வைட்டமின் C குறைபாடு ஒரு கண்ணோட்டம்
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு, காயங்கள் குணமாகும் வேகம், இரத்த நாளங்களை நன்கு பராமரிப்பது, மற்றும் உடலின் ஆற்றலை சீராக வைப்பது என்பன உள்ளிட்ட நமது உடல் நலத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் வைட்டமின் C குறைபாடு ஏற்பட்டால் பாதகமான விளைவுகளை உண்டாக்கும்.
நீண்டகாலம் வைட்டமின் C-யின் குறைபாடு இருப்பின் நாள்பட்ட நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
நல்வாய்ப்பாக, வைட்டமின் C நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும், ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவைப் பின்பற்றுவதன் மூலமாகவும் இக்குறைபாட்டை தடுக்கலாம். உடலில் வைட்டமின் C-யின் அளவு குறைவதைத் தவிர்க்க, வைட்டமின் C அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பதே சிறந்த வழியாகும்.
வைட்டமின் C குறைபாடு என்றால் என்ன?
உங்கள் உணவில் போதுமான அளவு வைட்டமின் C-ஐ எடுத்துக்கொள்ளாவிட்டால் வைட்டமின் C குறைபாடு ஏற்படும். குறிப்பிட்ட காலத்திற்கு வைட்டமின் C குறைபாடு தொடர்ந்தால் புதிய கொலாஜன் உற்பத்தி தடைபடுகிறது.
வைட்டமின் C குறைபாடு ஏற்படுவதைத் தொடர்ந்து உடலிலுள்ள பல திசுக்கள் சிதைவடையத் துவங்குவதால் – இது உங்கள் ஆரோக்கியத்தையும், குணமாகும் தன்மையையும் பாதிக்கிறது. வைட்டமின் C குறைபாட்டால் ஸ்கர்வி என்கிற ஒரு தொடர்ச்சியான (நாள்பட்ட) உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது; பொதுவாக மூன்று மாதங்களோ அல்லது அதற்கு மேலாகவோ இந்த பாதிப்பு நீடிக்கும்.
வைட்டமின் C குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் வெளிப்பாடுகள்
பின்வரும் வைட்டமின் C குறைபாட்டின் 14 அறிகுறிகள் மற்றும் வெளிப்பாடுகளை நீங்கள் அலட்சியப்படுத்தாமல் உரிய கவனம் செலுத்த வேண்டும், அவை
பார்வை இழப்பு
வைட்டமின் C, இதர ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் குறிப்பிட்ட மினரல்களின் குறைபாட்டின் காரணமாக வயது-தொடர்பான தசை சிதைவு ஏற்படுவது விரைவாக நிகழ்கிறது. நமது உணவில் தேவையான அளவு வைட்டமின் C-ஐ சேர்த்துக்கொள்வதன் மூலம் கண்புரையைத் தடுக்கலாம்; ஆனால் இந்த செயல்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகின்றன.
காயங்கள் மெதுவாக குணமடைவது
வைட்டமின் C-யின் குறைபாடு கொலாஜன் உற்பத்தியைத் தடுப்பதால், காயங்கள் குணமடைய அதிக நேரம் தேவைப்படுகிறது. தொடர்ச்சியான, குணப்படுத்த இயலாத புண்கள் உள்ளவர்களுக்கு, அதுபோன்ற நிலை இல்லாதவர்களைக் காட்டிலும் வைட்டமின் C குறைபாடு அதிகம் இருப்பது சில ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் C குறைபாடு இருக்கும் சிலருக்கு ஏற்கனவே இருந்த பழைய காயங்கள் தோன்றி நோய்த்தொற்றின் அபாயம் மீண்டும் அதிகரிக்கலாம். ஒருவர் பல மாதங்களாக வைட்டமின் C குறைபாட்டுடன் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த தீவிர அறிகுறி வெளிப்படுகிறது, மற்ற சூழலில் இது பொதுவாக காணப்படுவதில்லை.
