அசாதாரண நடை – ஒரு அறிமுகம்:
ஒருவரது நடை அசாதரணமாக இருந்தால் அதனை மருத்துவ ரீதியாக ‘கெயிட் அப்நார்மலிட்டி’ என்கிறார்கள் – அடிப்படையில் ஏதேனும் மருத்துவ பாதிப்புகள் இருப்பதன் சமிக்ஞையாக அசாதரணமான நடை வெளிப்படுகிறது. ஒருவர் நகரும், நிற்கும் மற்றும் நடக்கும் விதங்கள் கூட அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களை தெரிவிக்கலாம். நடக்கும் தோரணை இயல்பாக இருப்பதிலிருந்து சிறிதளவு மாறுவது முதல் முற்றிலும் மாறுபட்டு நடப்பது, நிற்கும் போது சமநிலையை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்படுவது உள்ளிட்ட மாற்றங்கள் ‘அப்நார்மலிட்டி’ எனப்படுகின்றன. நமது நடை இயல்பாக உள்ளதா? இல்லை அசாதரணமாக உள்ளதா? அதற்கு என்ன காரணம்? பின்னணியில் ஏதேனும் ஆபத்தான உடல்நல பாதிப்பு இருக்குமா? அல்லது தற்காலிகமான உடல் சோர்வினால் அப்படி நிகழ்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடைகளையும், இந்த பிரச்சினைக்கான தீர்வினையும் இந்த கட்டுரையில் காண்போம்.
அசாதாரண நடையை இயல்பான நடையிலிருந்து அடையாளம் காணும் வழிகள்:
கெயிட் அப்நார்மலிட்டிஸ் என்று அழைக்கப்படும் அசாதாரணமான நடையை - நடக்கும் தோரணை, முன்னெடுத்து வைக்கும் காலடிகள், கை-கால்-உடல் ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்திசைவு மற்றும் ஏற்கனவே இருக்கும் மருத்துவ ரீதியான நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தி புரிந்துகொள்ளலாம். அதற்கான சில வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. நடக்கும் தோரணை மற்றும் அதற்கேற்ற உடல் சீரமைப்பு:
- இயல்பாக நடக்கும் நபர்கள் பொதுவாக நேராகவும், நிமிர்ந்த தோரணையுடனும் இருப்பார்கள். அவர்களது உடலும் அதற்கேற்ப ஒருங்கிணைந்த முறையில் சீராக நகரும். கைகள் இயற்கையாகவே முன்னும் பின்னும் சென்று வரும்.
- கெயிட் அப்நார்மலிட்டிஸ் உள்ள நபர்கள் வழக்கமான நிமிர்ந்த தோரணையில் இருந்து மாறுபட்டு இருப்பார்கள். தசை-எலும்பு மண்டலத்தை பாதிக்கும் உடல்நல பாதிப்புகள், அல்லது நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள் தலையைக் குனிந்த தோரணையிலோ அல்லது சமச்சீரற்ற தோரணையிலோ நடப்பார்கள்.
2. காலடிகளுக்கு நடுவிலான சீரான இடைவெளி மற்றும் இடைவேளை:
- இயல்பான நடையில் ஸ்ட்ரைடு நீளம் எனப்படும் காலடிகளுக்கு நடுவிலான இடைவெளி சீராக இருக்கும்; காலடிகள் ஒன்றன் பின் ஒன்று செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேர இடைவேளையும் சீராக இருக்கும். கால்கள் ஒருமித்த போக்கில் மேலே உயர்த்தப்பட்டு, குதிகால் முதல் கால்விரல்கள் வரை தடம் பதிக்கும் பாணியும் இலகுவாக சிரமமின்றி நிகழும்.
- கெயிட் அப்நார்மலிட்டி உள்ளவர்களின் ஸ்ட்ரைடு நீளம் ஒழுங்கற்றதாக, அல்லது காலடிகள் ஒன்றன் பின் ஒன்று செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேர இடைவேளை மாறுபட்டும் இருக்கும். தசை பலவீனம், மூட்டு பிரச்சினைகள் அல்லது நரம்பியல் கோளாறுகள் போன்ற நிலைமைகளால் இதுபோன்ற சீரற்ற அல்லது வேறுபடும் நடை பாணி ஏற்படலாம்.
