மாம்பழத்தின் 10 ஊட்டச்சத்து நன்மைகள்

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

அறிமுகம்:

மாம்பழங்களுக்கு அறிமுகம் தேவையா என்ன! மாம்பழங்கள் உலகில் மிகவும் பரவலாக உண்ணப்படும் பழங்களில் ஒன்றாகும். உலகளவில் 1,000-க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் உள்ளன.

உண்மையில் தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மாம்பழங்கள் தற்போது பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் ஒரு பிரதான பழமாக விளைவிக்கப்படுகின்றன.

இவற்றின் பிரபல்யம் காரணமாக மக்கள் மாம்பழத்தை பழங்களின் ராஜாவாக கருதுகின்றனர்! மாம்பழங்கள் சாப்பிட மட்டும் சுவை மிகுந்தவை கிடையாது, அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்து நன்மைகள் நிரம்பியுள்ளன.

இந்த கட்டுரையில் மாம்பழத்தின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்தும், அவற்றை சாப்பிடுவதற்கான சரியான வழிகாட்டுதல் குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பது பற்றியும் காண்போம்.

இந்தியாவின் தேசிய பழம்:

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) கூற்றுப்படி, உலகளவில் 1,000-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும், இன்றும் கூட புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

எனவே மாம்பழ ரகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர வாய்ப்புள்ளது. மாம்பழ உற்பத்தியில் உலகளாவிய உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா – அதன் மொத்த உற்பத்தியில் 60%-க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக மாம்பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும், சுமார் 500-600 வகையான மாம்பழங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR)  ஆவணப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வகையும் அதன் தனித்துவமான சுவை, தோற்ற அமைப்பு மற்றும் நிறத்தைக் கொண்டுள்ளது; எனவே மாம்பழங்கள் சுவையில் மட்டுமில்லாமல், சுவாரஸ்யமான வகையிலும் பல ரகங்களில் கிடைக்கிறது.

அல்போன்சா, சௌன்சா, செந்தூரா, நீலம், மல்கோவா, ஃபாஸ்லி, தொட்டாபுரி, ராஜபுரி மற்றும் கேசர் ஆகியவை மிகவும் பிரபலமான இந்திய மாம்பழ வகைகளில் சில.

ஒரு மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (தோராயமாக 150 கிராம்)

ஆற்றல்: 104 கலோரிகள்

மேக்ரோ ஊட்டச்சத்துக்கள்:

  • கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து): 24.7g
  • நார்ச்சத்து: 2.6g
  • புரதம்: 0.9g
  • கொழுப்பு: 0.5g

வைட்டமின்கள்:

  • வைட்டமின் C: 45.9mg (தினசரி தேவையில் 77%)
  • வைட்டமின் A: 96.2mcg (தினசரி தேவையில் 12%)
  • வைட்டமின் K: 14.4mcg (தினசரி தேவையில் 18%)

மினரல்கள்:

  • பொட்டாசியம்: 156 mg (தினசரி தேவையில் 4%)
  • மெக்னீசியம்: 29mg (தினசரி தேவையில் 7%)
  • தாமிரம் (காப்பர்): 0.2 mg (தினசரி தேவையில் 10%)

பிற ஊட்டச்சத்துக்கள்:

  • மாம்பழங்களில் ஃபிளேவனாய்டுகள் (flavonoids), ஃபினோலிக் அமிலங்கள் (phenolic acids) மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (ascorbic acid) உள்ளிட்ட பல்வேறு ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
  • மாம்பழங்களில் நார்ச்சத்துக்களும் நிறைவாக உள்ளன.

மாம்பழத்தின் 10 ஊட்டச்சத்து நன்மைகள்:

1. ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள்:

மாம்பழங்களில் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் நிறைந்துள்ளன. அதனால் அவை ஆக்ஸிடேஷனை தடுத்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகின்றன.

