சிறுநீரக கற்களும், ஐந்து அற்புத ஜூஸ் வகைகளும் - ஒரு அறிமுகம்
முதுகின் கீழ்பகுதியில் ஒரு லேசான வலியாக துவங்கி, சில நாட்களில் வலி படிப்படியாக தீவிரமடைவது சிறுநீரக கற்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆரம்பத்தில் ஏதோ சாதாரணமான தசைப்பிடிப்பாக இருக்கலாம் என்று அலட்சியம் செய்யப்பட்ட வலி, பின்னர் பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறி, முதுகிலிருந்து பிறப்புறுப்பு பகுதிக்கு இடம் பெயர்கையில்… சிறுநீரில் இரத்தம் காணப்படலாம். இந்த நிலையில் தான் அவை சிறுநீரக கற்கள் காரணமாக ஏற்பட்டது என்று பலர் தெரிந்துகொள்கிறார்கள்! இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக கற்களால் இளைஞர்கள் கூட மேற்கூறிய மோசமான அனுபவத்தை எதிர்கொள்கின்றனர். இந்த வலைப்பதிவில், சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுப்பது பற்றியும், சிறுநீரக கற்களைக் கரைக்கக்கூடிய சில ஜூஸ் வகைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக கற்களை எளிதாக புரிந்து கொள்ளலாம்:
நம் அனைவருக்கும் வாஷிங் மெஷின் பற்றி தெரியும். துணிகளில் உள்ள அழுக்கை நீக்கி, சுத்தமான ஆடைகளை தருவது தான் அதன் வேலை. அதேபோல் நமது இரத்தத்தை சுத்தப்படுத்தி அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை நமது சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆனால், வாஷிங் மெஷின் போல சிறுநீரகங்கள் அவ்வளவு எளிதான செயல்பாடுகளைக் கொண்டது கிடையாது. சிக்கலான செயல்பாடுகளை கொண்டுள்ள சிறுநீரங்கள் பற்றியும் அதில் கற்கள் உருவாவது பற்றியும் எளிதாக புரிந்துகொள்ள வாஷிங் மெஷினை ஒரு ஒப்பீட்டு உதாரணமாக வைத்துக்கொள்வோம்.
1. அடைப்பு மற்றும் செயல்திறன் குறைபாடு:
சலவை இயந்திரங்களில் ஸ்கேலிங் பிரச்சினை காரணமாக நீரை வெளியேற்றும் குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு இயந்திர செயல்பாடு பாதிக்கப்படலாம். இதேபோல், சிறுநீரக கற்கள் சிறுநீர் வெளியேறும் வழியில் அடைப்பை ஏற்படுத்தலாம்; இதனால் வலி ஏற்படும் மற்றும் சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு வரும் சிறுநீரின் இயல்பான நிகழ்வு தடைபடுகிறது.
2. கனிமங்கள் சேர்தல்:
வாஷிங் மெஷினில் உப்பு நீரால் ஸ்கேலிங் பிரச்சினை ஏற்படுவதை அறிவோம். கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இயந்திரத்தின் டிரம்மின் உள் மேற்பரப்புகளில் படிவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதேபோல், கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற மினரல்கள் படிகமாகி, சிறுநீரகங்களில் சேரும்போது சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
3. சிகிச்சை:
வாஷிங் மெஷினில் உள்ள கனிமங்களைக் கரைக்க அல்லது உருவாகுவதைத் தடுக்க டீஸ்கேலிங் பவுடர்கள் அல்லது நீரை இலகுவாக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நமது சிறுநீரகங்களுக்கு இதுபோன்ற வெளி சுத்தப்படுத்திகள் தேவையில்லை. சிறுநீர் வழியாக சிறிய படிகங்களை அகற்ற தேவையான இயற்கையான மேம்பட்ட நுட்பங்கள் நமது சிறுநீரகங்களில் உள்ளன. இருப்பினும், சில நேரங்களில் சிறுநீரக கற்கள் பெரிதாக உருவாகி இயற்கையாக வெளியேறும் செயல்முறையை கடினமாக்குகின்றன. இந்த சூழலில் தான் சிறுநீரக கற்களை அகற்ற மருத்துவ சிகிச்சைகள் அவசியமாகின்றன. கற்களைக் கரைப்பதற்கான மருந்துகள், அவற்றை உடைத்து அகற்றும் லித்தோட்ரிப்சி (lithotripsy) போன்ற சிகிச்சைமுறைகள், அல்லது அவற்றை அகற்ற அறுவை சிகிச்சை போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன.
