நீர்ச்சத்தின் முக்கியத்துவம் - ஒரு அறிமுகம்
உடலின் வெப்பநிலையை கட்டுபாட்டுக்குள் வைப்பது, உடலின் அனைத்து பாகங்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு சேர்ப்பது, மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதில் உதவுவது என எண்ணற்ற உடலியல் செயல்பாடுகளுக்கும் நமக்கு நீர்ச்சத்து அவசியமாகிறது. உடலின் முக்கிய உறுப்புகள் சீராக செயல்படுவதை உறுதி செய்யவும், மூட்டுகளின் உராய்வைத் தடுப்பதற்கும் நீர்ச்சத்து அவசியமாகும். நீர்ச்சத்தானது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை, மற்றும் நமது இளமையான தோற்றத்தினை தக்கவைக்க உதவுகிறது. உடலியல் செயல்பாடுகள் மட்டுமல்லாமல், நமது விழிப்புணர்வு மற்றும் மனதின் ஒருநிலைப்பாடிற்கும் நீர்ச்சத்து முக்கியமாகிறது. உடலில் போதிய நீர் இல்லாமல் போனால், நீரிழப்பு ஏற்பட்டு அதன் விளைவாக சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் உடலின் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும் பலவீனமடைய நேர்கிறது.
நீர்ச்சத்துக்கு தண்ணீர் மட்டும் போதாது!
உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்க நாம் அதிகமாக தண்ணீர் மட்டும் குடித்தால் போதுமா? எப்போதாவது பேதி, அதிக வியர்வை, காய்ச்சல் போன்றவை ஏற்படும் போது நமக்கு அருந்த நீரேற்ற பானம் (ORS) பரிந்துரைக்கப்படும், ஏன் வெறும் தண்ணீர் அறிவுறுத்தப்படுவதில்லை?
காரணம் நீரிழப்பு என்பது வெறும் நீரை மட்டும் இழப்பதில்லை, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் சத்துக்களும் சேர்ந்தே இழக்கப்படுகிறது. எனவே, கூடுதல் ஊட்டச்சத்து சேர்மங்கள், அத்தியாவசிய மினரல்கள் நிறைந்த திரவம் அவசியமாகிறது. அதுபோலவே நாம் உட்கொள்ளும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் இருப்பது அவசியமாகும்.
தண்ணீர் தான் நாம் உணவை உட்கொள்ளும்போது, சிக்கலான ஊட்டச்சத்து மூலக்கூறுகளை சிறியவையாகத் தகர்த்து, செரிமான மண்டலத்தின் மூலம் அவை உடலில் சேர்வதை உறுதிசெய்கிறது. ஒரு கடத்தியாக செயல்படும் தண்ணீர் - கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை இரத்த ஓட்டம் வழியாக உடலெங்கும் உள்ள செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு கொண்டு செல்கிறது. எனவே, உடலுக்கு தேவையான நீர் கிடைப்பது என்பது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும், உடல் ஆற்றலுக்கும் பங்களிக்கிறது.
ஆரோக்கியமான உணவுகளை நோக்கி பலரும் திரும்பி வருகையில், வெறும் தாகத்தை தணிப்பதற்கு மட்டுமல்லாமல், நாம் சாப்பிடும் உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதையும் நாம் விரும்புகிறோம். அப்படி நீர்ச்சத்தும், ஊட்டச்சத்தும் சேர்ந்து கிடைக்கும் சில பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பற்றியும், அவற்றின் மூலம் கிடைக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.
நீர்சத்தும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகள்
தர்பூசணி
நீர் நிறைந்த பழம் என்பதைக் கேட்டவுடன் நமக்கு முதலில் நினைவிற்கு வரும் சுவையான பழம் தர்பூசணியாகத் தான் இருக்கும். 92% நீர் சத்து நிறைந்த இந்த இனிப்பான பழம், தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு அற்புதம் என்றால் அது மிகையல்ல. தர்பூசணியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் C, கண் பார்வைக்கு உதவும் வைட்டமின் A, மற்றும் சக்திவாய்ந்த ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபீஃன் போன்றவை நிறைந்துள்ளன. சாறு நிறைந்த தர்பூசணி பழம், கோடைகாலத்தில் தாகத்தைத் தணிக்கும் புத்துணர்வு பானமாக மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கான உணவாக எப்போதும் சாப்பிட உகந்தது.