3. கை அசைவுகள் மற்றும் ஒத்திசைவு:
- இயல்பான நடையில், கைகள் ஊஞ்சல் போல கால்களின் அசைவுகளுடன் ஒத்திசைந்து, ஒரு சரியான சமநிலை மற்றும் வேகத்துடன் இருக்கும். கால்களுக்கு எதிரான திசையில் கைகள் இயற்கையான முறையில் முன்பின்னாக சென்றுவருவதாக இருக்கும்.
- கெயிட் அப்நார்மலிட்டிஸ் உள்ளவர்களுக்கு கை அசைவுகள் இயல்பான ஒருங்கிணைப்புடன் இருக்காது. பார்கின்சன் நோய் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, நடக்கும் போது கைகள் முன்பின்னாக அசைவது குறைவாகவோ அல்லது முற்றிலும் அசையாமலோ இருக்கலாம்.
4. பாதம் மற்றும் கால்விரல்களை பதித்து நடத்தல்:
- குதிகாலில் துவங்கி கால் விரல்கள் வரை பதித்து வைக்கப்பட்டு இயல்பான நடை நிகழ்கிறது. கால்விரல்களை பதித்து அப்படியே எடுப்பதாக இருக்குமே தவிர இழுத்தபடி கோடுகளை ஏற்படுத்தாது. மேலும், ஒவ்வொரு அடிகள் எடுத்து வைக்கையில் மாற்றம் இயல்பாக சிரமமின்றி இருக்கும்.
- அசாதாரண நடை என்றால் கால்விரல்களால் நடப்பது, அல்லது பாதத்தை சரியாக தூக்க முடியாமல் தேய்த்தபடி நடப்பது, கால் விரல்களை இழுத்தபடி நடப்பது போன்ற சிக்கல்கள் இருக்கும்.
5. வேகம் மற்றும் உடல் சமநிலை:
- இயல்பான நடையில் வேகம் பொதுவாக சீராகவும், சௌகரியமாகவும் இருக்கும். உடலையும் சமநிலையில் வைத்து எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் நடக்க முடியும்.
- விரைவாக அல்லது மெதுவாக மாறிமாறி நடப்பது என வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் கெயிட் அப்நார்மலிட்டிஸ் பாதிப்பினைக் குறிக்கலாம். உடல் சமநிலை பிரச்சினைகள் ஏற்பட்டு நிலையற்ற நடை அல்லது நடையில் தடுமாற்றம் நேரலாம்.
6. குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய அசாதாரண நடை:
- குறிப்பிட்ட சில தசை-எலும்பு மண்டல பிரச்சினைகள் அல்லது நரம்பியல் பிரச்சினைகள் இல்லாத நபர்கள் இயல்பான நடையை கொண்டிருப்பார்கள். நரம்பியல் கோளாறுகள் (உதாரணமாக பார்கின்சன் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ்), தசை-எலும்பு மண்டல பிரச்சினைகள் (உதாரணமாக கீல்வாதம், மூட்டு பிரச்சினைகள்), காயங்கள் அல்லது வளர்ச்சிக் கோளாறுகள் (உதாரணமாக பெருமூளை வாதம்) உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கு நடை அசாதரணமாக இருக்கலாம்.
7. அசாதாரண நடையின் அறிகுறிகள்:
- இயல்பான நடையானது எவ்வித வலியும் இல்லாமல், சிரமமின்றி ஒருங்கிணைந்த இயக்கத்துடன் இருக்கும்.
- ஆனால் நடப்பதில் மாறுபாடுகள் உள்ள நபர்கள், அவரவரது பிரச்சினையின் தன்மைக்கேற்ப - வலி, பிடிப்பு, பலவீனம் அல்லது அசௌகரியம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நடக்க வேண்டியிருக்கலாம்.
