டால், அதைத் தொடர்ந்து நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
நீங்கள் நோயாளியாக இல்லாவிட்டால், வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும்; எலி கடித்த நபருக்கு உதவும்போது, உங்களிடம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அணிந்து பின் உதவி செய்யவும்.
காயத்தை சுத்தம் செய்யவும்
காயம் ஏற்பட்ட இடத்தில் இரத்தக்கசிவை நிறுத்தி, அப்பகுதியை வெதுவெதுப்பான தண்ணீரில் சோப்பு கொண்டு சுத்தம் செய்யவும். காயத்தை உள்ளிருந்து நன்றாக சுத்தம் செய்யவும். பின்னர், சோப்பு அனைத்தையும் அலசி வெளியேற்றுவதை உறுதி செய்யவும். இல்லையெனில் அது உங்கள் தோலில் எரிச்சலை உண்டாக்கும்.
காயத்திற்கு டிரெஸ்ஸிங் செய்யவும்
காயத்தின் மீது தூய்மையான, உலர்ந்த காட்டனை பயன்படுத்தவும். காயத்தை மூடுவதற்கு முன்பு, அதில் ஆன்ட்டிபயாடிக் ஆயின்மென்ட்டை தடவவும்.
தேவையற்ற நகைகளை அகற்றவும்
காயம் ஒரு விரலில் ஏற்பட்டு அது வீங்கியிருந்தால் மோதிரம் போன்ற நகைகளை அணிந்திருந்தால் அதனை கழற்றவும்.
மருத்துவரிடம் ஆலோசியுங்கள்
கடித்த பிறகு, அந்த எலியைப் பிடிக்க முயற்சிக்கவும். மருத்துவர் அதனைப் பகுப்பாய்வு செய்து, அதற்கு தொற்று இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.
எலிக்கடி காய்ச்சலின் அறிகுறிகள்
எலிக்கடி காய்ச்சலை (RBF) ஏற்படுத்திய பாக்டீரியா தொற்றின் அடிப்படையில் அதன் அறிகுறிகள் மாறுபடும். மேலும், எலிக்கடி காய்ச்சலுக்கு மற்ற உடல்நல பாதிப்புகளைப் போன்ற ஆரம்ப அறிகுறிகள் காணப்படலாம்.
பப்மெட் சென்ட்ரல் வெளியிட்டுள்ள தகவலின்படி, S.மோனிலிஃபார்மிஸின் இன்குபெஷன் காலம் 3-20 நாட்களாகும். ஸ்பைரிலரி எலிக்கடி காய்ச்சலின் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே, எலிக்கடி குணமடைய ஆரம்பிக்கலாம்; மேலும் அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு 1-3 வாரங்கள் வரை ஆகலாம்.
ஸ்ட்ரெப்டோபஸிலஸ் எலிக்கடி காய்ச்சல்
கீழே கொடுக்கப்பட்ட சமிக்ஞைகள் மற்றும் அறிகுறிகளைக் கவனித்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்
- காய்ச்சல்
- தலைவலி
- வாந்தி
- முதுகு மற்றும் மூட்டு வலி
- கைகள் மற்றும் கால்களில் சொறி ஏற்படுதல், அடிக்கடி மூட்டுகளில் இன்ஃப்ளமேஷன் (வீக்கம்) ஏற்படுதல்.
எலி கடித்து அல்லது தொற்றுக்கு உள்ளானதை அடுத்து - எலிக்கடி காய்ச்சலின் அறிகுறிகள் வெளிப்படுவது பொதுவாக மூன்று முதல் பத்து நாட்களுக்குப் பிறகு காணப்படும். ஆனால் சிலநேரங்களில் மூன்று வாரங்களுக்குப் பிறகும் அறிகுறிகள் வெளிப்படலாம். காய்ச்சல் முடிவடைந்த இரண்டு முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு சொறி ஏற்படும்.
