பூஞ்சை தொற்று – ஒரு அறிமுகம்
பூஞ்சை தொற்று அல்லது ஃபங்கல் இன்ஃபெக்ஷன் பற்றி நன்கு புரிந்து கொள்ள, அதே மாதிரியான கண்ணுக்குத் தெரியக் கூடிய பரிச்சயமான ஒரு உவமையைப் பார்ப்போம். பேன் - நம் தலையில் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும்; உச்சந்தலையில் அரிப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் சிறிய ஒட்டுண்ணிகளாகும். அதே போலத்தான் பூஞ்சைகளும் – ஆனால் இவை கண்ணுக்குத்தெரியாத நுண்ணிய உயிரினங்கள். பூஞ்சைகள் நம் உடலுக்குள் / சருமத்தின் மீது தொற்றிக்கொண்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பூஞ்சைகள் கதகதப்பான, ஈரமான சூழல்களில் செழித்து வளர்கின்றன; இவை நமது சருமம், நகங்கள் மற்றும் மியூக்கஸ் படலம் போன்ற பகுதிகளை குறிப்பாக பாதிக்கின்றன. பூஞ்சை தொற்றிலிருந்து விடுபட பெரும்பாலும் குறிப்பிட்ட பூஞ்சையின் வகை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியின் அடிப்படையில் சரியான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
இந்த கட்டுரையில், பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுகள் மற்றும் அவற்றின் பொதுவான சிகிச்சைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பூஞ்சை தொற்றின் இரண்டு முக்கிய வகைகள்
உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்றுகள்-
இவ்வகை பூஞ்சை நோய்த்தொற்றுகள் உடலின் உள் உறுப்புகள் அல்லது மண்டலங்களில் பூஞ்சைகளின் பாதிப்புகளைக் குறிக்கின்றன. இந்த நோய்த்தொற்றுகள் தீவிரமானவை மற்றும் பெரும்பாலும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம், அல்லது ஏற்கனவே ஏதேனும் மருத்துவ ரீதியான பாதிப்புகள் உள்ள நபர்களை பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் சுவாச மண்டலம், இரத்த ஓட்டம் அல்லது பிற குறிப்பிட்ட உள் உறுப்புகளை பாதிக்கலாம்.
உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகள்-
இவ்வகை பூஞ்சை தொற்றுகள் உடலின் மேற்பரப்பில் ஏற்படுகின்றன; இது பெரும்பாலும் தோல், நகங்கள், மியூக்கஸ் படலம் அல்லது பிற வெளிப்புற பகுதிகளையே பாதிக்கிறது. இந்த நோய்த்தொற்றுகள் பொதுவாக உட்புற பூஞ்சை தொற்றுநோய்களை விட குறைவான தீவிரத்தன்மையை கொண்டவையே என்றாலும்; இவையும் அதிக அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும் ஒருவரது தோற்றத்தினையும் பாதிக்கலாம். இவை பெரும்பாலும் சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சைகளுக்கு உடல் வெளிப்படுதல்; அல்லது உடலில் இயற்கையாக காணப்படும் பூஞ்சை இனங்களின் அதீத வளர்ச்சியால் ஏற்படுகின்றன.
உடலின் உட்புறம் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளின் வகைகள்-
சுவாச மண்டல பூஞ்சை தொற்றுகள்-
- நியூமோசிஸ்டிஸ் நிமோனியா (PCP- Pneumocystis pneumonia) என்கிற இந்த பாதிப்பு - நியூமோசிஸ்டிஸ் ஜிரோவெக்ஸி (Pneumocystis jirovecii) என்னும் பூஞ்சையால் ஏற்படும் ஒரு கடுமையான பூஞ்சை நிமோனியா பாதிப்பாகும்; இது பொதுவாக HIV / எய்ட்ஸ் போன்ற பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட நபர்களுக்கு ஏற்படுகிறது.
