குழந்தையின் ஆரோக்கியம் – ஒரு முன்னோட்டம்
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தை பிறந்த பிறகு வரும் முதல் மூன்று ஆண்டுகள் ஒரு சவாலான காலகட்டமாக அமைகிறது. தங்கள் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அடித்தளத்தை வகுப்பதற்கு ஒரு முக்கியமான கட்டமாகவும் இது உள்ளது. 0-3 மாதம் வரை பச்சிளம் குழந்தை எனவும், 3-12 கைக்குழந்தை எனவும், 1-4 வயது வரை தளர்நடை குழந்தை எனவும் குழந்தைப் பருவத்தை வரையறுக்கலாம். அதன் பின் அவர்கள் சிறுவர்-சிறுமிகளாக கருதப்படுகிறார்கள்.
இப்பதிவில், 0 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கு உதவும் ஐந்து முக்கிய அம்சங்களை பற்றி காணவுள்ளோம்.
கூடுதல் கவனத்திற்கான அவசியம்
சில ஆய்வறிக்கைகளின்படி, 3 வயது வரையிலான குழந்தைகளுக்கே நிமோனியா, பேதி, மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற தவிர்க்கக்கூடிய பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவர்களது ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானது. குழந்தை பருவத்தில் விரைவான உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி ஏற்படுகிறது; எதிர்கால ஆரோக்கியத்திற்கும் இந்த பருவமே அடித்தளமாக அமைகிறது. அவர்களது உடல் மற்றும் அறிவாற்றலில் குறிப்பிட்ட முன்னேற்ற நிலைகளை எட்டுவதை உறுதி செய்ய போதுமான ஊட்டச்சத்துகளை பெறச் செய்வது, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் ஆகியன அவசியமாகிறது. குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பின் அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் மூலம் நீண்டகால சிக்கல்களைத் தடுக்க முடிகிறது.
குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 வழிகள்:
1. உணவுப் பழக்கம்: ஆரோக்கியத்தின் அடித்தளம்
குழந்தையின் ஆரம்ப நிலையில் சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் இன்றியமையாத ஒன்றாகும். குழந்தைகளே பெரும்பாலான உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். குறிப்பாக முதல் ஆறு மாதங்களுக்கு அவர்கள் முழுமையாக தாய்ப்பால் அல்லது ஃபார்முலா திரவங்களையே சார்ந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே அவர்களது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்கவும் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நிறைவாக வழங்குகிறது. மேலும், பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த வெளியுலகம் புதிது என்பதால், வெப்பநிலை, காற்று, நுண்ணுயிரிகள் என அனைத்தையும் அவர்கள் உடல் ஏற்றுக்கொள்வதற்கு தேவையான ஆன்டிபாடிகளை தாய்ப்பாலே வழங்குகிறது. சில குழந்தைகளின் தாய்மார்களுக்கு தாய்ப்பால் வழங்குவதில் மருத்துவ ரீதியாக பிரச்சினை இருப்பின் மருத்துவர் வழிகாட்டுதலுடன் சரியான ஃபார்முலா திரவங்கள் அல்லது தாய்ப்பாலை வாங்கி அளிக்க வேண்டியிருக்கும்.
குழந்தைகள் ஆறு மாத காலத்தைக் கடந்தவுடன், திட உணவுகளை அறிமுகப்படுத்துங்கள். ஒற்றை மூலப்பொருளை மட்டும் கொண்ட கூழ்களில் துவங்கி, படிப்படியாக பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் போன்றவற்றை வழங்கலாம். இத்தகைய திட்டத்தினை துவங்குவதற்கு முன்பு, குழந்தை நல மருத்துவரின் வழிகாட்டுதலைப் பெறுவது அவசியம். தாயின் பாலைக் கடந்து, முதல் முறையாக வெளி உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகள் சிலருக்கு, சில நேரங்களில் ஏதேனும் உணவினால் ஒவ்வாமை ஏற்படும் சாத்தியமுள்ளது. எனவே புதிய உணவுகளை கொடுக்கும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதையும் கவனிக்கவும். மேலும், பொதுவான அறிகுறிகள் பற்றியும் தெரிந்து வைத்திருங்கள். புதிய உணவுகளை ஒவ்வொன்றாக மட்டுமே தனித்து அறிமுகப்படுத்த வேண்டும், அப்போது தான் எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதை சரியாக கணிக்க முடியும். குழந்தைக்கான உணவு அட்டவணை ஒன்றையும் பராமரிக்கவும்; அதன்படி ஆறு மாத காலத்திற்கு பிறகு வழங்கப்படும் மாறுபட்ட மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை சீராக அளிப்பதை உறுதிபடுத்தவும். இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கான அடித்தளத்தை நிறுவலாம்.
