வறட்டு இருமலுக்கு நிவாரணம் தரும் 14 இயற்கையான வீட்டு வைத்தியங்கள்

வறட்டு இருமலுக்கு நிவாரணம் தரும் 14 இயற்கையான வீட்டு வைத்தியங்கள்

Health Insurance Plans Starts at Rs.44/day*

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

Verified By Star Health Doctors  

Verified By Star Health Doctors
Health & Wellness

வறட்டு இருமலுக்கு நிவாரணம் தரும் 14 இயற்கையான வீட்டு வைத்தியங்கள்

அறிமுகம்

ஒரு நாளில் எந்த நேரத்திலும் எரிச்சலூட்டும் விதமாக இருமல் ஏற்படலாம். இதனால் நமது அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. நமக்கு மிகவும் அவசியமான இரவுநேர தூக்கத்தையும் இந்த இருமல் கெடுக்கிறது. இருமலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்களை தெரிந்து வைத்திருந்தால், மருந்துகள் இல்லாமலேயே எளிதாக அதனை சமாளிக்கலாம்.

ஒருவருக்கு ஏதேனும் குறிப்பிட்ட உடல்நல பாதிப்பு அல்லது ஏற்கனவே உள்ள நோயின் காரணமாக ஏதேனும் பிரச்சினை இல்லாவிட்டால், இருமலை எளிதாக போக்கிவிடலாம். பாதுகாப்பான, மற்றும் பயன்தரும் வீட்டு வைத்தியங்களை சரியான வழிமுறைகளின்படி பின்பற்றுவதன் மூலமாக இருமலின் தீவிரத்தை நன்கு குறைக்கலாம்.

கீழ்வரும் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம், சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற பொதுவான காரணங்களால்  ஏற்படும் இருமலுக்கு விடைகொடுங்கள்.

வறட்டு இருமல் ஏற்படக் காரணங்கள்

பின்வரும் காரணங்களால் வறட்டு இருமல் ஏற்படலாம்:

  • மகரந்தம் அல்லது தூசி போன்ற காரணிகளால் ஏற்படும் ஒவ்வாமை.
  • புகை பிடித்தல்
  • ஆஸ்துமா
  • காய்ச்சல், ஜலதோஷம் (சளி) அல்லது கோவிட் போன்ற வைரஸ் நோய்
  • லேரன்ஜைடஸ் (குரல்வளை அழற்சி)
  • வெளிப்புற தூசுத்துகள்களை சுவாசித்தல்
  • வைரஸ் நோய் தாக்கத்திற்குப் பிந்தைய இருமல்
  • போஸ்ட் நேசல் ட்ரிப் - மூக்கு அல்லது சைனஸிலிருந்து சளி வெளியேற்றப்படும் திரவம் உட்புறமாக தொண்டையின் உள் வடிவது.
  • காச நோய்
  • இடைநிலை நுரையீரல் திசு நோய்
  • ACE மருந்துகள் போன்ற மருந்துகளால் தூண்டப்படும் இருமல்

14 வறட்டு இருமல் வீட்டு வைத்தியம்

நமது தினசரி வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும் இந்த வறட்டு இருமல், இரவில் நமது தூக்கத்தையும் கெடுக்கிறது. வறட்டு இருமலுக்கு நிவாரணம் தரும் பல பாரம்பரிய வீட்டு வைத்தியங்கள் நமக்கு தலைமுறை தலைமுறைகளாக பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அவை குறுகிய கால நிவாரணத்திற்கு மட்டுமே பாதுகாப்பானவை என்று கருதப்படுகின்றன.

போதிய நீர்ச்சத்து

தொண்டை வறட்சி இருமலை அதிகரிக்கும். எலுமிச்சை சாறு கலந்த தேநீர் அல்லது தண்ணீர் போன்ற இதமான பானங்களைக் குடிப்பது வறட்டு இருமலைப் போக்க உதவும். இருமலைக் குறைப்பதற்கான எளிதான மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஒன்று போதிய நீர்ச்சத்தை அளிப்பது.

போதிய நீர்ச்சத்து கிடைப்பதன் மூலமாக, சளி நீர்த்துப் போய் வாய் அல்லது மூக்கு வழியாக உடலை விட்டு வெளியேறுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வியர்வை அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் ஏற்கனவே இழந்த திரவங்களை நிரப்பவும் இந்த பானங்கள் உதவும்.

