பயோட்டின் குறைபாடு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
நமது நல்வாழ்விற்கு பயோட்டின் மிகவும் அவசியமாகும். இது உங்கள் நரம்பியல் மண்டலத்தை ஆதரிப்பதோடு, உணவை ஆற்றலாக மாற்றவும் உடலுக்கு உதவுகிறது.
போதுமான பயோட்டின் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்? பயோட்டின் குறைபாடு என்பது பொதுவான ஒன்றா? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் யாவை? இக்கேள்விகளுக்கான பதிலை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
பயோட்டின் என்றால் என்ன? அந்த ஊட்டச்ச்சத்தினை எவற்றிலிருந்து நீங்கள் பெறலாம்?
பயோட்டின் என்பது, எட்டு B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களில் ஒன்றாகும்; இது பொதுவாக வைட்டமின் H அல்லது B-7 என்று குறிப்பிடப்படுகிறது. தண்ணீரில் கரையக்கூடிய இந்த வைட்டமின்கள் நம் உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை.
எனவே, ஒருவர் இதனை உணவு அல்லது சப்ளிமென்ட்கள் மூலமாக தினசரி பெற வேண்டியுள்ளது.
முட்டை, இறைச்சி, மீன், கொட்டை வகைகள், விதைகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள், காளான், காலிஃபிளவர், வாழைப்பழம் மற்றும் அவகாடோ போன்ற பல வகையான உணவுகளில் பயோட்டின் இயற்கையாகவே உள்ளது.
உங்கள் குடலில் இருக்கும் பாக்டீரியாக்களும் பயோட்டின்னை உற்பத்தி செய்கின்றன. மைக்ரோபயோம் அல்லது குடல் ஃப்ளோரா என அழைக்கப்படும் இந்த பாக்டீரியாக்கள் உங்கள் உடல் நலத்திற்கு பல நற்பலன்களை அளிக்கின்றன. உணவை ஜீரணிக்க உதவும் அவை, வைட்டமின்களை உற்பத்தி செய்கின்றன, நோயெதிர்ப்பு சக்தியை சீராக்குகின்றன, மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன.
பயோட்டின் குறைபாடு எந்தளவிற்குப் பொதுவானது? அதனால் யாருக்கு அதிக ஆபத்து?
மாறுபட்ட உணவுப் பழக்கம் உள்ள ஆரோக்கியமான மக்களிடையே பயோட்டின் குறைபாடு ஏற்படுவது மிகவும் அரிது. இருப்பினும், பின்வரும் சில காரணங்களினால் ஒருவருக்கு பயோட்டின் குறைபாடு ஏற்படலாம்:
மரபணு கோளாறுகள்
பயோட்டினிடேஸ் குறைபாடு (BTD) எனப்படும் ஒரு உடல் நிலை பாதிப்புடன் பிறக்கும் சிலருக்கு, உணவு அல்லது சப்ளிமென்ட் மூலம் கிடைக்கும் பயோட்டினை பயன்படுத்த இயலாத பிரச்சினை உள்ளது. பயோட்டினிடேஸ் என்ற என்ஸைமை உருவாக்கும் மரபணுவில் உருவாகும் பிறழ்வால் இந்த BTD பாதிப்பு ஏற்படுகிறது.
புரதத்தினால் பிணைக்கப்பட்ட வடிவங்களிலிருந்து பயோட்டினை பிரித்து வெளியிடவும், அதனை உடலில் மறுசுழற்சி செய்யவும் இந்த என்ஸைம் அவசியமாகிறது. பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு BTD ஏற்பட்டால் – திடீர் வலிப்புகள், உடல் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுதல், முடி உதிர்தல், தோலில் சொறி மற்றும் பூஞ்சை தொற்று போன்ற கடுமையான அறிகுறிகள் வெளிப்படும்.