குழந்தைகள் தாமாக நகரவும், தளர்நடை போட துவங்கிய பின்பு தாமாக அவர்கள் உண்பதையும் ஊக்குவிக்க வேண்டும்; தளர்நடை குழந்தைகளை கண்காணிப்புடன் சுதந்திரமாக செயல்படவிடுவதால் அவர்களது உடலியக்க (மோட்டார்) திறன்கள் மேம்படும். இப்பருவத்தில் அவர்களுக்கு பரிமாறப்படும் உணவின் அளவுகளில் கவனம் செலுத்த வேண்டும்; குறிப்பாக சர்க்கரை அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசரத்தை தவிர்க்கவும். சீரான மற்றும் சத்தான உணவுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் ஊக்குவிக்கும் பழக்கங்களை குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வழிவகுக்கலாம்.
2. தடுப்பூசி மற்றும் இயற்கையாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு சொட்டு மருந்துகள் ஆகியன குழந்தைகளுக்கான நோய் தடுப்பு சுகாதாரத்தில் கட்டாயமான ஒன்றாகும். உங்களது அரசின் சுகாதாரத்துறை அல்லது குழந்தை நல மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவதன் மூலம் – தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம். தடுப்பூசிகள் ஒரு குழந்தையின் தனிப்பட்ட ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் நோயெதிர்ப்பு சக்திக்கும் பங்களிக்கின்றன.
தடுப்பூசிகள் மட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான இயற்கை வழிகளை ஆராய்வதும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் அனைத்து உடல்நல பாதிப்புகளுக்கும் தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால், இயற்கையாகவே நம் உடலில் நம்மால் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் திறன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இயற்கையாக இந்த ஆற்றலைப் பெற குழந்தைகள் உண்ணும் உணவும், நாம் கடைபிடிக்கும் வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
"உயிர் காக்கும் திரவ தங்கம்" என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் தாய்ப்பாலில் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் ஆன்டிபாடிகள் நிறைந்துள்ளன. தாயின் நேரடி உடல் அரவணைப்பில் இருக்கும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி பெரிதளவில் மேம்படுகிறது; அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் இடையே ஒரு வலுவான மன ரீதியான பிணைப்பையும் வளர்க்கிறது.
அனைத்து வயது குழந்தைகளுக்கும் போதுமான தூக்கம் என்பதே நோயெதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கும் ஒரு சக்திவாய்ந்த காரணியாக உள்ளது; எனவே அவர்களுக்கு நிலையான உறக்கத்தினை அளிப்பதை வழக்கமாக்க வேண்டும்.
திட உணவுகளுக்கு பழகிய குழந்தைகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நோயெதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளை அதிகளவில் வழங்க வேண்டும். அவர்களை தூய்மையான மற்றும் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு வெளிப்படுத்தி, அவர்களது உடலின் இயற்கையான பாதுகாப்பு அரண்களை மேலும் வலுப்படுத்தலாம்.
இயற்கையான நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உத்திகளுடன் சரியான தடுப்பு மருந்துகளையும் இணைப்பதன் மூலம், சாத்தியமான உடல்நல அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு வலுவான கவசத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். தடுப்பு மருந்துகளுக்கு சாத்தியமான பக்கவிளைவுகள் இருப்பதால், அவை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து, பதற்றமடையாமல் கையாளும் வழிகளைத் தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
3. குழந்தைகளின் சுகாதாரம்: ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுதல்
குழந்தைகளின் ஆரோக்கியத்தினை பேணுவதில் சுகாதாரமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு தினசரி குளியல் என்பது அவசியமில்லை என்றாலும், அவர்களது - முகம், கைகள் மற்றும் டயப்பர் பகுதியை தவறாமல் சுத்தம் செய்வது இன்றியமையாதது. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சரும எரிச்சலைத் தவிர்க்க இதமான, வாசனை இல்லாத மற்றும் ஆபத்தான செயற்கை இரசாயனங்கள் சேர்க்கப்படாத குழந்தைக்கான தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்தவும்; அவர்கள் குளிக்கும் தண்ணீர் சுத்தமானதாகவும், சௌகரியமான வெப்பநிலையில் 37-38°C (98.6-100.4°F) இருப்பதையும் உறுதிப்படுத்தவும். சிலர் ‘குழந்தையின் உடல் வலுப்பெறும்’, ‘குழந்தை நன்றாக ஊறவேண்டும்’ என்பது போன்ற காரணங்களைக் கூறி பெரியவர்கள் குளிக்கும் வெந்நீரில் குழந்தைகளை குளிப்பாட்டி துன்புறுத்துவதைக் காணலாம். அது போன்ற நடவடிக்கைகள் குழந்தைகளின் மேன்மையான சருமத்தில் கண்ணுக்குத் தெரியாத சுடு காயங்களை ஏற்படுத்தி விடும். எனவே மிகுந்த கவனத்துடன் இருக்கவும்.