- பள்ளத்தாக்கு காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் காக்சிடியோயிடோமைகோசிஸ் (Coccidioidomycosis) பூஞ்சை தொற்று - சில குறிப்பிட்ட பிரதேசங்களின் மண்ணில் காணப்படும் காக்சிடியோயிட்ஸ் (Coccidioides) என்கிற பூஞ்சையின் நுண்வித்துக்களை உள்ளிழுப்பதன் ஏற்படுகிறது, இது சுவாச பாதிப்பின் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
- பிளாஸ்டோமைசஸ் (Blastomyces) என்ற பூஞ்சையின் நுண்வித்துக்களை உள்ளிழுப்பதால் பிளாஸ்டோமைகோசிஸ் (Blastomycosis) என்ற நுரையீரலை பாதிக்கும் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது. சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கும் பரவலாம்.
- பொதுவாக நுரையீரலை பாதிக்கும் - அஸ்பெர்கில்லோசிஸ் (Aspergillosis) என்ற தொற்று அஸ்பெர்கிலஸ் (Aspergillus) என்கிற பூஞ்சை இனங்களால் ஏற்படுகிறது. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் இந்த தொற்று பரவுகிறது.
- ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் (Histoplasmosis) என்கிற இந்த சுவாசப் பூஞ்சை தொற்று - ஹிஸ்டோபிளாஸ்மா (Histoplasma) என்கிற பூஞ்சையின் நுண்வித்துக்களை உள்ளிழுப்பதால் ஏற்படுகிறது; இது பெரும்பாலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளாக ஏற்பட்டு, நுரையீரலை பாதிக்கிறது. இவ்வகை தொற்றுகள் குறிப்பாக பறவை அல்லது வௌவால் எச்சங்கள் காணப்படும் பகுதிகளில் காணப்படுகிறது.
இரத்த ஓட்டம் / உறுப்புகளை பாதிக்கும் பூஞ்சை தொற்றுகள்
- இன்வேசிவ் கேண்டிடியாஸிஸ் (Invasive Candidiasis) என்ற பாதிப்பும் கேண்டிடா பூஞ்சை இனங்களால் ஏற்படும் மற்றொரு தீவிர பாதிப்பாகும். இந்த தொற்று இரத்த ஓட்டத்தில் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அல்லது மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.
- கிரிப்டோகாக்கோசிஸ் (Cryptococcosis) என்பது கிரிப்டோகாக்கஸ் என்கிற பூஞ்சையின் நுணவிததுக்களை உள்ளிழுப்பதால் ஏற்படும் ஒருவித தொற்றாகும்; இது முதலில் நுரையீரலை பாதித்து பிறகு மத்திய நரம்பு மண்டலத்திற்கும் பரவுகிறது.
- சிஸ்டமிக் கேண்டிடியாஸிஸ் (Systemic Candidiasis) என்பது கேண்டிடா (Candida) பூஞ்சை இனங்களால் ஏற்படும் ஒரு தொற்றாகும்; இது பெரும்பாலும் பலவீனமான நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளவர்கள், அல்லது சில மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்பட்ட நபர்களின் உள்ளுறுப்புகளை பாதிக்கிறது.
- பாராகாக்சிடியோயிடோமைகோசிஸ் (Paracoccidioidomycosis) என்பது பாராகோசிடியோயிட்ஸ் பிரேசிலியென்சிஸ் (Paracoccidioides brasiliensis) என்னும் பூஞ்சையால் உண்டாகும் ஒரு சிஸ்டமிக் பூஞ்சை தொற்றாகும்; இது முக்கியமாக நுரையீரலை பாதிப்பதாக இருந்தாலும், மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும்.
- பொதுவாக அறுவை சிகிச்சை செய்யப்படும் நபர்கள் அல்லது ஏற்கனவே சில மருத்துவ பாதிப்புகள் உள்ள நபர்களுக்கு கேண்டிடா என்கிற பூஞ்சையால் - கேண்டிடெமியா (Candidemia) என்கிற இரத்த ஓட்ட பூஞ்சை தொற்று ஏற்படலாம்.
- மியூகோரேல்ஸ் (Mucorales) என்கிற மோல்டு வகைகளால் மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்னும் இந்த அரிதான, ஆனால் தீவிரமான பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களின் சைனஸ், நுரையீரல் அல்லது மூளையை பாதிக்கிறது.