இதனால் உயிரணுக்களின் சேதம் தடுக்கப்படுகிறது. மாம்பழங்களில் உள்ள குறிப்பிட்ட ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பது குறித்து கீழே காண்போம்.

  • ஃபிளேவனாய்டுகள்: இந்த கலவைகள் வலுவான ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளன. மாம்பழங்களில் காணப்படும் குர்செடின் (quercetin) மற்றும் கேம்ப்ஃபெரோல் (kaempferol) போன்ற ஃபிளேவனாய்டுகள் – உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன; ஏனெனில், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் காரணமாக நாட்பட்ட நோய்கள் ஏற்படலாம்.
  • ஃபீனாலிக் அமிலங்கள்: இவை மாம்பழங்களில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் சேர்மங்களின் தொகுப்பாகும். ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தையும், இன்ஃப்ளமேஷனையும் குறைக்க அவை மேலும் பங்களிக்கின்றன.
  • அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் C): பலருக்கும் தெரிந்த  ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டான வைட்டமின் C மாம்பழத்தில் ஏராளமாக உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் உயிரணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • பீட்டா கரோட்டின்: இந்த ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டானது வைட்டமின் A-வின் முந்தைய வடிவமாகும். பீட்டா கரோட்டினை உட்கொண்டவுடன், நமது உடல் அதனை வைட்டமின் A-வாக மாற்றுகிறது; ஆரோக்கியமான கண் பார்வையை பராமரிக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் இந்த ஊட்டச்சத்து மிக முக்கியமானதாகும்.

2. ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள்:

மாம்பழங்களில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களுக்கு ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளும் உள்ளதால், அவை உடல் முழுவதும் இன்ஃப்ளமேஷனை கையாளவும், குறைக்கவும் உதவுகிறது. அவை பற்றி விரிவாக காண்போம்.

  • குவெர்செடின் (Quercetin): இந்த ஃபிளேவனாய்டு ஹிஸ்டமைன்களின் (histamines) வெளியீட்டைத் தடுத்து, இன்ஃப்ளமேஷன் மற்றும் ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்கிறது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் குவெர்செடின் இருதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.
  • கேம்ப்ஃபெரால் (Kaempferol): மாம்பழங்களில் உள்ள மற்றொரு சக்திவாய்ந்த ஃபிளேவனாய்டான, கேம்ப்ஃபெராலும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளதால் – இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாட்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் அவை நம்மைப் பாதுகாக்கிறது.

3. கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

  • லூடெயின் (Lutein) மற்றும் ஜீயாக்ஸாந்தின் (Zeaxanthin) ஆகியவை கண்ணின் விழித்திரை மற்றும் லென்ஸில் அதிகம் காணப்படும் கூறுகளாகும். கண்களை நீல ஒளி மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து இவை பாதுகாக்கின்றன. அவை வயோதிகத்தால் ஏற்படும் மாக்யூலர் சிதைவு மற்றும் கண்புரை உள்ளிட்ட பார்வை குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

4. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தவை:

  • வைட்டமின் C: ஒரு மிதமான அளவினைக் கொண்ட மாம்பழமானது, தினசரி வைட்டமின் C-யின் தேவையில் 61% சதவீதத்தை வழங்குகிறது. வைட்டமின் C நோயெதிர்ப்பு செயல்பாடு, கொலாஜன் தொகுப்பு ஆகியவற்றிற்கு உதவுவதோடு, ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்படுகிறது.
  • பொட்டாசியம்: 100 கிராம் மாம்பழத்தில் தினசரி பொட்டாசியம் தேவையில் 14% கிடைக்கிறது. இதய செயல்பாட்டை சீராக பராமரிக்கவும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும் பொட்டாசியம் அவசியமாகும்.

5. இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது:

இனிப்பாக இருந்தாலும், மாம்பழங்கள் இரத்த சர்க்கரை அளவை அசாதரணமாக குறைய விடாமல் இயல்பு நிலையில் பராமரிக்க உதவுகின்றன. 