சாதாரணமாக நமக்கு நடப்பதில் பிரச்சினை ஏற்பட்டவுடனே அதனை, கெயிட் அப்நார்மலிட்டி என்ற தீர்மானித்துவிட முடியாது. மேற்கூறியது போன்ற வேறுபாடுகளை அங்கீகரிக்க மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல் அவசியமாகும். அவரால் மட்டுமே அதற்கான காரணத்தை கண்டறிந்து, மேற்படி உரிய சிகிச்சை உத்திகளை தீர்மானிக்கவும் முடியும். யாராவது தங்கள் நடையில் நீண்டகலாமாக மாற்றங்கள் இருப்பதாக உணர்ந்தால் அவர் ஒரு மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம்.
கெயிட் அப்நார்மலிட்டி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்:
1. நரம்பியல் கோளாறுகள்: பக்கவாதம், பார்கின்சன் நோய் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டால், அது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி, நபருக்கு நபர் மாறுபடும் அசாதரணமான நடைக்கு வழிவகுக்கிறது. இந்த கோளாறுகள் உள்ள நபர்கள் பெரும்பாலும் நடப்பதில் முழு கட்டுப்பாடு இல்லாமல், சில சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு விதமான நரம்பியல் பாதிப்புகளும் அதற்கேற்ப கெயிட் அப்நார்மலிட்டியை வெளிப்படுத்தும்.
2. தசை-எலும்பு மண்டல பிரச்சினைகள்: கீல்வாதம் (ஆர்த்ரிட்டிஸ்) அல்லது மூட்டு பிரச்சினைகள் போன்ற பாதிப்புகளின் காரணமாக தசை-எலும்பு மண்டல கட்டமைப்பில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் வலி, பிடிப்பு, மற்றும் உடல் அசைவுகளில் சில இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்கள் ஒருவர் நடக்கும் விதத்தை பாதிக்கின்றன. நடப்பதில் ஏற்படும் அசௌகரியம், மற்றும் நடக்கும் போது நிலைத்தன்மை இல்லாமல் தடுமாறுதல் போன்ற வெளிப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.
3. காயங்கள்: எலும்பு முறிவுகள் மற்றும் தசைநார் (லிகமென்ட்) சுளுக்கு போன்ற காயங்கள் ஒருவரது நடையின் பயோமெக்கானிக்கல் அமைப்பை நேரடியாக பாதிக்கின்றன. வலியைக் குறைப்பதற்காகவும், காயமடைந்த பகுதிகளைப் பாதுகாக்கப்பதற்காகவும் அந்தந்த நபர்கள் தாங்கள் நடக்கும் தொனியை மாற்றியமைக்கும் அவசியம் ஏற்படும். எடுத்து வைக்கும் ஸ்ட்ரைட் நீளம், காலடிகளுக்கு இடையிலான சீரான நேரம், மற்றும் ஒட்டுமொத்த நடக்கும் முறையிலும் கவனிக்கத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
4. வளர்ச்சிக் குறைபாடுகள்: பெருமூளை வாதம் (செரிபிரல் பால்ஸி) மற்றும் மச்குலர் டிஸ்டிராபி போன்ற வளர்ச்சிக் கோளாறுகள் காரணமாக இயல்பான நடை மாறுபட்டு, தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள நேர்கிறது. நடை மற்றும் உடல் தோரணையை பாதிக்கும் பெருமூளை வாதம் ஒருவருக்கு பல்வேறு வலிகளை ஏற்படுத்துகிறது. இது மெல்லமெல்ல தசைச் சிதைவை ஏற்படுத்தும் ஒரு மரபணு பாதிப்பாகும்; இதனால் தசைகள் பலவீனமடைந்து ஒருவரது நடக்கும் திறன் கணிசமாக பாதிக்கப்படுகிறது.
