நாக்டர்னல் பொடல்ஜியா – ஒரு அறிமுகம்
இரவு நேரங்களில் ஏற்படும் கால் எரிச்சல், மருத்துவ ரீதியாக நாக்டர்னல் பொடல்ஜியா என்று அழைக்கப்படுகிறது. பலருக்கும் உள்ள ஒரு பொதுவான பாதிப்பான இது, தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கிறது. இந்த சங்கடமான உணர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்; இதற்கான சரியான நிவாரணத்தைக் கண்டறிய பாதிப்புடன் சம்பந்தப்பட்ட பல்வேறு காரணிகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். இந்த கட்டுரையில், நரம்பு தொடர்பான பிரச்சினைகள் முதல் இரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைகள் வரை – இரவு நேரங்களில் ஏற்படும் கால் எரிச்சலுக்கான சாத்தியமான காரணங்களை முழுமையாகக் காணலாம். அமைதியான தூக்கத்தை மீட்கவும், இந்த அசௌகரியமான பாதிப்பிற்கு நிவாரணம் பெறவும் உதவும் தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
இரவு நேர கால் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய சில வகை பாதிப்புகளை குறித்து இங்கே காண்போம்:
1. புற நரம்பியல் பாதிப்பு (பெரிஃபெரல் நியூரோபதி) : பெரிஃபெரல் நியூரோபதி என்பது புற நரம்புகளுக்கு சேதம் விளைவிக்கும் பாதிப்புகளைக் குறிக்கிறது.இது பெரும்பாலும் நீரிழிவு, வைட்டமின் குறைபாடுகள் அல்லது குறிப்பிட்ட மருந்துகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளுடன் தொடர்புடையது. இந்த நிலையை நிர்வகிப்பதற்கு - நீரிழிவு போன்ற அடிப்படை காரணங்களுக்கு நிவாரணம் பெறுவதும், வலி நிவாரண மருந்துகள், உடலியல் சிகிச்சைகள் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வது என - ஒரு பன்முக அணுகுமுறையை செயல்படுத்த வேண்டும்.
2. ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம் (RLS): RLS என்பது ஒரு வித நரம்பியல் கோளாறாகும்; இது கால்களை தொடர்ந்து அசைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடற்ற தூண்டுதலாக அறியப்படுகிறது. பெரும்பாலும் கால் எரிச்சல் போன்ற சங்கடமான உணர்வுகளும் இதனுடன் சேர்ந்து ஏற்படுகிறது. மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள், வழக்கமான உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள், தூண்டுதல்களைத் தவிர்ப்பது, மற்றும் வழக்கமான தூக்க அட்டவணையை கடைபிடிப்பது ஆகியவை RLS பாதிப்பிற்கான தீர்வுகளாகும்.
3. மோசமான இரத்த சுழற்சி: புற தமனி நோய் (PAD) போன்ற பாதிப்புக்கள் உடலின் கடைசி பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தைக் கொண்டு செல்வதை பாதிக்கின்றன. இதன் காரணமாக கால்களில் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக, அசைவின்றி இருக்கும் போது இப்படி நேரும். வழக்கமான உடற்பயிற்சி மூலம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், ஆரோக்கியமான எடையை பராமரித்தல், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்தல், மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தவிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மோசமான இரத்த சுழற்சியை சரி செய்ய முடியும்.
4. இறுக்கமான அல்லது சரியற்ற காலணிகள்: இறுக்கமான அல்லது பொருந்தாத காலணிகளை அணிவதன் காரணமாக நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது; இதுவே கால்களில் அசௌகரியம் மற்றும் எரியும் உணர்வுகளுக்கும் வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க சௌகரியமான, நன்கு பொருந்தக்கூடிய காலணிகளை அணிவதுடன், இறுக்கமான அல்லது குறுகிய காலணிகளைத் தவிர்ப்பதும் நல்லது.
5. அளவுக்கதிகமாக மது அருந்துதல்: அளவுக்கதிகமாக மது அருந்துவதால் புற நரம்பியல் நோய்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக கால்களில் எரிவது போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. தொழில்முறை நிபுணரின் உதவியை நாடுவது, மறுவாழ்வு திட்டங்களில் பங்கேற்பது, மற்றும் சமச்சீரான உணவுடன் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வது என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மதுப்பழக்கத்திலிருந்து மீளலாம்.
