ஒரு விரிவான கண்ணோட்டம்
புற்றுநோயைத் தடுப்பதில் உணவுகளின் பங்களிப்பு என்பது தொடர் ஆய்வுக்கு உட்பட்ட ஒரு விஷயமாகவே உள்ளது. சிலவகை உணவுகள் அவற்றின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தின் மூலம் பல்வேறு நற்பலன்களை வழங்குகின்றன. குறிப்பாக அன்னாசிப்பழம் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் குணநலனை கொண்டுள்ளதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. அன்னாசிப்பழம் அதன் இனிப்பு மற்றும் அட்டகாசமான சுவைக்காக பெயர்பெற்ற ஒன்றாகும்; மேலும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பல்வேறு பண்புகளும் அன்னாசிக்கு உள்ளது. இருப்பினும், மார்பக புற்றுநோயைத் தடுப்பதில் அல்லது அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விஞ்ஞான ரீதியாகவும், சமூகத்திலும் பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த கட்டுரையில், அன்னாசிப்பழம் குறித்த உண்மைகள், கட்டுக்கதைகள் பற்றியும் மற்றும் மார்பக புற்றுநோயுடனான அதன் தொடர்பைப் பற்றியும் விரிவாகக் காண்போம். இதில், புற்றுநோய் தொடர்பான கூற்றுக்களுக்குப் பின்னால் உள்ள அறிவியல் ஆதாரங்களையும், உண்மைக்கும் புனைவுக்கும் இடையிலான வித்தியாசத்தையும் விளக்கிக் கூறவுள்ளோம்.
அன்னாசிப்பழம் பற்றிய ஒரு அறிமுகம்
சுவைமிகுந்த வெப்பமண்டல பழமான அன்னாசிப்பழம் ஏராளமான ஆரோக்கிய நற்பலன்களை வழங்குகிறது. வைட்டமின் C மற்றும் மாங்கனீசு நிறைந்த அன்னாசி, நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தினை ஆதரிக்கிறது. இதிலுள்ள செரிமான என்ஸைமான ப்ரோமிலெயின் செரிமானத்திற்கு உதவுவதோடு, உப்புசத்தையும் தணிக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தின் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்வீக்கத்தை கையாளுவதற்கான திறனை வழங்குகின்றன. அதே சமயம் அன்னாசியில் உள்ள அதிக நீர்சத்து மற்றும் நார்ச்சத்து – முறையே உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை வழங்குவதோடு, எடை நிர்வாகத்திற்கும் பங்களிக்கின்றன. பல்வேறு பலன்களை வழங்கக்கூடிய இந்தப் பழம், சமையல் பதார்த்தங்களில் சேர்க்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஒரு சிறந்த உணவுப்பொருளாக உள்ளது.
மார்பக புற்றுநோய் பற்றிய ஒரு அறிமுகம்
மிகவும் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் வகைகளில் ஒன்றான மார்பக புற்றுநோய், மார்பகத்தின் உயிரணுக்களில் உருவாகிறது. ஒரு கட்டியாக உருவாகும் இந்த புற்றுநோய், மார்பகத்தின் அளவில் மாற்றங்களாக அல்லது சருமத்தில் ஏற்படும் அசாதாரணமான தோற்றங்களாக வெளிப்படும். பெரும்பாலும் இது பெண்களையே பாதிக்கிறது என்றாலும், ஆண்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேமோகிராம் போன்ற வழக்கமான நோயறியும் பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிவது மார்பக புற்றுநோய் சிகிச்சையில் முக்கியப் பங்காற்றுகின்றன. வயது, குடும்பத்தினரின் புற்றுநோய் பின்னணி, ஹார்மோன் பாதிப்புகள், மற்றும் சில மரபணு மாற்றங்கள் ஆகியவை மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகளாகும். அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட இலக்கிற்காக செய்யப்படும் டார்கெட்டட் சிகிச்சைகள் போன்ற சிகிச்சை வழிமுறைகள் இந்த பாதிப்பிற்கு உதவக்கூடும். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுய பரிசோதனைகள், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பது என மார்பகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் - ஒருவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கியப் பங்குவகிக்கின்றது.
மார்பக புற்றுநோயிலிருந்து அன்னாசிப்பழம் காப்பாற்றுவதாக எப்படி நம்பப்படுகிறது?
