மூளையின் ஆற்றல் பற்றிய ஒரு முன்னோட்டம்
மூளை என்பது மனித உடலின் மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான உறுப்பாகும். தொடுதல், உணர்வுகள், எண்ணங்கள், நினைவுகள், பார்வை, அசைவுத் திறன்கள், சுவாசம், உடல் வெப்பநிலை, பசி மற்றும் உடலை ஒழுங்குபடுத்தும் பிற செயல்முறைகள் ஆகியவற்றை மூளை கட்டுப்படுத்துகிறது.
மூளை மற்றும் தண்டுவடம் (ஸ்பைனல் கார்டு) ஆகியன மத்திய நரம்பு மண்டலத்தை சேர்ந்த உறுப்புகளாகும். நமக்கு வயதாகும்போது, மூளையின் செயல்பாட்டுத் திறனும் மாறக்கூடும். இருப்பினும், சில அறிவாற்றல் குறைபாடுகளை நம்மால் தவிர்க்க இயலும். இந்த கட்டுரையானது நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சில வழிகளைப் பற்றி எடுத்துக் கூறுகிறது.
மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் வழிகள்
சில செயல்பாடுகளின் மூலம் மூளையின் ஆரோக்கியம் மற்றும் அதன் ஆற்றலை அதிகரிக்க முடியும்.
மன ஆற்றலைத் தூண்டும் பயிற்சி
மூளையின் உயிரணுக்களின் குறிப்பிட்ட சில பகுதிகளை செயல்படுத்தும் அல்லது தூண்டும் பயிற்சிகளே மன ஆற்றலைத் தூண்டும் பயிற்சி எனப்படுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், புதிய மூளை உயிரணுக்கள் உருவாக உதவுகின்றது; மேலும், நரம்பியல் பிளாஸ்டிசிட்டி எனப்படும் அனிச்சையான புதுப்பித்தல் திறனை உருவாக்கவும் உதவுகிறது.
இது எதிர்காலத்தில் மூளை உயிரணுக்களின் இழப்பைத் தவிர்க்க உதவுகிறது. வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், மற்றும் கைவினை கலைகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது மூளைக்கு இயற்கையான தூண்டுதலைத் தருகின்றன, மற்றும் மூளையின் ஆற்றலை மேம்படுத்துகின்றன.
மூளையின் ஆற்றலை மேம்படுத்த உதவும் சில அன்றாட நடவடிக்கைகள் பின்வருமாறு:
- புதிர் அல்லது குறுக்கெழுத்து விளையாட்டுகள்.
- கால்குலேட்டரை விட மன எண்கணிதத்தை முயற்சிக்கவும்
- அதிக புத்தகங்களைப் படிக்க முயற்சி செய்யவும். நீங்கள் ஒரு புத்தக வாசிப்பு குழுவில் சேரலாம் அல்லது ஒரு குழுவைத் தொடங்கலாம்.
- செஸ், பிங்கோ அல்லது கணினி விளையாட்டுகள் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை முயற்சிக்கலாம். இருப்பினும், கணினி விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்கவும்.
- சுறுசுறுப்பாக இருங்கள், மற்றவர்களுடன் நன்றாகப் பழகுங்கள். தோட்டக்கலை, எம்பிராய்டரி மற்றும் ஒரு இசைக் குழு ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவதும் சமூகத்துடன் ஒருங்கிணைவதற்கு உதவும்.
- கிட்டார், நடனம் அல்லது ஏதேனும் தற்காப்பு கலையை பயில்வதற்கான வகுப்புகளில் சேரலாம்.
- உங்கள் நண்பருடன் பேசலாம் அல்லது நீண்ட கால நண்பரை சந்தித்து உரையாடலாம்.
- உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கவும். வாரத்திற்கு 4 முதல் 5 முறை குறைந்தது அரை மணி நேரமாவது நடைபயிற்சி அல்லது ஜாகிங் செய்ய முயற்சிக்கவும்.
உடற்பயிற்சி
மூளையைத் தூண்டும் நுட்பங்களைப் பொருத்தவரை உடற்பயிற்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சியானது மனதின் சுறுசுறுப்பை மேம்படுத்த உதவுதோடு, உடலின் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது; அப்போது மூளைக்கான இரத்த ஓட்டமும் மேம்படுகிறது.