6. நோய்த்தொற்றுகள் அல்லது இன்ஃப்ளமேஷன்: அத்லீட்’ஸ் ஃபூட் அல்லது இன்ஃப்ளமேட்டரி பிரச்சினைகள் போன்ற பாதிப்புகள் காரணமாக கால்களில் அசௌகரியம் மற்றும் எரியும் உணர்வு ஏற்படுகிறது. மருத்துவ நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட பொருத்தமான மருந்துகளுடன் கால்களில் ஏற்பட்ட தொற்று அல்லது இன்ஃப்ளமேஷனை சரி செய்வதன் மூலம் இவற்றிற்கு நிவாரணம் பெறலாம்.
7. சில மருந்துகளின் பக்க விளைவுகள்: சில மருந்துகளால் கால் எரிச்சல் அல்லது உடலின் கடைசி பகுதிகளில் எரிச்சலைத் தூண்டும் பக்க விளைவுகள் ஏற்படலாம். மாற்று மருந்துகளை பற்றி உரிய மருத்துவரிடம் ஆலோசிப்பது, அல்லது உட்கொள்ளும் மருந்தின் அளவை சரிசெய்வது இதற்கு தீர்வாக அமையலாம். சில நேரங்களில், மருந்துகளின் நன்மைகள் பக்க விளைவுகளை விட அதிகமாக இருந்தால், அப்படியே தொடரவும் நேரலாம்.
8. வைட்டமின் குறைபாடுகள்: B வைட்டமின்கள் போன்ற சில வைட்டமின்களின் குறைபாடுகள் காரணமாகவும் கால் எரிச்சல் ஏற்படலாம். மருத்துவரின் வழிகாட்டுதலின்படி உணவுமுறை மாற்றங்கள், சப்ளிமென்ட்கள் அல்லது ஊசிகள் மூலம் குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம்.
9. ஹைப்போ தைராய்டிசம்: செயல்படாத தைராய்டு சுரப்பியும் கூட நியூரோபதி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக கால்களில் எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறிகள் வெளிப்படலாம். அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவரின் பரிந்துரைப்படி தைராய்டு ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பிற்கு நிவாரணம் பெறலாம்.
10. லும்பார் ரேடிகுலோபதி: கீழ் முதுகில் (இடுப்பு முதுகெலும்பு) உள்ள நரம்புகளின் சுருக்கம், அல்லது எரிச்சல் உணர்வின் காரணமாக - வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். இதனால் கால்களிலும் எரியும் உணர்வு உண்டாகலாம். உடலியல் சிகிச்சைகள், கீழ் முதுகை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகள், வலி மேலாண்மை முறைகள் மற்றும் தேவை ஏற்பட்டால் சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும் இந்நிலைக்கு சிகிச்சை பெறலாம்.
11. கீமோதெரபியின் பக்க விளைவுகள்: சில கீமோதெரபி மருந்துகள் பெரிஃபெரல் நியூரோபதியை ஒரு பக்க விளைவாக ஏற்படுத்தலாம்; இதன் விளைவாக கால்களில் எரிச்சல் உணர்வுகள் ஏற்படலாம். புற்றுநோயியல் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் அறிகுறிகளை நிர்வகிப்பது மற்றும் மாற்று சிகிச்சைகள் அல்லது கீமோதெரபி விதிமுறைகளில் மாற்றங்களைக் கருத்தில் கொள்வது புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு முக்கியமான படிகள்.
12. நச்சுக்களுக்கு உடல் வெளிப்படுதல்: கன உலோகங்கள் அல்லது தொழில்துறை இரசாயனங்கள் போன்ற சில நச்சுகளுக்கு நம் உடல் வெளிப்படும் போது, பெரிஃபெரல் நியூரோபதி மற்றும் கால்களில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். இது போன்ற நச்சுகளுக்கு மேலும் வெளிப்படுவதைத் தவிர்ப்பது, மருத்துவ மேற்பார்வையின் கீழ் நச்சுத்தன்மையை அகற்றும் நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமான மருந்துகளின் மூலம் பாதிப்பின் அறிகுறிகளுக்கு நிவாரணம் பெறலாம்.
13. நாள்பட்ட சிறுநீரக நோய்: சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடலின் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ரசாயனங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்; இது நரம்புகளில் பாதிப்பு, மற்றும் பெரிஃபெரல் நியூரோபதி பாதிப்பினை ஏற்படுத்தலாம். மருந்து, உணவு மாற்றங்கள் மற்றும் சிலருக்கு தேவைப்பட்டால் - டயாலிசிஸ் அல்லது உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் அடிப்படை காரணமான சிறுநீரக நோய்க்கு தீர்வு காணப்படலாம்.