அன்னாசிப்பழத்தில் ப்ரோமிலெயின் என்ற என்ஸைம் உள்ளது; இதற்கு ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள், ஆன்ட்டி-கேன்சர் பண்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ப்ரோமிலெயின் என்பது அன்னாசிப்பழங்களின் தண்டுகள் மற்றும் சாற்றில் காணப்படும் புரோட்டியோலிடிக் என்சைம்களின் கலவையாகும் (அனானாஸ் கோமோசஸ்). பல்வேறு என்ஸைம்களின் இந்த கலவையானது பழ ப்ரோமிலெயின், தண்டு ப்ரோமிலெயின் மற்றும் அதுபோன்ற பல்வேறு புரோட்டீஸ்களை உள்ளடக்கியதாகும். இந்த என்ஸைம்களுக்கு புரதங்களை சிறிய பெப்டைட்ஸ் அல்லது அமினோ அமிலங்களாக உடைக்கும் திறன் உள்ளது. இந்த செயல்முறையானது புரோட்டியோலிசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
புரதங்களை அதன் மூலக்கூறுகளாக உடைப்பது’ என்பது பல காரணங்களுக்காக புற்றுநோய் சிகிச்சையில் ஆராயப்பட்டு வருகிறது. புரோட்டியோலிடிக் என்சைம்கள் புற்றுநோய் உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை தடுத்து தகர்ப்பதன் மூலம் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன. மேலும், இந்த என்ஸைம்களுக்கு கட்டிகளின் நுண்ணுயிரி சூழலை மாற்றியமைக்கும் திறனும், ஆன்ட்டி-இன்ப்ளமேட்டரி விளைவுகளை ஏற்படுத்தும் திறனும் உள்ளதால், இது புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கவல்லது.
இறைச்சியை மிருதுவாக்குவது, ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் செரிமான பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவம் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக ப்ரோமிலெயின் பயன்படுத்தப்படுகிறது. காயத்தை குணப்படுத்தும் பண்புகள் முதல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் வரை இதன் சாத்தியமான பல்வேறு மருத்துவ நலன்களுக்காக இந்த என்ஸைம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இருப்பினும் அதன் செயல்முறைகள், மற்றும் சிகிச்சை பயன்பாடுகள் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சிகள் அவசியமாகின்றன.
பல ஆராய்ச்சிகள் நடப்பில் உள்ளதால், இதன் சாத்தியப் பலன்களை இன்னும் உறுதிபடுத்தப்பட வேண்டியுள்ளது. இருப்பினும், புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதிலும், புற்றுநோய் வளர்ச்சியுடன் தொடர்புடைய இன்ஃப்ளமேஷனைக் குறைப்பதிலும் ப்ரோமிலெயின், ஒரு முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமிலெயின் உள்ளிட்ட சில சேர்மங்கள் ஆரம்பகட்ட ஆய்வுகளில் நல்ல பலன்களை வெளிப்படுத்தினாலும், அன்னாசிப்பழத்தில் உள்ள கூறுகளை புற்றுநோய்க்கான சிகிச்சையாக அல்லது தடுப்பு நடவடிக்கையாகக் கருதுவதற்கு சான்றுகள் போதுமானதாக இல்லை என்பதே உண்மை. புற்றுநோய் என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படும் ஒரு சிக்கலான நோயாகும். சமச்சீரான உணவுகள், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள் போன்றவை புற்றுநோயைத் தடுப்பதற்கும், அதன் சிகிச்சைக்கும் அவசியமாகும்.
பெண்களின் ஆரோக்கியத்தில் அன்னாசிப்பழம் எவ்வாறு பங்களிக்கிறது?
அன்னாசிப்பழம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக மார்பக ஆரோக்கியத்தில் நிறைய பங்களிக்கிறது. வைட்டமின் C நிறைந்த, இந்த வெப்பமண்டல பழவகை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மேலான ஆதரவை வழங்குவதால், இது மார்பக ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்ட என்ஸைமான ப்ரோமிலெயின் - மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய ஒரு காரணியான நாள்பட்ட இன்ஃப்ளமேஷனைக் குணப்படுத்துவதில் குறிப்பிட்ட பங்காற்றுகிறது. அதே நேரத்தில் அன்னாசியின் நார்ச்சத்து செரிமானத்தை ஆதரிப்பதால் ஆரோக்கியமான எடைக்கு பங்களிக்கிறது. அரோக்கியமான எடை என்பது மார்பக புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. மேலும், மாங்கனீசு மற்றும் வைட்டமின் B6 உள்ளிட்ட அன்னாசிப்பழத்தின் ஊட்டச்சத்துக்கள், பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவுகிறது.
பெண்கள் அன்னாசிப்பழத்தை எப்போது தவிர்க்க வேண்டும்? அவசியம் தவிர்க்க வேண்டுமா?