உடலின் பிற பாகங்கள்/உள் உறுப்புகளை தாக்கும் பூஞ்சை தொற்றுகள்
ஸ்போரோட்ரிகாசிஸ் (Sporotrichosis) என்பது ஸ்போரோதிரிக்ஸ் ஷென்கி (Sporothrix schenckii) என்கிற பூஞ்சையால் ஏற்படும் தொற்றாகும்; இது பொதுவாக அசுத்தமான தாவரப் பொருட்களால் உண்டாகும் சரும காயம் மூலம் ஏற்படுகிறது. இது நிணநீர் (லிம்ஃபாட்டிக்) தடங்களில் முடிச்சுகள் மற்றும் புண்களை ஏற்படுத்துகிறது.
உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளின் வகைகள் -
சருமப் பூஞ்சை தொற்றுகள் -
- அத்லீட்’ஸ் ஃபூட் (டினியா பெடிஸ் - Tinea Pedis) - பாதங்களில் ஏற்படும் பொதுவான பூஞ்சை தொற்றான இது - அரிப்பு, சிவந்து போதல் மற்றும் தோல் உரிதல் ஆகிய அறிகுறிகளாக வெளிப்படும். பெரும்பாலும் வெதுவெதுப்பான மற்றும் ஈரமான சூழலில் இந்த பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.
- ஆங்குலர் செயிலிட்டிஸ் - இந்த வகை பூஞ்சை தொற்று வாயின் ஓரங்களில் சிவந்து போதல், வெடிப்புகள் ஏற்படுத்தல் மற்றும் புண்களாக ஏற்படுகிறது.
- உச்சந்தலை படர்தாமரை (டைனியா கேபிடிஸ் - Tinea Capitis) - உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றால் - முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலையில் செதில் போன்று தோல் உரிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
- ஒயிட் பியட்ரா (White Piedra) - முடிகளில் ஏற்படும் இந்த பூஞ்சை தொற்றினால் வெள்ளை நிற முடிச்சுகள் போன்ற தொற்றுகள் உருவாகின்றன.
- செபொர்ஹெயிக் டெர்மடைட்டிஸ் (Seborrheic Dermatitis) - நாள்பட்ட இன்ஃப்ளமேஷன் உள்ள சரும பாதிப்பான இது - மலாசீசியா வகை பூஞ்சைகளால் ஏற்படுகிறது. சருமம் சிவந்து போதல், அரிப்பு மற்றும் செதில்களாக உரிதல் போன்ற அறிகுறிகள் தென்படும். குறிப்பாக உச்சந்தலையில், முகம் மற்றும் மார்பின் மேல் பகுதியில் இந்த பாதிப்புகள் உண்டாகின்றன.
- டினியா நிக்ரா (Tinea Nigra) - சருமத்தில் பிரவுன் அல்லது கருப்பு திட்டுகளாக ஏற்படும் இந்த ஒரு அரிதான பூஞ்சை தொற்று - பொதுவாக உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் அல்லது அதிகம் வியர்க்கும் பிற பகுதிகளில் ஏற்படுகிறது.
- டினியா வெர்சிகலர் (Tinea Versicolor) - மலாசீசியா (Malassezia) இனங்களால் சருமத்தின் மீது ஏற்படும் இந்த பூஞ்சை தொற்றின் விளைவாக – நிறமாற்றத்துடன் கூடிய சருமத் திட்டுகள் உண்டாகின்றன; பெரும்பாலும் சுற்றியுள்ள சருமத்தை விட வெளிறிய அல்லது கருமையான திட்டுகளாக இவை காணப்படும்.
- தாடியில் ஏற்படும் ரிங்வார்ம் (டினியா பார்பே - Tinea Barbae) - தாடி பகுதியில் ஏற்படும் இந்த வகை பூஞ்சை தொற்றால் – தாடியின் மயிர்க்கால்கள் சிவத்தல், அரித்தல் மற்றும் வறண்டு போகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
- பிட்ரியாசிஸ் (Pityriasis) - டினியா நிக்ரா (Tinea nigra), டினியா இன்காக்னிடோ (Tinea incognito) போன்ற பூஞ்சைகளால் ஏற்படும் இவ்வகை தொற்றுகள் - சரும செதில்கள், அரிப்பு மற்றும் சிவந்த சருமம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
- பிளாக் பியட்ரா (Black Piedra) - முடிகளில் ஏற்படும் இந்த பூஞ்சை தொற்றினால் கருப்பு நிற முடிச்சுகள் போன்ற தொற்றுகள் உருவாகின்றன.