பிறரிடமிருந்து நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த நடைமுறை - கைகளை கழுவுவது. குழந்தைகளையும், அவர்களின் பொருட்களையும் கையாள்வதற்கு முன் அனைவரும் கைகளை நன்கு கழுவ வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு குழந்தையின் தாயும் கைகளை முறையாக கழுவ வேண்டும். குழந்தையின் இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருங்கள்; பொம்மைகள் மற்றும் குழந்தை தவழும் மேற்பரப்புகளை தவறாமல் வழக்கமாக சுத்தப்படுத்துங்கள்.
குழந்தைகளைப் பொருத்தவரை டயப்பரிங் என்பது பெற்றோரின் / பராமரிப்பாளரின் ஒரு வழக்கமான பணியாகும்; இதில் அவர்களது முழு கவனம் தேவைப்படுகிறது. டயப்பர் புண்கள் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்க டயப்பர்களை உடனடியாக மாற்ற வேண்டியது அவசியம். கசிவுகளைத் தவிர்க்க நன்கு பொருந்தக்கூடிய டயப்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். டேப் டயப்பர், பேன்ட் டயப்பர், துணி டயப்பர் போன்று பல்வேறு வகைகள் உள்ளன. அதில் உங்கள் குழந்தைக்கு ஏற்ற ஒன்றை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். சில குழந்தைகளுக்கு சில பிராண்டு டயப்பர்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே அவற்றை தவிர்த்து, தேவைக்கேற்ப டயப்பர் ரேஷ் கிரீமையும் மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்தலாம்.
சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதால் நோயைத் தடுப்பது மட்டுமல்லாமல், குழந்தை வளரும்போது ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் கடைபிடிக்கவும் அவர்களுக்கு கற்றுத்தரலாம்.
4. வெளிப்புற காரணிகள்: பாதுகாப்பான புகலிடத்தை உருவாக்குதல்
குழந்தைகள் பெரும்பாலும் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களை ஆராய்வார்கள். குறிப்பாக பொருட்களை வாயில் வைத்துப் பார்க்கும் பழக்கம் இருக்கும். எனவே விழுங்கக் கூடிய சிறிய பொருட்கள் அவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் பிற ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் - உடலுக்கு கேடு தரும் பொருட்கள், திரவங்கள், இரசாயனங்கள், வீட்டிலிருக்கும் மருந்துகள், மாத்திரைகள், ஆபத்தான உபகரணங்கள் போன்ற அனைத்தையும் குழந்தைகள் அணுக முடியாத இடத்தில் வைப்பது அவசியமாகும்.
இது போன்ற வெளிப்புற காரணிகளை கவனிப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யலாம். மின்சார ப்ளக், சார்ஜர் ஸ்விட்ச்கள் போன்றவற்றை மூடி வைக்க வேண்டும். நாற்காலிகள், மேசைகள் போன்றவற்றை குழந்தைகள் ஏறாத வகையிலும், இடறி அவர்கள் மீது விழாத வகையிலும் ஓரமாக வைக்க வேண்டும்.
உறுதியான மெத்தை உள்ள தொட்டிலில் முகம் மேல் நோக்கி இருக்குமாறு உங்கள் குழந்தையை படுக்க வைப்பது பாதுகாப்பான வழிமுறையாகும். தளர்வான, மெதுமெதுப்பான மெத்தைகள் உள்ளே இழுக்கப்பட்டு, குழந்தையை அழுத்தும் ஆபத்து உள்ளதால் அதுபோன்ற மெத்தைகளைத் தவிர்க்கவும். அறையின் வெப்பநிலை உகந்ததாக இருக்க வேண்டும், குளிர்சாதன வசதி உள்ள அறைகளின் வெப்பநிலை 26 டிகிரிக்கு மேல் இருக்கவேண்டும். இயற்கையான காற்றோட்டமான அறைகளே குழந்தைகளுக்கு ஏற்றது. குழந்தைக்கு பொருத்தமான மென்மையான ஆடைகளையே அணியவும்.