அசாதாரணமான நடையின் வகைகள்:
அசாதாரணமான நடை, அல்லது கெயிட் அப்நார்மலிட்டிஸ் பல்வேறு வழிகளில் வெளிப்படலாம், ஒவ்வொன்றும் மாறுபட்ட அடிப்படை சிக்கல்களைக் குறிக்கின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கே காணலாம்:
1. ஆன்டால்ஜிக் (Antalgic) நடை:
எடையைத் தூக்கும் போது வலி ஏற்படும் நபர்கள் ஆன்டால்ஜிக் வகை நடையை வெளிப்படுத்தலாம்; இது வலிமிகுந்த மூட்டில் எடையைத் தாங்கும் நேரத்தைக் குறைப்பதற்காக, பாதிக்கப்பட்ட பக்கத்தை குறைவாகவே ஊன்றி நடப்பதாகும். எலும்பு முறிவுகள், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் அல்லது காலில் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வலி ஆகியன ஆன்டால்ஜிக் நடைக்கான பொதுவான காரணங்களாகும்.
2. அட்டாக்ஸிக் (Ataxic) நடை:
அட்டாக்ஸிக் நடை என்பது சீராக ஒருங்கமைக்கப்படாத, நிலையற்ற நகர்தலாகும்; இது பெரும்பாலும் பாதங்களை வைப்பதிலும் மற்றும் கால் நகர்வுகளிலும் ஒரு கட்டுப்பாடு இல்லாத நிலையாகும். இது சிறுமூளை பாதிப்புகள், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் அல்லது சில வகையான நரம்பியல் கோளாறுகளால் ஏற்படுகிறது.
3. ஸ்டெப்பேஜ் நடை:
பாதத்தை சரியாக தூக்க முடியாத நிலையால் அவதியுறும் நபர்கள், விரல்களை தரையில் தேய்த்தபடி நடப்பதைத் தவிர்க்க, பரேடு நடப்பதைப்போல கால்களை வழக்கத்தை விட மேலே தூக்கி நடப்பார்கள். பெரோனியல் நரம்பு காயம், மஸ்குலர் டிஸ்டிராபி அல்லது டார்சி ஃப்ளெக்சர் தசை பாதிப்புகளால் இப்படி நடக்க நேர்கிறது.
4. ஸ்பாஸ்டிக் நடை:
ஸ்பாஸ்டிக் நடை என்பது கால்களில் நெகிழ்வுத்தன்மை குறைவதால், பிடிப்பு ஏற்பட்டு விறைப்பாக நடக்கும் நிலையாகும். தண்டுவடத்தில் ஏற்படும் காயம், பெருமூளை வாதம் அல்லது சில வகையான நரம்பியல் கோளாறுகள் இதற்கு காரணமாகும்.
5. சிசர்ஸ் நடை:
ஒரு கத்தரிக்கோல் போல குறுக்கு வாட்டில் ஒரு காலின் இடையே மற்றொரு கால் வருவது போல நடப்பது சிசர்ஸ் நடை எனப்படுகிறது. இடுப்பு பகுதியோடு கால்களை இணைக்கும் தசைகளின் சுருக்கத்தால் இப்படி நடக்க நேரிடுகிறது. பெருமூளை வாதம், தண்டுவடத்தில் ஏற்படும் புண்கள் அல்லது தசை ஒருங்கிணைப்பை பாதிக்கும் பிற சிக்கல்கள் இதற்கு காரணமாகும்.
6. வேட்லிங் நடை:
ஒருபக்கமாக சாய்ந்து தள்ளாடியபடி நடக்கும் நடை வேட்லிங் நடை எனப்படுகிறது. இது பெரும்பாலும் இடுப்பு தசைகளில் பலவீனம் அல்லது உறுதியற்ற இடுப்பினை கொண்ட நபர்களுக்கு ஏற்படுகிறது. மஸ்குலர் டிஸ்டிராபி, ஹிப் டிஸ்ப்ளாசியா அல்லது பெல்விக் நிலைத்தன்மை இல்லாததே இதற்கு காரணமாகும்.
