நோயெதிர்ப்பு ஆற்றலும், எளிமையான வீட்டுமுறை பானங்களும்: ஒரு கண்ணோட்டம்
வேகமாக இயங்கிவரும் இன்றைய உலகில், நமது நல்வாழ்வினை உறுதிசெய்ய நமக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தி இருக்க வேண்டியது அவசியமாகிறது. என்னதான் அறிவியல் வளர்ச்சியாலும், மருத்துவத் துறையின் வளர்ச்ச்சியாலும் எண்ணற்ற நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் போதிலும், நமது உணவும், வாழ்க்கை முறையும் உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை அதிகளவில் வழங்கும் உணவுகளே பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை காக்கின்றன.
இக்கட்டுரையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திட உணவை விட பானங்கள் ஏன் ஏதுவானவையாக உள்ளன என்பதையும், ஐந்து சுவையான வீட்டில் தயாரிக்கக்கூடிய நோயெதிர்ப்பு ஆற்றல் தரும் பானங்களை தயாரிக்கும் முறை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
நோயெதிர்ப்பு பானங்களின் பிரத்தியேக நன்மைகள் என்ன?
1. உடலால் விரைவாக உறிஞ்சப்படும் தன்மை: திட உணவுகளை விட திரவங்கள் நமது உடலால் மிக விரைவாக உறிஞ்சப்படுகின்றன; இதனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் விரைவாக சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.
2. நீர்ச்சத்து: சிறந்த நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு நமது உடலில் போதுமான நீர்ச்சத்து இருப்பது முக்கியம். நோயெதிர்ப்பு பானங்கள் நாம் உட்கொள்ளும் ஒட்டுமொத்த திரவ அளவை அதிகரிக்க உதவுகின்றன.
3. எளிமையாக ஜீரணிக்கும் இயல்பு: சில நோய்கள் நமது செரிமான மண்டலத்தை பாதிக்கின்றன; அதனால் திட உணவுகளை உட்கொள்வது பிரச்சினையை மேலும் சிக்கலாகும். அத்தகைய நேரங்களில் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பானங்கள் ஏதுவான தீர்வாக இருக்கும். செரிமான மண்டலத்தின் மீது அழுத்தம் தராமல் ஊட்டச்சத்தை வழங்கும் தன்மை திரவங்களுக்கு உள்ளது.
4. பல்வேறு ஊட்டச்சத்துக்களை ஒன்று சேர்ப்பது எளிது: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களில் பலதரப்பட்ட உட்பொருட்களை எளிதாக சாறு வடிவில் சேர்க்கலாம். இந்த பானங்கள் மூலம் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேஷன் தன்மையுள்ள சத்துக்கள் போன்றவை எளிதாக நமக்கு கிடைக்கின்றன.
நம் நாட்டில் கிடைக்கும், நமது தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப விளையும் பொருட்கள் மற்றும் பல்வேறு மூலிகை / மசாலாப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய சமையல் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதால், வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் ஆரோக்கியமானதாக உள்ளன. பல்வேறு வகையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் பயன்பாடு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதை உறுதி செய்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 பானங்கள்
1. துளசி இஞ்சி தேநீர்:
தேவையான பொருட்கள்:
- 1 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் க்ரீன் டீ (பச்சை தேயிலை)
- 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி
- 5-6 புதிதாகப் பறித்த துளசி இலைகள்
- 1 தேக்கரண்டி தேன் (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, துருவிய இஞ்சியை சேர்க்கவும்.
- பச்சை தேயிலைகள் மற்றும் துளசி இலைகளை அதில் சேர்க்கவும்.
- அதனை 3-5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டவும்.
- உங்களுக்கு இனிப்பு தேவைப்பட்டால் தேன் சேர்க்கவும்.
- உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தேநீரை தினமும் குடிக்கவும்.