4. செயல்திறன் குறைபாடு:
சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் சிறுநீரகங்களின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் பெரிதளவில் பாதிக்கப்படும். இதனால் வலி, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். கடுமையான பாதிப்பிற்கு, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மொத்த சிறுநீரகமும் செயலிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம்.
குணப்படுத்துவதை விட வரும்முன் காப்பதே நல்லது:
சிறுநீரக கற்களைப் பொருத்தவரை வரும்முன் தடுப்பதே பெரும்பாலும் சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. சிறுநீரக கற்களை கரைக்கும் வழிகளை காண்பதற்கு முன்பு அவற்றை தடுக்கும் வழிகளை காண்போம். ஏனெனில், சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி மிகவும் தீவிரமானது. இந்த வேதனையான அனுபவத்தை அறவே தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்துகொள்வது முக்கியம்.
சிறுநீரக கற்கள் திடீர் அவசரநிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அது பாதிக்கப்பட்ட நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
வலி ஒருபுறம் இருக்க, சிறுநீரக கற்கள் நோய்த்தொற்றுகள் அல்லது கடுமையான சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய சிக்கல்களை ஏற்படுத்தலாம். இந்த சிக்கல்களைத் தடுக்கவும், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நீண்டகால பிரச்சினைகளைத் தவிர்க்கவும் தடுப்பு நடவடிக்கைகள் தான் மிக முக்கியம்.
சிறுநீரக கற்கள் ஏற்படாமல் எப்படி தடுப்பது?
1. தண்ணீர்… தண்ணீர்…:
சிறுநீரக கற்களைத் தடுக்க நீர்சத்து மிக முக்கியம், ஏனெனில் சிறுநீரில் உள்ள மினரல்கள் மற்றும் உப்புகளின் செறிவை நீர்த்துப்போகச் செய்ய தண்ணீர் உதவுகிறது. கல் உருவாகும் அபாயத்தையும் தண்ணீர் குறைக்கிறது. ஒரு நாளைக்கு சீரான இடைவெளிகளில் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
2. சிட்ரஸ் பழங்கள்:
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் சிட்ரேட் நிறைந்துள்ளது; இது சிறுநீரில் உள்ள கால்சியத்துடன் இணைந்து கொள்வதன் மூலம் சில வகையான சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால் அல்லது அவற்றின் பழச்சாறுகளை தவறாமல் குடித்தால் சிறுநீரில் சிட்ரேட் அளவு அதிகரித்து, தாதுக்கள் படிகமாக உருவாகும் அபாயம் குறைகிறது.
3. இலை கீரைகள்:
மெக்னீசியம் அதிகம் உள்ள கீரை வகைகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மெக்னீசியம் செரிமான மண்டலத்தில் உள்ள ஆக்சலேட்டுடன் இணைந்து கொள்வதால், ஆக்சலேட் கனிமங்கள் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால், கால்சியம் ஆக்சலேட் என்கிற மிகவும் பொதுவான சிறுநீரக கற்களை உருவாக்க காரணமாக இருக்கும் ஆக்சலேட் தாதுக்கள் அதிகளவில் சிறுநீரகத்தை சென்றடைவதைக் குறைக்கிறது.
4. குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்:
பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாகும்; சிட்ரேட் மற்றும் லாக்டோஸ் போன்ற பிற நன்மை பயக்கும் கூறுகளும் இவற்றில் உள்ளன. கால்சியம் கற்களை உருவாகும் என்கிற பரவலான நம்பிக்கைக்கு மாறாக - உணவு மூலம் கிடைக்கும் போதுமான கால்சியம் உண்மையில் செரிமான மண்டலத்தில் ஆக்சலேட்டுடன் பிணைக்கப்பட்டுவிடும். இதனால் சிறுநீரக கற்களின் அபாயம் குறைகிறது. இரத்தம் மற்றும் சிறுநீரில் கால்சியம் சேரும் போது தான் அது கால்சியம் ஆக்ஸலேட் கற்களாக மாறுகின்றன. இது பெரும்பாலும் கால்சியம் சப்ளிமென்ட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் நேர்கிறது.
5. கொட்டைகள் மற்றும் விதைகள்:
பாதாம் கொட்டைகள், வேர்க்கடலை மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன; அவை சிறுநீரக கற்களின் அபாயத்தைக் குறைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கொட்டைகள் மற்றும் விதைகளில் ஃபைட்டேட் (phytate) என்ற கலவை உள்ளது - இது செரிமான மண்டலத்தில் கால்சியத்துடன் பிணைக்கப்படுகிறது; அதனால் இரத்தத்தில் அதிகளவு கால்சியம் சேர்வதைத் தடுக்கிறது மற்றும் கால்சியம் ஆக்சலேட் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
மேற்கூறிய முறைகள் யாவும் வரும்முன் காக்கும் உத்திகளாகும். ஆனால்,
துரதிர்ஷ்டவசமாக, சிறுநீரக கற்கள் உருவானால்... என்ன செய்வது?
சிறுநீரக கற்களின் அறிகுறிகளை ஒருவர் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும், பின்னர் ஒரு மருத்துவரால் அது உறுதிபடுத்தப்பட வேண்டும். அப்படி உறுதிபடுத்தப்பட்ட சிறுநீரக கற்கள் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், அவற்றைக் கரைக்க மருத்துவர்கள் சில மருந்துகளை பரிந்துரைப்பார்கள். இருப்பினும், சிறுநீரக கற்களைக் கரைக்க உணவு மூலம் நாமும் கூடுதல் ஆதரவை வழங்க முடியும். குறிப்பாக சில சாறுகள் இதில் பெரிதும் கைகொடுக்கும்.
சிறுநீரக கற்களை கரைக்கும் ஐந்து அற்புத ஜூஸ் வகைகள்:
1. தர்பூசணி ஜூஸ்:
அதிக நீர் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்ற தர்பூசணி சாறு ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம் மட்டும் கிடையாது; அதில் சிறுநீர் உற்பத்தியையும் ஊக்குவிக்கும் டையூரிட்டிக் பண்புகளும் நிறைந்துள்ளன. சிறுநீர் அதிகமாக வெளியிடப்படும் காரணத்தால் சிறுநீரகங்களிலிருந்து நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் வெளியேறுகின்றன. அதன்மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க இது உதவுகிறது. மேலும், தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், அவை சிறுநீரக செயல்பாட்டை சீர்படுத்தவும் கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
தர்பூசணி சாறு பொதுவாக பெரும்பாலான நபர்களுக்குப் பாதுகாப்பானது என்றாலும், அதன் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக நீரிழிவு நோயாளிகள் இதை மிதமாக உட்கொள்ள வேண்டும்.
