செரிமானம் - ஒரு அறிமுகம்
உணவுச் செரிமானம் என்பது வாயில் துவங்கி, சிறுகுடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் முடிவடையும் ஒரு சிக்கலான உடலியல் செயல்முறையாகும். உமிழ்நீரில் உள்ள நொதிகளுடன் சேர்த்து நாம் உணவை மெல்லும் போது, அவை ஒரு அரவை மற்றும் வேதியியல் சிதைவுக்கு உட்படுகிறது. வாயில் ஓரளவு செரிக்கப்பட்ட உணவே பின்னர் வயிற்றுக்கு செல்கிறது; அங்கு இரைப்பை அமிலங்கள் அவற்றை மேலும் நன்றாக செரிக்க செய்கின்றன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிறுகுடல் முக்கிய பங்கு வகிக்கிறது, அங்குள்ள என்சைம்கள் மற்றும் பித்தம் (பைல்) இந்த ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்கும் செயல்முறையைத் தொடர்கின்றன – இங்குதான் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. இந்த நுணுக்கமான செயல்முறை உடலுக்குத் தேவையான ஆற்றல், அதன் வளர்ச்சி மற்றும் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தேவையானவற்றை வழங்குவதை உறுதி செய்கிறது.
உடலின் செரிமானத் திறன் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சில வகையான பானங்கள் உதவலாம். குறிப்பாக இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை அதில் முக்கிய பங்காற்றுகின்றன.
உணவுக்கு முன் அருந்தும் பானங்கள்
உணவுக்கு முன் சில பானங்களை அருந்துவதன் மூலம் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டலாம்; அதனால் தேவையான அளவு வயிற்றின் அமிலத்தன்மை கிடைப்பதால் நல்ல, செரிமான ஆரோக்கியம் சாத்தியமாகிறது. உணவுக்கு முன் அருந்தும் பானங்களில் சேர்க்க இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை போன்றவை மிகுந்த பலன் தருகின்றன. இவை நமது செரிமானத்தை மேம்படுத்தி, உப்புசத்தை குறைத்து, அஜீரணம் ஏற்படாமல் தடுக்கின்றன. பசியின்மையை போக்குதல், நாவில் உள்ள சுவை அரும்புகளை செயல்படுத்துதல், மற்றும் உட்கொள்ளப்படும் உணவுக்கேற்ப செரிமான அமைப்பைத் தயார் செய்தல் உள்ளிட்ட பலன்களையும் இவை வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல், போதுமான நீர்சத்து கிடைப்பதால் ஒட்டுமொத்த செரிமான செயல்பாடுகளும் மேம்படுகிறது. இருப்பினும், இந்த பானங்கள் ஏற்படுத்தும் தாக்கம் நபருக்கு நபர் மாறுபடலாம். எனவே இஞ்சி, எலுமிச்சை மற்றும் பூண்டு ஆகியவற்றிற்கு ஒவ்வாமை இருக்கும் நபர்களும், இரைப்பை அல்சர் பிரச்சினை உள்ள நபர்களும் இந்த பானங்கள் குறித்து கவனமாக இருத்தல் அவசியமாகும்.
சாப்பிடுவதற்கு முன் உட்கொள்ளக் கூடிய 3 அற்புத உணவுப் பொருட்கள்:
எலுமிச்சை: எலுமிச்சையின் அமிலத்தன்மையானது – செரிமானத்திற்கு உதவும் சாறுகள் மற்றும் பித்த (பைல்) உற்பத்தியைத் தூண்டி, உணவின் முறிவுக்கு உதவுகிறது. கூடுதலாக, எலுமிச்சையில் வைட்டமின் C நிறைந்துள்ளது; ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டான வைட்டமின் C ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டிற்கும், செரிமான மண்டலத்தில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
பூண்டு: ஆன்ட்டி-பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ள பூண்டு - சீரான குடல் மைக்ரோபயோட்டா சூழலை ஏற்படுத்த பங்களிக்கக்கிறது. இது இரைப்பை சாறுகளின் உற்பத்தியைத் தூண்டி, செரிமானத் திறனை ஊக்குவிக்கிறது. இதன் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் செரிமான அமைப்பில் இன்ஃப்ளமேஷனால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கிறது.
இஞ்சி: செரிமான என்ஸைம்களைத் தூண்டும் இஞ்சி - செரிமான திறனை மேம்படுத்துகிறது. இரைப்பைப் பாதையில் ஏற்படும் குமட்டல் மற்றும் இன்ஃப்ளமேஷனுக்கு நிவாரணம் தர இது உதவுகிறது. மேலும், இஞ்சியின் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தினையும் ஆதரிக்கிறது.
