சிறுநீரக கற்கள் - ஒரு அறிமுகம்
நாம் வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களையும், சிறுநீரகங்களையும் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம். வாட்டர் பியூரிஃபையர் எப்படி தண்ணீரில் உள்ள அசுத்தங்கள், கரைசல்கள், தாதுக்கள் போன்றவற்றை நீக்குகிறதோ அதை விட பல மடங்கு நமது சிறுநீரகங்கள் மேம்பட்டதாகும். இவை நமது இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், கழிவுகள் மற்றும் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற அதிகப்படியான தாதுக்களை அகற்றுவதிலும் சிறப்பாக செயல்படுகின்றன. தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களில் உள்ள ஃபில்ட்டரில் எப்படி படிகங்கள் படிவதை காணலாம். அவற்றை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும் அல்லது ஃபில்ட்டரை மாற்ற வேண்டும்.
நமது சிறுநீரகங்களிலும் அவ்வப்போது இது போன்ற படிமங்கள் சேரும், ஆனால் சிறுநீரகங்களில் இயற்கையாகவே அப்படிப்பட்ட கழிவுகள் மற்றும் படிமங்களை வெளியேற்றுவதற்கான சிறப்பான பொறிமுறைகள் உள்ளன. இது ஒரு வடிகட்டி வழியாக செல்லும் துகள்களைப் போலவே, சிறுநீரின் வழியாக இயல்பாக அந்த சிறிய கற்கள் வெளியேற்றப்படும். இருந்த போதிலும் கழிவுகளை வெளியேற்றுவதற்கான உடலின் இயற்கையான வழிமுறைகள் சில நேரங்களில் தோல்வியடையலாம். அப்படி சேரும் தாதுக்கள் தான் சிறுநீரக கற்களாக பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. கற்களின் அளவைப் பொருத்து மருத்துவர்கள் சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பார்கள்.
இவை ஒரு பக்கம் இருக்க, நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுப்பதாக அறியப்படுகிறது. அதுபற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
நீரிழிவு நோய்க்கான மருந்துகள் எவ்வாறு பயனளிக்கும்?
நீரிழிவு நோய்க்கான மருந்துகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம்; அல்லது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம்; அல்லது உணவில் இருந்து குளுக்கோஸை உறிஞ்சுவதைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உதவுகின்றன. நேரடி இன்சுலின், மெட்ஃபார்மின் (), சல்ஃபோனைல்யூரியாஸ் (Sulfonylureas), மெக்லிடினைட்ஸ் (Meglitinides) என பல்வேறு வகையான நீரிழிவு நோய்க்கான மருந்துகள் உள்ளன.
நீரிழிவு நோய்க்கான மருந்துகள் சிறுநீரக கற்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் வழிகள்:
பொதுவாக மூன்று வகையான நீரிழிவு நோய்க்கான மருந்துகள் உள்ளன; முதலில் அவை பற்றியும், அவை எப்படி செயல்படுகிறது என்பது பற்றியும் காண்போம். பின்னர் அவற்றில் சிறுநீரக கற்களைக் குறைப்பதில் பங்களிக்கும் மருந்துகள் பற்றி தனித்தனியாகக் காண்போம்.
பல்வேறு வகையான நீரிழிவு நோய்க்கான மருந்துகள்
1. இன்சுலின்: நமது உடலில் இயற்கையாக சுரக்கும் இன்சுலின், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தசைகள் மற்றும் கொழுப்பில் சேகரித்து வைக்கிறது. இன்சுலின் குறைபாடு உள்ள நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சையாக இன்சுலின் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் இரத்த ஓட்டத்திலிருந்து குளுக்கோஸை செல்கள் உறிஞ்சுவதால், இரத்த சர்க்கரை அளவு சீராகிறது.
2. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் மருந்துகள்:
a. சல்ஃபோனைல்யூரியாஸ் (Sulfonylureas): பீட்டா செல்களில் குறிப்பிட்ட ஏற்பிகளை இணைப்பதன் மூலம் இந்த மருந்து அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய கணையத்தைத் தூண்டுகிறது. பின்னர் இன்சுலின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
b. மெக்லிடினைடுகள் (Meglitinides): சல்போனைல்யூரியா மருந்துகளைப் போலவே, இந்த மருந்துகளும் கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்றன, குறிப்பாக உணவு உண்ட பிறகு அதிகரிக்கும் குளுகோஸ் (சர்க்கரை) அளவினை சமாளிக்கும் விதமாக இவை செயல்படுகின்றன.
3. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் மருந்துகள்:
a. மெட்ஃபார்மின் (பிகுவானைட்ஸ் / Biguanides): இந்த மருந்து கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது, இதனால் உயிரணுக்களின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, தசைகளில் குளுக்கோஸ் சேகரிக்கப்படுவதை மேம்படுத்துகிறது; இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
b. தியாசோலிடைனிடியோன்ஸ் (TZDs / Thiazolidinediones): இந்த மருந்துகள் கொழுப்பு, தசை மற்றும் கல்லீரல் உயிரணுக்களில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன, அதே நேரத்தில் கல்லீரலால் குளுக்கோஸ் உற்பத்தியும் குறைக்கின்றது.
c. டைபெப்டைடில் பெப்டிடேஸ்-4 (DPP-4 / Dipeptidyl Peptidase-4) இன்ஹிபிட்டார்ஸ்: இன்சுலின் வெளியீட்டைத் தூண்டும் மற்றும் குளுகோகன் சுரப்பைத் தடுக்கும் இன்க்ரெடின் (incretin) என்கிற ஹார்மோன்கள் நிற்பதை இந்த மருந்து தடுக்கிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
d. SGLT2 இன்ஹிபிட்டார்ஸ்: சிறுநீரகங்களில் குளுக்கோஸ் மீண்டும் உறிஞ்சப்படுவதை இந்த மருந்துகள் தடுக்கின்றன; இது சிறுநீரின் வழியாக குளுக்கோஸ் வெளியேற்றத்தை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் வழிவகுக்கிறது. இந்த வகை மருந்துகள் மட்டும் சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
சிறுநீரக கற்களை உருவாக்குபவை:
இந்த பின்வரும் கூறுகள் சிறுநீரகங்களில் படிகமாகி, திரண்டு, சிறுநீரக கற்களாக உருவாகின்றன. சிறுநீரில் இவற்றின் செறிவைக் குறைப்பது அல்லது அவற்றின் படிகமயமாக்கலைத் தடுப்பதன் மூலம் சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம்.
- கால்சியம்: சிறுநீரில் உள்ள மற்ற கூறுகளுடன் கால்சியம் இணையும்போது கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் கால்சியம் பாஸ்பேட் என இரண்டு வகையான சிறுநீரக கற்கள் உருவாகலாம்.
- ஆக்ஸலேட்: பல உணவுகளில் காணப்படும் ஆக்ஸலேட் என்கிற தாது சிறுநீரில் உள்ள கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்களை உருவாக்குகிறது.
- யூரிக் அமிலம்: சிறுநீரில் அதிக அளவு யூரிக் அமிலம் இருந்தால் யூரிக் அமில கற்கள் உருவாகலாம், குறிப்பாக முடக்குவாதம் போன்ற நிலைமைகளைக் கொண்ட நபர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம்.
- சிஸ்டீன்: சிறுநீரில் சிஸ்டீன் என்கிற அமினோ அமிலம் அதிகமாக இருக்கும்போது சிஸ்டீன் கற்கள் உருவாகலாம், பெரும்பாலும் சிஸ்டீனுரியா எனப்படும் மரபணு நிலை காரணமாக இப்பிரச்சினை ஏற்படுகிறது.
சிறுநீரக கற்களைக் குறைக்க நீரிழிவு நோய்க்கான மருந்துகள் எப்படி உதவுகின்றன?
1. இன்சுலினும் சிறுநீரக கற்களும்:
இன்சுலின் நேரடியாக இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால் சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தை மறைமுகமாக குறைக்கிறது. உயிரணுக்களால் குளுக்கோஸ் ஏற்கப்படுவதை ஊக்குவிப்பதன் மூலம், சிறுநீரில் குளுக்கோஸின் செறிவு குறைகிறது. இதனால் கால்சியம் ஆக்சலேட் கல் உருவாகும் அபாயமும் குறைகிறது; ஏனெனில் சிறுநீர் குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அது கால்சியம் மற்றும் ஆக்சலேட் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது.
2.இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் மருந்துகள் எப்படி சிறுநீரக கற்களை தடுக்க உதவுகின்றன
சல்போனைல்யூரியாஸ் மற்றும் மெக்லிடினைட்ஸ்: இந்த மருந்துகள் முக்கியமாக கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன; இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம், அவை சிறுநீரில் குளுக்கோஸின் செறிவை மறைமுகமாக குறைக்கின்றன; அதிக சிறுநீர் குளுக்கோஸ் காரணமாக கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.
3. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் மருந்துகள் எப்படி சிறுநீரக கற்களை தடுக்க உதவுகின்றன
a. மெட்ஃபார்ர்மின்: மெட்ஃபார்மின் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது; உயிரணுக்களின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து சிறுநீரில் குளுக்கோஸின் செறிவைக் குறைக்கிறது. மெட்ஃபோர்மின் அதிக சிறுநீர் குளுக்கோஸால் கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
b. தியாசோலிடைனிடியோன்ஸ் (TZDs): இந்த மருந்துகள் கொழுப்பு, தசை மற்றும் கல்லீரல் உயிரணுக்களில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, குளுக்கோஸ் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதை பார்த்தோம். குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம், TZDs மறைமுகமாக சிறுநீர் குளுக்கோஸ் அதிகமாகாமல் தடுத்து, கற்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்கிறது.
c. டைபெப்டைடில் பெப்டிடேஸ்-4 இன்ஹிபிட்டார்ஸ்: இந்த வகை மருந்துகள் ஹார்மோன்களின் நிறுத்ததை தடுப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. பின்னர் சிறுநீரில் சர்க்கரை அளவு குறைந்து கற்கள் ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது.
நீரிழிவு நோய்க்கான மருந்துகளுடன் சேர்ந்து சில உணவுப் பழக்கங்களும் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்
- தண்ணீர்: சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சர்க்கரை நோய் மேலாண்மை ஆகிய இரண்டிற்கும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்ய உதவுகிறது; இதனால் கற்களை உருவாக்கும் கூறுகள் சேரமுடியாமல் போகிறது. தண்ணீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்கள்: பால், தயிர் மற்றும் சீஸ் போன்றவற்றில் குறைந்த கொழுப்புள்ள ரகங்களை மிதமான அளவில் உட்கொள்வதால் கால்சியம் ஆக்சலேட் கற்களின் அபாயத்தை அதிகரிக்காமல், கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்க முடியும். அதிக சர்க்கரை உள்ள மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பால் பொருட்களில் குறைவான கிளைசெமிக் அளவே உள்ளன.
- கொழுப்பற்ற புரதங்கள்: சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுக்கு பதிலாக கோழி, மீன், டோஃபு மற்றும் பருப்பு வகைகள் போன்ற கொழுப்பற்ற புரதங்களைத் தேர்வுசெய்யவும். இந்த புரத மூலங்களில் பியூரின்கள் குறைவாக உள்ளன, இது சிறுநீரில் அதிக அளவு யூரிக் அமிலத்தைக் குறைப்பதால் யூரிக் அமில கற்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
- மூலிகை சமையல் பொருட்கள்: துளசி, பார்ஸ்லி, கொத்தமல்லி மற்றும் இஞ்சி போன்றவை கூடுதல் உப்பு அல்லது சர்க்கரை சேர்க்காமல், உணவுகளின் சுவையை உயர்த்துகிறது. சில சமையல் மூலிகைகளுக்கு டையூரிடிக் (நீரை வெளியேற்றும்) பண்புகள் உள்ளன; அவை சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது.
- ஆரோக்கியமான கொழுப்புகள்: அவகாடோ, பருப்புகள், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும். இந்த கொழுப்புகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன; அதே நேரத்தில் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவுகிறது.
- பழங்கள் மற்றும் காய்கறிகள்: பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்சலேட் குறைவாகவும், நீர் உள்ளடக்கம் அதிகமாகவும் உள்ளது; இவை சிறுநீரக கல் தடுப்பு மற்றும் சர்க்கரை நோய் மேலாண்மை ஆகிய இரண்டிற்கும் சிறந்த தேர்வுகளாக அமைகிறது. உதாரணமாக வெள்ளரிகள், குடை மிளகாய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் பெர்ரி பழங்கள் போன்றவை.
முடிவுரை
நீரிழிவு நோய்க்கான மருந்துகள் முக்கியமாக குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் மற்றும் இன்சுலின் ஒழுங்குமுறையை குறிவைத்து செயல்படுகின்றன. இது சிறுநீரில் குளுக்கோஸ் அதிகமாகாமல் இருப்பதற்கு மறைமுகமாக உதவுகின்றன. மேலும் அதிக சிறுநீர் குளுக்கோஸ் அளவுகளுடன் தொடர்புடைய சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தையும் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் எப்படி குறைக்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொண்டோம். சர்க்கரை நோயை நிர்வகிப்பதிலும், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைப்பதிலும் உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. எனவே, இவற்றை பின்பற்றினால் நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக கற்கள் என இரண்டு விதமான பிரச்சினைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் நம்மால் நம்மை பாதுகாத்துகொள்ள முடியும்.