முக்கிய நற்பலன்கள்:
- துளசி: ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகள் நிறைந்த துளசி நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
- இஞ்சி: சக்திவாய்ந்த மருத்துவ குணங்களைக் கொண்ட பயோஆக்டிவ் சேர்மங்கள் இஞ்சியில் உள்ளன. இஞ்சியிலும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகள் உள்ளன.
மாற்று வழிமுறைகள்:
- சிட்ரஸ் சுவையை விரும்புவோர் ஒரு துண்டு எலுமிச்சையை சேர்க்கலாம். மசாலா வாசம் வேண்டுபவர்கள் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூளை சேர்த்தும் அருந்தலாம்.
2. நெல்லிக்காய் ஜூஸ்:
தேவையான பொருட்கள்:
- 2 நெல்லிக்காய் (பெரிய நெல்லி)
- 1 டேபிள் ஸ்பூன் தேன்
- ஒரு சிட்டிகை கருப்பு உப்பு
செய்முறை:
- நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்ஸர் அல்லது கை உரலில் நசுக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி சாறு எடுக்கவும். நன்றாக அரைத்து வடிகட்டாமலும் பயன்படுத்தலாம்.
- அந்த சாறுடன் மிதமான அளவு தேன் மற்றும் தேவைக்கேற்ப கருப்பு உப்பை கலக்கவும்.
- உங்கள் நோயெதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த வைட்டமின் C நிறைந்த இந்த பானத்தை தினமும் அருந்தலாம்.
முக்கிய நற்பலன்கள்:
- நெல்லிக்காய்: வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது.
மாற்று வழிமுறைகள்:
- புத்துணர்ச்சியூட்டும் பானமாக அருந்த நெல்லிக்காயுடன், புதினா மற்றும் ஐஸ் சேர்த்தும் இதனைத் தயாரிக்கலாம்.
3. மஞ்சள் கலந்த பால் (ஹல்தி தூத்):
தேவையான பொருட்கள்:
- 1 கப் பால்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- ஒரு சிட்டிகை மிளகு
- 1 தேக்கரண்டி தேன்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சிய பின், அதில் மஞ்சள் தூளை சேர்க்கவும்.
- பின்னர் மிளகுத்தூள் தூவி நன்கு கலக்கவும்.
- தேவையான இனிப்பிற்கு தேன் சேர்க்கவும், உறங்குவதற்கு ஒருமணிநேரம் முன்பு இந்த பாலை தினமும் அருந்தினால் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதை உணரலாம்.
முக்கிய நற்பலன்கள்:
- மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உட்பொருளுக்கு புற்றுநோயெதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் பல்வேறு நாட்பட்ட நோய்களைத் தடுக்க சிகிச்சையளிப்பதற்கும் இது முக்கியப் பங்காற்றுகிறது
- மிளகு: குர்குமின் நமது உடலால் உறிஞ்சப் படுவதை மிளகு அதிகரிக்கிறது. எனவே அதன் நன்மைகளும் முழுமையாக கிடைக்க உதவுகிறது.
மாற்று செயல்முறைகள்:
- பாலின் வாசனை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், அவர்கள் சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து நறுமணமாக அருந்தலாம்.
4. தக்காளி ரசம்:
தேவையான பொருட்கள்:
- 2 பெரிய தக்காளி, நறுக்கியது
- 1 தேக்கரண்டி சீரகத்தூள்
- சிறிது மஞ்சள் தூள்
- 3 பல் பூண்டு
- 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
- கறிவேப்பிலை
- 1 தேக்கரண்டி புளி
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
- வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டினை லேசாக வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியை அதில் சேர்க்கவும்.
- சீரகம், மிளகுத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- நன்கு கொதித்த பின்னர், புளிக்கரைசலை அதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை உணவோடு சேர்த்து பெறவும், ஜீரண ஆற்றலை அதிகரிக்கவே ரசம் பாரம்பரியமாக நமது மதிய சாப்பாட்டுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. இந்த சுவையான மற்றும் காரசாரமான ரசம் அப்படியே அருந்துவதற்கும் சிறந்த பானமாகும்.