மாம்பழங்கள் நார்ச்சத்துக்கான ஒரு நல்ல மூலமாக இருப்பதால், இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரை விரைவாக உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.

இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கவும் உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு மாம்பழங்களை மிதமாக உட்கொள்ளும்போது அது எந்தவித பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை.

6. இதய ஆரோக்கியம்:

மாம்பழங்கள் பின்வருமாறு இதய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பங்களிக்கின்றன:

  • பொட்டாசியம்: உடலில் உப்பின் மூலம் சேரும் அதிகப்படியான சோடியத்தின் விளைவுகளை பொட்டாசியம் சமநிலைப்படுத்துகிறது. மேலும், இரத்த நாளங்களின் உட்புறங்களில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
  • நார்ச்சத்து: சர்க்கரை நிர்வாகத்திற்கும் மட்டுமில்லாமல், மாம்பழத்தின் நார்ச்சத்து  மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது; இதனால் பலவிதமான இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

7. ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது:

செரிமான ஆரோக்கியத்திற்கு மாம்பழங்கள் நன்மை பயக்குகின்றன. காரணம், நார்ச்சத்து தான்! குடலின் இயல்பான இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

மேலும், ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் ஆதரிக்கிறது. ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த உடல் நலனுக்கு குடலின் நுண்ணுயிர் சூழல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியமாகும்.

8. புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் பங்களிக்கிறது:

மாம்பழங்களில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயைத் தடுப்பதிலும் கூட பங்களிக்கிறது

இதன் ஃபிளேவனாய்டுகள் மற்றும் ஃபினாலிக் அமிலங்கள் உயிரணுக்களை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன; சில புற்றுநோய்களின் அபாயத்த குறைக்கும் திறன் இவற்றிற்கு உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

9. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது:

மாம்பழங்களில் மூளையின் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் ஒரு தனித்துவமான ஃபிளேவனாய்டு உள்ளது,

மாங்கிஃபெரின் (Mangiferin): மாங்கிஃபெரின் என்கிற இந்த கூறு நரம்பியல் மண்டலத்தை பாதுகாக்கும், நியூரோபிராக்டிவ் (neuroprotective) பண்புகளைக் கொண்டுள்ளது; இது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.

மூளையின் உயிரணுக்களை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் இன்ஃப்ளமேஷனிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் வயோதிகம் காரணமாக ஏற்படும் நியூரோ-டீஜெனரேட்டிவ்  நோய்களின் அபாயமும் குறைகிறது.

10. ஆரோக்கியமான சருமத்தை பெற உதவுகிறது:

மாம்பழங்களில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. 

வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் புற ஊதா கதிர்வீச்சால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், வயதான தோற்றத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும், சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

அவை தோல் உயிரணுக்களை மீளுருவாக்கம் செய்து,  சீர்படுத்துவதிலும் பங்களிக்கின்றன.

மாம்பழம் குறித்த ஆயுர்வேதத்தின் வழிகாட்டுதல்கள்:

இந்தியாவின் பண்டைய மருத்துவ முறையான ஆயுர்வேதமானது மாம்பழங்களை சாப்பிடுவது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் சில வழிகாட்டுதலை நமக்கு வழங்குகிறது. அதில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கு காண்போம்:

  • தோஷங்களை சமநிலைப்படுத்தும்:

ஆயுர்வேத மருத்துவமுறையின் கீழ் நமது உடலானது வாதம், பித்தம், மற்றும் கபம் உள்ளிட்டவற்றால் ஆனது. மாம்பழத்தின் பண்புகள் வாத மற்றும் பித்த தோஷங்களை சமப்படுத்துவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

இருப்பினும், அவற்றை அதிகமாக உட்கொண்டால் அவை கபத்தை அதிகரித்துவிடும்; குறிப்பாக அவை இயல்பை விட அதிகமாக பழுத்திருக்கும் போது, அல்லது அதிக அளவில் சாப்பிடும்போது கபம் அதிகரிக்கிறது.

