புலீமியா நெர்வோசா அல்லது பெரும்பசி நோய் என்றால் என்ன?
புலீமியா நெர்வோசா என்பது உணவு உண்ணும் பழக்கத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும்; உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மனநல பாதிப்பிற்கும் இதற்கும் தொடர்புள்ளது.
இந்த பாதிப்பு உள்ள பெரும்பாலான நபர்களுக்கு உணவு உண்ணும் பழக்கத்தில் பிரச்சினை இருக்கும் - அவர்கள் உண்ணும் உணவுகளின் மீது அதீத விருப்பத்தைக் கொண்டிருப்பார்கள். இப்பழக்கம் அவர்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, தேவையற்ற உடல்நல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. இந்த பாதிப்பு உள்ளவர்கள் குறைவான நேரத்தில் அதிக அளவு உணவை உட்கொள்ள முயல்வார்கள்.
புலீமியா நெர்வோசாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகமாக சாப்பிட முனைவார்கள்; பின்னர், சாப்பிட்ட உணவின் மூலம் பெற்ற கலோரிகளை ஆரோக்கியமில்லாத வழியில் (வாந்தி எடுத்தல் போன்ற) நீக்க முயற்சி செய்வார்கள்.
புலீமியா நெர்வோசா யாரை பாதிக்கும்?
ஆண்களுடன் ஒப்பிடுகையில், புலீமியா நெர்வோசா பெரும்பாலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. உணவு உண்பதில் ஏற்படும் இந்தப் பிரச்சினை, அவர்களது இளமைப் பருவத்தில் அல்லது பதின்ம பருவத்தில் உருவாகலாம். இருப்பினும், இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை தான். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 முதல் 2 சதவீத மக்கள் புலீமியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.
புலீமியா நெர்வோசாவின் அறிகுறிகள்
ஆரம்ப கட்டத்தில் புலீமியா நெர்வோசாவைக் கண்டறிவது கடினமான ஒன்றாகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பழக்கங்களின் மூலம் புலீமியா விவரிக்கப்படுகிறது.
- குறுகிய நேரத்தில் அதிக அளவில் உணவு உண்பது.
- வாந்தி எடுப்பது, அல்லது மலமிளக்கிகளை உட்கொள்வது போன்ற ஆரோக்கியமற்ற வழியில், உணவு மூலம் பெற்ற கலோரிகளைக் குறைக்க முயற்சி செய்வது.
- உடலிலிருந்து நீரினை வெளியேற்ற டையூரடிக்ஸ் எனப்படும் தண்ணீர் மாத்திரைகளை உட்கொள்வது, அல்லது மிகக் குறைவான அளவில் உணவு உண்பது.
- உண்ணாவிரதம் இருத்தல், மற்றும் மிகத் தீவிரமாக உடற்பயிற்சி செய்தல்.
- உணவு உட்கொள்வதால் உடல் எடை அதிகரித்து விடும் என அதீதமாக பயப்படுதல்.
- மனச்சோர்வு மற்றும் பதட்டம்.
- சாப்பிடுவதால் குற்ற உணர்வு ஏற்படுவது, மற்றும் அவமானமாக உணர்வது.
- நண்பர்களிடமிருந்தும், கூட்டமாக இருப்பதிலிருந்தும் ஒதுங்கி இருத்தல்.
- உடல் எடை அதிகரித்துவிடும் என்ற பயத்துடனே இருப்பது.
- எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் அதிகமாக மூலிகை மற்றும் சப்ளிமென்ட் உணவுகளை உட்கொள்வது.
புலீமியா நெர்வோசாவினால் உடலில் வெளிப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- அமில ரிஃப்ளக்ஸ், மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் (கேஸ்ட்ரோஇன்டெஸ்டினல்) பிரச்சினைகள்.
- சரியான உணவுகளைச் சாப்பிடாததால் மயங்கி விழுதல்.
- தசை பலவீனம் ஏற்படுதல்.
- நீரிழப்பு.
- ஒழுங்கற்ற மாதவிடாய்.
- ரத்தம் போன்ற சிவந்த கண்கள்.
- கன்னங்கள் மற்றும் தாடை வீங்கி காணப்படுதல்.
புலீமியா நெர்வோசா ஏற்படக் காரணங்கள்
புலீமியா நெர்வோசா ஏற்படுவதற்கான காரணம் இன்னதென்று அறியப்படவில்லை. ஒருவர் கற்றுக்கொள்ளும் நடத்தைகள், அல்லது மரபியல் சார்ந்த காரணங்கள், அல்லது இவை இரண்டின் காரணமாகவும் புலீமியா நெர்வோசா ஏற்படலாமென விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆயினும், உங்களது நேரடி உறவினர் புலீமியா நெர்வோசாவால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் இந்த உணவுப் பழக்க பிரச்சினை ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
‘ஒரு குறிப்பிட்ட உடல் வாகு மட்டுமே அழகானது என்ற சமூக அழுத்தம் காரணமாக, மக்கள் குறைவான அளவில் உணவு உட்கொள்கிறார்கள், அல்லது சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துகிறார்கள்’ என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த வகையான சமூகக் காரணிகள் ஒருவரது சுயமரியாதை மற்றும் தனது உடல் உருவம் பற்றிய எண்ணத்தினை பாதிக்கின்றன.