எலிக்கடி அல்லது கீறல் சரியாகி வருவது போல இருப்பதை வைத்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக கருத வேண்டாம். தொற்றுநோய் அப்போதும் உங்கள் உடலில் இருக்கலாம், காயம் குணமாகும் வரை காய்ச்சல் வராமலும் போகலாம்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தகவல்படி, S. மோனிலிஃபார்மிஸ் தொற்றுநோயானது, உங்கள் அடிவயிற்றில் அல்லது உங்கள் உடலின் மற்ற பகுதிகளில் தொற்று உள்ள திரவத்தினை திரளச் செய்து சீழ் பிடிக்க வழிவகுக்கும். இந்த நோய்த்தொற்று கல்லீரல் ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல் (மெனிங்கிடிஸ்), நிமோனியா, சிறுநீரக அழற்சி (நெஃப்ரிடிஸ்) மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
ஸ்பைரில்லரி எலிக்கடி காய்ச்சல்
நோய் தொற்றுள்ள எலி கடித்தப் பிறகு, உங்கள் உடலில் அறிகுறிகள் பொதுவாக ஒன்று முதல் மூன்று வாரங்களுக்குள் தோன்றும். அவை ஸ்ட்ரெப்டோபஸிலஸ் எலிக்கடி காயிச்சலிலிருந்து வேறுபடுகின்றன, இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
- விட்டுவிட்டு வரும் காய்ச்சல்
- எலி கடித்த காயத்தில் எரிச்சல் மற்றும் அல்சர் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
- லிம்ஃப் (நிணநீர்) நோடுகள் வீங்கி காணப்படும்.
- காயம் ஏற்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படும்.
எலிக்கடி காய்ச்சலுக்கான காரணங்கள்
எலிக்கடி காய்ச்சலை (RBF) இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஸ்ட்ரெப்டோபேஸில்லரி RBF வட அமெரிக்காவில் மிகவும் பரவலாக உள்ளது; இது S. மோனிலிஃபார்மிஸ் பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது.
RBF-இன் மற்றொரு வகை சுடோகு என்று அழைக்கப்படும் ஸ்பைரில்லரி எலிக்கடி காய்ச்சலாகும். S. மைனஸ் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த காய்ச்சல், ஆசியாவில் மிகவும் பொதுவாக உண்டாகிறது.
இந்த பாக்டீரியாக்களில் ஒன்று உடலில் உள்ள திறந்த காயம், அல்லது கண்கள், மூக்கு அல்லது வாயின் மியூக்கஸ் படலம் வழியாக உள்ளே நுழைந்த பிறகு, அந்நபருக்கு எலிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது.
எலிக்கடி காய்ச்சல் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. பின்வரும் நிலைமைகளில் ஒன்று யாருக்காவது ஏற்பட்டால் இத் தொற்று பரவும்:
- தொற்றுள்ள எலிகள் ஒருவரைக் கடித்தால் அல்லது பிராண்டினால்
- பாதிக்கப்பட்ட எலிகளின் உமிழ்நீர், சிறுநீர் அல்லது மலம் ஆகியவை அசுத்தமான மேற்பரப்புகளுடன் கலந்து அதனை ஒருவர் பயன்படுத்த நேர்ந்தால்
- அசுத்தமான உணவுகள் அல்லது பானங்களைப் பருகினால்
எலிக்கடி காய்ச்சல் உலகளவில் ஏற்படும் ஒன்றாக பதிவுகளில் இருந்தாலும், இது ஒப்பீட்டளவில் அரிதான பாதிப்பாகவே உள்ளது.
இருப்பினும், ஒருவருக்கு எலிக்கடி காய்ச்சல் ஏற்படும் ஆபத்து பின்வரும் சூழல்களில் அதிகரிக்கலாம்:
- அவர்களின் பணியின் ஒரு பகுதியாக, எலிகளை கையாள வேண்டிய கட்டாயம் இருத்தல்
- எலிகள் மற்றும் பிற கொறித்துண்ணிகள் (ரோடன்ட் இனங்களை) செல்லப்பிராணிகளாக வளர்த்தல்
- தொற்றுள்ள கட்டிடம் அல்லது பகுதியில் வசித்தல்
எலிக்கடி காய்ச்சல் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு கடத்தப்படுவதில்லை.