வெள்ளரிக்காய்
96% நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் நறுக்நறுக்கென கொறித்து சாப்பிடக்கூடிய ஒரு இயற்கையான உணவாகும். இந்த பசுமையான காயில் ஊட்டச்சத்துக்களும் நிறைவாக உள்ளன. வைட்டமின்கள் K, மற்றும் C, ஆகியவற்றுடன் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியமும் இதில் அதிகம் உள்ளன. வெள்ளரிகாய் நீர்ச்சத்தினை வழங்குவதற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது. சாலட் முதல் புத்துணர்ச்சியூட்டும் வெள்ளரி ஜூஸ் என இந்த காயை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள பல வழிகள் உள்ளன.
ஸ்ட்ராபெர்ரி
நீர் நிறைந்த பழங்களில் ஸ்ட்ராபெர்ரிக்கென ஒரு தனி இடம் உண்டு. சுமார் 91% நீர்ச்சத்தினை கொண்டுள்ள இந்த பழம், அதன் இனிப்பு மற்றும் நறுமணமிக்க சுவைக்கு பெயர் பெற்றது. ஊட்டச்சத்து செறிவு அதிகமாக உள்ள ஸ்ட்ராபெர்ரிகளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் C, எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான மாங்கனீஸ் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனை தயிர் அல்லது பழ சாலட்டில் அதிகமாக சேர்த்து சுவைத்து மகிழலாம். நீர்ச்சத்தினை அளிப்பது மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியம் மற்றும் இளமையான தோற்றத்திற்கும் பங்களிக்கின்றன.
செலரி
கிட்டத்தட்ட 95% நீரால் நிரம்பிய செலரி பன்முகப் பலன்களை கொண்ட ஒரு நீர்ச்சத்து நிறைந்த காய்கறியாகும். குறைந்த கலோரி உள்ளதற்காக அதிகம் பயன்படுத்தப்படும் இந்த செலரி, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களின் மகிழ்ச்சியான தேர்வாகும். செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியமான ஃபைபர்; எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் K மற்றும் உடலின் திரவ சமநிலைக்கு அவசியமான பொட்டாசியம் ஆகியவை இதில் அதிகளவில் உள்ளன. உங்களுக்கு பிடித்த சூப்கள் மற்றும் சாலட்களில் சேர்க்கப்படும் செலரி உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் பங்களிக்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் உணவாகும்.
கிர்ணிப்பழம்
கேண்டலூப் என்றும் அழைக்கப்படும் கிர்ணிப்பழத்தில், சுமார் 90% நீர் உள்ளது. சதைப்பற்றுள்ள இனிப்பான பழமாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகவும் உள்ளது. கண் பார்வைத் திறனை மேம்படுத்தும் வைட்டமின் A, நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் வைட்டமின் C மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. சுவைமிகுந்த இந்த கிர்ணிப்பழத்தை சாலடுகள், அல்லது ஸ்மூதிகளில் பயன்படுத்தலாம்.
அன்னாசிப்பழம்
86% நீர் உள்ளடக்கம் கொண்ட அன்னாசிப்பழத்தின் சுவை பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. ஜூஸியான இந்த பழத்தில் எந்தளவிற்கு சுவை உள்ளதோ அந்தளவிற்கு ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நோயெதிர்ப்பில் உதவும் வைட்டமின் C, எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் மாங்கனீஸ், மற்றும் சக்திவாய்ந்த ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்ட ப்ரோமெலெயின் என்ஸைம் ஆகியவை இந்த புத்துணர்வு தரும் பழத்தில் அதிகளவில் இருக்கின்றன. அப்படியே வெட்டி சாப்பிட்டாலும் சரி, ஸ்மூதி அல்லது ஜூஸாக அருந்தினாலும் சரி, அன்னாசிப்பழம் உங்களது உணவுப் பட்டியலில் இருக்க வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த பழமாகும்.
