கேஸ்ட்ரிடிஸ் (இரைப்பை அழற்சி) குறித்த ஒரு கண்ணோட்டம்
இரைப்பை அழற்சி அல்லது கேஸ்ட்ரிடிஸ் என்பது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு உடல் நல பாதிப்பைக் குறிக்கிறது. பல்வேறு காரணங்களினால் வயிற்றின் உட்புற படலத்தில் (புறணி) இன்ஃப்ளமேஷன் ஏற்படுகிறது. குடிப்பழக்கம், மருந்துகள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா போன்றவை கேஸ்ட்ரிடிஸை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு முறையும் நமக்குப் பிடித்த உணவுப் பதார்த்தை உண்ணும் போதும், அதன் சுவையில் மறந்து கட்டுப்பாடின்றி, அதிகமாகச் சாப்பிடுகிறோம். இப்படி உண்பது பெரும்பாலும் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
வயிற்றில் இருக்கும் இரைப்பை சுரப்பி அளவுக்கு அதிகமான அமிலத்தை சுரக்கும்போது அசிடிட்டி ஏற்படுகிறது. இரைப்பையில் அதிக அமிலம் இருந்தால், வாயு உருவாக்கப்படுதல், வாய் துர்நாற்றம், வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகள் தென்படும்.
இரைப்பை பிரச்சினைகள் பொதுவான ஒன்றாகும்; அசவுகரியமான அறிகுறிகளை ஏற்படுத்தி, விரைவான நிவாரணத்தை நாட வைக்கும்.
இரைப்பை பிரச்சினைகள் உள்ள பெரும்பாலானவர்கள், வீட்டில் இருந்தபடியே வசதியாக தங்கள் அறிகுறிகளுக்கேற்ப நிவாரணம் பெற சில சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதனைச் சமாளிக்க மருத்துவ உதவி அல்லது சரியானதொரு சிகிச்சைத் திட்டம் தேவை.
வாயுத்தொல்லையின் விளைவைத் தணிக்க சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் பின்வருமாறு.
இரைப்பை பிரச்சினைகளுக்கான வீட்டு நிவாரணிகள்
மோர்
ச்சாஸ் என்று இந்தியில் மிகவும் பிரபலமாக அழைக்கப்படும் மோர், பல நூற்றாண்டுகளாக பால் பண்ணைகளால் பால் உற்பத்தியின் ஆரோக்கியமான துணை விளைபொருளாக கருதப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மோர் அதிக கொழுப்பு நிறைந்த பானமாகத் தெரியலாம், ஆனால் அதில் நமது ஆரோக்கியத்திற்கு உதவும் பாக்டீரியா நிறைந்துள்ளது. புரதத்தின் சிறந்த ஆதாரமான மோர், ஆரோக்கியமான தசைகள் மற்றும் எலும்புகளை உருவாக்க உடலுக்கு உதவுகிறது. சரும ஆரோக்கியத்தையும் மோர் மேம்படுத்துகிறது.
ஒருவர் அமிலத்தன்மையை உணரும்போது, லாக்டிக் அமிலம் கொண்ட ஒரு கிளாஸ் மோரை அருந்தினால், அது வயிற்றின் இரைப்பை அமிலத்தன்மையை சமப்படுத்த உதவும்.
மோர் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. இதன் காரணமாகவே கோடைக்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பலர் மோர் அருந்துவதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.
கிராம்பு
கிராம்புகளில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால், அது நம் உடலுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் உயிரணு சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கிராம்பு, கார்மினேடிவ் விளைவை வழங்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, அதாவது அவை உடலின் இரைப்பைக் குடற் பாதையில் வாயு உருவாவதைத் தடுக்க உதவும்.
சீரகம்
சீரகம் ஒரு சிறந்த நடுநிலைப்படுத்தியாகும் (நியூட்ராலைசர்). இது செரிமானத்திற்கு உதவுகிறது, மற்றும் வலி-நிவாரண பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
உணவு உண்ட பிறகு, சிறிது வறுத்த சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து உட்கொள்வதன் மூலம், உணவை நன்கு ஜீரணிக்க உதவுகிறது மற்றும் வாயு உருவாவதையும் தடுக்கிறது.
ஆப்பிள் சிடர் வினிகர்
வயிற்றில் உள்ள அமில பிரச்சினைக்கு ஆப்பிள் சிடர் வினிகரை பரிந்துரைப்பது முரண்பாடாகத் தோன்றலாம். வயிற்றில் அமிலத்தின் அளவு குறைவாக இருக்கும்போது பெரும்பாலும் அமிலம் எதிர்க்களிக்கும் (ரிஃப்ளக்ஸ்) தொந்தரவு ஏற்படலாம், இதனை சரிசெய்ய ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.
ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு கப் தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து, தினமும் இரண்டு முறை அருந்துவதன் மூலம் அசிடிட்டியை குணமாக்கவும், அதன் அறிகுறிகளுக்கு நிவாரணம் பெறவும் முடியும்.
வாழைப்பழம்
கேஸ்ட்ரிடிஸ் பிரச்சினைக்கான தீர்வுகளில் வாழைப்பழங்கள் இடம்பெறவில்லை என்றால் தான் ஆச்சரியம். பிரகாசமான நிறமுள்ள இப்பழங்களில் அதிக ஆன்டாசிட்கள் உள்ளன, அவை எதிர்களித்தலைத் (ரிஃப்ளக்ஸை) தடுக்க உதவும்.
வாழைப்பழம் அமிலத்தன்மையைக் குறைப்பதற்கும், அதன் அறிகுறிகளுக்கு நிவாரணம் தரவும் உதவும் முக்கியமான வீட்டு வைத்தியங்களில் ஒன்று. வாழைப்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது நன்மை பயக்கும்.
இலவங்கப்பட்டை
நமது பட்டியலில் உள்ள மற்றொரு மூலிகை,, இயற்கையான ஆன்டாக்சிட் ஆக செயல்படும் இலவங்கப்பட்டை ஆகும். இது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிப்பதன் மூலம் இரைப்பை பிரச்சினைகளின் அறிகுறிகளுக்கு நிவாரணம் தர உதவுகிறது.
இரைப்பைக் குடற்பாதையில் ஏற்படும் தொற்றுகளை சரிசெய்து, குணப்படுத்த இலவங்கப்பட்டை தேநீர் அருந்தப்படுகிறது. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்ட இது, ஒரு சக்திவாய்ந்த இயற்கை மூலிகையாகும்.
துளசி இலைகள்
உடலில் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவை இந்த துளசி இலைகள். மனச்சோர்வு போக்க அல்லது பதட்டத்தைத் தணிக்கவும் மற்றும் தெளிவாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் உதவும் உட்பொருட்களின் கலவைகள் இதில் நிறைந்துள்ளது.
துளசி இலைகள் சிந்திக்கும் அறிவாற்றலை மேம்படுத்துகிறது. அத்தியாவசிய தைல உற்பத்தியிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. உடலில் இன்ஃப்ளமேஷனுக்கு எதிராக போராட உதவும் துளசி, கேஸ்ட்ரிடிஸ் அறிகுறிகளை சமாளிக்க உதவுகிறது.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை அருந்துவதன் மூலம், வயிற்றில் உள்ள அமிலத்தை நடுநிலைப்படுத்த முடியும். ஒரு டீஸ்பூன் புதிய எலுமிச்சையின் சாற்றினை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் குடித்தால், அந்த உணவினால் ஏற்படக்கூடிய அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும்.
இந்த பிரச்சினைக்கு மருத்துவரின் ஆலோசனை அவசியமா?
கேஸ்ட்ரிடிஸ் அறிகுறிகள் நீண்ட காலமாக இருந்துவந்தால்,அல்லது கடுமையானதாக இருந்தால், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சையைப் பெறுவது அவசியமாகும்.
சில நேரம் வீட்டு வைத்தியம், அறிகுறிகளுக்கு நிவாரணம் தராமல் போகலாம். அப்போது உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இரத்த வாந்தி அல்லது இரத்தம் கலந்த மலம் போன்ற மோசமான அறிகுறிகளுக்கு முறையான சிகிச்சை தேவை. இவை மிகவும் தீவிரமான உடல்நல சிக்கலின் அறிகுறியாக இருக்கலாம்.
தொகுப்புரை
இரைப்பை அழற்சி அல்லது கேஸ்ட்ரிடிஸ் ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்துகொள்வதன் மூலம், அதற்கு உகந்த பயனுள்ள சிகிச்சையைக் கண்டறிந்து பெற முடியும். சில உணவு வகைகள் அல்லது மது மற்றும் மருந்துகளை உட்கொள்வதாலும் இரைப்பை பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
கேஸ்ட்ரிடிஸ் என்பது ஒரு நாட்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்து ஒரு மருத்துவ நிபுணரை ஆலோசித்து, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மிக முக்கியம்.