எலிகளால் அவற்றின் எச்சில் மற்றும் மலம் மூலம் நோய்களை பரப்ப முடியும். மேலும், நோய்களைப் பரப்பக்கூடிய ஒட்டுண்ணிகளான பூச்சிகள், ஈக்கள், மற்றும் உண்ணிகள் போன்றவையும் எலிகளின் மீது இருக்கலாம்.
எலிகள் பொதுவாக மூர்க்கமான உயிரினம் கிடையாது; ஆனால், அவை அச்சுறுத்தப்படுவதாக அல்லது தப்பிக்க முடியாத சூழலில் சிக்கியதாக உணரும் போது மனிதர்களைக் கடித்துவிடுகின்றன. பெரும்பாலும், எலிகளை நேரடியாக கையாளும் அவசியம் இல்லாதவர்களுக்கு அதனால் கடிபடும் அபாயம் அதிகம் ஏற்படுவதில்லை.
எலிக்கடி என்பது பெரும்பாலும் ஒரு தீவிரமான பிரச்சினையில்லை என்ற போதிலும், உங்களை எலி கடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்தைக் குறைக்க நீங்கள் சில முதலுதவி நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளலாம்.
எலிக்கடி/ பிராண்டலுக்கான முதலுதவி
உங்களை எலி கடித்துவிட்டால், மருத்துவரை அணுகுவதற்கு முன்பு உரிய முதலுதவியைப் பெறுவதை உறுதிப்படுத்தவும். நீங்கள் மேற்கொள்ளும் முதலுதவி நடவடிக்கைகளால் காயம் சுத்தமாவதோடு, மேற்கொண்டு தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் முடிகிறது.
- முகக்கவசம் அணிவதோடு, உங்கள் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும்
- காயத்திலிருந்து ரத்தம் கசிவது நின்றவுடன், மிதமான ஒரு சோப்பு போட்டு தண்ணீரில் காயத்தை சுத்தம் செய்யவும். உங்கள் சருமத்தின் மீது சோப்பு துகள்கள் ஏதும் மிச்சமிருக்கக் கூடாது; அப்படி இருந்தால், அவை பின்னர் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எனவே காயத்தை முழுமையாக நன்கு சுத்தம் செய்யவும்.
- ஆன்ட்டிபயாட்டிக் ஆயின்மென்ட் தடவி, காயத்தை உலர்ந்த துணியால் லேசாக மூட வேண்டும்.
- காயத்திற்கு சிகிச்சையளிக்கும் போது எந்த நகைகளையும் அணிந்திருக்கக் கூடாது. இதனை கவனமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- மேற்படி கூடுதல் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, எலி கடித்த பிறகு அதன் தாக்கத்தை தீவிரப்படுத்தும் செயல்பாடுகளை தவிர்த்து, அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.
எலிக்கடியால் உங்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதன் அறிகுறிகள்
சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் எலிக்கடி சில நேரங்களில் உங்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்தலாம். அத்தகைய தொற்றுகளை பின்வரும் அறிகுறிகள் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
- எலி கடித்த பகுதிக்கு அருகில் சிவந்து போகுதல் அல்லது வீங்குதல்
- எலி கடித்த பகுதியின் மேல் எரிச்சல் / நமைச்சல் ஏற்படுதல்
- சீழ் உருவாகுதல்
எலிக்கடியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு
எலிக்கடி அல்லது எலி பிராண்டுவதன் காரணமாக ஏற்படக்கூடிய மிகப் பொதுவான மற்றும் முக்கிய நோய்த்தொற்றுகளில் ஒன்று தான் ‘எலிக்கடி காய்ச்சல்’. எலிகளைக் கையாளும் செயல்களில் நீங்கள் ஈடுபட்டாலோ, அல்லது எதிர்பாராமல் எலி மலம் கலந்த அசுத்தமான உணவை சாப்பிட நேர்ந்தாலோ உங்களுக்கு எலிக்கடி காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
எலிக்கடி காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இரண்டு வகைப்படும், அவை:
1. ஸ்ட்ரெப்டோபசில்லஸ் மோனிலிஃபார்மிஸ் (Streptobacillus moniliformis)
இவ்வகை பாக்டீரியா கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும்; பொதுவாக எலி கடித்த மூன்று நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் வெளிப்பட்டு, மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். இந்த பாக்டீரியாவின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- தொடர் காய்ச்சல்
- தலைவலி
- வாந்தி / குமட்டல்
- முதுகெலும்பு மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுதல்
- கைகள் / கால்களில் தடிப்புகள் மற்றும் வீக்கம் காணப்படுதல்
2. ஸ்பைரில்லம் மைனஸ் (Spirillum minus)
பொதுவாக எலி கடித்த பிறகு ஸ்பைரில்லம் பாக்டீரியா தொற்றின் அறிகுறிகள் - முதல் வாரம் துவங்கி, மூன்று வார இடைவெளியில் தென்படலாம். இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
- பெரும்பாலும் சீரான இடைவெளியில் விட்டுவிட்டு காய்ச்சல் ஏற்படுதல்
- பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சல் உணர்வு இருத்தல்
- காயத்தின் மீது வீக்கம் ஏற்படுதல்
- நிணநீர் கணுக்கள் (லிம்ஃப் நோடுகள்) வீங்குதல்
3. ஹேவர்ஹில் காய்ச்சல்
கடும் வாந்தி மற்றும் தொண்டை புண் ஆகியவை பெரும்பாலும் ஹாவர்ஹில் காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கலாம்.
எலிக்கடிக்கு சிகிச்சை பெறாவிட்டால் என்னவாகும்?
உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் எலிக்கடியால் தீவிர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதய தசை அல்லது இதயக் குழாய்கள் அல்லது தமனிகள் அல்லது நரம்புகளில் இன்ஃப்ளமேஷன் ஏற்படலாம்; அதன் காரணமாக நெக்ரோசிஸ் மயோகார்டிட்டிஸ், எண்டோகார்டிட்டிஸ், நிமோனியா, சிஸ்டமிக் வாஸ்குலிட்டிஸ், பெரிகார்டிட்டிஸ், பாலிஆர்டெரிட்டிஸ் நோடோசா, ஹெபடைட்டிஸ், நெஃப்ரிட்டிஸ், மெனின்ஜைடிஸ், ஃபோக்கல் அப்செஸ் மற்றும் அம்னியோனைடிஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் போனால் ஏற்படும் இறப்பு விகிதம் 10% சதவீதமாக உள்ளது.
முடிவுரை
ஒருவேளை நீங்கள் எலிகளை அன்பிற்குரிய செல்லப்பிராணிகளாகப் பார்க்கலாம்; ஆனால் அதே நேரத்தில், அதனோடு தொடர்புடைய அபாயங்கள் குறித்தும் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். எலி கடித்தால் உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையைப் பெற வேண்டியது அவசியம்.
மேலும் ஆன்ட்டி-பயாடிக்ஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ள துவங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு - அறிகுறிகள் குறைந்து, பின்னர் படிப்படியாக குணமடையலாம். இருப்பினும் பரிந்துரைக்கப்பட்ட ஆன்ட்டி-பயாடிக்ஸ் மருந்துகளை மருத்துவர் அறிவுரைப்படி முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.