உப்பு நீரில்நன்கு வாய் கொப்பளிக்கவும்

தொண்டை வலியைப் போக்குவதில் உப்பு நீர் நல்ல பலன்களைத் தருகிறது. இதே காரணத்திற்காக உப்பு நீரை கொண்டு ஆழமாக வாய் கொப்பளித்து வறட்டு இருமலுக்கு  நிவாரணம் பெறும் வீட்டு சிகிச்சை முறையைப் பின்பற்ற நோயாளர்களை மருத்துவர்கள் ஊக்குவிக்கிறார்கள். உப்பு நீருக்கு சவூடுபரவும் (ஆஸ்மாட்டிக்) தன்மை உள்ளதால், இது திரவங்களின் ஓட்ட திசையை மாற்றுகிறது; உப்பு நீர் அதிக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் ஈரப்பதத்தை விலக்குவதால், வறட்டு இருமலால் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பை சேர்க்கவும். இந்த கலவையை ஆழமாக வாய் கொப்பளிக்க பயன்படுத்தவும். உப்பு நீரை  துப்புவதற்கு முன்பு தொண்டையில்  படுமாறு சிறிது நேரம் அப்படியே வைக்கவும். சிறந்த பலன்களைப் பெற, சில நாட்களுக்கு இந்த செயல்முறையை  தொடரவும்.

இருமல் குறையும் வரை தினமும் பல முறை உப்பு நீரில் நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும்.

சூடான பானங்கள்

இருமல் அல்லது சளி உள்ளவர்களுக்கு சூடான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பானங்கள் அவசியம். ஒரு நோயாளர் சூடான பானத்தை பருகும் போது, அவரது உடல்நல பாதிப்பின் அறிகுறிகள் உடனடியாக குறைவதைக் காணலாம்.

தண்ணீர், வெறும் சூப் மற்றும் மூலிகை தேநீர் உள்ளிட்ட சூடான பானங்களை அருந்துவதால் உடலின் குளிர் நீங்கி, கரகரப்பான தொண்டை மற்றும் வறட்டு இருமல் ஆகியவற்றிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்கும். சூடான திரவத்தை குடித்த பிறகு இந்த இதமான பலன்கள் சிறிது நேரம் நீடிக்கும்.

தேன்

மேற்புற சுவாச நோய்த்தொற்று அறிகுறிகளுள் ஒன்றான இருமலுக்கு  சிகிச்சையளிக்க தேன் ஒரு சிறந்த மாற்று மருந்து என்று ஆராய்ச்சி கூறுகிறது.

அதிக பாகுத்தன்மையைக் கொண்டுள்ள தேன், இருமல் சொட்டுமருந்துகளுக்கு நிகரான பலன்களைத் தருகிறது. இது விழுங்கும்போது தொண்டையின் மேற்புற படலத்தை மூடுவாதல், வலி அல்லது கரகரப்பு குறைகிறது. பரவலாகக் கிடைக்கும் க்ளோவர் தேனை விட டார்க் பக்வீட் தேன் போன்ற கருந்தேன் வகைகள், இருமலுக்கு சிகிச்சையளிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

தேனின் இதமளிக்கும் பலன்களுடன் சேர்த்து, அதில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகளும், ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் கொண்டுள்ளது. இந்த நற்குணங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலுசேர்க்கவும் மற்றும் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

தேனை தனியாக சாப்பிடலாம் என்றாலும் கூட, சூடான தேநீருடன் கலந்து அருந்தினால் அதன் தொண்டையை மென்மையாக்கும் பண்புகள் அதிகரிக்கிறது.

தேன் கலந்த எலுமிச்சை பானம் தயாரிக்க தேவையானவை:

  • தேன் – இரண்டு தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி
  • தண்ணீர் – 1 டம்ளர்

செயல்முறை

  • கொதிக்கும் தண்ணீரில் தேனை நன்கு கலக்கவும்.
  • அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, நன்கு கலக்கிய பின் பருகவும்.

இந்த பானத்தை காலை மற்றும் இரவில் ஒரு டம்ளர் குடிக்கவும். இலவங்கப்பட்டை, பெப்பர்மின்ட் மற்றும் இஞ்சி ஆகியவற்றுடன் தேன் கலந்து பருகுவதும் நல்ல பலன்களைத் தரும்.