மனநிலை மாற்றங்கள்
வைட்டமின் C குறைபாட்டின் மற்றொரு பொதுவான அறிகுறி அடிக்கடி மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதாகும். ஒருவரது உடலில் வைட்டமின் C குறைபாடு இருந்தால், அவர் அடிக்கடி எரிச்சலடைவதுடன், பிறருக்கு எரிச்சலூட்டும் வகையிலும் நடந்து கொள்வார்.
வறண்ட தலைமுடி மற்றும் எளிதில் உடையக்கூடிய நகங்கள்
ஆரோக்கியமான தலைமுடி வறண்ட கூந்தலாக மாறுகிறதென்றால் அது வைட்டமின் C குறைபாட்டின் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம். அப்படி நிகழ்வது உங்கள் உடலுக்கு போதுமான வைட்டமின் C மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கலாம். முடி என்பது ஒரு அத்தியாவசியமற்ற திசு என்பதால் நமது உடல் அதன் வைட்டமின் C-யின் இருப்பில் பெரும்பகுதியை மற்ற முக்கிய திசுக்களுக்கு ஒதுக்கிவிடுகிறது. இதன் காரணமாக முடி பொலிவிழந்து போகும். உடலால் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதற்கு, வைட்டமின் C அவசியமாகிறது. இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக உடையக்கூடிய வளைந்த நகங்களும், மெதுவாக முடி வளர்தல் மற்றும் முடி உதிர்தல் ஆகியன ஏற்படுகின்றன.
இரும்புச்சத்து குறைபாடு
ஹீம் இரும்புச்சத்து மற்றும் ஹீம்-அல்லாத இரும்புச்சத்து என நமது உடலால் உறிஞ்சக்கூடிய இரண்டு வகையான இருப்புச்சத்துக்கள் உள்ளன. சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைப் பெற முயல வேண்டும்; ஏனெனில் ஹீம்-அல்லாத இரும்புச்சத்தானது பெரும்பாலும் தாவர உணவு ஆதாரங்களிலிருந்து (கீரைகள், கேல், ப்ராக்கோலி மற்றும் பிற காய்கள்) பெறப்படுகிறது; மேலும் இது உடலால் குறைவாகவே உறிஞ்சப்படுகிறது.
நன்கு உறிஞ்சப்படக்கூடிய ஹீம் இரும்புச்சத்து பொதுவாக விலங்கு உணவு ஆதாரங்களிலிருந்து பெறப்படுகிறது. உடல் இரும்புச்சத்தை நன்கு உறிஞ்சுவதற்கு வைட்டமின் C உதவுகிறது; மேலும், உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவீட்டை கணித்து வெளிப்படுத்தும் நல்லதொரு குறியீடாகவும் இந்த வைட்டமின் செயல்படுகிறது. இரும்புச்சத்து பற்றாக்குறைகள் மற்றும் வைட்டமின் C பற்றாக்குறைகள் ஆகிய இரண்டும் பொதுவாக ஒன்றாகவே செயல்படுகின்றன.
இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை மற்றும் வைட்டமின் C குறைபாடு ஆகிய இரண்டும் அடிக்கடி ஒன்றாக நேரலாம். சருமம் வெளிர்தல், சோர்வு, உடற்பயிற்சி செய்யும் போது சுவாசிக்க சிரமமாக இருப்பது, சருமம் மற்றும் தலை முடி வறண்டு போதல், தலைவலி மற்றும் கரண்டி போன்று வளைந்த விரல் நகங்கள் ஆகியவை இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் இரத்த சோகையின் அறிகுறிகளாகும்.
