மனநலம் என்பது புரிந்துகொள்வதற்கு கடினமான ஒன்றாகும். பல்வேறு கூறுகள் ஒருவரது மனநலனை பாதிக்கக்கூடியதாக இருப்பதால் இது ஒரு விரிவான தலைப்பாகக் கருதப்படுகிறது.
மனநலம் என்றால் என்ன?
மனநலம் என்பது ஒருவர் உளவியல் ரீதியாகவும், உணர்வுகள் அடிப்படையிலும் நன்றாக இருப்பதைக் குறிக்கிறது. ஆரோக்கியமான மன நலத்துடன் இருப்பது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, உடல் ரீதியாகவும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்கிறது. நல்ல மனநலம் இருப்பது - வாழ்வில் இன்னல்கள் நேரும் போது ஒரு நபரின் மீள்திறனை மேம்படுத்தி, வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளை சிறப்பாக கையாள உதவுகிறது.
ஒரு நபரின் மன ஆரோக்கியமானது - அதனை மேம்படுத்தக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது. மனநலனை பாதிக்கும் காரணிகளுள் மரபியலும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனநோய் என்றால் என்ன?
மனநோய் என்பது பல விதமான பாதிப்புகளைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்லாகும். ஒருவரின் உணர்வுகள் மற்றும் சிந்திக்கும் முறையை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் இதில் உள்ளடங்கும். ஒருவருக்கு ஏதாவது ஒரு மனநோய் இருப்பின், அது அவரது வழக்கமான அன்றாட பணிகளை மேற்கொள்ளும் திறனைப் பாதிக்கும்.
ஒருவரது சுற்றுச்சூழல், மரபியல் மற்றும் பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அவரது மனநலனைப் பாதிக்கின்றன.
மனநோயானது, மனநலக் கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது.
மனநலம் குறித்து பலர் தங்களது கவலையை வெளிப்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம்; ஆனால் ஒருவருக்கு மனநோய் அல்லது அதன் அறிகுறிகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ, அல்லது ஒரு நபரின் அன்றாட செயல்பாட்டை அடிக்கடி பாதிக்கக்கூடிய மன அழுத்தம் ஏற்படுட்டால் மட்டுமே இது ஒரு பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
மனநோய் இருப்பது ஒருவரை சோகமாக்கி, அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மனநலப் பிரச்சினைகளினால் அந்த நபருக்கு நெருக்கமானவர்களும் பாதிக்கப்பட நேரும்.
மனநல பிரச்சினைகளின் பல்வேறு வகைகள் யாவை?
பல்வேறு மனநல நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் கூற்றுப்படி மனநோயை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்:
- பதற்றக் கோளாறுகள்
- மனநிலை மாறும் கோளாறுகள்
- மனநல பிறழ்வு (சைக்காட்டிக்) கோளாறுகள்
- உணவுப் பழக்கக் கோளாறுகள்
- உணர்வினைக் கட்டுப்படுத்துவதில் உள்ள கோளாறுகள்
- அப்செசிவ்-கம்பல்ஸிவ் (அதீத விருப்ப மனப்பிறழ்வு) கோளாறுகள்
- ஏதேனும் நிகழ்விற்குப் பிந்தைய அதிர்ச்சிகரமான மன அழுத்தக் கோளாறு, மற்றும் ஈடுபாடு காட்டாமல் விலகியிருக்கும் மனக்கோளாறு
- உண்மைக்குப் புறம்பாக பாவிக்கும் மனக்கோளாறுகள், மற்றும்
- TIC (சுயவிருப்பமற்ற அனிச்சை செயல்பாட்டு பிரச்சினை) கோளாறு.
பதற்றக் கோளாறுகள்
பதற்றக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சில சூழ்நிலைகள் அல்லது பொருட்களை கையாளும் போது பயத்தை வெளிப்படுத்துவதோடு, உடல் மொழியாகவும் சில பதற்றப்படும் அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். இதயம் அதிகமாக துடித்தல், மற்றும் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல் ஆகியவை பதற்றத்தின் சில அறிகுறிகளாகும்.