14. ஃபிப்ரோமையால்ஜியா: ஃபிப்ரோமையால்ஜியா என்பது பரவலான வலி மற்றும் இலகுவான தன்மையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட பாதிப்பாகும்; இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாக கால்களில் எரியும் உணர்வும் ஏற்படலாம். வலி மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகள், உடலியல் சிகிச்சை அளிக்கப்படும்; தூக்கத்தை மேம்படுத்துவதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
15. மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (MS): MS என்பது ஒரு வகை நரம்பியல் பாதிப்பாகும், இது நியூரோபதியாகவும், கால்பகுதிகளில் எரிச்சல் உணர்வு உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளாகவும் வெளிப்படுகிறது. மல்டிபிள் ஸ்களீரோசிஸ் உள்ளவர்களுக்கு நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள், அறிகுறிகளுக்கு ஏற்ற சிகிச்சைகள், உடலியல் சிகிச்சைகள், மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் நிவாரணம் பெறலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு காரணிகளால் இரவு நேரத்தில் கால்களில் எரிச்சல் ஏற்பட்டாலும், அவை அல்லாமல் வேறு காரணங்களாலும் கால் எரிச்சல் ஏற்படலாம். அவற்றிற்கு பின்வரும் சில பொதுவான வழிகாட்டுதல்கள் மூலம் நிவாரணங்களைப் பெறலாம்.
இரவு நேர கால் எரிச்சல் / நாக்டர்னல் பொடல்ஜியாவிற்கான பொதுவான தீர்வுகள்:
1. மருத்துவ ஆலோசனை:
இரவில் கால்களில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த அதன் அடிப்படைக் காரணத்தை சரியாக கண்டறிய உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். நீரிழிவு நோய், பெரிஃபெரல் நியூரோபதி அல்லது இரத்தவோட்ட பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளை துல்லியமாக கண்டறிவதே சிகிச்சையளிப்பதில் முதல் படியாகும். கால்களின் எரிச்சல் உணர்வு தொடர்ந்தால், அல்லது தீவிரமடைந்துவிட்டால், நரம்பியல் நிபுணர் அல்லது பாதநல மருத்துவர் போன்ற உரிய நிபுணரை அணுகுவது அவசியமாகும். அவர்கள் ஒரு விரிவான பரிசோதனையின் அடிப்படையில் குறிப்பிட்ட காரணத்திற்கான சிகிச்சைகள் மற்றும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மருத்துவ உதவிகளை வழங்குவார்கள்.
2. வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல், மற்றும் சுய-பராமரிப்பு நடவடிக்கைகள்:
இரவு நேரத்தில் கால்களில் ஏற்படும் எரிச்சலை சமாளிக்க வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டுவருவதும், சுய-பராமரிப்பு நடைமுறைகளை பின்வருமாறு கடைபிடிப்பது அவசியமாகும்.
- ஓய்வெடுக்கும்போது உங்கள் கால்களை உயரமான மட்டத்தில் வைப்பதன் மூலம், நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது, மற்றும் கால் வீக்கத்தையும் குறைக்கிறது; இதனால் கால் எரியும் உணர்வு குறைகிறது.
- பாதங்களுக்கு ஆதரவு தரும் சௌகரியமான காலணிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நரம்புகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கலாம்.
- சீரான அறை வெப்பநிலையை பராமரிப்பதன் மூலம் உடல் சூடாவதைத் தடுத்து, கால்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வையும் கட்டுப்படுத்தலாம்.
- வழக்கமான, மிதமான உடற்பயிற்சியின் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டத்தை கொண்டு சேர்க்கலாம்.
- கால்கள் மற்றும் பாதங்களில் அழுத்தத்தைக் குறைக்க ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இதனால் நரம்பு சுருக்கம் மற்றும் கால் அசௌகரியத்தை குறைக்கலாம்.
- மதுவை அளவுக்கு அதிகமாக அருந்துவதால் கால் எரிச்சல் ஏற்பட்டால், மது உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும், அல்லது மதுப்பழக்கத்தை நிறுத்தவும் தொழில்முறை உதவியை நாடுவதன் மூலம் நரம்பியல் பாதிப்புகளில் சாதகமான அறிகுறிகளைக் காணலாம்.