இஞ்சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், வலியைக் குறைப்பதற்கும் மட்டுமில்லாமல், இஞ்சியில் ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகளும், பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்புகளும் உள்ளது. சளியை வெளியேற்றி, இருமலின் தீவிரத்தை குறைக்கும் மருந்தான இஞ்சி, வறட்டு இருமலுக்கு  ஒரு சிறந்த இயற்கையான தீர்வாக உள்ளது.

இஞ்சி சேர்க்கப்பட்ட தேநீர் தயாரிப்புகளை தேர்வு செய்யவும். ஒரு கப் வெந்நீரில் அரை டீஸ்பூன் இஞ்சித் தூள் சேர்த்து தினமும் மூன்று முறை குடித்து வந்தால் ஒருவருக்கு இருக்கும் இருமல் குணமாகும்.

ஒரு ஸ்பூன் வெறும் தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து  தினமும் இரண்டு முறை உட்கொள்ளவும். அதிகப்படியான இஞ்சியை எடுத்துக்கொண்டால் அது இரைப்பை குடல் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

நீராவி பிடித்தல்

நீராவியை உள்ளிழுத்தால் மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஒருவர் தனது மூக்கினை எளிதாக சிந்த நீராவி பிடித்தல் உதவும்.  ஒருவேளை, மூக்கின் பின்புறமாக தொண்டைக்குள் சளி வடியும் பிரச்சினை இருந்தால், நீராவி பிடிப்பதன் மூலம் தொண்டையில் கட்டிய சளியை விடுவிக்கலாம். நீராவி தொண்டை புண்ணுக்கு ஈரப்பதமூட்டுவதால், வலியைக் குறைக்கக்கூடும்.

தற்காலிக நிவாரணமாக, கொதிக்கும் நீரில் இருந்து வெளியாகும் நீராவியை சுவாசித்து உள்ளிழுத்துப் பார்க்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும். வெந்நீர் பாத்திரத்தை உங்களுக்கு முன்னால் வைத்து சௌகரியமாக  உட்காரவும். உள்ளிழுக்கும் நீராவியின் அளவினைக்  கட்டுப்படுத்த உங்கள் தலைக்கு மேல் ஒரு துணியால் மூடிக்கொள்ளவும். சுட்டுவிடும் அபாயாம் உள்ளதால், நீராவிக்கு மிக அருகாமையில் செல்லாமல் கவனமாக இருக்கவும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும்  இதேபோன்ற பலனைத் தரும்.

அதிமதுர வேர்

வலியைக் குறைப்பதற்கும், சளியை சுத்தம் செய்வதற்கும், இருமலைத் தணிப்பதற்கும் பெயர்பெற்ற அதிமதுர வேர், பல ஆண்டுகளாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிமதுர வேரிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் தொண்டையில் ஏற்படும் அடைப்பு மற்றும் அசௌகரியத்தைப் போக்கும் திறன் கொண்டது.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள  குர்குமின், வறட்டு இருமலுக்கான ஒரு சிறந்த வீட்டு நிவாரணியாகும்.

ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளையும், வைரஸ் மற்றும் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகளையும் கொண்ட மஞ்சளைப் பயன்படுத்தி வறட்டு இருமல் உள்ளவர்கள் பயனடையலாம். ஒரு பண்டைய ஆயுர்வேத தீர்வாக இருப்பதால், சுவாசப் பிரச்சினைகள் முதல் கீல்வாதம் வரை அனைத்தையும் குணப்படுத்தும் சிறப்பு மஞ்சளுக்கு உள்ளது.

தேவையான பொருட்கள்

  • அரிசி, பாதாம் அல்லது தேங்காய் பால் – 1 கப்
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை

  • ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் (எந்தப் பாலாக வேண்டுமானாலும் இருக்கலாம்), கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இருமல் குறையும் வரை இந்த மஞ்சள் சேர்த்த பாலை தினமும் ஒரு டம்ளர் குடிக்கவும்.