குறிப்பிட்டவொரு சூழ்நிலைக்கு ஒருவர் சரியாக நடந்துகொள்ளாமல் வித்தியாசமான வெளிப்பாடுகளை காட்டினால், அவருக்கு பதற்றக் கோளாறு இருப்பதாக கண்டறியப்படுகிறது. பெரும்பாலும் அவரது அத்தகைய செயல்கள் இயல்பான செயல்பாட்டை குறுக்கிடும் வகையில் இருக்கும்; மேலும் அத்தகைய முரணான செயல்களை அவர்களால் கட்டுப்படுத்தவும் முடியாமல் போகிறது.
பதற்றக் கோளாறுகளில் பீதியடையும் கோளாறு, சமூக சூழல்களில் பதற்றமடையும் கோளாறு, பொதுவான பதற்றக் கோளாறு மற்றும் பல்வேறு பயங்களும் உள்ளடங்கும்.
மனநிலை மாறும் கோளாறுகள்
மனநிலை மாறும் கோளாறுகளை ‘மனநிலை பாதிப்புக் (அஃபெக்ட்டிவ்) கோளாறுகள்’ என்றும் அழைக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு ஏற்படும் நபர்கள் அவ்வப்போது சோகமாகி விடுவார்கள், அல்லது மகிழ்ச்சியாக உணர இயலாமல் கஷ்டப்படுவார்கள்.
அதிகப்படியான மகிழ்ச்சியிலிருந்து மிகவும் சோகமாக மாறிவிடுவார்கள்; இப்படி அவர்களது மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படலாம். பைபோலார் மனக்கோளாறு மற்றும் சைக்ளோதைமிக் மனக்கோளாறு ஆகியவை மனநிலை மாறும் பிரச்சினையில் உள்ள குறிப்பிடத்தக்க இருவகைகளாகும்.
மனநலப் பிறழ்வுகள் (சைக்காட்டிக்)
மனநலப் பிறழ்வுகள் ஏற்பட்டால் ஒருவரது சிந்தனை பாதிக்கப்படுகிறது. மாயத்தோற்றங்கள் மற்றும் பொய்யான கற்பனைகள் ஆகிய இரண்டும் பொதுவான மனநலப் பிறழ்வுகளாகும்.
மாயத்தோற்றம் (ஹாலுஸிநேஷன்) என்பது நிஜத்தில் இல்லாத படங்கள் அல்லது கற்பனையான ஒலிகளை உணர்வதைக் குறிக்கும். ஆதாரங்களை காண்பித்தாலும் கூட பாதிக்கப்பட்ட நபர்கள் பிரமைகளையும், தவறான கற்பனைகளை உண்மை என்று கருதுவார்கள்.
ஸ்கிட்சோஃப்ரெனியா என்பது மனநலப் பிறழ்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
உணவுப் பழக்கக் கோளாறு
இத்தகைய கோளாறுகள் இருப்பவர்கள் தங்களது உணவு மற்றும் எடை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடுமையான அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளை பின்பற்றுவார்கள். இந்த மனநல பிரச்சினை உள்ள நபர் தனது உடல் எடை, அல்லது உடல் பருமன் குறித்தும், சாப்பிடும் உணவு குறித்துமே எப்போதும் சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள்.
உணர்வினைக் கட்டுப்படுத்துவதில் உள்ள மனநல பிரச்சினைகள்
தங்களது உணர்வுகள் அல்லது ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சனை உள்ளவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளால் – அவர்களுக்கோ அல்லது பிறருக்கோ ஆபத்தினை விளைவிக்க நேரிடலாம்.
அப்செசிவ்-கம்பல்ஸிவ் (அதீத விருப்ப மனப்பிறழ்வு) கோளாறுகள்
வெறித்தனமாக அடம்பிடிக்கும் மனநிலையை ஏற்படுத்தும் அப்செசிவ்-கம்பல்ஸிவ் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் – ஒரே விதமான குறிப்பிட்ட வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காக எப்போதும் ஒரே மாதிரியான நிலையான எண்ணங்களில் அல்லது பயத்தில் மூழ்கி இருப்பார்கள்.