தீங்கு விளைவிக்கும் இரசாயன வாயுக்கள், சிகரெட் புகை, வாகனப் புகை, சமையல் புகை போன்ற செகண்ட் ஹேண்ட் புகையை அவர்கள் சுவாசிக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ளவும். குழந்தைகள் அருகே யாரும் புகைப்பிடிப்பதை அனுமதிக்க வேண்டாம். நச்சுத்தன்மையற்ற, குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்று குறிப்பிடப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே தேர்வுசெய்யவும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளை எப்போதும் பொறுப்பான ஒருவரது கண்காணிப்பில் வைப்பது அவசியம். சற்றே பெரிய வயதுடைய விவரம் தெரியாத சிறு பிள்ளைகளுடன் தனியே விளையாட விட்டுவிட்டு செல்லக்கூடாது.
இதுபோன்ற வெளிப்புற காரணிகளைக் கவனத்தில் கொள்வதன் மூலம், வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.
5. குழந்தைகளின் மன ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் குழந்தைகளின் மன ஆரோக்கியமும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஒருங்கிணைந்த ஒன்றாக உள்ளது. குழந்தையின் முதல் மூன்று ஆரம்பக்கட்ட ஆண்டுகளில் உருவாகும் அவர்களது உணர்வுப் பிணைப்புகளே பிற்காலத்தில் அவர்கள் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்கவும், நிலையான மன நலனுடன் இருக்கவும் ஒரு அடித்தளமாக அமைகின்றன.
குழந்தைகளுடன் நேர்மறையான மற்றும் அன்பான முறையில் பழகவேண்டும். அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு உடனடியாக அதற்கேற்ப நடக்கவும். அவர்களிடம் பாதுகாப்பான உணர்வையும் மற்றும் நம்பிக்கையையும் வளர்க்கவும். அறிவாற்றல் வளர்ச்சியைத் தூண்ட நல்ல விளையாட்டுகள் மற்றும் பாதுகாப்பாக ஆராயும் வழிகளின் மூலம் பலவிதமான உணர்வுகளுக்கும் அவர்களை வெளிப்படுத்த வேண்டும்.
தினசரி செயல்பாடுகளில் ஒரு நிலையான வழக்கத்தை நிறுவுவதன் மூலம், குழந்தைக்கு எதை எதிர்பார்க்கலாம் என்கிற கணிப்புத் திறனையும், பாதுகாப்பு உணர்வையும் வழங்கலாம். குழந்தை வெளிப்படுத்தும் குறிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்; அவற்றைப் புரிந்துகொண்டு, அவர்களின் தனித்துவமான தேவைகளின் அடிப்படையில் உங்களது குழந்தை வளர்ப்பு உத்திகளை மாற்றியமைக்க வேண்டும். எல்லா குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தூக்கம் குழந்தையின் மன நலனில் பெரும் பங்கு வகிப்பதால், அவர்களுக்கு போதுமான மற்றும் நிம்மதியான உறக்கம் கிடைக்க ஒரு அமைதியான தூக்க சூழலை ஊக்குவிக்கவும். நமக்கு எப்படி சத்தங்கள் உறக்கத்தை பாதிக்குமோ அது போலவே அவர்களுக்கும் இருக்கும். சத்தத்திற்கு பழக்குகிறேன் என்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு அவர்களை இரைச்சலுக்கு நடுவே தூங்க வைக்க வேண்டாம்.
குழந்தையின் மனநலம் என்று வருகையில் பெற்றோர்களும் தங்கள் மனநலனில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை வளர்ப்பிற்கு அவசியமான அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது ஆதரவுக் குழுக்களுடன் சேர்ந்து முயல வேண்டும்.
முடிவுரை
ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் மூன்று ஆண்டுகள் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் வடிவமைப்பதில் ஒரு விலைமதிப்பற்ற காலகட்டமாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். உணவுப் பழக்கம், தடுப்பூசிகள், சுகாதார நடைமுறைகள், வெளிப்புற காரணிகள் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தையின் பிரத்தியேகத் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம், அவர்களது முழுமையான வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தினை உறுதி செய்யலாம். அத்துடன், எதிர்காலத்திற்கான ஒரு விரிவான திட்டத்தையும் வகுக்கலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுவது என்பது ஒரு தொடர்ச்சியான கற்றல் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் ஒரு பயணமாகும். உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தினை உறுதி செய்ய – குழந்தைப் பராமரிப்பாளர்களாக, ஆரம்ப ஆண்டுகளில் அன்பையும், கவனிப்பையும் முதலீடு செய்ய வேண்டும். பின்னர், அதுவே வாழ்நாள் முழுவதும் அவர்களின் நல்வாழ்வில் முக்கியப் பங்காற்றும்.