முக்கிய நற்பலன்கள்:
- தக்காளி: வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தக்காளி நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது.
- சீரகம் மற்றும் மிளகு: நல்ல சுவையை சேர்ப்பது மட்டுமில்லாமல், ஆன்ட்டி-மைக்ரோபியல் பண்புகளும் இவற்றிற்கு உள்ளது. நமது உடல் மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை இவை அதிகரிகின்றன.
மாற்று செய்முறை:
தேவைப்பட்டால் கூடுதல் சுவைக்காக சிறிது நாட்டு சர்க்கரை, பெருங்காயம், மற்றும் இஞ்சி ஆகியவற்றையும் இதில் சேர்க்கலாம்.
5. கம்மங்கூழ்
தேவையான பொருட்கள்:
- கம்பு – 100 கிராம்
- மோர் – 250 மில்லி லிட்டர்
- உப்பு - தேவையான அளவு
- சின்ன வெங்காயம் – 10
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முக்கால்மணி நேரம் ஊறவைத்த கம்பை மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு (சுமார் 1 லிட்டர்) கொதிக்க வைக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- அரைத்து வைத்த கம்பை அதில் கலந்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
- நன்கு வெந்ததும், 15 நிமிடம் கழித்து இறக்கவும்.
- அதை ஒரு இரவு அப்படியே ஆறவிடவும்.
- மறுநாள் காலையில், மோர் ஊற்றி கலந்து, சின்ன வெங்காயத்தினை வெட்டிப்போட்டு அருந்தவும்.
- தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
முக்கிய நற்பலன்கள்:
- கம்பு: பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
- மோர்: புரோபயாடிக்குகள் நிறைந்த மோர் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிக்கு பங்களித்து, நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
- சின்ன வெங்காயம்: ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த சின்ன வெங்காயம், நோயெதிர்ப்பு பண்புகளை அதிகரித்து, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் உதவுகிறது.
மாற்று செய்முறை:
மாறுதலாக கேழ்வரகு கூழை இதே செய்முறையில் முயற்சி செய்து பார்க்கலாம்.
கீழே உள்ள அட்டவணை மூலம் அன்றாடம் பயன்படுத்தபடும் சமையலறை உணவு மூலப்பொருட்களையும் அதனால் கிடைக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் நன்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
கீழே உள்ள அட்டவணை மூலம் அன்றாடம் பயன்படுத்தபடும் சமையலறை உணவு மூலப்பொருட்களையும் அதனால் கிடைக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் நன்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவான சமையலறை உணவு உட்பொருட்கள் | நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நற்பண்புகள் |
மஞ்சள் | ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்ட்டி-கேன்சர் பண்புகளைக் கொண்ட குர்குமின் இதில் உள்ளது. |
இஞ்சி | ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளது. |
பூண்டு | ஆன்ட்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் பெற்ற அல்லிசின் இதில் உள்ளது. |
சீரகம் | இரும்பு மற்றும் மாங்கனீசு நிறைந்த இதில் ஆன்ட்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன |
மிளகு | ஊட்டச்சத்து உறிஞ்சுப்படுவதை அதிகரிக்கிறது. |
துளசி | ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. |
நெல்லிக்காய் | வைட்டமின் C அதிகம் உள்ளது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. |
புதினா | புத்துணர்ச்சியை தரும் புதினா ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. |
தேன் | இது ஆன்ட்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்ட ஒரு இயற்கையான இனிப்பாகும் |
எலுமிச்சம் பழம் | வைட்டமின் C அதிகமுள்ளது, நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது, மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. |
தக்காளி | வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை, |
கறிவேப்பிலை | ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் ஆன்ட்டி-மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது கிருமிகளை அழிக்க உதவுகிறது. |