  • செரிமான ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் கூறும் அறிவுரை:

ஆயுர்வேதத்தில், மாம்பழங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. அவற்றின் இயற்கையான இனிப்பு மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் செரிமானத்திற்கு தேவையான சூட்டை (அக்னி) தூண்டுகிறது, இது ஊட்டச்சத்துக்களை முறித்து, உடல் அவற்றை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

பழுத்த மாம்பழங்கள் மலச்சிக்கலைத் தணிக்கவும், குடலின் செரிமான இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

  • கவலை மற்றும் மன அழுத்தம் குறித்த ஆயுர்வேத அறிவுரை:

ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி இயற்கையாக பழுக்கும் மாம்பழங்களில் மன அமைதியை ஊக்குவிக்கும் பண்புகள் உள்ளதால், அவை கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது.

பழத்தின் இனிப்பு சுவை மனதிற்கும் உடலுக்கும் இதமாக அமைகிறது. நிதானமாக ருசித்து சாப்பிடும் போது, மாம்பழம் நம்மை சாந்தப்படுத்தும் உணர்வினை தருகிறது. முடிந்தவரை மாம்பழத்தை கத்தி கொண்டு நறுக்காமல், அப்படி சாப்பிடுவது திருப்தியை வழங்கும்.

  • மாம்பழத்துடன் சேர்க்க கூடாத உணவுகள்: சில உணவுகளுடன் மாம்பழங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது:

மீன்: மாம்பழத்தின் இனிப்பு, மீனின் சுவையுடன் எதிர்வினையாற்றி செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் இவற்றை சேர்த்து சாப்பிடக் கூடாது.

பால்: மாம்பழங்களை பாலுடன் கலப்பது கூடாது; ஏனெனில் இரண்டு உணவுகளும் மாறுபட்ட பண்புகள் கொண்டவை. மாம்பழம் சூடானது, பால் குளிரானது; இதன் காரணமாக வயிற்று வலி அல்லது வாயு போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

  • எப்போது மாம்பழம் சாப்பிடலாம்:

பிற்பகல்: மாம்பழங்கள் பொதுவாக பிற்பகல் 2-4 மணியளவில் இனிப்பாகவும், சாறு நிறைந்ததாகவும் இருக்கும். காரணம் இயற்கையாகவே இந்த நேரத்தில் தான் அவை பழுக்கக் கூடியவை.

உறங்கும் முன்: ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி உறங்கும் முன் மாம்பழங்களை சாப்பிடுவதால் – செரிமானம் மற்றும் தூக்கத்தின் தரம் மேம்படுகிறது. அவற்றின் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க உதவும் அதே நேரத்தில், ஓய்வின் போது ஆசுவாசம் மற்றும் மன அமைதியை தருகின்றன.

  • இயற்கையான மலமிளக்கி:

ஆயுர்வேதத்தின் படி மாம்பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அவை இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகின்றன. குறிப்பாக தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது மலத்தை இலகுவாக்கவும், செரிமான மண்டலத்தின் வழியாக உணவை சுலபமாக நகர்த்தி வெளியேற்றவும் உதவுகின்றது.

  • இரும்புச்சத்து குறைபாடுக்கு தீர்வு:

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஆயுர்வேதம் மாம்பழத்தினை பரிந்துரைக்கிறது. அறிவியல் பூர்வமாகவும் இது நிரூபணமாகியுள்ளது – இதில் உள்ள வைட்டமின் C மற்ற உணவுகளிலிருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.

இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாம்பழம் குறிப்பாக நன்மை பயக்குகிறது. எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் மாம்பழங்களை உட்கொள்வது நல்ல பலன் தரும்.