ஆரஞ்சு
ஆரஞ்சுப்பழத்தில் சுமார் 87% நீர் உள்ளது. சிட்ரஸ் பழமான இதில் நோயெதிர்ப்பு ஆற்றலுக்கான வைட்டமின் C உள்ளது என்பது பலருக்கும் தெரியும். ஆரஞ்சை ஜூஸாக இல்லாமல் பழமாக சாப்பிடும் போது செரிமான ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் ஃபைபர் நிறைவாக கிடைக்கிறது. மேலும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியமும் இதில் உள்ளது. களைப்பாக இருக்கும் போது உடனடி ஆற்றலைப் பெற விரும்புவோர் ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழ ஜூஸை அருந்தி உடனடி ஆற்றலைப் பெறலாம்.
தக்காளி
பெரும்பாலன இந்திய உணவுகள், குழம்பு, சட்னி, சாலட், சாண்ட்விச் மற்றும் சாஸ் என பலவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தக்காளியில் 94% நீர்ச்சத்து உள்ளது. முக்கியமான சமையல் காய்கறியாக மட்டுமில்லாமல் இதில் வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் லைக்கோஃபீன் நிறைந்துள்ளது. லைக்கோஃபீனுக்கு புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தக்காளி ஒரு சிறந்த ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இருதய ஆரோக்கியத்திற்கு உதவுவது முதல், புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது வரை, தக்காளி நமக்கே தெரியாத பல நற்பலன்களை வழங்குகின்றது. சுவை மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக இந்த நீர் நிறைந்த காயை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
திராட்சை
ஒரு சுவையான மற்றும் விருப்பமான சிற்றுண்டியாக மட்டுமில்லாமல் திராட்சை, அதிக நீர்ச்சத்து நன்மைகளையும் வழங்குவதோடு – இவற்றில் உள்ள வைட்டமின் C மற்றும் K போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும், பொட்டாசியம் போன்ற மினரல்களையும் வழங்குகின்றது. திராட்சைகளில் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன, குறிப்பாக ரெஸ்வெராட்ரால் என்கிற பாலிஃபினால் இதயத்தின் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
மாதுளை
கண்கவர் மாதுளை, முத்துக்களைப் போன்று அதன் நற்பலன்களையும் நிறைவாக வழங்குகின்றது. தாகத்தை தணிக்கும் இயல்பைக் கொண்ட மாதுளை நீர்ச்சத்து நிறைந்த பழம் என்பது நாம் அறிந்த ஒன்றே. இவற்றில் கூடுதலாக பாலிஃபினால்ஸ் மற்றும் அந்தோசயினின்ஸ் உள்ளிட்ட ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. மாதுளை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திற்கு எதிராக செயல்பட்டு உயிரணுக்களைப் பாதுகாக்கிறது. வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாக இருக்கும் மாதுளை, இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது.
சுரைக்காய்
அதிக நீர் நிறைந்த சுரைக்காய், அதன் லேசான சுவை காரணமாக இந்திய பாரம்பரிய சமையலில், பல்வேறு உணவு வகைகளில் பிரபலமான தேர்வாக உள்ளது. ஊட்டச்சத்தைப் பொறுத்தவரை, சுரைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இதில் C மற்றும் B-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற மினரல்களும் உள்ளன. இந்த காய்கறி செரிமானத்திற்கு உதவுவதால், சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகவும், எடை பராமரிப்பில் உதவியாகவும் உள்ளது.
முள்ளங்கி
உடலுக்கு தேவையான சத்துக்களையும், நீரேற்றத்தையும் வழங்கும் காய்களில் முள்ளங்கியும் ஒன்றாகும். சமச்சீர் உணவை முழுமைப்படுத்தும் முள்ளங்கி ஒரு வேர் வகையாகும் - இதில் சுமார் 95% தண்ணீர் உள்ளது. காரமான இயல்பு கொண்ட முள்ளங்கி உடலின் திரவ சமநிலையை பராமரிக்க பெரிதும் உதவுகின்றன. மற்ற நீர்ச்சத்து நிறைந்த காய்களைப் போல இதிலும் வைட்டமின் C நிறைந்துள்ளது. முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, குடலைஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுகிறது. மேலும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கும் பொட்டாசியம் இதில் தேவையான அளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூசணிக்காய்
96%-க்கும் அதிகமான நீர்ச்சத்து நிறைந்த பூசணியில், வைட்டமின்களான C, B-காம்ப்ளக்ஸ், மினரல்களான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள பூசணி செரிமானத்தை ஊக்குவித்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது. குறிப்பாக செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற இதன் ஜூஸ் பெரிதும் உதவுகிறது.