பானங்கள் வடிவில் உணவுக்கு முன் எலுமிச்சை, பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:
செரிமான ஆரோக்கியம்: உணவுக்கு முன் எலுமிச்சை, பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை பானங்களில் சேர்ப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. எலுமிச்சையின் அமிலத்தன்மை செரிமான சாறுகள் மற்றும் பித்தத்தின் உற்பத்தியைத் தூண்டி, ஜீரணத்தை எளிதாக்குகிறது. பூண்டு இரைப்பை என்ஸைம்களின் உற்பத்திக்கு உதவுவதோடு, உணவை சிறிய கூறுகளாக உடைப்பதில் உதவுகிறது. அதே நேரத்தில் இஞ்சி செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இந்த கலவையானது நல்ல செரிமானத்திற்கு உகந்த சூழலை உருவாக்கி, வயிற்று அசௌகரியத்தை குறைத்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.
பசியைத் தூண்டுகின்றன: உணவுக்கு முந்தைய பானங்களில் எலுமிச்சை, பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றைச் சேர்ப்பதால் பசி தூண்டப்படுகிறது. எலுமிச்சையின் புளிப்பு சுவை மற்றும் பூண்டின் குணம் நாவின் சுவை உணரும் திறனை அதிகரித்து, உணவு உண்பதற்கு முன் பசியைத் தூண்டுகின்றன. மேலும், இஞ்சியின் காரமான மற்றும் வெதுவெதுப்பான பண்புகள் பசியைத் தூண்டுவதில் பங்களிக்கின்றன.
உடல் எடை மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல்: எலுமிச்சை பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவை எடை மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றன. எலுமிச்சை சாறு வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உட்கொள்ளும் ஒட்டுமொத்த உணவின் அளவைக் குறைக்கவும் பங்களிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் பூண்டு மற்றும் இஞ்சி எடை குறைப்பிற்கு பங்களிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை செரிமானத்திற்கு உதவுவதால் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச உதவுகின்றன. எனவே உணவின் ஊட்டச்சத்துக்களை நமது உடல் நன்கு பயன்படுத்துவதை உறுதி செய்கின்றன. இந்த பலன்கள் நம்பகமானவை என்றபோதிலும், நபருக்கு நபர் விளைவுகள் மாறுபடக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியவர்கள்:
இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டாலும், பின்வரும் குறிப்பிட்ட உடல் நல பாதிப்புகள் அல்லது ஒவ்வாமை இருப்பவர்கள், இவற்றின் அளவு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அல்லது இவற்றை தவிர்க்க வேண்டும்.
1. ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது GERD கொண்ட நபர்கள்:
இஞ்சி மற்றும் எலுமிச்சை வயிற்றின் அமில உற்பத்தியைத் தூண்டுகின்றன, எனவே ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) பாதிப்பு உள்ளவர்களுக்கு அவற்றின் அறிகுறிகள் தீவிரமாகும். சில நபர்களுக்கு, பூண்டின் நெடித்தன்மை அசௌகரியத்தினை ஏற்படுத்தலாம்.
2. சென்சிட்டிவான வயிறு உள்ளவர்கள்:
சென்சிட்டிவான வயிறு உள்ளவர்கள் - இஞ்சியை அதிக அளவில் உட்கொள்ளும்போது, அது இரைப்பை அமில உற்பத்தியை அதிகரித்து, செரிமான அசௌகரியத்தினையும் ஏற்படுத்துகிறது; அதுபோல அவர்கள் பூண்டினை அதிகமாக உட்கொள்ளும்போது, இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
3. இஞ்சி, பூண்டு, எலுமிச்சைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள்:
ஒரு சிலருக்கு இஞ்சி, பூண்டு அல்லது எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களுக்கு ஏற்கனவே அலர்ஜி இருந்தால், அவர்கள் ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தடுக்க இவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
4. இரத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் தின்னிங் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளர்கள்:
இஞ்சிக்கு லேசாக இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் பண்பு உள்ளது. மேலும் பூண்டில் இரத்தம் உறைவதை குறைக்கும் கூறுகள் உள்ளன. இரத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள், இவற்றை வழக்கமாக உட்கொள்வதற்கு முன்பு தங்களது மருத்துவ நிபுணர்களின் அறிவுரையைப் பெற வேண்டும்.
5. குறிப்பிட்ட இடைவினைகளை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொள்பவர்கள்:
சில மருந்துகள் இஞ்சி, பூண்டு அல்லது எலுமிச்சையுடன் வினைபுரியலாம். உதாரணமாக, இஞ்சி சில இரத்த அழுத்த மருந்துகளுடன் வினைபுரிகிறது. அதுபோன்ற குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் இம்மூன்றையும் தங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன்பு அவரவர் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
6. இரைப்பை-குடல் பிரச்சினைகள் உள்ளவர்கள்:
எரிச்சலுடன் கூடிய குடல் அழற்சி (IBS) அல்லது இன்ஃப்ளமேட்டரி குடல் நோய் (IBD) போன்ற சில இரைப்பை-குடல் பிரச்சினைகள் உள்ளவர்கள், அதிக அளவு பூண்டு மற்றும் இஞ்சி உட்கொள்வதன் மூலம் வாயு மற்றும் வயிறு உப்புசம் உள்ளிட்ட தீவிரமான அறிகுறிகளை எதிர்கொள்ளலாம்.