  • பருவகால உணவு:

அந்தந்த சீசனில்  கிடைக்கும் பருவகால பழங்களை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. மாம்பழங்கள் பொதுவாக கோடை மாதங்களில் கிடைக்கும் பழமாகும்.

எனவே அந்த காலத்தில் இதனை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. உடல் மற்றும் சுற்றுச்சூழலின் இயற்கையான சமநிலைக்கு மாம்பழங்கள் ஒத்துப்போவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

  • நீர்ச்சத்து:

மாம்பழங்களில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இவை உடலுக்கு சூடு என்று கூறப்பட்டாலும் செரிமான மண்டலத்தில் மட்டுமே  அது சூட்டை வெளிப்படுத்துகிறது.

வெப்பமான கோடை மாதங்களில் உடலுக்கு இவை நீர்ச்சத்தினை தருகின்றன. ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளை பராமரிக்க சரியான நீரேற்றம் அவசியமாகும்.

பொது அறிவுரை:

மாம்பழத் தோலில் வைட்டமின்களான A, C, E, K, பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன என்றாலும், ஆர்கானிக் முறையில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட மாம்பழங்களின் தோல் மட்டுமே உண்ணக்கூடியதாகும்.

சரியாக சுத்தம் செய்யப்படாத மாம்பழத் தோலில் ஈ.கோலி மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம். இவை பேதி உள்ளிட்ட சிக்கல்களை தூண்டலாம், ஆனால் அதன் பழி மாம்பழத்தின் மீது தவறாக சுமத்தப்படுகிறது.

மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட பழங்களில் அவற்றின் சுவடுகள் மீதமிருக்கலாம். எனவே மாம்பழங்களை நன்கு சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.

முடிவுரை:

மாம்பழங்கள் நிறைய ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இருப்பினும் அளவாக உட்கொள்ளும்போது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

அவற்றின் பல்வேறு வகைகள், தனித்துவமான சுவைகள், தோற்ற அமைப்புகள், மற்றும் நிறங்கள் காரணமாக  மாம்பழங்கள் உலகம் முழுவதும் பலருக்கும் பிரியமான பழமாக  இருப்பதில் ஆச்சரியமில்லை.

இனிப்பான மற்ற சிற்றுண்டிகளுக்கு பதிலாக மாம்பழத்தை சாப்பிட்டு ஊட்டச்சத்து நன்மைகளையும் சேர்த்து பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒருவர் ஒரே நேரத்தில் எத்தனை மாம்பழங்களை சாப்பிடலாம்?

ஒன்று முதல் இரண்டு மாம்பழங்களை சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மாம்பழத்தினை அதிகமாக சாப்பிட்டால் அதிகப்படியான சர்க்கரை சேரவும், செரிமான அசௌகரியமும் ஏற்படலாம்.
எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் அதன் நன்மைகளை மட்டும் பெற விரும்பினால் மிதமான அளவில் சாப்பிட வேண்டும்.

மாம்பழங்கள் உடல் சூட்டைத் தூண்டுமா?

ஆம், மாம்பழங்கள் உடலின் வெப்பநிலையை சற்று அதிகரிக்கும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அதில் நீர்ச்சத்து இருந்தாலும், கோடையில் மிதமாக உட்கொள்வது நல்லது. மிதமாக சாப்பிட்டால் உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.

கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை எவ்வாறு கண்டறிவது?

கார்பைடு கற்கள் மூலம்  பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பெரும்பாலும் இயற்கைக்கு மாறான சீரான நிறத்தைக் கொண்டுள்ளன மற்றும் அவற்றில் ஒரு ரசாயன வாசனை இருக்கும். அவை இயல்பைவிட மென்மையாகவும் இருக்கும். இயற்கையாக பழுக்கும் மாம்பழங்கள் சீரற்ற முறையில் பழுக்கின்றன; மேலும், அவற்றில் இனிமையான பழ நறுமணம் வெளிப்படும்.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top