இரத்த பரிசோதனை மூலம் BTD பாதிப்பு கண்டறியப்பட்டு, அதிக அளவு பயோட்டின் சப்ளிமெண்ட்களை வழங்குவதன் மூலம் அதற்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
உணவு சார்ந்த காரணிகள்: சமைக்காத முட்டையின் வெள்ளைக்கருவை அடிக்கடி சாப்பிடுவது பயோட்டின் குறைபாட்டினை ஏற்படுத்தும்; ஏனெனில், அதில் உள்ள அவிடின் என்கிற புரதம், பயோட்டினுடன் ஒட்டிக்கொண்டு, அதனைப் பிரித்து உறிஞ்சும் செயல்முறையைத் தடுக்கிறது. முட்டையின் வெள்ளைக்கருவை சமைத்தால் அவிடின் அழிக்கப்பட்டு பயன்பட உகந்ததாக மாறுகிறது.
மருத்துவ ரீதியான பாதிப்புகள்: மருத்துவ ரீதியான சில நோய்கள் அல்லது பிரச்சினைகளினால் உங்கள் செரிமானத் திறன் பாதிக்கப்படலாம், அல்லது பயோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவது பாதிக்கப்படுகிறது. இன்ஃப்ளமேட்டரி பவல் நோய் (IBD), செலியாக் நோய், க்ரோன்’ஸ் நோய், அல்சரேட்டிவ் கோலிட்டிஸ், ஷார்ட் பவல் சின்ட்ரோம் மற்றும் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகிய பாதிப்புகள் இதில் உள்ளடங்கும்.
கருவுற்ற மற்றும் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள்: கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு பயோட்டின் அதிகளவில் தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் ஆதரவினை வழங்க வேண்டியுள்ளது.
பயோட்டின் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
பயோட்டின் குறைபாடு ஏற்பட்டால் உங்கள் சருமம், முடி, நகங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பினை உண்டாக்கும் பல்வேறு அறிகுறிகள் தென்படும். அவை பின்வருமாறு:
சருமப் பிரச்சினைகள்: பயோட்டின் குறைபாடு இருந்தால் உங்கள் முகம் அல்லது உடலில் வறண்ட, செதில் போன்ற அல்லது சிவந்த சருமத்தை நீங்கள் காணலாம்.
முடி உதிர்தல்: பயோட்டின் குறைபாடு ஏற்பட்டால் உங்கள் உச்சந்தலையில் அல்லது புருவங்களில் முடி மெலியலாம், அல்லது உதிரலாம். இந்த குறைபாட்டால் உங்கள் தலைமுடியின் தோற்றம் அல்லது நிறத்தில் மாற்றங்களையும் நீங்கள் காணலாம்.
நகத்தில் ஏற்படும் பிரச்சினைகள்: பயோட்டின் குறைபாடு இருப்பின், நகங்கள் உடையக்கூடியதாகவோ, அல்லது பிளவுபட்டோ காணப்படலாம்; அதனால், அவை எளிதில் உடைந்து போக, அல்லது உரிந்து விழும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நகங்களில் வரிவரியான கோடுகள், அல்லது வெள்ளை புள்ளிகளும் தென்படலாம்.
நரம்பியல் பிரச்சினைகள்: உங்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் பயோட்டின் குறைபாட்டினால் - சோர்வு, தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், மனநிலையில் மாற்றங்கள், ஞாபக மறதி, குழப்பம், பிரமைகள், திடீர் வலிப்புகள், தசை பலவீனம் அல்லது வலி, கைகள் அல்லது கால்களில் கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை ஏற்படுதல், நடப்பதில் அல்லது உடல் அசைவுகளை சீராக மேற்கொள்வது சிரமாமாக இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
பயோட்டின் குறைபாட்டை எப்படி கண்டறிந்து சிகிச்சையளிப்பது?