புலீமியா நெர்வோசா பாதிப்பை கண்டறியும் வழி
பொதுவாக உடல் பரிசோதனை மூலம் புலீமியா நெர்வோசா பாதிப்பு கண்டறியப்படுகிறது. முதற்கட்டமாக, உங்களது குடும்பத்தின் உடல்நலப் பின்னணி பற்றியும், உங்களிடம் வெளிப்படும் அறிகுறிகள் பற்றியும் ஒரு மருத்துவ நிபுணர் விசாரிப்பார். புலீமியா நெர்வோசாவைக் கண்டறிவதற்கென குறிப்பிட்ட சோதனைகள் எதுவும் கிடையாது. உடல்நலப் பிரச்சினைகளை சரிபார்க்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் பின்வரும் சில பரிசோதனைகளே மேற்கொள்ளப்படும்:
- சிறுநீர் பகுப்பாய்வு
- இரத்தப் பரிசோதனை
- எலக்ட்ரோ கார்டியோகிராம்
- சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனை
புலீமியா நெர்வோசாவிற்கான சிகிச்சைகள்
புலீமியா நெர்வோசாவிற்கான சிகிச்சை அந்த பிரச்சனைக்கான காரணத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. உளவியல் காரணங்கள் மற்றும் உடலியல் ரீதியான காரணங்கள் என்ற அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இந்த உணவுப் பழக்க பிரச்சினையை குணப்படுத்தும் அதே நேரத்தில், அதன் பின்னணியில் உள்ள அடிப்படையான மருத்துவ ரீதியான நிலைமைகளையும் குணப்படுத்துவதிலும் புலீமியா நெர்வோசாவிற்கான சிகிச்சை முறையில் கவனம் செலுத்தப்படும். இதற்கான சில பொதுவான சிகிச்சை வழிமுறைகள் பின்வருமாறு:
உளவியல் சிகிச்சை
உளவியல் சிகிச்சை முறையில் அறிவாற்றல்-நடத்தை (காக்னிட்டிவ்-பிஹேவியர்) சிகிச்சையும் உள்ளடங்கும்; குறிப்பிட்ட நபரை மையமாகக் கொண்ட இந்த சிகிச்சையானது, அவரது ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தினை இயல்பாக்க உதவும். மேலும், இந்த சிகிச்சையானது எதிர்மறையான நடத்தை மற்றும் நம்பிக்கைகளை குறைத்து, நேர்மறை எண்ணங்களை விதைக்கிறது.
மருந்துகள்
சிலருக்கு, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காரணமாக புலீமியா நெர்வோசா ஏற்பட்டிருக்கலாம். அத்தகைய நபர்களுக்கு, பாதிப்பின் அறிகுறிகளைக் குறைக்க ஆன்ட்டி-டிப்ரஸன்ட் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மட்டுமே இந்த ஆன்ட்டி-டிப்ரஸன்ட் மருந்துகளை வழங்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறித்த வழிகாட்டுதல்
புலீமியா நெர்வோசா உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்ற, முறையான ஊட்டச்சத்து ஆலோசனை அவர்களுக்கு உதவலாம். உணவை சரியான முறையில் உட்கொள்ளவும், அதீத உணவுப் பற்று மற்றும் தீவிர பசியைத் தவிர்க்க உதவும் ஒரு உணவுத் திட்டத்தை உணவியல் வல்லுநர்கள் மூலம் வடிவமைத்து பெற்றுக்கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை உட்கொள்வதற்கு பதிலாக, சீரான இடைவெளிகளில் சாப்பிடவும் அந்த உணவுத் திட்டம் அவர்களுக்கு உதவும்.
உதவிக் குழுக்கள்
பிற வகையான சிகிச்சை முறைகளுடன் இந்த உதவிக் குழுக்களையும் சேர்த்து பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். உணவுப் பழக்கத்தில் உள்ள பிரச்சினைகளை சமாளிக்க இந்த உதவிக் குழுக்கள் ஒருவரை மேலும் ஊக்குவிக்கின்றன.
புலீமியா நெர்வோசா ஏற்படாமல் தடுக்கும் வழிகள்
ஆரம்ப கட்டங்களில் புலீமியா நெர்வோசாவின் எச்சரிக்கை அறிகுறிகளை கண்டறிந்தால், அதனை வரும்முன் தடுக்கலாம். அப்படி செய்வதன் மூலம் ஆரம்ப காலத்திலேயே ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதை நிறுத்தலாம். குடும்பத்தில் எவருக்கேனும் புலீமியா நெர்வோசா இருந்தால், அது மரபணு ரீதியாக பெறப்பட்டதா என்பதை அடையாளம் கண்டு, உரிய சிகிச்சையளிக்க வேண்டியது அவசியமாகிறது.