அவர்களது பயங்கள் பெரும்பாலும் வெறி பிடித்தது போன்ற குழப்பமான எண்ணங்களுக்கு வழிவகுக்கும். கிருமிகளைப் பற்றிய பயம் உள்ள ஒரு நபர் தொடர்ந்து தன் கைகளைக் கழுவிக்கொண்டே இருப்பார். இது அப்செசிவ்-கம்பல்ஸிவ் டிஸார்டார் (OCD) பிரச்சினைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஈடுபாடு காட்டாமல் விலகியிருக்கும் மனக்கோளாறுகள்
ஈடுபாடு காட்டாமல் விலகியிருக்கும் (டிஸ்அசோசியேட்டிவ்) மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு – தீவிரமான தொந்திரவுகள் ஏற்பட்டது போல காணப்படுவார்கள், அல்லது அவர்களது ஞாபகங்கள் மற்றும் சுயநினைவில் அதீத மாற்றங்கள் காணப்படும்.
டிஸ்அசோசியேட்டிவ் மனக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சுற்றுப்புறங்களைப் புரிந்துகொள்வதற்கும், அதனை ஏற்றுக் கொள்வதற்கும் மிகவும் சிரமப்படுவார்கள். ஏதேனும் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வு, விபத்து அல்லது பேரழிவினை எதிர்கொண்ட காரணத்தினால் - அவர்கள் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள்.
உண்மைக்குப் புறம்பாக பாவிக்கும் மனக்கோளாறு
இந்த கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் – தன்னை ஒரு நோயாளியாகவும், உதவி தேவைப்படும் நபராகவும் காட்டிக்கொள்வதற்காக பல்வேறு அறிகுறிகள் தென்படுவதாக பொய் கூறுவார் அல்லது போலியான சூழல்களை அடிக்கடி ஏற்படுத்துவார்.
TIC (சுயவிருப்பமற்ற அனிச்சை செயல்பாட்டு பிரச்சினை) மனநல பிரச்சினை
TIC மனநல பிரச்சினை உள்ளவர்கள் அசாதாரண சத்தங்களை ஏற்படுத்துவார்கள், அல்லது உடல் அசைவுகளை வெளிப்படுத்துவார்கள்; அப்படிப்பட்ட செயல்பாடுகளை திடீரென்று திரும்பத்திரும்ப செய்வார்கள், அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியாது. பெரும்பாலும் இந்த ஒலிகளும், அசைவுகளும் அந்த நபரால் அனிச்சையாக செய்யப்படுவதாக இருக்கும்.
மேற்கூறிய மனநலக் கோளாறுகள் யாவும் மனநோயின் முக்கிய வகைப்பாடுகளாகும்; இருப்பினும் இதர நோய்கள் அல்லது உடல்நல பாதிப்புகளான – தூக்கமின்மை, மற்றும் டிமென்ஷியா ஆகியவையும் மனநோய்களாக கருதப்படுகின்றன. ஏனெனில், அவை மூளை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாக உள்ளன. இத்தகைய மனநோய் இருக்கும் நபர் பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துவார்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் வெளிப்படுத்தும் பல்வேறு அறிகுறிகள் யாவை?
ஒவ்வொரு மனநோயும் பிரத்தியேக அறிகுறிகளை கொண்டிருக்கும்; ஆனால் மனநல பிரச்சினை உள்ள ஒருவர் வெளிப்படுத்தும் சில பொதுவான அறிகுறிகளும் உள்ளன.
மனநல பாதிப்பின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- போதுமான அளவு உணவு உட்கொள்ளாமல் இருப்பது
- அதிகப்படியாக உண்ணுவது
- தூக்கமின்மை
- அதிகப்படியாக தூங்குவது
- சமூகத்திலிருந்து விலகி இருப்பது
- பிறர் உணர்வுகளை புரிந்துகொள்ள இயலாமை
- காரணம் கூற முடியாத உடல் வலிகள்
- எதையோ இழந்த உணர்வு
- குடிப்பழக்கம்
- குழப்பம்
- கோபம்
- பதற்றம்
- சோகம்
- அடிக்கடி தீவிர மனநிலை மாற்றங்கள் ஏற்படுதல்
- தலைக்குள் குரல்கள் கேட்பதாக சொல்வது
- தனக்குத் தானே, அல்லது மற்றவர்களையோ காயப்படுத்தும் எண்ணங்கள்
- சோகமாக உணர்வது, மற்றும்
- அதீதமாக பயப்படுவது.