- ரிங்க்வார்ம் (டினியா கார்போரிஸ் - Tinea Corporis) - பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் மேடான விளிம்புகள் மற்றும் மையத்தில் தெளிவான சருமத்துடன் மோதிர வடிவ தடிப்புகளாக இந்த பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன.
- ஜாக் இட்ச் (டைனியா க்ரூரிஸ் - Tinea Cruris) - பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் இந்த பூஞ்சை தொற்று - அரிப்பு, சிவந்து போதல், தடிப்பு மற்றும் சொறியாக வெளிப்படுகிறது. குறிப்பாக ஆண்களே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
நகங்கள்-
நகப் பூஞ்சை (ஆனிகோமைகோசிஸ் - Onychomycosis) என்கிற பூஞ்சை தொற்றால் நகங்கள் தடிமனாகி, நிறமாற்றமடைந்து எளிதில் உடையக்கூடியதாக மாறுகின்றன.
சளி / மியூக்கஸ் படல தொற்றுகள் -
- இன்டர்ட்ரிகோ (Intertrigo) (கேண்டிடல் இன்டர்ட்ரிகோ - Candidal Intertrigo)- மார்பகங்களின் கீழ், பிறப்புறுப்பு பகுதியில் அல்லது பிட்டத்திற்கு இடையில் என தோல் மடிப்புகளில் இந்த பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. சிவந்து போதல், அரிப்பு மற்றும் புண்ணாக இது வெளிப்படுகிறது.
- ஈஸ்ட் தொற்றுகள் (வெஜைனல் கேண்டிடியாஸிஸ் - Vaginal Candidiasis)- இது பெண்களின் பிறப்புறுப்பை பாதிக்கும் ஒரு பொதுவான பூஞ்சை தொற்றாகும்; அரிப்பு, எரிச்சல் மற்றும் அசாதாரண திரவ வெளியேற்றம் போன்ற அசௌகரியங்களை இத்தொற்று ஏற்படுத்தும்.
- ஓரல் த்ரஷ் (ஓரோஃபேரனீஜயல் கேண்டிடியாஸிஸ் - Oropharyngeal Candidiasis)- வாய் மற்றும் தொண்டையில் உண்டாகும் இத்தொற்று கேண்டிடா இனங்களால் ஏற்படுகிறது; நாக்கு, கன்னங்களின் உட்பகுதி மற்றும் தொண்டையில் வெள்ளை திட்டுகளாக இது வெளிப்படும்.
- கட்டேனியஸ் கேண்டிடியாஸிஸ் (Cutaneous Candidiasis)- கேண்டிடா இனங்களால் ஏற்படும் இந்த சருமப் பூஞ்சை தொற்று – தடித்த சிவந்த புண்களுடன், அரிக்கும் திட்டுகளாக வெளிப்படுகிறது.
- டயபர் ரேஷ் (ஈஸ்ட் டெர்மடிடிஸ் - Yeast Dermatitis)- டயபர் அணியும் பகுதியில் உள்ள சருமத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பூஞ்சை தொற்றான இது - பொதுவாக குழந்தைகளையே பாதிக்கிறது; தோல் உரிதல் மற்றும் அசௌகரியம் ஆகியவை அறிகுறிகளாக வெளிப்படும்.
- பாலனிடிஸ் (Balanitis)- ஆண்குறி அல்லது அதன் முன்தோலின் தலையை பாதிக்கும் இந்த பூஞ்சை தொற்றால் அப்பகுதி சிவந்து, வீக்கமடைந்து அசௌகரியத்தை உண்டாக்கும்.
பிற வெளிப்புற பகுதிகளில் ஏற்படும் தொற்றுகள்-
ஓட்டோமைகோசிஸ் (Otomycosis)- காதின் வெளிப்புற மடல்களில் ஏற்படும் இந்த பூஞ்சை தொற்று - அரிப்பு, வலி மற்றும் திரவ வெளியேற்றத்துடன் காணப்படும்.