புளி | வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. |
ஏலக்காய் | ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது; செரிமானத்திற்கு உதவும் இது இனிமையான நறுமணத்தை சேர்க்கிறது. |
பெருங்காயம் | ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி, வைரஸ் தடுப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. |
கொத்தமல்லி (தனியா) | ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மற்றும் ஆன்ட்டி-மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. |
வெந்தயம் | இரும்பு, நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ககளைக் கொண்டுள்ளது, செரிமானத்திற்கு உதவுகிறது. |
கிராம்பு | ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. |
இலவங்கப்பட்டை | ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்ட்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. |
பெருஞ்சீரகம் | செரிமானத்திற்கு உதவுகிறது, ஆன்ட்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வைட்டமின்கள் மற்றும் இது தாதுக்களின் நல்ல ஆதாரமாக உள்ளது. |
கடுகு | ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்ட செலினியம், மெக்னீசியம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் இதில் அதிகமுள்ளது. |
முந்திரி | ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களின் நல்ல ஆதாரமான முந்திரி நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. |
பாதாம் | வைட்டமின் E, ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ள பாதாம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது. |
நெய் | ப்யூட்ரிக் அமிலம் உள்ள நெய்யில் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. |
தேங்காய் | ஆன்ட்டிமைக்ரோபியல் மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளைக் கொண்ட லாரிக் அமிலம் இதில் உள்ளது |
வெல்லம் | இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் வெல்லத்தில் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது. |
முடிவுரை
மேலே பட்டியலில் உள்ளவற்றை பொருத்தமான விதங்களில் பயன்படுத்தி, நம் விருப்பத்திற்கேற்ப வெதுவெதுப்பான தேநீர், இதமளிக்கும் சூப், புத்துணர்ச்சியூட்டும் ஜூஸ், பசியைத் தணிக்கும் கூழ் என ஆரோக்கியமான பானங்களை தயாரித்து, அருந்தி மகிழலாம். இது போன்ற வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பானங்களை உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஆக்குவதன் மூலம், உங்கள் உடலுக்கு நிலையான நோயெதிர்ப்பு செயல்திறன் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் இந்த பானங்கள் அனைவருக்கும் ஏற்றதா?
ஒருசிலருக்கு சில உணவுப்பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்தலாம். அதற்கு ஏற்ப உணவுப் பொருட்களை தேர்வு செய்வது அவசியம். அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல, அனைத்தும் நஞ்சு தான். எனவே, மிதமான அளவில் பானங்களை உட்கொள்வது அவசியம்.2. மேற்கூறிய உட்பொருட்கள் எதனை வேண்டுமானாலும் கலந்து பானங்களைத் தயாரிக்கலாமா?
கூடாது. சில வகை உணவுப்பொருட்களை ஒன்றாக சேர்த்து உண்பது கேடுவிளைவிக்கலாம் அல்லது பலன்களைக் குறைக்கலாம். எனவே அது குறித்து ஆய்வு செய்த பின்பு புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.3. இது போன்ற பானங்களை எந்த நேரத்திலும் அருந்தலாமா?
கூழ் போன்ற சில பானங்கள் காலையில் அருந்த ஏதுவானவை. சிட்ரஸ் தன்மையுள்ள பானங்கள் காலையில் வெறும் வயிற்றில் அருந்த உகந்தவை அல்ல. பால் அருந்திய பிறகு சிலவகை பானங்கள் அருந்த பரிந்துரைக்கப்படுவதில்லை. எனவே எந்த நேரத்தில் எதனை அருந்தலாம் என்று விவரம் தெரிந்த முதியவர்கள் அல்லது மருத்துவர்களை கேட்டு தெரிந்து கொண்ட பின்பு அந்த பழக்கத்தை பின்பற்றவும். எப்போதோ ஒருமுறை நேரம் தவறி அருந்துவது சிக்கலை ஏற்படுத்தாது.Add Your Heading Text Here
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.