ஒருவரது மனநோய் எந்தளவிற்கு தீவிரமானதாக இருக்கிறதோ, அதற்கேற்ப அவர் வெளிப்படுத்தும் அறிகுறிகளும் மாறுபடும்.
மனநல பிரச்சினைக்கான காரணத்தை அறிவதன் மூலம், சரியான மனநோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெற முடியும்.
மனநோய் எதனால் ஏற்படுகிறது?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, மனநோய் என்பது பல்வேறு மனநல பிரச்சினைகளைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்லாகும்; பாதிப்பினைத் தூண்டும் காரணத்தைப் பொறுத்து பல்வேறு மனநல பிரச்சினைகள் ஏற்படலாம்.
குடும்பத்தில் எவருக்கேனும் மனநல பிரச்சினைகள் இருப்பது, மரபணு பிரச்சினைகள், வாழ்க்கையை புரட்டிப்போடும் நிகழ்வுகள், மூளையில் வேதியியல் ஏற்றத்தாழ்வுகள் அல்லது காயங்கள் ஏற்படுதல் போன்ற காரணிகளால் மனநோய் ஏற்படுகிறது.
சில நேரங்களில், தாய் ஒரு குறிப்பிட்ட வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தால், அவரது கர்ப்ப காலத்தில் அந்த வைரஸ் குழந்தையின் மூளையை பாதித்து, மனநோயை ஏற்படுத்தலாம்.
மனநல சிக்கல்களை உருவாக்கும் சில ஆபத்து காரணிகளும் உள்ளன.
மனநோயை ஏற்படுத்தும் பொதுவான ஆபத்து காரணிகள் யாவை?
பயோ-பிசிக்கல் ஆபத்து காரணிகள் எனப்படும் உடல் ரீதியான பாதிப்புகளின் காரணங்களாலும் மனநோய் உண்டாகிறது, அவை பின்வருமாறு:
- குடும்பத்தில் சிலருக்கு ஏற்கனவே மனநல பிரச்சினைகள் இருந்திருத்தல்.
- குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்கள்
- மூளையில் ஏற்படும் காயம்
- நாட்பட்ட மருத்துவ ரீதியான பாதிப்புகள்
- அளவுக்கதிகமான குடிப்பழக்கம்
- ஊட்டச்சத்து குறைபாடு
- தூக்கமின்மை
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உடலியல் சார்ந்த சில காரணிகள் பின்வருமாறு:
- தினசரி வாழ்க்கை என்பதே மன அழுத்தம் நிறைந்த பகுதிகளாக இருப்பது
- வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்கள்
மனநலன் எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய, பொதுவாக ஒரு மருத்துவர் பின்வரும் காரணிகளை பயன்படுத்துவார்:
மனநோயைக் கண்டறியும் சோதனைகள்
ஒருவர் அவரது மனநலம் பற்றி ஆலோசிக்க மருத்துவரை நாடினால், அந்த மருத்துவர் அவருக்கு பல்வேறு தொடர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், இறுதிகட்ட பரிசோதனை முடிவை கண்டறிவார்.
மனநோயைக் கண்டறியும் முறைகளில் - உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனை, ஆய்வக சோதனைகள் மற்றும் கேள்வித்தாளுக்கு விடையளிக்கும் சோதனைகள் ஆகியவையும் உள்ளடங்கும்.
மருத்துவர், ஒரு கேள்வித்தாளுக்கு விடையளிக்க கோருவதன் மூலம், மருத்துவர் ஒரு நபரின் எண்ணங்களைப் புரிந்துகொள்கிறார். மேலும், சில நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், அவற்றிற்கு எப்படி எதிர்வினை புரிகிறோம் என்பதையும் கவனித்து புரிந்துகொள்கிறார்.
மனநோய் உள்ளவருக்கு ஒரு மருத்துவர் எத்தகைய சிகிச்சைகளை அளிக்கிறார்?
மனநல பிரச்சினைகளுக்கான சிகிச்சை என்பது நபருக்கு நபர் வேறுபடும். மனநோயைப் பொருத்தவரை ஒரே வகையான சிகிச்சையானது அனைவருக்கும் பொருந்தாது.