சூடான மஞ்சள் கலந்த பால் - வறண்ட, கரகரப்பான தொண்டைக்கு ஈரப்பதமளித்து இருமலை குணப்படுத்துகிறது. கூடுதலாக, இது  சளியால் ஏற்படும் நெஞ்சடைப்பை  குறைத்து, சளியை  வெளியேற்ற உதவுகிறது.

பாக்டீரியா தொற்றினை குணப்படுத்தும் மற்றும் எதிர்த்துப் போராடும் நற்குணங்கள் நிறைந்த மஞ்சள் - தொடர் இருமலுக்கு சிகிச்சையளிப்பதில் நல்ல பலனளிக்கும்.

தைம்(ஓமம்)

ஐரோப்பாவில் பிளாக் பிளேக் என்கிற பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து தைம் என்கிற ஓமம் நல்லதொரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்டிஸ்பாஸ்மோடிக் பொருள் தொண்டையின் தசைகளை அமைதிப்படுத்த உதவுகிறது. ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்  பண்புகள் உள்ள ஓமம், செரிமான பிரச்சினைகளுக்கு நிவாரணம் தருகிறது; ஓமம், வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றுக்கு நிவாரணம் தரும்  சிறந்த வீட்டு மருந்தாகவும் உள்ளது .

ஒரு நாளைக்கு இரண்டு முறை ஓமத் தேநீரை பருகவும். இனிப்புக்கு தேனையும், சுவைக்கு எலுமிச்சை சாற்றினையும் சேர்த்தும் அருந்தலாம்.

மார்ஷ்மெல்லோ வேர்

வறட்டு இருமலைப் போக்க உதவும் ஒரு பழங்கால மூலிகையாக அறியப்படும்  ‘மார்ஷ்மெல்லோ வேர்’ – தொண்டைக்கு இதமளிப்பதிலும், வறட்டு இருமலினால் ஏற்படும் எரிச்சலைக் குறைப்பதிலும் செயல்திறன் மிக்கதாக உள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

அரோமாதெரபி

வெந்நீரில் சில துளிகள் யூக்கலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து , அதனால் வெளியாகும் ஆவியினை சுவாசிப்பதன் மூலம் நிவாரணம் தரும் அரோமாதெரபி என்கிற முறையும் வறட்டு இருமலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.

யூக்கலிப்டஸ் எண்ணெய் வறட்டு இருமலுக்கான ஒரு அற்புதமான இயற்கை மூலிகையாகும்; சுவாசப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஆராய்ச்சி பூர்வமாக இதன் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஹியூமிடிஃப்யர்

வறண்ட பிரதேசங்களில் வாழ்பவர்கள், குளிர்காலத்தின் போதும், சைனஸ்களை தெளிவாக வைத்திருக்க ஹியூமிடிஃப்யர் ஒரு சிறந்த மாற்றுவழியாக செயல்படுகிறது. நீராவியை சுற்றுப்புறதத்தில் பரப்புவதன் மூலம், ஹியூமிடிஃப்யர் சாதனங்கள் காற்றிற்கு ஈரப்பதத்தை வழங்குகின்றன.

ஒருவர் அதிக நேரத்தை செலவிடும் அறையில் ஒரு ஹியூமிடிஃப்யர் சாதனத்தை வைத்திருப்பது சிறந்த தேர்வாக இருக்கும், ஏனெனில், அது அறைக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.

ஹியூமிடிஃப்யரைப் பயன்படுத்தும் போது, எதிர்பாராமல் பூஞ்சை அல்லது பாக்டீரியா பரவுவதைத் தவிர்க்க, அதில் பயன்படுத்தப்படும் தண்ணீரை தவறாமல் மாற்றுவதையும், சாதனத்தை சுத்தமாக பராமரிப்பதையும் உறுதிப்படுத்தவும்.

புதினா

புதினா இலைகள் ஒரு தனித்துவமான சிறப்பியல்பைக் கொண்டுள்ளன; புதினாவின் நறுமணத்தில் உள்ள மெந்தால் சளியை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் காரணமாக, சுவாசப் பாதைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி சுவாசத்தை எளிதாக்குகிறது. இதன் குளிர்விக்கும் தன்மை, தொண்டை புண் மற்றும் வறட்டு இருமலுக்கு நிவாரணம் தருகிறது.