புலீமியா நெர்வோசாவினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள்:
உடலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதை புலீமியா நெர்வோசா தடுக்கிறது. புலீமியா நெர்வோசாவினால் பின்வரும் சில உடல்நலப் பிரச்சினைகள் பொதுவாக ஏற்படலாம்:
- தொண்டைப் புண் மற்றும் வயிற்றுப் புண்கள்
- உணவுக்குழாய் (ஈஸோபேகஸ்) இன்ஃப்ளமேஷன்
- சீரற்ற எலக்ட்ரோலைட் அளவுகள்
- இதய செயலிழப்பு
- அசாதாரண இதயத் துடிப்பு
- பல் சிதைவு மற்றும் பற்குழி பிரச்சினைகள்
புலீமியா நெர்வோசா பாதிப்பிற்கும், பிஞ்ச் ஈட்டிங் எனப்படும் தொடர்ந்து சாப்பிடும் பிரச்சினைக்கும் என்ன வித்தியாசம்?
புலீமியா நெர்வோசா உள்ளவர்கள் அதிகமாக சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டதை வெளியேற்ற முனைவார்கள்; அதாவது, கலோரிகள் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக உட்கொண்ட உணவுகளை வாந்தி எடுத்துவிடுவார்கள்.
பிஞ்ச் ஈட்டிங் பிரச்சினை உள்ளவர்களும் அதிக உணவை சாப்பிடுவார்கள்; ஆனால் அதை வெளியேற்ற முயற்சிக்க மாட்டார்கள். புலீமியா நெர்வோசா உள்ளவர்கள் தாங்கள் உடல் பெருத்தவர்கள் என்று நினைப்பார்கள். இருப்பினும், அவர்கள் ஆரோக்கியமான உடல் எடையுடன் தான் இருப்பார்கள். பிஞ்ச் ஈட்டிங் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் பருமனுடனோ அல்லது அதிக எடை கொண்டவர்களாகவோ இருப்பார்கள்.
புலீமியா நெர்வோசா மற்றும் அனோரெக்ஸியா நெர்வோசா ஆகிய இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?
அனோரெக்ஸியா நெர்வோசா பிரச்சினை உள்ளவர்கள் பொதுவாக எடை குறைவாக இருப்பார்கள்; புலீமியா நெர்வோசாவால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பான எடையில் இருப்பார்கள்.
அனோரெக்ஸியா நெர்வோசா உள்ளவர்கள் தாங்கள் பருமனாக உள்ளதாக நினைப்பார்கள்; ஆனால் அவர்கள் ஒல்லியாகவும், எடை குறைவாகவுமே இருப்பார்கள். மேலும், அவர்கள் மெலிந்தும், நோய்வாய்ப்பட்டது போலவும் காணப்படுவார்கள்.
புலீமியா நெர்வோசா இருப்பதாகக் கருதினால் ஒருவர் எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
புலீமியா நெர்வோசா பாதிப்பு இருந்தால் அது சில உடல்நல சிக்கல்களை உருவாக்கும். அவர்கள் அதிக அளவு உணவை உட்கொண்டுவிட்டு, உடலில் கலோரி சேர்வதைத் தடுக்க சாப்பிட்டதை பின்னர் வாந்தி எடுத்துவிடுவார்கள். உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் இருந்தால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
- மூச்சுத் திணறல்
- நெஞ்சு வலி
- தலைச்சுற்றல்
- மயங்கி விழுதல்
- தொண்டை வலி
- அமில ரிஃப்ளக்ஸ் (எதிர்க்களித்தல்)
முடிவுரை
புலீமியா நெர்வோசா என்பது உணவுப் பழக்கத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது ஒருவரது இளமை பருவத்தில் அல்லது பதின்ம பருவத்தில் ஏற்படுகிறது, அதுமட்டுமில்லாமல், ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சமூக அழுத்தம் காரணமாக, ஒரு குறிப்பிட்ட எடை தான் ஆரோக்கியமானது மற்றும் குறிப்பிட்ட தோற்றமே அழகானது என்று மக்கள் தவறாகக் கருதுகிறார்கள்..
இத்தகைய தவறான கண்ணோட்டம் காரணமாகவும், புலீமியா நெர்வோசா போன்ற மன மற்றும் உடலியல் சார்ந்த மருத்துவப் பிரச்சினைகள் ஏற்படலாம். உளவியல் ரீதியான சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் புலீமியா நெர்வோசாவிற்கு உரிய சிகிச்சை பெறலாம்.