மனநோயைப் பொறுத்தவரையில், மருத்துவர் பல்வேறு மனநல ஆய்வுகளை மேற்கொள்வார். பின்னர், பல்வேறு அணுகுமுறைகளின் மூலம் சரியான சிகிச்சைப் பலனைப் பெற - எத்தகைய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை ஒருங்கே பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வார்.
மருந்துகள்
மனநல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும், பாதிக்கப்பட்ட நபர் வெளிப்படுத்திய அறிகுறிகளுக்கு எதிராக நிவாரணம் தரவும் - பதற்ற எதிர்ப்பு (ஆன்ட்டி-ஆங்க்சைட்டி) மருந்துகள் மற்றும் மனநிலையை சமநிலைப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
மனநல ஆலோசனை (சைக்கோதெரபி)
பாதிக்கப்பட்ட நபர் அவரது மருத்துவரிடம் பேசுவதற்கும், தனது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் ‘பேச்சு சிகிச்சை’ போன்ற சில சிகிச்சைகள் ஒரு நல்வாய்ப்பாக உதவுகின்றன.
சிகிச்சையளிக்கும் நிபுணர் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு, பல்வேறு வழிமுறைகள் அல்லது யுக்திகளின் உதவியுடன் நோயாளர் தனக்கு வெளிப்படும் மனநோய் அறிகுறிகளை திறம்பட சமாளிக்கக் கற்றுத்தருகிறார்.
வாழ்க்கை முறை சிகிச்சைகள்
மனநோயால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு சிகிச்சையளிக்க இதுபோன்ற பல்வேறு மாற்று சிகிச்சை முறைகள் உள்ளன; ஆனால் இவற்றால் மனநல பிரச்சினைகளை குணப்படுத்த முடியாது.
அறிகுறிகளை சமாளிப்பதற்கான வைத்தியங்களைத் தேடுவது பயனளிக்கலாம், ஆனால் அவற்றால் முக்கியப் பிரச்சினையான மனநோயைத் தீர்க்க முடியாது.
மது அல்லது போதைவஸ்துக்களைத் தவிர்ப்பது, மற்றும் ஒருவரது ஒட்டுமொத்த உடல்நலனையும் மேம்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகள் அத்தகைய சிகிச்சைமுறைகளில் சிலவாகும்.
மனநோயிலிருந்து மீளுதல்
மனநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுவர, அவை பயனுள்ளதாகவும் இருக்கும். உரிய சிகிச்சையானது அந்த நபரை முன்பைவிட நன்றாக உணர வைக்கும்; இருப்பினும், சில சிக்கலான நாட்பட்ட நோய்களை சிகிச்சையின் மூலம் சமாளிக்க மட்டுமே முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது.
மனநோயிலிருந்து மீள்வதற்கு, ஒருவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மனநோய் உள்ள நபர் வெளிக்காட்டும் அறிகுறிகள் கட்டுப்படுத்த முடியாதவையாகத் தோன்றும்போது மருத்துவ மேற்பார்வை அவசியமாகிறது.
கட்டுரை சுருக்கம்
மனநோய் அல்லது மனநலக் கோளாறுகள் என்பது பலவிதமான உடல்நல பாதிப்புகளை உள்ளடக்கிய ஒன்றாகும்; அது ஒருவரது சிந்திக்கும் ஆற்றல் மற்றும் உணரும் திறனை பாதிக்கிறது.
மனநோய் என்பது பலருக்கும் உள்ளது; மேலும், அவற்றின் அறிகுறிகள் அவ்வப்போது வெளிப்படுகின்றன. இருப்பினும் அந்த அறிகுறிகள் ஒருவரது இயல்பான செயல்பாட்டை பாதிக்கும் போது அது ஒரு தீவிரமான பிரச்சினையாக கருதப்படுகிறது.
மன நோயை ஆராய்வது ஒருவரை சோகமாக்கி, அவரது அன்றாட வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தும்; எனவே, பாதிப்பினைக் கண்டறிவதும், முறையான சிகிச்சையின் மூலம் பாதிப்பிலிருந்து மீள்வதும் அவசியமாகும்.