புதினா சேர்த்து உருவாக்கப்பட்ட இன்ஹேலரை சுவாசித்து உள்ளிழுப்பது சுவாசப் பாதைகளை தடையின்றி வைத்தும், அடைப்புகளை நீக்கியும்  தொண்டையை ஆற்ற உதவுகிறது. புதினா  இலைகளை தண்ணீரில் வேகவைத்து, அதன் புகையை சுவாசிப்பதும் வறட்டு இருமலின் போது நல்ல பலனைத் தரும்.

பெப்பர்மின்ட் (மிளகுக்கீரை) இலைகளின் நிவாரணப் பண்புகள் வெகு காலமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இயற்கையாக மூக்கடைப்பினை நீக்கும் மென்தால் என்கிற உட்பொருளை கொண்ட இந்த பெப்பர்மின்ட் - தொண்டை புண்ணை ஆற்றுகிறது, மற்றும் அதிகப்படியான சளி உற்பத்தியைக் குறைக்கிறது.

பெப்பர்மின்ட் தேநீரை, சூடான பானமாக அருந்தும் போது, அதிக நீர்ச்சத்தினை தருவதில் உதவுகிறது.

மசாலா சாய்/ தேநீர்

இந்தியாவில், தொண்டை புண் மற்றும் வறட்டு இருமல் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க மசாலா தேநீர் பயன்படுத்தப்படுகிறது.

மசாலா தேநீர் என்பது கிராம்பு மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட பல ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்  உட்பொருட்களைக் கொண்ட ஒரு பானமாகும். அவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மூக்கடைப்பினை போக்கவும் உதவுகின்றன.

மசாலா தேநீரில் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்ட இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் உள்ளன.

மசாலா தேநீருக்கு தேவையான பொருட்கள்:

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்

இலவங்கப்பட்டை - 1

தண்ணீர் - அரை கப்

பால் - 2 கப்

தேயிலை  - 2 தேக்கரண்டி

சர்க்கரை / தேன் – தேவையான சுவைக்கேற்ப

முறை:

  • மசாலாப் பொருட்களை தண்ணீரில் 5 நிமிடங்கள் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • நீர் அடர் பிரவுன் நிறமாக மாறி, மசாலாவின் நறுமணம் உங்கள் சமையலறையில் வீசும் வரை அதனை நன்றாக கொதிக்க வைகக்கவும்,
  • இப்போது சூடான மசாலா நீரில் காய்ச்சிய பாலை சேர்க்கவும்.
  • 3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டிய பின்பு சூடாக பரிமாறவும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

தொடர்ச்சியான இருமலுடன் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் தோன்றினால், அவசியம் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

  • இரத்த இருமல்
  • பசி குறைதல்
  • தொடர் உயர் வெப்பக் காய்ச்சல்
  • சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்
  • உடலில் பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படுதல்
  • நெஞ்சு வலி
  • இரவில் வியர்த்தல்

பொதுவாக, மேற்கூறியவற்றில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஒன்றாக ஏற்பட்டால் அது ஆபத்தான பிரச்சினையைக் குறிக்கும். எனவே, வறட்டு இருமலுக்கான வீட்டு வைத்தியம் உதவாத பட்சத்தில், மருத்துவரை அணுகி விரைவாக பரிசோதனை செய்து கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

இருமலைத் தடுப்பது எப்படி?

ஒரு நோயாளர் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வழக்கமான பருவநிலை மாற்ற இருமல் தொடங்குவதற்கு முன்பு அதைத் தடுக்க முயலலாம்.

  • செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருங்கள். உடலுக்கு நன்மைதரும் நுண்ணுயிரிகள் மற்றும் பிற புரோபயாடிக் உயிரிகளைக் கொண்ட தயிரானது - நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும்.
  • அமில ரிஃப்ளக்ஸை (எதிர்க்களித்தல்) தூண்டும் காரணிகளைத் தவிர்க்கவும். மது, அதிகப்படியான கொழுப்பு, காரமான உணவு, இரவில் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அமில ரிஃப்ளக்ஸால் இருமல் மோசமடையக்கூடும்.
  • கைகளை அடிக்கடி நன்கு கழுவி பாக்டீரியாக்களை அகற்றுவதன் மூலம், அடிக்கடி இருமல் மற்றும் சளியை ஏற்படுத்தும் பொதுவான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களினால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.