உடலில் வைட்டமின் C-யின் அளவு குறைவதால் இரும்புச்சத்தின் வளர்சிதை மாற்றம் சரிவர நிகழாமல் போகிறது; மேலும், தாவர அடிப்படையிலான உணவிலிருந்து இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படுவதும் குறைகிறது. அதனைத் தொடர்ந்து இரும்புச்சத்து குறைபாடான இரத்த சோகை ஏற்படுகிறது. வைட்டமின் C குறைபாட்டினால் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதால், இரத்த சோகை மோசமடையும் சூழலும் ஏற்படுகிறது.
இரும்புச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் இரத்த சோகைக்கான தெளிவான காரணம் தெரியாமல் அது நீண்ட காலம் தொடர்ந்தால், உங்களது உடலின் வைட்டமின் C அளவை சரிபார்க்கவும். போதுமான வைட்டமின் C இருப்பின், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நீங்கள் பயனடையலாம்.
தசை மற்றும் மூட்டு வலி
தொடர்ச்சியான மூட்டு மற்றும் தசை வலி இருந்தால், வைட்டமின் C இல்லை என்பதற்கான அறிகுறியாகும். குறைந்த வைட்டமின் C அளவைக் கொண்ட நபர்கள் அதிக வைட்டமின் C அளவைக் கொண்டவர்களை விட முடக்கு வாதம் வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
சோர்வு
வைட்டமின் C குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றுதான் உடல் சோர்வு. உண்மையான பற்றாக்குறை தெரிவதற்கு முன்பாகவே சோர்வின் மூலம் அறிகுறிகள் வெளிப்படலாம்.
சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற சில ஆரம்ப அறிகுறிகளை தேவையான அளவு வைட்டமின் C-ஐ உட்கொள்வதன் மூலம் சில நாட்களில் சரி செய்யலாம், அல்லது கூடுதல் அளவுகளில் உட்கொண்டு 24 மணி நேரத்திற்குள் அறிகுறிகளை சரி செய்யலாம்.
பலவீனமான எலும்புகள்
வைட்டமின் C குறைபாடு எலும்புகளின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வைட்டமின் C -ஐ குறைந்த அளவில் எடுத்துக்கொள்வதற்கும், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாக இருப்பதற்கும் தொடர்புள்ளது.
எலும்பு உற்பத்திக்கு அவசியமான வைட்டமின் C-யின் பற்றாக்குறை, எலும்பு இழப்பு விகிதத்தை விரைவுபடுத்துவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குழந்தைகளின் எலும்புகள் தொடர்ந்து வளர்வதாலும், மேன்படும் நிலையில் இருப்பதாலும் அவர்களது எலும்புகளின் ஆரோக்கியத்தை வைட்டமின் C பற்றாக்குறை அதிகமாக பாதிக்கலாம்.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் C குறைபாட்டின் காரணமாக நோய்வாய்ப்படும் அபாயம் அதிகரிக்கிறது; மேலும், அதன் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்ட பிறகு உடல் மீண்டுவருவதும் சவாலாகிறது.
பல்வேறு வகையான நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்குள் உருவாகும் வைட்டமின் C - தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், தொற்றினை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதில் உதவ அந்த உயிரணுக்களின் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
குறைவான நோய் எதிர்ப்பு ஆற்றல், மற்றும் நிமோனியா போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளை ஏற்படுத்துவது என பேராபத்துகளுக்களும், வைட்டமின் C குறைபாட்டிற்கும் தொடர்புள்ளது. நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், இறுதிகட்டத்தில் பல ஸ்கர்வி நோயாளிகள் தொற்றுநோயால் உயிரிழக்க நேர்கிறது. ஸ்கர்வி என்பது வைட்டமின் C பற்றாக்குறையால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளில் ஒன்றாகும்.
மயிர்க்கால்கள் நன்கு சிவந்து காணப்படுதல்
சருமத்தின் மேற்பரப்பில் உள்ள மயிர்க்கால்களில் ஏராளமான இரத்த நரம்புகளைக் காணலாம்; இவை, அந்த பகுதிக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரத்தத்தை கொண்டு வருகின்றன.