3. கால்களுக்கு இதமளிக்கும் நடவடிக்கைகள்:
கால் எரிச்சலைத் தணிக்க, எப்சம் உப்பு சேர்த்த குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைக்கலாம். இது இன்ஃப்ளமேஷனை குறைக்கவும், எரியும் உணர்விலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. மேலும், கால்களுக்கு இதமான மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தைத் அதிகரித்து, தசைகளை தளர்த்தி, கால் எரிச்சலின் தீவிரத்தை குறைக்கலாம்.
4. அணியக்கூடியவைகள் மற்றும் சிகிச்சைகள்:
கால் எரிச்சலை சமாளிக்க வெளிப்புறமாக அணியக்கூடியவைகள் மற்றும் சிகிச்சைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
- கம்ப்ரஷன் சாக்ஸ் அணிவதன் மூலம் கால்களின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, குறைவான இரத்த சுழற்சியின் அறிகுறிகளுக்கு நிவாரணம் பெறலாம்.
- மருந்தகங்களில் கிடைக்கும் கிரீம்கள் அல்லது மெந்தோல் அல்லது கேப்சைசின் உள்ள ஜெல் போன்ற மேற்பூச்சாக தடவும் சிகிச்சைகள் மூலம் – எரிச்சலான உணர்விலிருந்து விடுபட்டு குளிர்ந்த அல்லது மரத்துப்போகும் விளைவைப் பெறலாம்.
- அக்குபிரஷர் அல்லது ரிஃப்ளெக்ஸாலஜி முறைகளை முயற்சிக்கவும். இந்த பாரம்பரிய சிகிச்சை முறைகளில், கால்களில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அதன் மூலம் அந்தந்த புள்ளிகளுடன் இணைக்கப்பட்ட உள் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்களின் செயல்திறனை மேம்படுத்தலாம் என நம்பப்படுகிறது. இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், சிலர் இந்த முறைகளால் பலனடைந்துள்ளனர்.
- காலணிகளில் ஆர்த்தோபெடிக் இன்சர்ட்களை வைப்பதன் மூலம், அல்லது பிரத்தியேகமான ஆர்த்தோடிக்ஸ் ஷூக்களை பயன்படுத்துவதன் மூலம் சௌகரியத்தை பெறலாம். சென்சிட்டிவான நரம்புகள் மீதான அழுத்தத்தைத் குறைப்பதற்கும் இது உதவுகிறது.
5. உணவுமுறை மாற்றங்கள்:
இரவில் கால் எரிச்சலால் ஏற்படும் அசௌகரியத்தை கையாளவும், தணிக்கவும் - சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது முக்கியமாகும். நரம்புகளுக்கு ஊட்டமளிக்கும், மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த கால் ஆரோக்கியத்தினையும் மேம்படுத்தலாம். பச்சை இலைக் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற B வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவற்றிற்கு நல்ல உதாரணமாகும். இவை நரம்பியல் செயல்பாட்டை ஆதரிக்கின்றன, மற்றும் நரம்பியல் பாதிப்புகளின் அறிகுறிகளைக் குறைக்கின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ள சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற மீன்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவை இன்ஃப்ளமேஷனைக் குறைக்கவும் தேவையான இரத்த சுழற்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. வாழைப்பழங்கள், அவகாடோ மற்றும் பருப்பு வகைகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளும் - நரம்பு செயல்பாடு மற்றும் தசை தளர்வு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், ஒட்டுமொத்த நரம்பியல் ஆரோக்கியத்தில் உதவுவதற்கும் பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
நீரிழப்பின் காரணமாக உடலின் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது என்பதால், தேவையான நீர்சத்தினை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். மூலிகை தேநீர், குறிப்பாக இஞ்சி அல்லது மஞ்சள் போன்ற ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் கொண்ட மூலிகைகள் இதமளிக்கும் பலன்களைத் தருகின்றன.
முடிவுரை:
இரவில் ஏற்படும் கால் எரிச்சலுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றை சரியாகப் புரிந்துகொள்வதே - பொருத்தமான மருத்துவ உதவியைப் பெறுவதற்கும், பயன்தரும் தீர்வுகளைச் செயல்படுத்துவதற்கும் மிக முக்கியமாகும். ஒவ்வொரு விதமான பாதிப்புகளும் இந்த அசௌகரியத்திற்கு பங்களிப்பதால், ஒரு தனித்துவமான தீர்வு அவசியமாகிறது. மருத்துவர்களால் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக அணுகுமுறையின் மூலம் மட்டுமே உரிய நிவாரண வழியைக் கண்டறிய முடியும்.