ஒவ்வொரு சிறிய இரத்த நாளத்தின் வழியாக இரத்த ஓட்டம் நிகழும்போது, மூளை செயலூக்கம் பெற்று, மூளையின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
உடல் செயல்பாடு என்றால் அதற்கு நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது மட்டும் அர்த்தமல்ல. உங்கள் வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, உங்கள் வீட்டு நாயை காலாட நடக்க அழைத்து செல்வது, மற்றும் தோட்டத்தினை பராமரிப்பது உள்ளிட்ட செயல்கள் யாவுமே உடல் செயல்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, மூளையின் ஆற்றலையும் மேம்படுத்துகிறது.
உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துங்கள்
உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுகளில் ஃபிளேவனாய்டுகள் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் மூளைக்கு நன்மை பயக்குவதோடு, உங்கள் மூளையின் உயிரணுக்களையும் தூண்டுகின்றன.
அதேவேளையில் பீட்சா, பர்கர், பிஸ்கட் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகளில் சாச்சுரேட்டட் (நிறைவுற்ற) கொழுப்புகள் உள்ளன. இவை உங்கள் ஆரோக்கியத்தின் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன; அத்துடன் மூளையின் செயல்பாடுகளையும் மந்தப்படுத்துகிறது.
உங்களது இரத்த அழுத்தத்தை சீராக்குங்கள்
சரியற்ற இரத்த அழுத்தம் என்பது ஒரு தீவிரமான பாதிப்பாகும். ஒருவரது வயது அதிகமாகும் போது, உயர் இரத்த அழுத்தம் அந்நபரின் மூளையை சேதப்படுத்தி, மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்கும். புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதிய உடல் உழைப்பு இல்லாமை போன்ற பழக்கங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அவை மூளையின் ஆற்றலைக் குறைத்து, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
உயர் இரத்த அழுத்தத்திற்கும் - டிமென்ஷியா, பக்கவாதம் மற்றும் அல்சைமர் நோய் போன்ற நோய்களுக்கும் தொடர்புள்ளது ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சோடா, வறுத்த உணவுகள் மற்றும் அதிக சாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகளால் இரத்த அழுத்தம் கூடுகிறது. அதே வேளையில் காய்கறிகள், முட்டை மற்றும் சவ்வற்ற (லீன்) இறைச்சி போன்ற உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.
வெயில் படுமாறு சிறிது நேரத்தை செலவிடவும்
உடலில் சூரிய வெளிச்சம் படும் போது, மூளை செரோடோனின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. அது ஒரு நபரின் மனநிலையை ஒழுங்குபடுத்தி, அவரை சாந்தப்படுத்துகிறது. இரவுநேரத்தில் மெலடோனின் என்ற ஹார்மோனை மூளை வெளியிடும் காரணத்தினாலேயே நாம் உறங்குகிறோம்.
சுமார் 15-20 நிமிடங்கள் வெயிலில் இருப்பது வைட்டமின் D உற்பத்திக்கு உதவுவதோடு, செரோடோனின் உற்பத்தியையும் தூண்டுவதாகவும் ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நன்றாக உறங்குங்கள்
உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரிப்பதில் தூக்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நரம்பு செல்களின் தகவல்தொடர்பு அமைப்பினை போதுமான தூக்கம் ஒழுங்குபடுத்துவதோடு, மூளையின் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது. ஒருவர் பேசும்போது கூட மூளை முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், தூங்கும் பொழுது, மூளை உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனை ஒருங்கிணைக்க தூக்கம் அவசியமாகிறது. ஒரு நபர் சரியாக உறங்காவிட்டால் அவரது மூளையில் கிரே மேட்டரின் அளவு குறைவதாகவும்; இதனால் மூளையின் செயல்பாடும் குறையலாம் என்றும் சில ஆராய்ச்சிகள் கூறிகின்றன.
நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் பக்கவாதத்திற்கான நேஷனல் இன்ஸ்டிடியூட்டின் கூற்றுப்படி, நாள்பட்ட தூக்கமின்மையின் காரணமாக இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், மனச்சோர்வு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுவதாகத் தெரியவருகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
லூடெயின், B வைட்டமின்கள், புரதம், வைட்டமின் D மற்றும் DHA ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன - அவை மூளையின் ஆற்றலை மேம்படுத்துகின்றன. நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கும் லூடெயின் உதவுகிறது. முட்டை, சோளம், பூசணிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் அவகாடோ போன்ற உணவுகளில் லூடெயின் நிறைந்துள்ளதால், அவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
மொத்த மூளையில் 50% DHA நிறைந்துள்ளது. ஆளி விதைகள், வால்நட்கள் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றில் DHA நிறைந்துள்ளது. B வைட்டமின்கள் மூளையைப் பாதுகாப்பதோடு, மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் செய்யவும் உதவுகின்றன.
அறிவாற்றல் திறனுக்கும் புரதத்திற்கும் தொடர்புள்ளது. குறிப்பாக வயதானவர்களின் அறிவாற்றலுக்கு புரதங்கள் பெரிதும் உதவுகின்றன. புரதங்கள் தசையின் நிறை குறைவதைத் தடுக்கின்றன. சவ்வற்ற இறைச்சி, கோழி, சீஸ், பால் மற்றும் தயிர் ஆகியவை புரதங்கள் நிறைந்த உணவுகளாகும்.
டெட்ரிஸ் விளையாடுங்கள்
டெட்ரிஸ் என்பது வெவ்வேறு வடிவிலான துண்டுகளை நகர்த்துவதன் மூலம் ஒரு வரியை முழுமையாக்கும் ஒரு புதிர் விளையாட்டாகும். ஒரு ஆராய்ச்சியின்படி, டெட்ரிஸ் விளையாட்டு ஒருவரது அறிவாற்றலை பயன்படுத்தச் செய்து, அவரது நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.
இந்த விளையாட்டை விளையாடுவதால் ஒருவரது சிக்கல்களைத் தீர்க்கும் திறன், தன்னிச்சை செயல்களின் கட்டுப்பாடு, மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை மேம்படுகிறது. அதுமட்டுமில்லாமல், டெட்ரிஸ் விளையாடுவது மன அழுத்தம் மற்றும், பதற்றத்தைக் குறைப்பதாகவும் ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.
தியானம் செய்யவும்
ஒருவரது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை ஒருநிலைப்படுத்தவும் தியானம் உதவுகிறது. தியானம் ஒருவரது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துகிறது. மூளை முதுமை அடைவதை தியானம் மெதுவாக்குகிறது. ஒருவரை முழு அமைதியுடன் வைத்திருப்பதோடு, மூளையின் ஆற்றலையும் மேம்படுத்துகிறது.
புகையிலையைத் தவிர்க்கவும்
ஆரோக்கியத்திற்கு தீங்குவிளைவிக்கும் புகையிலை, மூளையின் செயலாற்றலையும் குறைக்கிறது. புகையிலையைப் பயன்படுத்துவதால் ஒருவருக்கு எந்தவித நன்மைகளும் கிடைப்பதில்லை; மேலும், இது எதிர்மறையான உடல்நல விளைவுகளை மட்டுமே ஏற்படுத்துகிறது.
புகைபிடிக்காத நபர்களோடு ஒப்பிடும்போது, புகைபிடிப்பவர்களின் பெருமூளையின் புறணி மெலிதாக இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. புகைபிடிப்பவர்களின் மூளையின் கிரே மேட்டர் குறைவதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மூளையின் கிரே மேட்டர் குறையும் போது, ஒருவரது சிந்திக்கும் திறன் மற்றும் கற்கும் திறன் குறைகிறது. எனவே புகையிலையை எக்காரணம் கொண்டும் உபயோகிக்காமல் தவிர்ப்பதே நல்லது.
முடிவுரை
ஒருவருக்கு வயதாகும்போது, அவரது மூளையின் ஆற்றலும் குறைகிறது. எனவே மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல், நல்ல உடல் செயல்பாடுகள் ஒருவரது மூளையை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, அதன் செயலாற்றலையும் மேம்படுத்துகிறது.
மூளையின் ஆற்றலைக் குறைக்கும் எந்த செயல்களையும் தவிர்க்கவும். புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் அதிக சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது மூளையை பாதித்து, அதன் திறனையும் குறைக்கிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நமது மூளையை நாம் எப்படிப் பாதுகாக்கலாம்?
1. வழக்கமான உடல் செயல்பாடுகள்
2. தியானம்
3. அதிக சர்க்கரை உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்
4. போதுமான தூக்கம்