உங்களுக்கு பயோட்டின் குறைபாடு உள்ளது என்று நீங்கள் கருதினால், உரிய நோயறிதல் மற்றும் சிகிச்சையின் முறையினை தெரிந்துகொள்ள உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். உங்களது உடல் நலப் பின்னணி, ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மருந்துகள், உணவுப் பழக்கம், மற்றும் அறிகுறிகளைப் பற்றி மருத்துவர் உங்களிடம் விசாரிப்பார்.
உங்கள் இரத்தத்தில் உள்ள பயோட்டின் அளவை அளவிட அவர் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளக் கூறுவார். இருப்பினும், இந்த சோதனை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை, அதுமட்டுமில்லாமல் அதன் முடிவுகள் துல்லியமானதாக இல்லாமலும் போகலாம்.
உங்கள் பயோட்டின் குறைபாட்டின் காரணம் மற்றும் தீவிரத்தை பொறுத்தே அந்த குறைபாட்டிற்கான சிகிச்சை முறை தீர்மானிக்கப்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உட்கொள்ளக் கூடிய பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ் மூலம் குறைபாடு சரிசெய்யப்பட்டு, அறிகுறிகளில் முன்னேற்றம் காண பரிந்துரைக்கப்படுகிறது.
உங்களது தேவை மற்றும் சிகிச்சையை உங்கள் உடல் எப்படி ஏற்கிறது என்பதைப் பொறுத்து பயோட்டின் சப்ளிமென்டி ன் அளவு மற்றும் சிகிச்சைக் காலம் மாறுபடுலாம்.
பயோட்டின் சப்ளிமெண்ட்களை உட்கொள்வது மட்டுமில்லாமல், பயோட்டின் குறைபாடு மீண்டும் வருவதைத் தடுக்க உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில், கீழ்க்கண்ட சில மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
சமச்சீரான உணவை உட்கொள்வது: போதுமான அளவு பயோட்டின் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்கும் பல்வேறு வகையான உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும். முட்டை (சமைத்தது), இறைச்சி, மீன், கொட்டை வகைகள், விதைகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள், காளான், காலிஃபிளவர், வாழைப்பழம் மற்றும் அவகாடோ ஆகியவற்றில் பயோட்டின் நிறைந்துள்ளது.
மது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்: மது அருந்துவது மற்றும் சிகரெட் புகைப்பதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்; ஏனெனில், அவை உங்கள் உடலில் பயோட்டின் அளவைக் குறைத்து, உடல் ஊட்டச்சத்துக்களை ஏற்றுக்கொள்வதைக் குறைக்கிறது.
மருத்துவ ரீதியான உடல் நல பாதிப்புகளை நிர்வகித்தல்: உங்கள் உடலின் பயோட்டின் அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி உரிய சிகிச்சைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
மருந்துகளை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்: பயோட்டினுடன் வினைபுரியக்கூடிய மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ, அல்லது எடுக்ககொள்ளும் திட்டம் இருந்தாலோ அவற்றைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். ஆன்ட்டி-பயாட்டிக்ஸ், ஆன்ட்டி-சீஷர் மருந்துகள், மற்றும் ஐசோட்ரெட்டினோயின் உள்ளிட்ட மருந்துகள் இதில் அடங்கும்.
ப்ரீனேட்டல் வைட்டமின்களை எடுத்துக்கொள்ளும் கருவுற்ற அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் : நீங்கள் கருவுற்றிருந்தால், அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சேர்த்து நீங்கள் பயோட்டின் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ப்ரீனேட்டல் வைட்டமின்களை உட்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு பயோட்டின் மற்றும் பிற வைட்டமின்கள் அதிகளவில் தேவைப்படுவதால், அதற்காக நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியுள்ளது.
முடிவுரை
உங்களுக்கு பயோட்டின் குறைபாடு இருந்தால், அல்லது அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது, ஏனெனில் அது உங்களுக்கு ஆபத்தாக முடியலாம். அதனால் பயோட்டின் குறைபாடும் ஏற்படலாம்.