நீர்ச்சத்து நிறைந்த உணவுகளால் கிடைக்கும் பொதுவான பலன்கள்
நீர் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளால் நீர்ச்சத்து கிடைப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பரவலாக கிடைக்கின்றன. நோயெதிர்ப்பு செயல்பாடு, சரும ஆரோக்கியம் என பல்வேறு பின்வரும் பலன்கள் அதனால் சாத்தியமாகின்றன.
நீர்ச்சத்தும், சரும ஆரோக்கியமும்
உடலுக்கு போதிய நீர்ச்சத்து கிடைப்பதால் சருமம் ஈரப்பதத்துடன், இளமையாக இருப்பது சாத்தியமாகிறது. பிரகாசமான நிறங்கள் உள்ள நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களில், வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏராளமாகக் காணப்படும் வைட்டமின் C - கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மை, மற்றும் நேர்த்திக்குப் பங்களிக்கிறது. இந்த பழங்களில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவி, வயதான தோற்றத்தின் அறிகுறிகளைக் குறைத்து பிரகாசமான சருமத்தினை வழங்குகின்றன.
நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு உதவுகிறது
நீர் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் வைட்டமின் C நோயெதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கிறது. மேலும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள், தக்காளியில் உள்ள லைகோஃபீன் மற்றும் அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலெயின் போன்றவை, பல்வேறு நோய்களால் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் சேதத்திற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.
எலும்பு ஆரோக்கியம் மற்றும் பல நற்பலன்கள்
நீர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் இதர ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் எலும்புகளின் ஆரோக்கியம், செரிமானம் மற்றும் இதய நலனில் உதவி, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கின்றன.
உணவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள்
தண்ணீரில் சேர்த்து அருந்துதல் உங்கள் தண்ணீரில் வெள்ளரிக்காய், தர்பூசணி அல்லது சிட்ரஸ் பழங்களின் துண்டுகளைப் போட்டு ஜூஸாக அருந்தலாம். இதன் மூலம் சாதாரண தண்ணீரின் சுவை அதிகரிப்பதோடு ஊட்டச்சத்தும் அதிகரிக்கிறது.
சாலட்கள் பல்வேறு வகையான நீர்ச்சத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து காண்பதற்கே அட்டகாசமாக இருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த சாலட்களைத் தயாரிக்கலாம். தர்பூசணி, வெள்ளரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் தக்காளி ஆகியவற்றின் மூலம் சுவையான சாலட்டை உருவாக்கலாம்.
ஸ்மூதி உங்களுக்கு பிடித்த நீர்ச்சத்து நிறைந்த பழங்களைக் கொண்டு சுவையான, சத்தான ஸ்மூதிகளை தயாரிக்கலாம். உடல் இழந்த நீர்சத்தினை மீட்கவும், ஆற்றல் தரும் பானமாகவும் இவற்றை அருந்தலாம். உதாரணமாக அன்னாசி மற்றும் மாம்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழம் போன்ற கலவையான பழங்கள் கொண்டு ஸ்மூதிகளை முயற்சிக்கவும்.
சிற்றுண்டியாக உண்ணலாம் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை, ஊட்டச்சத்து நிறைந்த மற்ற தின்பண்டங்களுடன் சேர்த்து சிற்றுண்டியாக உண்ணலாம். எடுத்துக்காட்டாக, வெள்ளரி துண்டுகளை வேகவைத்த கடலை / பருப்பு வகைகள் அல்லது வருத்த நிலக்கடலை போன்றவற்றுடன் வெங்காயம், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
உணவில் ஒரு பகுதியாக சாப்பிடுதல் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை நமது சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். சாஸ்களில் தக்காளியை சேர்க்கலாம், வெள்ளரியை பச்சடிகளில் சேர்க்கலாம் அல்லது கூட்டு பொறியல் செய்யலாம்.
முடிவுரை
நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். உடலுக்கு நீரேற்றம் தரும் பண்புகளைக் கடந்து, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் அட்டகாசமான சுவை, ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. இவற்றால் பக்க விளைவுகள் ஏற்படுவது என்பது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. எனவே நமது உணவிலும், சாத்தியமான எந்த விதத்திலும் இவற்றை தாராளமாக உட்கொள்ளலாம்.