இதயம் செயலிழப்பது என்றால் என்ன?
உடலின் தேவைகளுக்கு இதயத்தால் போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாத ஒரு நிலை ஏற்பட்டால் அது இதய செயலிழப்பு எனப்படுகிறது. ‘அடைப்பினால் ஏற்படும் இதய செயலிழப்பு’ (கன்ஜெஸ்டிவ் ஹார்ட் ஃபெயிலியர்) எனப்படும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் அல்லது நோய்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியமாகும். இதய செயலிழப்பிற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தாகலாம் மற்றும் மரணம் கூட நேரலாம்.
மனிதர்களின் முக்கியமான உறுப்பாகக் கருதப்படும் இதயம் - நமது உடலின் மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்து அனுப்புகிறது. இரத்தத்தின் வழியாகவே உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் இரத்த ஓட்ட செயல்முறையில் - இரத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதயம் சரியான அளவில் இரத்தத்தை பம்ப் செய்யாத பட்சத்தில், அது பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக அமையும்.
நுரையீரல் மற்றும் மூளை போன்ற பகுதிகளுக்கு இரத்தம் செல்லாமல் போனால் - மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் கடுமையான வியர்வை போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதய நோய்கள் ஒருவது வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கின்றன.
இரத்த ஓட்டமானது இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும், உடல் எங்கிலுமிருந்து இதயத்திற்கும் ஒரு சீரான முறையில் வந்து செல்கிறது. இரத்த நாளங்கள் எனப்படும் சிறிய குழாய்கள் வழியாகவே இரத்தம் பயணிக்கிறது; மேலும், இந்த இரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால், அது இதய அடைப்பு மற்றும் இதய செயலிழப்பை ஏற்படுத்தும்.
இருப்பினும், இது போன்ற அடைப்பையும் தாண்டி உடலின் மற்ற பகுதிககளுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்ல நமது உடல் சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. நீண்ட கால பாதிப்பிற்குப் பிறகே, இதய நோய் ஒரு மருத்துவ அவசரநிலையாக மாறும்.
இதய செயலிழப்பின் அறிகுறிகள்
இதயம் செயலிழப்பது என்பது நாள்பட்ட அல்லது கடுமையான பாதிப்பாக இருக்கலாம். அடைப்பின் தீவிரம் மற்றும் அடிப்படை நோயைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். அதுபோன்ற இதய நோயின் அறிகுறிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி
வயிற்றுக்கு போதுமான இரத்தத்தை இதயம் அனுப்பாதபோது, ஒருவருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்படும். சில நேரங்களில், நெஞ்செரிச்சல் ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
நெஞ்சுப்பகுதியில் அசௌகரியம்
மாரடைப்பின் காரணமாக நெஞ்சுப்பகுதியில் லேசான அசௌகரியம் ஏற்படும்; காலப்போக்கில், கூர்மையாக அதிகரிக்கும் இந்த வலி, சில நிமிடங்கள் நீடிக்கும். சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஏற்படும்.
கைக்கு பரவும் வலி
மாரடைப்பு ஏற்படும் போது, வலி இதயத்திலிருந்து கைகளுக்கு பரவுகிறது.
தலைச்சுற்றல் அல்லது தலை மிதப்பது போல உணர்வீர்கள்
தலைச்சுற்றல் ஏற்படுவது இதயம் செயலிழப்பதின் பொதுவான அறிகுறியாகும்; அப்போது தலை மிதப்பது போன்ற லேசான உணர்வும் ஏற்படும்.
தொண்டை அல்லது தாடையில் வலி ஏற்படும்
மாரடைப்பு காரணமாக தொண்டை வலி அல்லது தாடை வலி ஏற்படலாம். ஆனால் வலி நேரடியாக மாரடைப்புடன் தொடர்புடையதாக இருக்காது.
எளிதில் சோர்வடைவீர்கள்
இரத்தத்தை பம்ப் செய்ய ஒருவரின் இதயம் அதிக அழுத்தத்திற்கு உள்ளானால், அவர் எளிதில் சோர்வடையலாம். அப்படி ஒருவர் எளிதில் சோர்வடையும் பட்சத்தில், உடனடி மருத்துவ உதவி தேவைப்படலாம்.
குறட்டை விடுதல்
குறட்டை விடும் சத்தங்கள் ஏதேனும் ஒரு உடல்நிலை பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
வியர்த்தல்
அதிக வியர்வை என்பது மாரடைப்பின் பொதுவான அறிகுறியாகும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதிகமாக வியர்ப்பதோடு, நெஞ்சுப்பகுதியில் அழுத்தமாகவும் உணர்வார்கள்.
விடாத இருமல்
இதய தசையின் செயலிழப்பு மற்றும் நுரையீரலில் திரவம் கோர்த்துக்கொள்வதன் காரணமாக இருமல் ஏற்படும். இந்த நிலைக்கு நுரையீரல் வீக்கம் (பல்மோனரி இடீமா) என்று பெயர்.
சீரற்ற இதயத் துடிப்பு
இதயத்தின் மின் சமிக்ஞையும், இதயத் துடிப்பும் சரியாக ஒருங்கிணைக்கப்படாதபோது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அல்லது அரித்மியா என்கிற பாதிப்பு ஏற்படுகிறது. தவறான சமிக்ஞையின் காரணமாக இதயம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ துடிக்க நேரிடுகிறது.
உடற்பயிற்சி செய்யும் திறன் குறைவது
ஒரு நபருக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்போது, அவர்களால் தங்களது முழு திறனுக்கு உடற்பயிற்சி செய்ய இயலாமல் போகிறது. தங்களால் இயல்வதை விட அதிகமாக சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்தால், அது உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.
மூச்சுத் திணறல்
உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயம் பம்ப் செய்யாதபோது, அது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
சோர்வு, அசதி
சோர்வு மற்றும் அசதி ஆகியவை மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளாகும்.
இதய துடிப்பு (படபடப்பு) அதிகரிப்பது
இதயத் துடிப்பு வேகமாக அதிகரிப்பது மாரடைப்பினை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம்.
முடிவுரை
உயிருக்கு ஆபத்தான நோயான இதய செயலிழப்பிற்கு எந்த வித சிகிச்சையும் இல்லை. சில வாழ்க்கை முறை மாற்றங்கள் நோயை சமாளிக்க உதவும். இதய செயலிழப்பின் அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு மீண்டும் ஏற்பட்டால், அதற்கு சுயமாக சிகிச்சை அளிக்க முயற்சிக்க வேண்டாம்.
உடனே மருத்துவரை அணுகவும். இதய நோய்களுக்கு ஒரு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும்; அதே வேளையில் முதலுதவியால் குறுகிய காலத்திற்கு மட்டுமே உதவ முடியும்.
இதய நோய்களால் பாதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் உண்டு. சிக்கல்களை சமாளித்து வாழ சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அவை குறித்து மருத்துவர் பாதிக்கப்பட்டவருக்கு அறிவுறுத்துவார்.
உங்களுக்கு இதய பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகளை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது; மேலும், மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளவும். அறிகுறிகளை கவனிப்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் அவசரநிலை ஏற்படலாம் என்பதால் அதற்கான மருந்துகளை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்.