முடிவுரை

வறட்டு இருமலை போக்கும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகளின் நோக்கம் சிறிய உடல்நல பாதிப்புகள், ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிப்பது மட்டுமேயாகும். மிதமான முதல் கடுமையான இருமல், அல்லது தொடர்ந்து நீடிக்கும் இருமலுக்கு மருத்துவரின் சிகிச்சை அவசியமாகும். மருத்துவ நிபுணரால் மட்டுமே தொடர்ச்சியான வறட்டு இருமலின் மூல காரணத்தை அடையாளம் கண்டு, அதற்கான சரியான சிகிச்சைத் திட்டத்தை வழங்கி உதவ முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. வறட்டு இருமலுக்கான விரைவான வீட்டு வைத்தியம் என்ன?

வறட்டு இருமல் விரைவாக குணமாக உதவும் வீட்டு வைத்தியங்கள் பின்வருமாறு:

1. யூக்கலிப்டஸ் அடிப்படையிலான அரோமாதெரபி. 
2. ஹியூமிடிஃபயரை பயன்படுத்துவது. 
3. காற்று சுத்திகரிப்பானைப் பயன்படுத்துங்கள்.
4.  உப்பு நீரில்  வாய் கொப்பளித்தல்
5. இருமல் சிரப் மற்றும் இருமல் சொட்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்.

2. வறட்டு இருமலை துரிதமாக போக்குவது எது?

தொண்டை வலி மற்றும் இருமலை நிறுத்தும் சப்ரசென்ட் போன்ற மருந்தகத்தில் பரிந்துரையின்றி கிடைக்கும் மருந்துகள்  உதவும். அதேவேளையில், பெரும்பாலான வறட்டு இருமலுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க முடியும். வீட்டு வைத்திய முறைகள் குணப்படுத்தும் செயல்முறைக்கு பக்கபலமாக இருந்து உதவக்கூடும். காற்றில் ஈரப்பதத்தை சேர்க்க ஹியூமிடிஃபயரை பயன்படுத்துவது, உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது மற்றும் நிறைய தண்ணீர் குடிப்பது ஆகியவை அதில் சில வழிகளாகும்.

3. வறட்டு இருமலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் யாவை?

பின்வரும் உணவுகளை சளி அல்லது இருமல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். 

1. ஸ்ட்ராபெர்ரி, காளான், அவகாடோ, புளித்த உணவுகள் போன்ற ஹிஸ்டமைன் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்
2. உலர் பழங்கள்
3. மது
4. நாட்பட்ட சீஸ்
5. பால் பொருட்கள்
6. காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் போன்ற நிறைய காஃபின் கொண்ட திரவங்கள்
7. சர்க்கரை உணவுகள்
8. வறுத்த பதார்த்தங்கள்

4. இரவில் ஏற்படும் வறட்டு இருமலுக்கான இயற்கையான வீட்டு வைத்தியம் என்ன?

உறங்க செல்வதற்கு முன்பு சூடான தேநீர் போன்ற பானங்களை அருந்தலாம். பெரியவர்கள் மற்றும் 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இருமலிலிருந்து நிவாரணம் பெறுவதில் உதவ தேநீரில் தேன் சேர்க்கலாம். சுவாசப் பாதையிலிருந்து வெளியாகும் தொண்டை சளி மற்றும் அமில ரிஃப்ளக்ஸை (எதிர்க்களித்தலை) குறைப்பதற்கு  கூடுதலாக தலையணைகளை பயன்படுத்தி தலையை உயர்த்தி வைக்கவும். உலர்ந்த காற்று இரவில் வறட்டு இருமலின் அறிகுறிகளை மோசமாக்குகிறது என்றால், குளிர் -பனி ஹியூமிடிஃபயரையும் பரிசீலிக்கலாம்.

5. வறட்டு இருமலுக்கு நிவாரணம் தர  இருமல் சிரப் பலன் தருமா?

இருமல் மருந்துகள் அல்லது இருமல் சிரப்புகள் வறட்டு இருமலை நிறுத்த உதவுகின்றன, அல்லது URTI-பாதிப்பினால் நெஞ்சு இருமல் ஏற்படும் போது, அதிகப்படியான ஃப்ளெமை (கபம்-சளி) வெளியேற்றவும் இம்மருந்துகள் உதவுகின்றன.

DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.