பூஞ்சை தொற்றுக்கான பொதுவான சிகிச்சைகள்-
உடலின் உட்புறத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றுநோய்களைப் பொறுத்தவரை – அவை பொதுவாக மருத்துவரால் மட்டுமே சிகிச்சையளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட வகை பூஞ்சை தொற்று மற்றும் அதன் தீவிரத்தை பொறுத்து மருத்துவ நிபுணர் உரிய மருந்துகளை பரிந்துரைப்பார். குறிப்பிட்ட பூஞ்சையை பிரத்தியேகமாக குறிவைத்து அதன் வளர்ச்சியைத் தடுக்கவும், தொற்றுநோயை ஒழிக்கவும் அந்த மருந்துகள் வாய்வழியாக அல்லது நரம்பு வழியாக செலுத்தப்படலாம். பூஞ்சையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பாட்டால் அல்லது சிஸ்டமிக் நோய்த்தொற்றுகளாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற நேரலாம். இவ்வகை உள்ளுறுப்பு பூஞ்சை தொற்றுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உறுதுணையாக சில வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். உதாரணாமாக - கை கழுவுதல் போன்ற நல்ல சுகாதார பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது - மற்றும் நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை ஆதரிக்க சமச்சீரான உணவுப் பழக்கத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது போன்ற மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், புரோபயாடிக் நிறைந்த உணவுகள், பூண்டு மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற இயற்கை வைத்தியம் மூலம் தொற்றுகளின் அறிகுறிகளுக்கு நிவாரணம் பெறலாம், ஆனால் அவை மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம் இவை உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள தொற்றுகளாகும்.
உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளைப் பொருத்தவரை - பெரும்பாலும் மேற்பூச்சாக தடவும் பூஞ்சை காளான் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றில் சில நேரடியாக மருந்தகங்களில் OTC ஆயின்மென்ட்களாகவும் கிடைக்கின்றன அல்லது சரும நல மருத்துவர் அவற்றை பரிந்துரைக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாகப் பூசப்படும் பூஞ்சைகளுக்கு எதிரான கிரீம்கள், ஆயின்மென்ட்கள், ஜெல், ஸ்ப்ரே, சோப் அல்லது பவுடர் போன்றவை இதில் அடங்கும். மருத்துவர் கூறும் பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவது மிக முக்கியம். வெளிப்புற பூஞ்சை தொற்று பரவுவதை தடுக்கவும், மீண்டும் ஏற்படாமல் பாதுகாக்கவும் சுய சுகாதாரத்தை நன்கு கடைப்பிடிப்பது அவசியமாகும். பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்திருப்பது; துண்டுகள் அல்லது ஆடை போன்ற தனிப்பட்ட பொருட்களைப் பிறருடன் பகிர்வதைத் தவிர்ப்பது; காற்றோட்டமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைகளை பின்பற்றவும். சாதாரணமான வெளிப்புற பூஞ்சை தொற்றுகளுக்கு வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் தரலாம். உதாரணமாக – டீ ட்ரீ எண்ணெய், வினிகர் அல்லது தயிர் போன்றவற்றை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது தொற்றினை குணப்படுத்தலாம். இருப்பினும், அறிகுறிகள் தொடர்ந்தால் அல்லது தீவிரமடைந்தால், சரியான காரணத்தை கண்டறிவது மற்றும் சிகிச்சைக்கு தோல் நோய் மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.
முடிவுரை
வெவ்வேறு பூஞ்சை தொற்றுகளைப் பற்றி அறிந்துகொள்வது நோயாளிகளுக்கு பெரிதும் உதவும்; காரணம் - அவர்கள் அறிகுறிகளை அடையாளம் கண்டு, சாதாரணமான பாதிப்பாக இருந்தால் வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்; அல்லது தீவர பாதிப்பாக உணர்ந்தால் மருத்துவரை அணுகலாம். நோயாளிகள் தங்கள் உடலில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், அதுகுறித்து அவர்கள் மருத்துவரிடம் மேலும் விவரங்களை கேட்கலாம், சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம், மற்றும் மருத்துவரின் ஆலோசனையை சரியாகப் பின்பற்றுவதை உறுதிசெய்யலாம். ஆக, பூஞ்சை நோய்த்தொற்றுகளைப் பற்றி அறிந்துகொள்வது நோயாளிகளும் அவர்களின் மருத்துவர்களும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், சிகிச்சையின் போது நம்பிக்கையுடன் இருப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.