எலிக்கடி காய்ச்சலுக்கான சிகிச்சைகள்
எலிக்கடி காய்ச்சலுக்கு நீங்கள் எப்போதும் மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம். எலிக்கடி காய்ச்சலுக்கு, சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம், ஏன் மரணம் கூட ஏற்படலாம். உங்கள் மருத்துவர், பெரும்பாலும் பின்வரும் ஆன்ட்டி-பயாட்டிக்ஸ் மருந்துகளை தேவைக்கேற்ப பரிந்துரைப்பார்:
- அமோக்ஸிசிலின்
- பென்சிலின்
- எரித்ரோமைசின்
- டாக்ஸிசைக்ளின்
தீவிரமான எலிக்கடி காய்ச்சலால் இதயம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக அளவில் பென்சிலின் மற்றும் ஜென்ட்டாமைசின் அல்லது ஸ்ட்ரெப்டோமைசின் உள்ளிட்ட ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
எலிக்கடி காய்ச்சலை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகள்
எலிகள் அல்லது பிற கொறித்துண்ணி உயிரினங்களோடு புழங்குவது எலிக்கடி காய்ச்சலுக்கான மிக முக்கிய ஒரு ஆபத்தான காரணியாகும். எலிக்கடி காய்ச்சல் ஒரு தொற்றுநோய் அல்ல, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது; இது பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மட்டுமே ஒருவருக்குப் பரவும்.
பின்வரும் நபர்களுக்கு எலிக்கடி காய்ச்சல் அதிகமாகக் ஏற்படுகிறது
- எலிகள் அல்லது பிற கொறித்துண்ணிகளை (ரோடன்ட் இனங்களை) செல்லப்பிராணிகளாக வைத்திருப்பவர்கள்.
- மற்ற விலங்குகளுக்கு உணவாகத் தருவதற்கு எலிகள் அல்லது பிற கொறித்துண்ணி பிராணிகளை வைத்திருப்பவர்கள்.
- ஆராய்ச்சி ஆய்வகங்கள் அல்லது செல்லப்பிராணிகள் கடைகள் போன்றவற்றில் - எலிகள் அல்லது பிற கொறித்துண்ணிகள் இருப்பின், அங்கு பணியாற்றும் நபர்கள்
- காட்டு எலிகள் அல்லது சுண்டெலிகள் அதிக அளவில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள்.
- வயதான பெரியவர்கள்
- கர்ப்பிணிப் பெண்கள்
- குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ள நபர்கள்
- இது பெரியவர்களைக் காட்டிலும் இளம் குழந்தைகளிடம் அதிகம் ஏற்படுகிறது. ஏனெனில் அவர்களது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கும்.
எலிக்கடி காய்ச்சலைத் தடுக்கும் வழிகள்
எலிகளுடன் நேரடித் தொடர்பினை தவிர்த்திடுங்கள். கொறித்துண்ணிகள் (ரோடன்ட்) அதிகமுள்ள இடங்கள் மற்றும் அவை வாழும் பிற பகுதிகளுக்கு நேரடியாக செல்வதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் ஒருவர் எலிக்கடி காய்ச்சல் மற்றும் பிற ரோடன்ட் தொற்றுகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
வீட்டில் செல்லப்பிராணிகளாகவோ அல்லது மற்ற விலங்குகளுக்கு உணவாகவோ எலிகளை நீங்கள் வளர்த்தால் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றவும்:
- எலிகள் அல்லது சுண்டெலிகளுடன் புழங்கிய பிறகு, உங்கள் கைகளை சோப்பு போட்டு, தண்ணீர் கொண்டு அலசவும்.
- குழந்தைகள் தங்கள் கைகளை நன்கு கழுவ உதவுங்கள். கைகளை சுத்தமாகக் கழுவுவதால் மனிதர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு குறைகிறது.