வைட்டமின் C குறைபாடு இருந்தால், இந்த சிறிய இரத்த நாளங்கள் பலவீனமடைந்து எளிதில் வெடிக்க நேரலாம்; இதன் விளைவாக மயிர்க்கால்கள் சிவந்த நிறத்தில் காணப்படுகின்றன.
பெரிஃபாலிக்யூலர் இரத்தக்கசிவு கடுமையான வைட்டமின் C பற்றாக்குறையினை வெளிகாட்டும் நன்கு அறியப்பட்ட ஒரு அறிகுறியாகும். வைட்டமின் C மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் இந்த பாதிப்பு பொதுவாக இரண்டு வாரங்களில் குணமாகிவிடும்.
பாதிப்படைந்த வறண்ட சருமம்
ஆரோக்கியமான சருமத்தில், குறிப்பாக சருமத்தின் வெளிப்புற அடுக்கில் வைட்டமின் C நிறைந்திருக்கும். சூரியனால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்தும், ஓசோன் அல்லது சிகரெட் புகை போன்ற மாசுகளுக்கு வெளிப்படும் ஆபத்திலிருந்தும் பாதுகாத்து, வைட்டமின் C நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வைட்டமின் C - சருமத்தை இளமையாகவும், வனப்பாகவும் வைத்திருக்கிறது. வைட்டமின் C-ஐ குறைவாக உட்கொள்வதால் வறண்ட, சுருக்கமான சருமம் இருப்பதற்கான வாய்ப்புகள் 10% அதிகமாக உள்ளது; அதே நேரத்தில் இந்த ஊட்டச்சத்தினை நிறைவாக உட்கொண்டால் சிறந்த தரமான சருமத்தினைப் பெறலாம்.
வறண்ட, சேதமடைந்த சருமத்திற்கும் - வைட்டமின் C குறைபாட்டிற்கும் தொடர்பு இருந்தாலும், இந்த அறிகுறிக்கு பல கூடுதல் காரணங்களும் உள்ளன; எனவே வைட்டமின் C குறைபாட்டால் இப்படி நேர்கிறது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
மூட்டுகளில் வீக்கம்
வைட்டமின் C குறைபாடு மூட்டுகளையும் பாதிக்கிறது. ஏனெனில் மூட்டுகள் அதிகளவில் கொலாஜன் நிறைந்த கனெக்டிவ் திசுக்களுடன் சேர்ந்துள்ளன. பல்வேறு மூட்டு பிரச்சினைகளுக்கும், வைட்டமின் C குறைபாட்டிற்கும் தொடர்புள்ளது; பெரும்பாலான நபர்களுக்கு நடப்பதில் சிரமம், அல்லது நடக்கும் போது தடுமாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த பற்றாக்குறை கடுமையானதாக உள்ளது.
வைட்டமின் C குறைபாடு மூட்டுகளின் உள்ளே இரத்தக்கசிவை ஏற்படுத்தலாம்; வீக்கம் மற்றும் அதிக வலியும் ஏற்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். இந்த இரண்டு அறிகுறிகளிலிருந்தும் நிவாரணம் பெற வைட்டமின் C மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், பாதிப்பு பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள் குணமாகிவிடும்.
ஈறுகளில் இரத்தக்கசிவு
ஈறுகள் வீங்கி, சிவந்து காணப்படுவதும், அதில் இரத்தக்கசிவு ஏற்படுவதும் வைட்டமின் C குறைபாட்டின் மற்றொரு பொதுவான அறிகுறியாகும். போதுமான வைட்டமின் C கிடைக்காததன் காரணமாக, இரத்த நாளங்களில் இரத்தக்கசிவு ஏற்படலாம்; மேலும், ஈறுகளின் திசுக்கள் பலவீனமடைந்து வீக்கமடையலாம். வைட்டமின் C குறைபாட்டினால் சிலருக்கு ஈறுகள் ஊதா நிறமாகவும், அழுகியது போலவும் காணப்படலாம். கடைசியாக, பற்களின் எனாமலுக்கு கீழ் காணப்படும் டென்ட்டின் சிதைவதன் காரணமாக பற்கள் விழும் நிலை கூட ஏற்படலாம்.
விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு
கொழுப்பு உயிரணுக்களிலிருந்து கொழுப்பினை வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவது, மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் குறைப்பது, மற்றும் இன்ஃப்ளமேஷனை குறைப்பது என வைட்டமின் C உடல் பருமனைத் தடுக்க பல வழிகளில் உதவுகிறது.
உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மற்றும் குறைவான வைட்டமின் C-ஐ உட்கொள்வது ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு காரண-விளைவு உள்ளதா என்பது தெளிவாகப் புலப்படவில்லை; இருப்பினும் தொடர் ஆராய்ச்சிகளின் மூலமாக இரண்டிற்கும் இடையே தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. தொப்பையில் கொழுப்பு அதிகரிப்பதற்கும், இரத்தத்தில் வைட்டமின் C குறைவாக இருப்பதற்கும் தொடர்புள்ளது.
உடலில் கூடுதலாக கொழுப்பு இருப்பது மட்டும் வைட்டமின் C குறைபாட்டை உறுதிபடுத்தாது என்ற போதிலும், வைட்டமின் C குறைபாட்டிற்கான இதர சாத்தியக் காரணங்கள் பொருந்தாத நிலையில் – கொழுப்பின் அடிப்படையில் ஆராய்வது பலனளிக்கலாம்.
வைட்டமின் C குறைபாடு குணமாக எவ்வளவு காலம் தேவைப்படும்?
வைட்டமின் C குறைபாடு உள்ளவர்கள் வைட்டமின் C-ஐ எடுத்துக்கொள்ளத் துவங்கிய பிறகு, தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். இருப்பினும், வைட்டமின் C குறைபாடு குணமாக எவ்வளவு காலம் தேவைப்படும் என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளையும், அவற்றின் குணமடையும் காலத்தையும் காணவும்:
- வலி, அசதி, பசியின்மை மற்றும் சோம்பல் ஆகியவை ஒரு நாள் முழுவதும் நீடிக்கலாம்.
- சிராய்ப்பு, இரத்தக்கசிவு மற்றும் கடுமையான பலவீனம் ஆகியவை 1-2 வாரங்கள் நீடிக்கலாம்.
- மூன்று மாதங்களுக்குப் பிறகு குறைபாட்டிலிருந்து முழுமையாக குணமடையலாம்.
- வைட்டமின் C பற்றாக்குறையின் தீவிரம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளைப் பொறுத்து, குணமடைவதற்கான இந்த கால வரையறை நபருக்கு நபர் மாறலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- மோசமான பற்சிதைவு அல்லது பல் விழுவது போன்ற நிரந்தர பாதிப்புகளை குணப்படுத்த முடியாமல் போகலாம். இதன் காரணமாகவே வைட்டமின் C குறைபாட்டை அலட்சியம் செய்யாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கட்டுரை சுருக்கம்
நீங்கள் போதுமான அளவு வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்ளவில்லை, அல்லது உங்கள் உடல் வைட்டமின் C-ஐ சரியாக உறிஞ்சவில்லை என்று நீங்கள் கருதினால் – குறிப்பிட்ட வைட்டமின் C சப்ளிமென்ட்களை உட்கொள்வது உகந்ததாகும். ஆனால், இந்த விஷயத்தில் முதற்கட்டமாக நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதலைப் பெற வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. வைட்டமின் C குறைபாட்டினை சரிசெய்ய சிறந்த உணவுகள் யாவை?
கிவி பழம்
கேரட்
குடைமிளகாய்
உருளைக்கிழங்கு
தக்காளி
முட்டைக்கோஸ்
எலுமிச்சை
ஸ்ட்ராபெர்ரி
கீரைகள்
பப்பாளி
ப்ரக்கோலி