இஞ்சி, பூண்டு, எலுமிச்சை கொண்டு தயாரிக்கக்கூடிய உணவுக்கு முன்பு அருந்த சில சிறந்த பானங்கள்:
இஞ்சி-பூண்டு-எலுமிச்சை ஜூஸ்:
தேவையான பொருட்கள்:
- ஒரு துண்டு புதிய இஞ்சியை தோல் நீக்கி, அரைத்துக்கொள்ளவும்.
- 2 பற்கள் பூண்டை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
- 2 எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்
- 2 தேக்கரண்டி தேன் (சுவைக்கு ஏற்ப) அல்லது நாட்டு சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன்
- 4 கப் குளிர்விக்கப்பட்ட நீர்
- புதினா இலைகள் (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை:
- ஒரு சிறிய வாணலியில், அரைத்த இஞ்சி, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பூண்டு ஆகியவற்றை போட்டு, 1 கப் தண்ணீரில் இதமாக சூடாக்கவும்.
- இந்த கலவையில் தேவையான அளவு தேன் / நாட்டு சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலக்கவும். சுவைகள் சேர சுமார் 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.
- பின்பு அடுப்பை நிறுத்திவிட்டு அதனை அறை வெப்பநிலையில் குளிர்விக்கவும்.
- இஞ்சி-பூண்டு கலவையை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
- பிழிந்துவைத்த எலுமிச்சை சாற்றை அதில் சேர்க்கவும்.
- மீதமுள்ள 3 கப் குளிர்ந்த நீரை அதில் ஊற்றி நன்கு கிளறவும்.
- தேவைப்பட்டால் கூடுதலாக தேன் சேர்ப்பதன் மூலம் இனிப்பை அதிகரிக்கலாம்.
- பரிமாறுவதற்கு முன் இந்த பானத்தை குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரமாவது குளிர வைக்கவும்.
- ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும், தேவைப்பட்டால் சில புதிய புதினா இலைகளைக் கொண்டு அலங்கரிக்கவும்.
இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சேர்த்த சூப்:
தேவையான பொருட்கள்:
- 4 கப் தண்ணீர்
- தோல் நீக்கி சிறுதுண்டுகளாக வெட்டப்பட்ட 1 துண்டு இஞ்சி
- சிறுதுண்டுகளாக வெட்டப்பட்ட 3 பூண்டு பற்கள்
- 1 எலுமிச்சயின் சாறு
- 2 தேக்கரண்டி தேன் (இனிப்பு தேவைப்பட்டால்)
- ஒரு சிட்டிகை மிளகுத்தூள் (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை:
- ஒரு சிறிய வாணலியில், 4 கப் தண்ணீரை லேசாக கொதிக்க விடவும்.
- கொதிக்கும் நீரில் வெட்டப்பட்ட இஞ்சி மற்றும் பூண்டினை சேர்க்கவும்.
- உங்களுக்கு எந்தளவிற்கு சாறு காரமாக வேண்டுமோ அந்தளவிற்கு, இஞ்சி மற்றும் பூண்டை சுமார் 10-15 நிமிடங்கள் சூடான நீரில் கொதிக்க விடவும்.
- பின்பு வடிகட்டுவதன் மூலம் இஞ்சி மற்றும் பூண்டு துண்டுகளை அகற்றவும்.
- வடிகட்டிய திரவத்தில் எலுமிச்சை சாற்றை தேவைக்கேற்ப சேர்க்கவும்.
- சிறிது இனிப்பு தேவைப்பட்டால் தேன் சேர்க்கவும்.
- மேலும் காரம் தேவைப்படுபவர்கள், ஒரு சிட்டிகை மிளகுத் தூளை சேர்க்கவும்.
- பின்னர் நன்கு கிளறி சுவைக்கவும்.
முடிவுரை:
உணவுக்கு முன் இஞ்சி, பூண்டு, மற்றும் எலுமிச்சை ஆகியவற்றினை பானமாக அருந்துபவர்களுக்கு அவற்றின் பலன்கள் அல்லது விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலும் பலருக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படுவதில்லை. இருப்பினும், குறிப்பிட்ட உடல்நலக் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான மருந்துகள் உட்கொள்பவர்கள் இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சையை உணவில் சேர்க்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து அவரவர் மருத்துவரிடம் பிரத்தியேக ஆலோசனையைப் பெறவும்.