1. அன்னாசி ஒவ்வாமை உள்ளவர்கள், இரைப்பை குடல் பிரச்சினை உள்ளவர்கள், மற்றும் வினைபுரியும் மருந்துகள் உட்கொள்பவர்கள்: அன்னாசிப்பழத்திற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தடுக்க இதனைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அன்னாசிப்பழத்தின் அமிலத்தன்மை காரணமாக சிலருக்கு வயிற்று வலி அல்லது நெஞ்செரிச்சல் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல், அன்னாசிப்பழத்தை சப்ளிமென்ட் வடிவில் எடுத்துக்கொள்ளும் போது, அது சில மருந்துகளுடன், குறிப்பாக ஆன்ட்டிபிளேட்லெட் விளைவுகளைக் கொண்ட மருந்துகளுடன் வினைபுரியும் வாய்ப்புள்ளது. எனவே மேற்கூறிய பிரச்சினை உள்ள பெண்கள் அன்னாசி சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
2. கர்ப்பிணிகள்: மிதமாக உட்கொள்ளும்போது அன்னாசிப்பழம் பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. அன்னாசிப்பழத்தில் காணப்படும் ப்ரோமிலெயின் என்ற என்ஸைம் குறித்த ஒரு கருத்து நீண்டகாலமாக உள்ளது; அதாவது இது கருப்பைச் சுருக்கங்களைத் தூண்டுவதாக நம்பப்படுகிறது. இருப்பினும், வழக்கமாக சிறிதளவு சாப்பிடப்படும் அன்னாசியில் உள்ள ப்ரோமிலெயினின் அளவு, கர்ப்பகாலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த போதுமானதாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
அன்னாசிப்பழம் மற்றும் கருச்சிதைவு குறித்த கட்டுக்கதைகளும், உண்மைகளும்:
கட்டுக்கதை: அன்னாசிப்பழம் பிரசவ வலியைத் தூண்டுகிறது
உண்மை: அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமிலெயின் பிரசவ வலியைத் தூண்டக்கூடும் மற்றும் கர்ப்ப காலத்தில் அன்னாசி உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவி வருகிறது. கருப்பை வாயை மென்மையடையச் செய்கிறதா என்று ப்ரோமிலெயின் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதற்கு முன்பு கூறியபடி மிதமான அளவில் உண்ணப்படும் அன்னாசியில் உள்ள ப்ரோமிலெயின் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே கர்ப்பிணிகள் அன்னாசியை குறைவான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானதே.
கட்டுக்கதை: அன்னாசிப்பழம் கருச்சிதைவை ஏற்படுத்துகிறது
உண்மை: அன்னாசிப்பழம் உட்கொள்வது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என்கிற மற்றொரு தவறான கருத்தும் உள்ளது. இந்த கருத்தை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் எதுவும் கிடையாது. உண்மையில், அன்னாசிப்பழம் என்பது கர்ப்பகாலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட ஒரு சத்தான பழமாகும்; ஆரோக்கியமான சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம்.
கட்டுக்கதை: அன்னாசிப்பழம் கருவில் உள்ள சிசுவுக்கு தீங்கு விளைவிக்கும்
உண்மை: மிதமாக உட்கொள்ளும்போது, அன்னாசிப்பழம் கருவில் உள்ள சிசுவிற்கு எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை. இதிலுள்ள வைட்டமின் C உள்ளடக்கம் தாயின் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் மாறுபட்ட பல்வேறு உணவுகளை உள்ளடக்கிய சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால், பிரத்தியேகமான ஆலோசனையைப் பெற மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.
கட்டுக்கதை: அன்னாசிப்பழம் கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்
உண்மை: சிலருக்கு அன்னாசிப்பழத்தால் ஒவ்வாமை ஏற்படலாம் என்றபோதிலும், அன்னாசிப்பழத்தை உண்பதன் காரணமாக கர்ப்ப காலத்தில் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படும் ஆபத்து ஒப்பீட்டளவில் மிகவும் குறைவுதான். இருப்பினும், ஏற்கனவே அன்னாசி ஒவ்வாமை உள்ள கர்ப்பிணிப் பெண்கள் அன்னாசியைத் தவிர்க்க வேண்டும்.
கட்டுரை சுருக்கம்:
அன்னாசிப்பழம் கர்ப்பம் மற்றும் மார்பக ஆரோக்கியத்திற்கு ஏதுவான ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாக மற்ற உணவுகளுடன் சேர்த்து மிதமான அளவில் உண்ணப்படலாம். இதில் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் என்ஸைம்கள் நிறைந்துள்ளன. அன்னாசிப்பழம் பிரசவ வலியைத் தூண்டும் அல்லது கருவில் உள்ள சிசுவிற்கு தீங்கு விளைவிக்கும் என்பன போன்ற கட்டுக்கதைகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும் போது, அன்னாசிப்பழம் அதற்கு விதிவிலக்கு கிடையாது. எனவே, மிதமான அளவில் உட்கொள்வது நல்லது. மார்பக ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அன்னாசிப்பழத்தின் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், குறிப்பாக வைட்டமின் C மற்றும் ப்ரோமிலெயின் என்ஸைமின் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் சில நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், எந்தவொரு உணவும் மார்பக புற்றுநோயைத் தடுத்துவிடும், அல்லது சிகிச்சையளித்துவிடும் என்கிற உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்பதே நிதர்சனம். இது குறித்த விரிவான வழிகாட்டுதலுக்கு மருத்துவ நிபுணர்களை அணுக வேண்டும். ஒருவரது முழுமையான நல்வாழ்வுக்காக அன்னாசிப்பழத்தை சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக உட்கொள்ள வேண்டும்.