- சிறிய பாலூட்டி விலங்குகள் நம்மைக் கடித்தால் மற்றும் பிராண்டினால், அது தொற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளதால் அப்படி நேர்வதைத் தடுக்கவும்.
- சிறிய பாலூட்டி விலங்குகள் பார்ப்பதற்கு நட்பாகத் தோன்றினாலும், அவற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும், குறிப்பாக அவை உறங்கும் போது மிகுந்த கவனத்துடன் அணுகவேண்டும்.
- உங்கள் செல்லப்பிராணிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க, அவற்றிற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரை தவறாமல் சந்திப்பதை வழக்கமாக்கவும்.
எலிகள் உட்பட செல்லப்பிராணிகளை விற்கும் கடையில் நீங்கள் வேலை செய்தால், பின்வரும் நடைமுறைகளை கடைபிடிக்கவும்:
- கையுறைகள் மற்றும் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்.
- கொறித்துண்ணி (ரோடன்ட்) விலங்குகளைக் கையாண்ட பிறகு, உங்களது வாய் மற்றும் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
- எலிகள், அவற்றின் கூண்டுகள், அதன் படுக்கை, சிறுநீர் அல்லது எச்சங்கள் ஆகியவற்றைக் கையாள நேர்ந்தால், அதன் பிறகு, உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் சோப்பு போட்டு குறைந்தது 20 வினாடிகளுக்கு அவசியம் கழுவவும்.
ஒரு ஆய்வகத்தில் அல்லது விலங்கு ஆராய்ச்சிக்காக எலிகளை வைத்து வேலை செய்பவர் என்றால், பின்வரும் நடவடிக்கைகளை கடைபிடிக்கவும்:
ஒருவர் எலிக்கடிக்கு சிகிச்சை பெறவில்லையெனில் என்ன நேரும்?
எலிக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாவிட்டால், மோசமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இதய தசை, குழாய்கள், தமனிகள் மற்றும் நரம்புகளில் இன்ஃப்ளமேஷன் ஏற்பட்டு - நெக்ரோசிஸ், மையோகார்டிடிஸ், எண்டோகார்டிடிஸ், நிமோனியா, சிஸ்டமிக் வாஸ்குலிடிஸ், பெரிகார்டிடிஸ், பாலிஆர்டெரிடிஸ் நோடோஸா, ஹெபடைடிஸ் நெஃப்ரிடிஸ், மெனிங்கிடிஸ் (மூளைக்காய்ச்சல்), ஆங்காங்கே புண்கள் மற்றும் அம்னியோனிடிஸ், போன்ற பல உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.
இருப்பினும், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், 10 சதவீத இறப்பு விகிதம் தான் காணப்படுகிறது.
முடிவுரை
S. மோனிலிஃபார்மிஸ் மற்றும் S. மைனஸ் பாக்டீரியாக்கள் RBF எனப்படும் எலிக்கடி காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. கொறித்துண்ணிகள் (எலி வகை உயிரினங்கள்) கடிப்பது, மற்றும் அசுத்தமான உணவு அல்லது பானங்கள் மூலம் மனிதர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன.
காய்ச்சல், மூட்டு வலி மற்றும் குமட்டல் ஆகியவை எலிக்கடி காய்ச்சலின் பொதுவான மற்றும் குறிப்பிடப்படாத அறிகுறிகளாகும். எலிக்கடி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், எண்டோகார்டிடிஸ் அல்லது இதய சவ்வில் இன்ஃப்ளமேஷன் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படலாம்.
எலிக்கடி காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க ஆன்ட்டி-பயாட்டிக்ஸ் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட நபர்கள் உடல் நலம் நன்றாக இருப்பது போல தோன்றினாலும், அவர்கள் தங்கள் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்; அப்படி செய்வதால் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுத்து, நுண்ணுயிரிகள் மருந்து எதிர்ப்பாற்றலைப் பெறுவதைத் தடுக்க முடியும்.