7. ட்ரெண்டலென்பர்க் நடை:
கைகளை ஆட்டி நடக்கும் போது ஊன்றாத பக்கத்தினை நோக்கி சாய்ந்து நடக்க நேரிடுகிறது. இது பெரும்பாலும் இடுப்பு தசைகளின் பலவீனம் காரணமாக ஏற்படுகிறது. இடுப்புப் பகுதியில் ஏற்படும் கீல்வாதம், நரம்பியல் காயங்கள் அல்லது தசை பலவீனம் போன்றவை இடுப்பு தசைகளை பலவீனமாக்குகின்றன.
8. பார்கின்சோனியன் நடை:
சிறிய சிறய காலடிகள் எடுத்துவைத்து நடப்பது, கைகளை குறைவாக ஆட்டி, தள்ளாடி நடப்பது பார்கின்சோனியன் நடை எனப்படுகிறது. இது பெரும்பாலும் பார்கின்சன் நோய் அல்லது சில மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு வகையான அசாதாரண நடைகளை அவற்றின் அடிப்படை காரணிகளாக இருக்கும் உடல்நல பாதிப்புகளை அடையாளம் கண்டு, மருத்துவர்கள் மேற்படி பரிசோதனைகள் மற்றும் உரிய சிகிச்சைகள் ஆகியவற்றை வழங்குவார்கள். கெயிட் அப்நார்மலிட்டிஸ் வகைப்பாடுகளில் சில வகைகள் ஒன்றுபோல இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கெயிட் அப்நார்மலிட்டிஸ் பாதிப்புகளுக்கான சிகிச்சைகள்:
அந்த குறிப்பிட்ட நடை பிரச்சினையின் காரணங்களுக்கு ஏற்ப கெயிட் அப்நார்மலிட்டிஸ் சிகிச்சைகள் பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். பெரும்பாலும் உடலியல் சிகிச்சை, மருந்துகள் மற்றும் சில நேரங்களில், எலும்பியல் சிகிச்சை அல்லது அறுவைசிகிச்சைகள் ஆகியவற்றின் கலவையான அணுகுமுறையை உள்ளடக்கியதாக இருக்கும். தசைகளில் ஏற்படும் சமநிலை பாதிப்புகளை நிவர்த்தி செய்வது, ஒருங்கிணைந்த அசைவுகளை மேம்படுத்துவது, ஒட்டுமொத்த நடையை மேம்படுத்துவது ஆகியவற்றில் உடலியல் சிகிச்சை முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரேஸ்கள் அல்லது சிறப்பு காலணிகள் போன்ற ஆர்த்தோடிக் சாதனங்கள் மிகவும் இயற்கையான நடை முறையை ஊக்குவிப்பதற்கும், ஆதரவாக இருப்பதற்கும் பரிந்துரைக்கப்படலாம். நரம்பியல் கோளாறுகளில் ஏற்படும் பிடிப்புகள், அல்லது தசை-எலும்பு பிரச்சினைகளால் ஏற்படும் வலி உள்ளிட்ட குறிப்பிட்ட பாதிப்புகளை நிர்வகிக்க மருந்துகள் பயன்படுத்தப்படலாம். எலும்பு அமைப்புகளில் ஏதேனும் அசாதாரணங்கள் அல்லது காயங்கள் இருந்தால், அடிப்படை காரணத்தை நிவர்த்தி செய்வதற்கும்; இயல்பான நடையை மீட்டெடுப்பதற்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படலாம். அந்தந்த நபரின் நிலைமையைப் பொருத்து சிகிச்சைகள் பிரத்தியேகமாக தீர்மானிக்கப்படுகின்றன.
முடிவுரை:
அப்நார்மல் கெயிட் தொடர்பான சிக்கல்களைப் புரிந்துகொள்ள, அவை சரியாக அடையாளம் காணப்பட வேண்டும். சிகிச்சை வாய்ப்புகள் என்ன உள்ளன என்பதை பொருத்திப்பார்த்து அதற்கேற்ப உரிய சிகிச்சை வழங்கப்படும். அசாதாரண நடையை அலட்சியம் செய்யாமல் அதன் தீவிரத்தை உணர்ந்து, அவற்றை முன்கூட்டியே நிவர்த்தி செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர் இயல்பான நடையைத் திரும்பப் பெறலாம்.