2. வெண் பூசணி ஜூஸ்:
வெண் பூசணி சாறு அதன் டையூரிடிக் பண்புகளுக்காக பெயர்பெற்றது; சிறுநீர் உற்பத்தியைத் தூண்டி, சிறுநீரகங்களிலிருந்து நச்சுகளை கரைத்து, வெளியேற்ற வெண்பூசணி உதவுகிறது. சிறுநீர் வெளியேற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம், வெண் பூசணி சாறு சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமையும் தாதுக்கள் மற்றும் உப்புகள் படிகமாக சேர்வதைத் தடுக்கிறது. தர்பூசணிக்கும் இதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. அதுதான் சர்க்கரை! குறைவான இரத்தச் சர்க்கரை உள்ளவர்கள் (ஹைப்போக்ளைசமியா) வெண் பூசணி சாற்றை உட்கொள்ளும்போது கவனத்துடன் இருக்க வேண்டும், ஏனெனில் இது இரத்தத்தின் சர்க்கரை அளவை மேலும் குறைத்துவிடும்.
3. வாழைத் தண்டு ஜூஸ்:
சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும் மற்றொரு அற்புதமான பானம் - வாழைத் தண்டு சாறு. சிறுநீரகங்களில் உள்ள தாதுக்களின் செறிவைக் குறைக்கும் பண்புகளையும் இது கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. தற்போதுள்ள சிறுநீரக கற்களைக் கரைக்கவும், புதிய கற்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவும் சேர்மங்கள் வாழைத்தண்டு சாற்றில் உள்ளன. வாழைத் தண்டை சாறாக அல்லது உணவாகவும் உட்கொள்வதால் சிறுநீரக கல் மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறப்பாக பங்களிக்கக்கூடும். ஹைபர்கேல்மியா (hyperkalemia) என்கிற பொட்டாசியம் தொடர்பான சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தில் இருப்பின், அவர்கள் மட்டும் வாழைத்தண்டு போன்ற அதிக பொட்டாசியம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
4. எலுமிச்சை ஜூஸ்:
எலுமிச்சையின் சிட்ரேட் சிறுநீரில் உள்ள கால்சியத்துடன் பிணைப்பினை ஏற்படுத்தி, கால்சியம் படிகமாகுவதைத் தடுக்கிறது. இதனால் சில வகையான சிறுநீரக கற்கள் உருவாவது குறைகிறது. எலுமிச்சை சாற்றை வழக்கமாக உட்கொள்வதால் சிறுநீரில் சிட்ரேட் அளவு அதிகரித்து, சிறு கற்கள் இருப்பின் அவற்றை கரைத்து வெளியேற்றி விடுகிறது. அவை உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது. எலுமிச்சை சாற்றின் அமிலத்தன்மையே இதற்கு காரணம். மேலும், சிறுநீரின் ஆரோக்கியமான pH சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) அல்லது அமில எதிர்க்களிப்பு பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவு எலுமிச்சை சாற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்; இல்லையெனில் GERD அறிகுறிகள் அதிகரிக்கக்கூடும்.
5. மாதுளை ஜீஸ்:
மாதுளையும் சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது; இதுவும் கால்சியத்துடன் பிணைப்பதன் மூலம் கல் உருவாவதைத் தடுக்கவும் செய்கிறது. ஆனால் மற்றவற்றை விட இதில் அதிகமாக உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக செல்களையும் பாதுகாத்து, அவற்றின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்தின் இயற்கையான கற்களை கரைக்கும் திறன் அதிகரிக்கிறது.
முடிவுரை:
சீரான உணவு மற்றும் உடல் செயல்பாடுகளுடன், நம் அன்றாட உணவின் ஒரு பகுதியாக இந்த பழச்சாறுகளை குடிப்பதன் மூலம், சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கலாம். அத்துடன் ஆரம்ப நிலையில் உள்ள சிறிய கற்களை கரைத்து வெளியேற்றவும் இவை உறுதுணையாக இருக்கின்றன. கற்கள் உருவான பிறகு சிகிச்சையை நாடுவதற்கு பதிலாக, இந்த சிறுநீரக கற்கள் ஏன் உருவாகின்றன என்பதை தெரிந்துகொண்டு, அவற்றை தடுப்பதும், ஆபத்தாக மாறுவதற்கு முன்பு கரைப்பதுமே சாலச்சிறந்தது. அவற்றை கரைப்பதற்கான இயற்கையான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும்.